முதற் பயணம் தனிப் பயணம் - த மிடிள் ஓடர்

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner

இந்த மிடிள் ஓடரைப் பார்ப்பதற்கு முதல் இதன் ஓப்பனிங்கைப் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்க. http://www.uvangal.com/Home/getPostView/1280

இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கின்ற உங்களில் ஒருவரை எழுமாற்றாக தெரிவு செய்து சத்திய ஸாயி பாபா பற்றி கூறச் சொன்னால், நேராகவோ அல்லது மறையாகவோ நிச்சயமாக அவரைப் பற்றி குறைந்தது ஐந்து வசனமாவது சொல்லுவீர்கள் என்பதை உங்களால் மறுக்கவே முடியாது. இத்தகைய அந்த சத்திய ஸாயி பாபாவின் வாசஸ்தலம் (தற்போது சமாதி) ஆந்திராவின் அனந்தபூரில் புட்டபர்த்தியில் இருக்கிறது. பிரசாந்தி நிலையம் என்பது அதன் பெயர். அவ்விடத்தை நோக்கித் தான் எனது பயணம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே தவிர ரெட்டியைத் தாக்கவோ அல்லது பெண்ணைத் தூக்கவோ அல்ல.

18.02.2017 தொடக்கம் 25.02.2017 வரையான எட்டு நாட்களை நான் அங்கு கழித்தேன். அந்த எட்டு நாட்களைப் பற்றி நான் இங்கு எழுதுவதானால் இரண்டு பிரச்சினைகள் இருக்கிறது. ஒன்று, ஒரு வண் டே மட்ச் போல முடிக்க நான் திட்டமிட்டிருந்த இந்தக் கட்டுரை ரெஸ்ட் மட்ச் போல நெடுந் தொடராக நீண்டு விடும். மற்றையது, இக் கட்டுரை பயணக் கட்டுரையிலிருந்து ஆன்மீக கட்டுரை என்ற பிரிவுக்கு மாறிவிடும். இரண்டையுமே நான் விரும்பவில்லை. எனவே இந்த எட்டு நாட்களையும் 'சிட்டிசன்'  அத்திப்பட்டிக் கிராமம் போல அப்படியே அடையாளம் இல்லாமல் முற்றாக டிலீட் செய்துவிட்டு 25ம் திகதி இரவு புட்டபர்த்தியில் இருந்து சென்னைக்கு மீழ நான் திரும்புவதிலிருந்து தொடருகின்றேன். (இந்த எட்டு நாட்களைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையாக ஏதாவதொரு ஆன்மீக பகுதியில் எழுதலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். பார்க்கலாம்)
செமி ஏ.சி பஸ்சைவிட கொஞ்சம் சுமாரான ஒரு தரத்தில் இருந்தது மாநிலங்களை ஊடறுத்துச் செல்கின்ற இந்த பஸ். இரவு ஏழு மணிக்கு இந்த புஸ்பக விமானத்தில் சென்னையை நோக்கி எனது பயணம் ஆரம்பமானது. இரவுப் பயணம் என்பதாலும் நேற்றைய சிவராத்திரியால் ஏற்பட்ட களைப்பினாலும் பயணத்தின் பெரும் பகுதி நித்திரையிலேயே கழிந்தது. அவ்வப்போது கண் விழித்துப் பார்த்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பஸ்சினுள் இருந்த தொலைக் காட்சியில் நெடுமுடி பாலகிருஷ;ணா பறந்து பறந்து எதிரிகளை பந்தாடிக் கொண்டிருந்தார் அல்லது கொஞ்சம் சுமாரான மியூசிக்கின் பின்னணியில் எக்சசைஸ் செய்தவாறு தன் மகளையொத்த வயதுள்ள ஹீரோயின் ஒன்றைக் காதலித்துக் கொண்டிருந்தார். 'இதைவிடவா நம்ம தலைவர் எமியோடு ரொமான்ஸ் பண்ணுவது மோசமாக இருக்கப் போகிறது?' என்று அந்த அரை நித்திரையிலும் எண்ணிக் கொண்டேன்.

