என் இனிய....

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBanner

என் இனிய

எனக்கு வாசிப்பு எண்டால் கொள்ளை பிரியம். முந்தி அஞ்சு வயசிருக்கே ராணி காமிக்ஸ் உடன் தொடர் கதைகள் வரும். தவளை ராணி, கொல்லி மலை மந்திரவாதி, பவள ராணி என அம்மாக்கு அப்படி கதைக்களை வாசிப்பது எண்டால் கொள்ளை பிரியம். அம்மா பவள ராணியின் கதைகளை சுவைபட சொல்லுவா. தவளை ராணி கதையில் வரும் மந்திரவாதியின் உயிர் ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, ஒரு முட்டைக்குள் உள்ள உச்சியில் உள்ளது எண்டு சொல்லுவா அப்போதெல்லாம் நான் அந்த மந்திரவாதியின் உயிரை தேடி போகும் இளவரசனாய் என்னை நானே கற்பனை பண்ணி பார்த்து மெச்சியது உண்டு. ஆறாம் ஆண்டு படிக்கும் போது மாயாவி கதைகளை வாசிக்கதொடங்கி அடிமையாகி போனேன். மாயாவி கதைகள் அவ்வளவு அலாதியானவை. மாயாவியின் குத்து ஒவ்வொன்றும் கும் என எவ்வாறு இறங்கும் என கற்பனை செய்து பார்ப்பேன். மாயாவியின் மண்டையோட்டு மோதிரம் மாதிரி பேப்பரில் செய்து அதை கையில் போட்டு மையினால் மண்டையேட்டை வரைந்து கொண்டு தம்பிக்கு தடையில் குத்தி அதில் மடையோடு பதிகிறதா எண்டு பரீட்சித்து எல்லாம் பார்ப்பேன். நல்லவேளை மாயவி மாதிரி ஜட்டியை காற்சட்டைக்கு வெளியே போட்டுதிரியும் லூசுதனமான வேலைகள் மட்டும் பார்த்ததில்லை.

பாடசாலையில் மாயாவிபுத்தகங்கள் காமிக்ஸ்கள் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. மாணவ முதல்வர்களிடம் அகப்பட்டுக்கொண்டால் அவ்வளவு தான். மாணவமுதல்வர் அறை என்று ஒன்று இருக்கின்றது. போனால் உயிரோடு திரும்புவோமோ என்று பயப்படும் அளவிற்கு இருக்கும் அந்த அறை. அந்த அறைக்குள் அழைத்துச்சென்று அடி பின்னிவிடுவார்கள். ஆசிரியர்களிடம் அகப்பட்டால் புத்தகம் வகுப்பறைக்கு வெளியே பறப்பதுடன் அனைத்து மாணவர்களுக்கு முன்னால் அடிவாங்கவேண்டி வரும் முட்டிபோட்டு நிற்கவேண்டிவரும். ஏதோ கள்ளக்கடத்தலில் ஈடுபடும் மாஃபியாக்கும்பல் மாதிரி மிகவும் ரகசியமாக நண்பர்களிடையே மாயாவிப்புத்தகங்கள் கடத்தப்படும். ஒருதடவை வகுப்பறைக்கு ஆசிரியர் வந்துவிட சகபாடிகள்  எழுந்து நின்றுவிட்டார்கள் பாவம் ஒரே ஒரு அப்பாவிஜீவன் மட்டும் தனது கணித புத்தகத்துக்குள் இருக்கும் மாயாவியின் புத்தகத்தினுள் மூழ்கியிருந்தான். சுற்றியிருந்த அனைத்துமே அந்த ஜீவனுக்கு இருட்டாகவே தெரிந்திருந்தது. மாயாவியின் புத்தகத்தைத்தவிர. திடீர் என்று சட சட வென அடி தொடர்ந்து விழுந்தது. அப்பொழுதுதான் சுயநினைவு வந்தவனாக நிமிர்ந்து பார்க்கின்றான். ஆசிரியர் அடித்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் அவன் அவனாகவே எழுந்து ஏன் அடித்தீர்கள்? என கேட்கும்போது வகுப்பே சிரித்துவிட்டது. அத்துடன் ஆசிரியர் அவனிடமிருந்த மாயாவிப்புத்தகத்தை வாங்கி படிப்பதற்கு இலகுவாக 4 துண்டாக கிழித்துஅவனிடம் கொடுத்துவிட்டார்.

