மனமாற்றமே என்னில் மாறாதது

எழுத்தாளர் : எல். தேனுஷாமின்னஞ்சல் முகவரி: thenushaloges07@gmail.comBanner

வண்ணங்களில் தோய்த்தெடுக்கப்பட்ட
வானவில் கனவுகளை
புத்தகப்பையினுள் செருகிக்கொண்டு
வண்ணத்துப்பூச்சியொன்றின் சிறகுகளை
கடன்வாங்கிக் காலில் பூட்டி
இளம் சிட்டாய் பறந்த என் 
கனவுகளிற்கு இப்பரந்த உலகு
போதாது!!!
எத்தனை ஆசைகள்
எவ்வளவு சந்தோசங்கள் என்னுள் தான்....

மணிக்குயில் இராகத்தில்
இசைபாடும் எனக்கு - கொடிய 
ஓநாய்களின் ஓலங்களை
அறிய வாய்ப்பில்லைத்தான்!

அந்தோ பரிதாபம்!
ஒரு வெள்ளைச்சீருடைப் பட்டாம்பூச்சி
வண்ணங்களற்று பிய்த்து வீசப்பட்டாள்!
பட்டுப்பாதங்கள் 
தொய்ந்து போயின- முடிவில்
சிட்டொன்று கொழுத்தப்பட்டது.
வெறிதீர்த்த ஓநாய்கள் 
விலகிச்சென்றன
அற்ப மகிழ்வுடன் அழிவறியாமல்!


ஊட்டி வளர்த்த உற்றவர்கள்
மூர்ச்சையற்றுப் போயினர்!
முடிந்தவரை வாழலாம் 
என்ற முடிவுடன்...

களங்கமுற்ற பெண்மையின்
குறை களையத் தீர்மானித்தாள்
இவள் கண்மணி ஒருத்தி..

சொல்லடி தாயே
அக்கிரமம் கொய்திடும் உரிமை
உனக்குத் தானும் இல்லையோ?
ஏறி விழுந்தாள்- அவன்
சந்நிதிகள் தோறும்

என்னவள் மானம் கொய்த
தன்மானமில்லாக்
கயவர்களைக் கேள் என்றாள்
மூச்சிருந்தால்,
உயிர் மூச்சிருந்தால்
நிமிர்ந்து பாருங்கள்
உங்கள் சிரசிருக்கும்
எங்கள் காலடியில்....!

இமைகளின் பாரத்தால்
இடறி விழுந்த – என்
கனவுகளின் 
கண்ணீர்த்துளிகளிற்கு
பதிலேதும் இல்லை இப்போதைக்கு

வாடிய மொட்டுக்கள்-மீள
மலரக்காத்திருப்பதில்லை
எச்செடியில் தானும்..
இளம் தளிரெனவே துளிர்விடத்
தொடங்கி விட்டேன்-என்
மனமாற்றம் ஒன்றே
மாறாதது- என்னில்
என்ற முடிவுடன்!!!;
Views: 168