கிட்டத்தட்ட 26ம் திகதி காலை ஆறு மணிக்கு நம் பேரூந்து கோயம்பேட்டை அண்மித்தது. மீண்டும் அதே சிங்காரச் சென்னை. எனக்கு ஏனொ எட்டு நாட்களுக்கு முன்பு விமான நிலையத்திலிருந்து இங்கு வந்து சில மணி நேரங்கள் அல்லல் பட்டது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் எனது இன்றைய நிலை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஏனெனில் எனது இன்றைய வரவு பற்றி சிவாவிடம் நான் ஏற்கனவே அறிவித்திருந்ததால் அவர் எனக்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்தார். 

பேரூந்தில் இருந்து இறங்கியதும் முதல் வேலையாக அவரைத் தேடிக் கண்டுபிடித்தேன். என்னிடமிருந்த இரண்டு பயணப் பைகளில் பெரியதை அவரிடம் கொடுத்து என் நண்பரின் தொழிற்சாலையில் வைத்துவிடுமாறு கூறிவிட்டு சிறிய பையுடன் என் முதல் நாடு காண் பயணத்துக்குத் தயாரானேன். ஆனால் அவர் என்னை அருகிலிருந்த கொஞ்சம் உயர்தர உணவகத்துக்குக் கூட்டிச் சென்று, ஒரு செட் பூரியும் பொங்கலும் வாங்கி என்னை உண்ண வைத்த பிறகு தான் கொஞ்சம் திருப்திப் பட்டுக் கொண்டார். நான் அந்த உணவகத்திலேயே சோட் அன்ட் சுவீட்டாக என் காலைக் கடன்களை முடித்துக் கொண்டேன். நான் முதலில் தஞ்சாவூருக்குப் போவதென்று திட்டமிட்டிருந்தேன். அதன்படி அங்கு போகும் பஸ்சைத் தேடி, தஞ்சாவூருக்கு பஸ் அந்த நேரத்தில் இல்லாமையால் கும்பகோணம் ஊடாக தஞ்சாவூர் போகும் பஸ்சில் என்னை ஏற்றிவிட்ட பின்பே சிவா புறப்பட்டார். இந்தச் சில மணித்தியாலங்களுக்குள்ளேயே சிவா எனக்கு மிக நெருங்கியவராகிப் போனார். எனது பஸ் கும்பகோணம் நோக்கிப் புறப்பட்டது.

தஞ்சாவூர் என்பது சென்னையிலிருந்து ஐந்து, ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடமல்ல. சென்னைக்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட தூரம் முந்நூற்று எழுபத்தைந்து கிலோ மீட்டருக்கும் கூட. அதாவது யாழ்ப்பாணமும் கொழும்பும் போல. கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரப் பயணம்.  ஆனால் தொடர்ந்து இல்லா விட்டாலும் அவ்வப்போது பஸ் இவ்விரு ஊர்களுக்கும் இடையில் நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது. மிகவும் வெய்யிலாகவும் களைப்பாகவும் இருந்தாலும் ஒரு விதத்தில் நான் பகல் பிரயாணத்தை மிகவும் விரும்பினேன். ஏனெனில் பகல் பிரயாணங்களில் மட்டுமே நாம் கடந்து செல்லும் இடங்களை, அவ்விடங்களில் வசிக்கும் மக்களை, அவ்விடங்களின் பண்புகளை பார்க்க முடியும். ரசிக்கவும் முடியும். 