சரி வெளிப்படையாகவே கூறுகின்றேன் அது நான்தான். அப்படியெல்லாம் அடியும் உதையும் வாங்கிய வாசிப்பு அடிமை நான்.

ரஷ்யாவின் ஈஸ்தொனியா நகரின் சாலைகள் அனைத்தும் வெண்ணிறமாய் இருக்குமாம் இருளில் கூட அவை வெண்ணிறமாகவே ஒளிருமாம். ஏதோ ஒரு பித்துபிடித்த மன்னன் வீதி முழுவதும் சலவைகற்கள் கொண்டு அதை செய்தானாம். அங்குள்ள வீடுகள் அனத்தும் மிகவும் விசாலமானவையாம். நிறவர்ணப்பூச்சு, பெரிய ஜன்னல்கள், ஓட்டுகூரைகள் என பார்பதற்கே அலாதியாய் இருக்குமாம். இவ்வாறு இருக்குமாம், அவ்வாறு இருக்குமாம் என் கற்பனையில் அடித்துவிடும் பொழுது சில சிக்கல்கல் உருவாகும். பொதுவாக எழும் பிரச்சனை வாசகன் கடுப்பாவது தான். இல்லை இல்லை வாசகர் கடுப்பாவது (வாசகன் என குறிப்பிட்டால் என்னை ஆணாதிக்கவாதி என இச் சமூகம் கம்பு சுத்த கூடும். ஆக வாசகர் என்று கூறிவிடுவதே பாதுகாப்பானது). என்னை நானே ஒரு நல்ல வாசகர் எண்டு சான்றிதழ் கொடுத்து கொண்டு கீழ்வரும் பந்திகளை எழுத போகிறேன். என்னை நல்ல வாசகர் எண்டு நம்பாத எல்லாரும் நேரடியாக அடுத்த பந்திக்கு சொல்லவும்.

பொதுவாக எனக்கு அடித்துவிடும் கதைகளை வாசிக்கும் பொழுது கடுப்பாகிவிடும். ரஷ்யாவின் ஈஸ்தொனியா நகரின் சாலைகள் அனைத்தும் வெண்ணிறமாய் இருக்குமாம் எண்டு வாசிச்சு முடிக்கேக நான் ஈஸ்தெனியாவில் வாழ்ந்தவன் அல்லது ஈஸ்தெனியா பற்றி கூகிள் ஆண்டவரிடம் கேட்டு தெரிந்தவனாயின் 'இங்க வா மயிரு யாருக்கு காதுலா பூ சுத்துற...??' எண்டு கூப்பிட்டு கொமட்டிலேயே குத்தனும் போல இருக்கும். ஆனால் நானே சில சமயம் ரஷ்யாவின் ஈஸ்தெனியா நகர்சாலைகள் உன் நிழல் பட்டு வெண்ணிறமாய் மாறியிருந்தன என அடித்துவிடவும் கூடும். ஆக வாசகன் இல்லை இல்லை வாசகர் அழகியலை மட்டும் எனது எழுத்தில் அனுபவிக்கனும் எண்டு கற்பனை எல்லாம் சேர்த்து குழைச்சு எழுத்தாளர் எழுத நினைக்கும் போது வாசகர் அழகியலை மட்டும் எதிர்பார்க்காது, அடுத்த கட்ட எதிர்பார்ப்பில இருக்கும் போது தான் பிரச்சனை உருவாகுது. ரஷ்யாவின் ஈஸ்தொனியா நகரின் சாலைகள் அனைத்தும் வெண்ணிறமாய் இருக்குமாம் இருளில் கூட அவை வெண்ணிறமாகவே ஒளிருமாம். ஏதோ ஒரு பித்துபிடித்த மன்னன் வீதி முழுவதும் சலவைகற்கள் கொண்டு அதை செய்தானாம் எண்டு அடித்துவிடும் கற்பனையைவிட ரஷ்யாவின் ஈஸ்தெனியா நகர்சாலைகள் உன் நிழல் பட்டு வெண்ணிறமாய் மாறியிருந்தன என செல்லும் கற்பனை பரவாயில்லை போலிருக்கிறது

