யுத்தம்,விரசத்தைப்பாடுதல் + சிறுகதையும் சினிமாவும்..

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: vibishan.don@gmail.comBanner

விரசம், ஈழயுத்தம் தாண்டி எழுதும் ஈழத்து எழுத்தாளர்களைத் தேடித் தேடி களைத்துவிட்டேன். உண்மையில் தரம் கூடிய இலக்கியம் என்று மகாபாரதம் ஒன்றை மட்டுமே சங்கம் தொட்டு இற்றை வரை உலகத்துடனான போட்டிக்கு சமர்ப்பித்துக்கொண்டிருக்கிறோம். அதிலும் புகட்டிய அல்லது திணிக்கப்பட்ட கருத்துக்கள் என்ற பகுதியை கழித்துவிட்டால் யுத்தமும் விரசமும் மாத்திரமே எஞ்சி நிற்கின்றன. இந்த மகாபாரதம் எழுத்தாளர்கள் மத்தியில் யுத்தத்தை பாடுதல் என்னும் கோட்பாட்டை விதைத்துள்ளதை புதினங்களின் தந்தையான கல்கியின் தொண்ணூறு சதவீதமான எழுத்துக்களில் காணலாம். ஆனால் எனக்கு தெரிந்த மட்டில் சயன்ஸ்பிக்சன், மஜிகல் ரியலிசம், த்ரில்லர், சைக்கோகில்லர், அக்சன், ட்ராமா என சகலவிதமான இன்றைய சிறுகதைகளும் முன்னோடி மகாபாரதம் தான். ஆனால் அதைக் கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கும் சில எழுத்தாளர்களைத்தவிர பலர் இன்னமும் மகாபாரதத்துடனேயே காலம் தள்ள நினைக்கிறார்கள்..பொதுவாக அவர்கள் மீது கொண்ட அதீத அன்பு காரணமாக எழுத்தாளர்களின் எழுத்துக்களை குறை மட்டுமே கூறுவது என் வழக்கம் கல்கியும் அதற்க்கு விதிவிலக்கு அல்ல.  அசலான வர்ணனைகளுக்காகவும் தொய்யாத கதை நகர்வுக்காகவும் மட்டும் அவரை கொண்டாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதே போல் எளிய உரைநடை, அதிகப்படியாக சயன்ஸ் பிக்சனுக்குள் கால் வைத்தவர், யுத்தம்,சங்கம் பற்றிய பழைய புராணங்களை தவிர்த்தவர் என்பதற்காகவும் சுஜாதாவை கொண்டாட விரும்பவில்லை. முக்கியமாக இந்த இருவரையும் எடுத்துக்கூறக் காரணம் ஓர் ஆரம்ப நிலை வாசகனாக நான் இருந்த சமயம் என்னை எளிதில் கவர்ந்தவர்கள் இவ்விருவர் தான். நிச்சயமாக இன்னமும் கல்கியையும் சுஜாதாவையும் கொண்டாடுபவர்கள் ஒன்று இலக்கியத்தில் காலத்தால் பின்னிற்பவர்கள் அல்லது இலக்கியம் என்பதன் ஆழம் அறியாதவர்கள் தான். இவர்களை தாண்டிய போது எனக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் ஜெயமோகன், சாரு ,ஷோபாசக்தி. மலையாள வாசம் அதிகப்படியாக வீசி செந்தமிழை கஷ்ரப்படுத்துகிறது என்பதற்காக காடு, அறம் இரண்டுடன் ஜெயமோகனுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஆனால் ஜெயமோகனின் கட்டுரைகள் பற்றி என்னிடம் பூரணமான திருப்தி இருக்கிறது. அவரின் கட்டுரைகளில் பிழை பிடித்து மனதளவில் பகைத்துக்கொள்ள வேண்டும் என்ற எனது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் தான் முடிகின்றன. கடைசியாக வந்த இஸ்லாமியர்களுக்கான வீடு பற்றிய கட்டுரை வரை.
சாருவை கொண்டாடாமல் இருக்க இன்று வரை என்னால் முடியவில்லை.. சாரு ஒரு விளம்பரம்தேடி, விரசத்தில் அனைத்து எழுத்தாளர்களையும் விஞ்சி நிற்பவர்,சுய விளம்பி போன்ற விமர்சனங்களுடன் நான் முழுவதுமாக ஒத்துப்போனாலும் அதைத் தாண்டி அவரின் எழுத்துக்களில் அதிகப்படியான குளோரோபோம் உள்ளது. நான் சாருவை கொண்டாடுவேன். அதைத்தாண்டி எழுத்தாளன் சாருவின் எழுத்துக்களில் ஐம்பது சதவீதம் குப்பை ஐம்பது சதவீதம் வைரம்.