நெடுந் தூரப் பேரூந்து என்பதாலோ என்னவோ அதிக கூட்டம் இருக்கவில்லை. கட்டணம் இந்திய மதிப்பில் இருநூற்று ஐம்பது ரூபாய். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. போகும் வழிகளில் இருக்கின்ற சுவர்கள், மதகுகள், மரங்கள் மற்றும் இன்னபிறவெல்லாம் இம் மக்களுக்கு அரசியல் மற்றும் சினிமாவில் இருக்கின்ற காதலை உலகத்துக்கு சொல்லிக் கொண்டிருந்தன. அவற்றில் உதாரணத்துக்கு அரசியல் தொடர்பானவை என்று பார்த்தால் 'செயல் சிறுத்தை', 'இளஞ்சிங்கம்' (அந்த இளஞ்சிங்கத்துக்கு அறுபத்திச் சொச்ச வயது), 'வாழும் வள்ளுவர்' இப்படியான வாசகங்களுடன் அந்த வாசகங்களுக்குரியவர்களின் ஓவியங்கள். 'வருங்கால ஜனாதிபதியே' என்ற வாசகம் மட்டும் தான் இல்லாத குறைச்சல். உண்மையில் அரசியல், சினிமா என்ற இரண்டு விடயங்களும் இல்லாமல் இங்குள்ள மக்களால் வாழ்க்கையை நடாத்தவே முடியாது. ஒருவேளை இவ்விரண்டும் திடீரென்று இல்லாமல் போனால் இவர்களில் பெரும்பாலானோர் நிச்சயமாக இறந்தே விடுவார்கள். ஒரு பனை உயர ஐயனார் சிலைகள், ரியல்எஸ்டேட் வணிக செயற்கை நகர்கள், ஏதேதோ ஊர்ப் பெயர்களையெல்லாம் தாங்கிய பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள், சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த திராவிடப் பெண்கள் இவையெல்லாம் கூட என் யன்னலோரக் காட்சிகளுக்கு அழகு சேர்த்தன.

ஒரு மாதிரி மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் பேருந்து நிலையத்தை அடைந்தேன். இன்றைய இரவை இங்கேயே கழிப்பதாக திட்டமிட்டு அருகிலிருந்த லொட்ஜ் ஒன்றுக்கு சென்றேன். சென்னையைப் போல இங்கே ஆட்டோகாரர்களின் பலவந்தங்களோ அல்லது உயர் கட்டணங்களோ இங்கே இல்லை. குளித்துவிட்டு லொட்ஜ் முகாமையாளரின் தகவல்களின்படி இன்று புன்னைக் காளி அம்மன் கோயிலுக்கு போவதென்றும் நாளை என் வாழ்நாள் கனவான தஞ்சைப் பெரிய கோயிலுக்கு போவதென்றும் தீர்மானித்தேன். 
புன்னைக் காளி அம்மன் கோயில் நகரிலிருந்து ஆறு ரூபாய் டிக்கட் பஸ் பயணத் தூரம். அந்தக் கோயில் எனக்கு மட்டுவில் அம்மன் கோயிலை ஞாபகப்படுத்தியது. இந்தக் கோயில் ராஜராஜ சோழன் காலத்துக்கு முற்பட்ட கால வரலாற்றைக் கொண்டது. ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ கோயில் நிறைந்த சனக் கூட்டமாக இருந்தது. 'ஆண்கள் மேலாடை இன்றி உட்செல்லவும்' என்பதற்குப் பதிலாக 'இங்கு குறி சொல்லுவது தவிர்க்கப் பட்டுள்ளது' என்ற வாயில் செய்தி எனக்கு புதுமையாக இருந்தது. ஆனால் உள் வீதிகளின் மூலைகளில் குறிசொல்லலும் வேப்பிலையடித்தலும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்பது வேறு விடயம். காசு கொடுத்து அர்ச்சனை செய்வதிலெல்லாம் எனக்கு அவ்வளவு அவிப்பிராயம் இல்லை. எனவே கோயில் வீதி சுற்றினேன். இன்றும் தொடர்ந்து பேணுகின்ற புராதனங்களை இரசித்தேன். வாயிலில் கச்சான் விற்றுக் கொண்டிருந்த ஒரு கையில்லாத வயோதிபர் ஒருவரிடம் இருபது ரூபாய் கொடுத்து பத்து ரூபாய்கு கச்சான் வாங்கினேன். ஏனோ மிகுதிக் காசை அவனிடமே கொடுத்துவிட்டேன். கோயில் வாயில்களில் கச்சான் விற்பதென்பது பிரதேசமல்ல தேசியமல்ல சர்வதேச ரீதியான விதி போலும். 