பொதுவாக ஒரு கதை சொல்லிக்கு உருவாகும் மிகப்பெரிய பிரச்சனை ஒரு கதையினை எவ்வாறு ஆரம்பிப்பது என்று தான். ஒரு கதை ஒரு அருவியை போன்றது. அதை அதன் போக்கிலே விட்டுவிட வேண்டும். வலிந்த திணிப்புக்கள் செய்யக்கூடாது. எந்த ஒரு நல்ல கதைசொல்லியாலும் ஒரு கதையின் கதாப்பாத்திரங்களையோ அல்லது காட்சிகளையோ படைக்கும் பொழுது அவன் நடந்து வந்த பாதைகளும் கடந்து வந்த காட்சிகளும் தான் அதிகம் செல்வாக்கும் செலுத்தும். ஆக அந்த கதையினை ஆரம்பிப்பது மட்டும் தான் சிக்கலான விடயம். கற்பனையில் ஒரு பாத்திரத்தை படைக்கையில் உருவாகும் சிக்கல்கள் இடியப்ப சிக்கல் போன்றது. அதில் அதிகளவான கற்பனைகள் மட்டுமே எஞ்சியிருக்கும். பல மனநோய் பிடித்தவர்களின் புணர்வு சம்மந்தமான ஆரோக்கியமற்ற கதைகள் பெரும்பாலும் மிக அருவருப்பான கற்பனைகள் தான்.

ஆரோக்கியமற்ற அருவருப்பான கதைகளை பற்றி கதைக்கபோனால் அந்த அருவருப்பான கதைகளை மீட்டவேண்டிவரும் அந்த நினைவுகளே மிக அருவெருப்பானவை. அவை எவ்வளவு அருவெருப்பானவை எனின் 

1. காசி கோழி அடித்து குழம்பு வைத்தான் இதை காசிக்கு காலையில் ஒரு கனவு வந்தது அதில் அவன் கோழி குழம்பு சாப்பிட்டு கொண்டிருந்தான். அவன் ஒரு கோழிப்பிரியன். அதிலும் கோழிக்காலினை உறுஞ்சி அந்த செவென்பு மச்சையை சாப்பிடுவது எண்டால் அவனுக்கு அலாதி பிரியம். காலையில் எழும்பியவுடன் கோழிகுழம்பு சாப்பிடே ஆகவேண்டும் என உறுதிகொண்டான். காசியிடம் 200 கோழிகள் கொண்ட ஜந்து பன்ணைகள் இருந்தன. காசி அதிலிருந்து ஒரு பருவகோழியை தெரிவுசெய்தான். கோழி இறைச்சிக்கு உப்பு தூளிட்டு ஊறவைத்தான் ஒரு மணிநேரம். வெங்காயம், தக்காளிப்பழம், பச்சைமிளகாய், ரம்பை இலை வெட்டி தயார்படுத்தினான். காசிக்கு கோழிகுழம்பு தானே வைக்கவேண்டும் மற்றவர்கள் வைக்கும் குழம்பில் அவனுக்கு ருசியிராது. பாத்திரத்தை அடுப்பில் வைத்து அளவாய் எண்ணைய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தினை இட்டு வதக்கினான். வெங்காயம் எண்ணையில் விழும் பொழுது ஒரு சத்தம் வரும். காசி அந்த சத்தம் வெங்காயம் பொரியும் வாசம் என சகலதையும் அனுபவிப்பான். வெங்காயம் பின் தக்காளி பச்சைமிளகாய் பின் இறைச்சியை போட்டு அவித்து தேங்காய்ப்பால் விட்டு இறக்கினான். கோழிகுழம்பின் வாசத்திலே அவன் பாதி செத்துபோனான்.