எனக்கு தெரிந்த மட்டில் ஈழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி ஈழயுத்தம் பற்றிய புனைவுகள் அல்லது விரசம் விஞ்சிய எழுத்துக்கள் இல்லாமல் ஒரு எழுத்தாளன் உடனடியாக அங்கீகரிக்கப்படமாட்டான். முக்கியமாக சயன்ஸ் பிக்சன் வகையறான ஜேனர்களை காண்பது அரிதாகிவிட்டது. இதற்க்கு காரணமாக இரண்டு விடயங்களை சொல்லலாம். ஒன்று அந்த ஜேனர் வகையான எழுத்துக்கள் உடனடியாக அங்கீகரிக்கப்படமாட்டாது. அதற்கான வாசகர் மட்டமும் குறைவு. இரண்டாது சினிமா, சினிமாவிற்க்கும் சிறுகதைக்கும் பலவாறான ஒற்றுமைகள் உள்ளன. ஒரு சிறந்த சிறுகதை ஒரு சிறந்த இயக்குனரால் ஒரு சிறந்த சினிமாவாக உருவாகமுடியும்.. இதன் மறுதலையும் உண்மையே. ஆக மொத்தத்தில் ஒரு சமூகத்தின் சினிமா ரசனையை வைத்து அதன் சிறுகதைக்கான ரசனையை அறிந்து கொள்ளலாம். ஈழத்திற்க்கு என்று இதுவரையில் வெற்றி பெற்ற சினிமாத்துறை ஒன்று இருப்பதாகத்தெரியவில்லை. போரை மையப்படுத்தி வந்திருக்கும் சில குறும்படங்கள். சில வேறு வகையறான குறும்படங்கள். ஒரு சில முழு நீளப்படங்கள், ஈழத்தில் இருந்து தமிழகசினிமாவுக்குள் நுழைந்து அதன் பேரில் பெயர் பெற்றவர்கள் என்றவாக்கில் இருக்கும் குறுகிய வட்டத்திற்க்கும் ஈழத்து இலக்கிய வட்டத்திற்க்கும் அதிகளவிலான வேறுபாடுகள் இல்லை. ஈழத்து எழுத்தாளர்கள் பலரும் ஜனரஞ்சகத்திற்காக தமிழகத்தையே நாடுகிறார்கள். அதே போல் வெளி வந்திருக்கும் நாவல்களும் சிறுகதைகளும் விரல் விட்டு எண்ணக்கூடியவை தாம். தமிழகத்தின் தரத்தோடு ஒப்பிடுகையில் ஈழத்து சினிமாவை ஒத்த நிலையிலேயே ஈழத்து இலக்கியமும் உள்ளது. கொஞ்சம் கூராய் நோக்கின் ஈழத்து இலக்கியங்கள் ஈழத்து சினிமாவைக்காட்டிலும் சற்று உயரமாய் தோன்றும். நூறு கொமர்சியல் சினிமாக்களுக்கு மத்தியில் வரும் ஒரு சயன்ஸ்பிக்சன் சினிமாவைப்போல தமிழகத்தில் சயன்ஸ்பிக்சன் வகையறான சிறுகதைகளும் பஞ்சத்திலேயே இருக்கின்றன.

அதற்க்காக விரசத்தை, யுத்தத்தை பாடவேண்டாம் என்று அர்த்தம் இல்லை. யுத்தத்தை மட்டுமே கருப்பொருளாக கொள்ளாமல், கருவை சிதைக்காமல் யுத்தத்தை பாடலாம். யுத்தத்தின் போக்கில் கதையை சொல்வதற்க்கும் கதையின் போக்கில் யுத்தத்தை பாடுவதற்க்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டாயம் கல்கியை வாசித்திருக்க வேண்டும். பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், சிவகாமியின்சபதம், மோகினித்தீவு போன்றவற்றில் அவர் கருவை சிதைக்காமல் யுத்தத்தை பாடி இருப்பார். ஈழத்து எழுத்தாளர்கள் பலர் ஈழத்து யுத்தத்தை முன்னிலைப்படுத்தி கருவை புறம் தள்ளி விடுகிறார்கள். இதனால் யுத்தத்திற்க்கான பரிதாபம் அங்கே கதையின் ருசியை காட்டிலும் விஞ்சி விடுகிறது.

அடுத்ததாக விரசத்தை பாடுதல். இதற்க்கு நான் காட்டும் அழகான உதாரணம் சுஜாதா. தேவை இல்லாமல் விரசத்தை பாடாத எழுத்தாளர். தேவை ஏற்படின் பொருத்தமான வார்த்தை பிரயோகங்களால் விரசத்தையும் அழகாக்கியவர். இந்த இரண்டு விடயங்களுக்கும் நேர்மாறான எழுத்தாளர் தான் சாரு. ஜெமோவிடமும் கொஞ்சம் மனஸ்தாபம் உண்டு எனினும் இந்த விடயத்தில் சாருவை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.
ஆக மொத்தத்தில் வெறும் ஜனரஞ்சகத்திற்க்காக யுத்தத்தையும் விரசத்தையும் பாடாமல் தேவைக்காக பாடுபவர்கள் இந்தப்பிரபஞ்சத்தில் மிகச்சொற்ப்பம்.
Views: 483