மீண்டும் நகருக்கு வந்து ஒரு சாப்பாட்டு கடைக்குள் நுழைந்தேன். என் முகத்தைப் பார்த்ததுமே நான் வெளியூர் காரன் என்பதை அந்த கடையின் முதலாளி கண்டுபிடித்து விட்டார் போலும். சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார். பெரிய 'சிங்கம்' மீசை வைத்திருந்த அவர் என்னைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?; சொன்னால் நீங்களே நம்பமாட்டீர்கள்.  'நீங்கள் கேரளா காரரா?' என்று கேட்டார். எனக்கு சிரிப்பதா பெருமைப்படுவதா என்று தெரியவில்லை. 'நான் ஸ்ரீ லங்கா' என்று சொன்னேன். தன் ஊருக்கு இலங்கையிலிருந்தெல்லாம் ஆட்கள் வருகிறார்கள் என்று அவர் பெருமைப்பட்டுக் கொண்டது அவரது முகத்திலே வெளிப்படையாகத் தெரிந்தது. கதையின் இடையில் ' சிறிசேன எப்படி இருக்கிறார்?' என்று கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. பின்பு தான் அவர் நம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பற்றித் தான் கேட்கிறார் என்று புரிந்தது. இங்குள்ளவர்கள் எல்லாம் வெறுமனே தமிழ்நாட்டு அரசியலை மட்டும் காதலிக்கவில்லை. அயல் நாடுகளின் அரசியலையும் சேர்த்தே காதலிக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். அவருடன் கதைத்தவாறு ஒரு நெய் மசால் தோசையை குருமாவுடன் பதம்பார்த்து முடித்தேன். தஞ்சைப் பெரிய கோயில் திறக்கும் நேரம் தொடர்பான விபரங்களை அவரிடம் கேட்டறிந்துவிட்டு விடைபெற்றேன்.

அதிகாலை 5.30 மணிக்கு என் வாழ்நாள் கனவான த.பெ கோயிலுக்கு புறப்பட்டேன். நகரிலிருந்து பத்து நிமிட நடைத் தூரத்தில் இருக்கிறது அந்தக் கோயில். ஆறாம் ஆண்டில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' முதன்முதல் வாசிக்கத் தொடங்கியபோது ராஜராஜ சோழன் மீது ஏற்படத் தொடங்கிய காதல் பல்வேறு எழுத்தாளாகள் மற்றும் கட்டுரைகளால் இன்னும் பலம் பெற்று, அது அம் மன்னனின் புகழ் பூத்த படைப்பாகிய தஞ்சைப் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகின்ற தஞ்சைப் பிரபதீஸ்வர் கோயிலுக்கு மாறி, எப்படியாவது அந்தக் கோயிலுக்கு போயாகவேண்டும் என்ற வைராக்கியம் என்னுள் ஏற்பட்டு, எதிர்பாராதவகையில் அது செயல் வடிவம் பெற்று 'இதோ இன்னும் ஐந்து நிமிடங்களுக்குள் அந்த உன்னத படைப்பைக் காணப் போகிறேன்' என்ற நிலைக்கு வந்த நிற்கிறது. 

என்னவொரு கம்பீரமான கோயில் அது. அதைப் பார்க்கும் போது தான் நமது சமயம் எவ்வளவொரு கம்பீரமான சமயம் என்பதையும் அக் கோயிலைக் கட்டிய மன்னன் எவ்வளவு கம்பீரமாக இருந்திருப்பான் என்பதையும் உணரக் கூடியதாக இருக்கிறது. இக் கோயில், சோழ அரசனான முதலாம் ராஜராஜனால் (கி.பி 985 – 1014) கி.பி 1003ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு கி.பி 1010ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இவ் ஆலயம் ராஜராஜன் திருவாயில், கேரளாந்தகன் திருவாயில் என்ற இரண்டு கோபுர வாயில்களையும் ஏறத்தாழ தரையிலிருந்து 60.4 மீற்றர் உயரமான விமானத்தையும் கொண்டுள்ளது. இவையெல்லாமே கருங்கற்களால் ஆக்கப்பட்டிருப்பது அதன் கூடுதல் சிறப்பு. பிரதான கோயில் மற்றும் திருச்சுற்று மாளிகை தவிர்ந்த தற்போது இருக்கின்ற நந்தி மண்டபம் உட்பட பெரும்பாலான பரிவார கடவுள்களின் கோயில்கள் எல்லாமே ராஜராஜனுக்கு பிற்பட்ட காலங்களில் கட்டப்பட்டவையே.