2. காசிக்கு கோழிகுழம்பு சாப்பிடவேண்டும் என ஆசை அவன் கனவில் ஒரு ஆண் சேவல் வந்து கூவியதுடன் வந்தது. அதிகாலையிலே பண்ணைக்கு சென்று ஒரு ஆரோக்கியமான கோழியை தெரிந்தெடுத்தான். கோழியின் இறகுகளை பிடித்து கோழியை துக்கினான். பின் கோழியின் இறகுகளை ஒன்றோடு ஒன்று பின்னினான். கோழியை தூக்கில் போட்டவேண்டும். மெல்லிய பச்சைநிறமான ஒரு நைலேன் கயிற்றை கூரையில் கட்டி அதன் நுனியில் சுருள்தளம் போட்டுகொண்டான். பின் கோழியைத்தூக்கி அதனை முகர்ந்து பார்த்தான். சிரித்துகொண்டே கோழியின் தலையை சுருக்கில் மாட்டினான். கோழிக்கு விளங்கவில்லை பாக்..பாக்.. எனறவண்ணம் இருந்தது. திடீரென்று கோழியில் இருந்து கைகளை எடுத்து சுருக்கினை நெருக்கினான். கோழி தொண்டை நெரிபட பாக்...பாக்...பாக்..பாக்.. எனகத்தியது. தன்னால் இயலுமானவரை இறகுகளை அடித்து பறக்கமுனைந்தது கால்கள் இரண்டையும் உதறித்தள்ளியது. கண்கள் இரண்டும் மூடியது. கோழி இறக்கும் ஒவ்வொரு செக்கன்களையும் காசி ரசித்தபடி நிண்டான்.

இவை இரண்டுமே காசி கோழிகறி சாப்பிட கதைகள். ஆனால் புனைவாளன் கதையினை புனைந்தவிதம் வௌ;வேறு. இரண்டாவது கதையை வாசிக்கும் பொழுதே என்ன விசரண்டா இவன் என எண்ணத்தோன்றும். சாதாரண ஒரு மனிதனால் இரசிக்க முடியாத கற்பனை பண்ணமுடியாத விடயங்களை மிகசுலபமாய் இப்படியுமா என நினைக்கும்படி புனைந்துவிடுகிறார்கள். தோழியொருத்தி Vladimir Nabokov’s இன் நல்ல வாசகர்கள் என்ற ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரையை எழுதியிருந்தாள். நல்ல வாசகர்கள் ஒரு நல்ல எழுத்தாளார்களாய் மலரும் நிலையில் உள்ள மொட்டுகள் ( The reader should be a budding author )  என தனது நல்ல வாசகர்கள் பற்றிய பத்து குறிப்பில்  Vladimir Nabokov ஆறாவதாய் குறிப்பிட்டுருந்தார். இவ்வாறன புனைவுகள் உலகதரம் வாய்ந்தவை என கூறிகொண்டு திரிய ஒரு கூட்டம் இருப்பதால் புதிதாக எழுதவருபவர்களும் அதையே சாடி அதன் ஆதிக்கங்களுடனேயே எழுத முனைகிறார்காள். என்னால் இப்படியான அருவெருப்பான புணர்வு புனைகதைகளை எல்லாம் சகித்துகொள்ள இயலாது.

