பந்தயம்

எழுத்தாளர் : எல். தேனுஷாமின்னஞ்சல் முகவரி: thenushaloges07@gmail.comBanner

ஆசை பின்னிய வலையில்
சிக்கிக் கொண்டேன்
ஆரம்பமும் முடிவுமற்ற
வட்டத்திலிருந்து
வெளியேற முடியவில்லை
காலச்சக்கரம்
என்னைப் பொறுத்த அளவில்
சுழலவில்லை
எது உண்மை
எது பொய்யென்று
பிரித்தறிய முடியவில்லை
ஒவ்வொருவருடைய மறுபக்கமும்
பீதியூட்டுகிறது எனக்கு
ஒன்றுக்கு பின்னால்
இருந்தால்தான்
பூஜ்யத்திற்கு மதிப்பு என
தெரிந்து வைத்திருக்கிறேன்
அடர்ந்த இருளைக் கடக்க
எனக்கு ஒரு சுடர் தேவை
விடை கிடைக்காத
கேள்விகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகிறது
வாழ்க்கைப் பாதையில்
சரியான வழியில்தான்
சென்று கொண்டிருக்கிறேனா என்று
இப்போதுதான் எனக்கு
சந்தேகம் வருகிறது
பந்தயத்தில் 
வேடிக்கைப் பார்ப்பவனை
யார்தான் விரும்புவார்கள்
இரைக்காக தூண்டிலில் சிக்கிய
மீனைப் போல் துள்ளுகிறேன்
முகம் தெரியாத ஒருவரின்
வயிற்றுப் பசிக்கு
இரையாகத்தான்
வந்து பிறந்தேனா
மாயாஜாலம்
ஏதாவது நிகழ்ந்தால்தான்
மாற்றம் வரும்
எனது வாழ்வில்
வாழ்க்கைப் புத்தகத்தில்
எனது பக்கம்
வெற்றிடமாக 
இருந்து விட்டுப் போகட்டும்
இயற்கையின் பேரதிசயத்தை
கண்கள் விரிய பார்த்த
பால்யத்தை தொலைத்துவிட்டு
அலைகிறேன்
கனவுக்கும் நனவுக்கும்
இடையேயான இடைவெளியை
நினைத்து நினைத்து
அழுகிறேன்.
Views: 366