அந்தக் கோயிலை இரசிப்பதற்கு நான்கு மணித்தியாலங்களையும் அங்குள்ள இறைவர்களை வணங்க சில நிமிடங்களையும் செலவு செய்தேன். விமானம், அதிலுள்ள செதுக்கல்கள் மற்றும் சிற்பங்கள், பிரதான கோயிலின் கட்டட அமைப்பு, மூலஸ்தானத்தில் இருக்கின்ற பிரமாண்டமான லிங்கம், திருச்சுற்று மாளிகை மற்றும் அதில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கின்ற லிங்கங்கள் மற்றும் இன்னபிறவெல்லாம் எனக்கு வியப்புக்கு மேல் வியப்பை தந்தவண்ணமிருந்தது. நிற்கின்ற நடக்கின்ற பார்க்கின்ற இடங்களெல்லாம் கல்வெட்டுக்களால் நிறைந்திருந்தது. இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் 'கோயிலை புதுப்பிக்கின்றோம்' என்ற பெயரில் புதிதாக கட்டடங்களைக் கட்டி, வானவில் வர்ணங்களைத் தீட்டி அதன் பழைமையைக் குலைக்காமல் அதே புராதனத் தன்மையை அப்படியே பேணுவது அக் கோயிலின் அழகை மேலும் அதிகரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. பிரிய மனமில்லாமல் 9.30 மணிக்கு கோயிலிலிருந்து வெளியேறினேன். 

காலை உணவின் பின் சரபோஜி மன்னனின் மாளிகை மற்றும் கலைக் கூடத்துக்கு சென்றேன். இதுவும் நகருக்கு மிக அண்மையிலேயே அமைந்திருக்கிறது. 18ம் நூற்றாண்டில் நாயக்கர்களுக்குப் பின் தமிழ்நாட்டை ஆண்ட மராட்டிய அரசர்களின் மாளிகைகள் மற்றும் மணி மண்டபங்களை  கலைக் கூடமாக தமிழ்நாட்டு தொல்லியல்துறையினர் மாற்றி அமைத்திருக்கிறார்கள். இங்கு பல அரிய புராதன கருங்கல் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்ட சிற்பங்கள், படிமங்கள் என்பன சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான் அங்கு போனபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசிலர் நின்றிருந்தனர். ஒரு சுமாரான கிரைம் கதையில் கொலை நடப்பதற்கான அத்தனை இலட்சணங்களையும் அவ்விடம் கொண்டிருந்தது. புராதனங்களின் பெறுமதிகளையும் அதன் மதிப்புகளையும் அவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் நம்மவர்கள் உணர்வதில்லை. உணர முயற்சிப்பதும் இல்லை. நான் அங்கிருந்து புறப்படும் போது கிட்டத்தட்ட அரை நாள் முடிந்திருந்தது.

'சிங்கம்' மீசையின் கடையில் பகல் உணவை முடித்துக் கொண்டு தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழ புரத்துக்குப் புறப்பட்டேன். 'சிங்கம்' மீசை என்னோடு கூடவே வந்து காட்டாத குறையாக க.கொ.சோ புரத்துக்கு பாதை சொல்லியிருந்தார். அவரது சொற்களும் என் கூகிள் மப்பும் என் பயணத்துக்கு துணைபுரிந்தன. ஏனெனில் தஞ்சாவூரிலிருந்து க.கொ.சோ புரம் அருகிலே இருந்தாலும் கூட அதற்கு இங்கிருந்து நேரடியாக பேரூந்து போக்குவரத்து இல்லை. 