சிறிது காலத்து ஒரு சிறுகதை வாசித்தேன். வாசித்து முடிக்கையில் பாக்கியராஜ் நக்மா நடித்த வேட்டியை மடிச்சுகட்டு படம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. நக்மா அதில் ஒரு சினிமா பைத்தியம். பாக்கியராஜ் சினிமா ஹீரோ மாதிரி இருக்கனும் எண்டு அப்பாவித்தனமாய் ஆசைப்படும் ஒரு ஹிந்தி சினிமா பைத்தியம். ஒரு முறை வீடு பத்தி எரியும் போது நக்மா எரியும் வீட்டுகுள் புகுந்து ஏதே ஒன்றை எடுத்து வருவார். அது என்னவெண்று தெரியாமல் ஊரவர்கள் எல்லாம் ஒரு சினிமா ஸ்ராரின் புகைப்படம் என கரிந்துகொட்ட அது நக்மா பாக்கியராஜ் கல்யாணப் புகைப்படமாகிவிட நக்மா கண்ணீருன் சில பல வசனங்கள் பேசி அனைவரையும் உலுக்கிவிடுவார். இதேபோல் ஒரு கதை. நிறையவே ஈழத்து உணர்வுகளை கலந்து கடைசியில் அந்த வறுமை பிடிச்சா புனைவாளி எரியும் வீட்டுக்குள் ஒரு படத்தை எடுப்பதாய் கதையை முடிக்க நான் செத்தே போனன். 

எப்பொழுதும் நல்ல வாசகர்கள் குறைந்து விட்டார்கள். எனது எழுத்துக்கள் உலக தரம் வாய்ந்தவை ஆனால் யாருமே நான் எழுதுவதை வாசிக்கிறார்கள் இல்லை, எனது புத்தகங்களை யாருமே மொழிபெயர்க்கிறார்கள் இல்லை அல்லது சமூகவலத்தளங்களில் எனது பதிவுகளுக்கு லைக் போடவில்லை, கருத்துரைக்கவில்லை என சில எழுத்தாளர்கள் புலம்பித்தள்ளுவது உண்டு. இத்துடன் கௌரவமாக சில ஆங்கில சொற்களையும் இணைத்து வாசகன் மீது வசைபாடுவதும் உண்டு. அச்சொற்களை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தால் நாரசமாய் இருக்கும். உண்மையில் நல்லவாசகர்கள் குறைவடைந்து விட்டார்களா...?? இந்த கேள்வி கொஞ்சம் ஆழமாகப் பார்க்கப்படவேண்டிய விடயம். வாசகர்கள் குறைவடைந்து விட்டார்கள் என நாம் எதை வைத்து அளவிடுகிறோம்...? விற்பனைசெய்யப்படும் புத்தங்களின் அளவை வைத்துகொண்டா..?? அவ்வாறாயின் அது ஒரு மிகபிழையான அனுமானமே. உதாரணத்துக்கு என்னிடம் 700க்கு மேற்பட்ட மின்புத்தகங்கள் உள்ளன ஆனால் 100 இலும் குறைவான புத்தங்களையே நான் கடையில் வாங்கி வைத்துள்ளேன். எனவே எனது புத்தகம் விற்பனை ஆகவில்லை ஆகவே நல்லவாசகர்கள் குறைவடைந்து விடார்கள் எனக்கூற இயலாது. 

என்னைக்கேட்டால் நல்லவாசகர்கள் நல்லவாசகர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தெரிதல், விருப்பம், நாட்டங்கள் வித்தியாசமாகவே உள்ளது. அவர்களை திருப்தி படுத்தாத எழுத்துகளை அவர்கள் திரும்பிபார்க்க மாட்டார்கள். பலவகையான வேறுபாட்டினை குடுக்கும் புனைவாளர்கள் மீது அவர்கள் கவனம் எப்பொழுதும் இருக்கும். ஆக புலம்புவதை விடுத்து வாசகர்களை எம் பின்னே பின் தொடர வைக்க முயலவேண்டும்.

அதே மாயவி கதை வாசித்த வெறி இன்னமும் அடங்காமல் 
அன்புடன்
- ந்த் -

Views: 638