தஞ்சாவூர் டூ கீழைப்பளுவூர் ('பொன்னியின் செல்வன்' பளுவேட்டரையரின் ஊர்), கீழைப்பளுவூர் டூ ஜெயங்கொண்டாம் ஆகிய மினி பயணங்களின் பின் ஜெயங்கொண்டாமிலிருந்து தாராசுரம் என்கின்ற கங்கை கொண்ட சோழ புரத்தை அடைந்தேன். இங்குள்ள சிவன் ஆலயம் முதலாம் ராஜராஜனின் மகனான முதலாம் ராஜேந்திரனால் கி.பி 1025ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இக் கோயிலும் தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்றே மிகப் பெரிய விமானத்தையும் பெரிய மூல சிவலிங்கத்தையும் கொண்டது. இங்கு மூலஸ்தானத்திலுள்ள லிங்கம் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படகிறது. இக் கோயிலின் கட்டுமானங்களையும் சிற்ப நுணுக்கங்களையும் விபரிக்க வார்த்தைகள் போதாது என்று தான் சொல்ல வேண்டும். இவ் ஆலயம் அரசுடமையாக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலோ என்னவோ இவ் ஆலயமும் அதன் சுற்றுப்புற வளாகமும் மிகவும் சுத்தமாகவும் தூய்மையாகவும் பேணப்படுகிறது. நான் இவ்வளவு காலமும் ரசித்த இனி வருங்காலங்களில் ரசிக்க இருக்கின்ற ஆலயங்கள் எல்லாம் தந்த தரவிருக்கின்ற வியப்புகளையும் ஆச்சரியங்களையும் இவ்விரு ஆலயங்களும் மட்டுமே எனக்கு தந்துவிட்டன என நினைக்கின்றேன்.

கிட்டத்தட்ட மாலை 5.30ற்கு அங்கிருந்து சிதம்பரத்துக்கு பஸ் ஏறினேன். பகல் பொழுது முற்றாக முடிந்துகொண்டிருந்த போது நான் சிதம்பரத்தை அடைந்தேன். முன்னைய இரு ஆலயங்களிலிருந்து சிதம்பரம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. சனக் கூட்டங்களாலும் தீட்சிதர் மற்றும் குருமார்களாலும் கோயில் நிரம்பி வழிந்தது. சிவராத்திரியை ஒட்டிய நடன நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என்பன கோயிலின் வீதியெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அமைதி என்ற சொல்லே காணாமல் போயிருந்தது. இவ் ஆலயத்தின் பிரகாரம் மிகப் பெரியது என்று கூறினால் அது பொருள் குற்றமாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் கோயிலின் வெளிப் பிரகாரத்தை ஒருமுறை சுற்றிப் பார்க்க குறைந்தது முக்கால் மணி நேரமாவது எடுக்கும். பொற்கூரை வேயப்பட்ட நடராஜர், மூல மூர்த்தி, பிரம்மாண்டமான அனந்தசயனர் தவிர எனக்கு தெரிந்த, எப்பவோ ஒருமுறை கேள்விப்பட்ட மற்றும் நான் இன்னமும் வாழ்நாளிலேயே கேள்விப்படாத பல பரிவார மூர்த்திகள் ஆலயத்தின் திரம்பிய திசையெல்லாம் வீற்றிருந்தனர். தேவாரப் பதிகங்களுக்கென தனியாக ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது. உண்மையில் இப்படியான பிரமாண்டமான ஆலயமொன்றைப் பராமரிப்பதென்பது மிகக் கடினமான விடயமே. சிதம்பர இரகசியத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் கோயிலை சுற்றிப்பார்த்த களைப்பில் இல்லாமல் போயிருந்தது.

இரவு உணவை அங்கேயே முடித்து விட்டு பஸ் ஏறினேன். நேரம் சரியாக இரவு 10.00 மணி. என் போனின் சாஜ் முற்றாக தீர்ந்து விட்டிருந்தது. என் ஒரே உற்ற துணையான போனும் இல்லாமல் எனது பயணம் ஆரம்பமானது. இது எதை நோக்கிய பயணம்.......???

(பயணம் தொடரும்.....)
                                              
             
 
Views: 960