யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தின் சீதன நடைமுறைகள் - பாகம் இரண்டு

எழுத்தாளர் : லக்ஷி குணரத்தினம்மின்னஞ்சல் முகவரி: luxshekuna@gmail.comBanner

யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தின் சீதன நடைமுறைகள்       பாகம் இரண்டு

சீதனம் ஓர் அறிமுகம், தேசவழமையும் சீதனமும், சீதன முறைமையில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக கடந்த மாத (சித்திரை) உவங்களில் ஆராயப்பட்டிருந்தது http://www.uvangal.com/Home/getPostView/1283. இம்முறை (வைகாசி மாதம்) சீதனத்திற்கான காரணங்கள், தற்காலத்தில் சீதனத்தின் வீரியம், அதனால் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள், அதனை இல்லாதொழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அலசப்பட்டுள்ளன.

சீதனத்திற்கான காரணங்கள்

சீதனம் இன்றைய காலத்திலும் தேவை தானா? என்ற வினாவுக்கு முன்னர் என்னென்ன காரணங்களுக்காக சீதனம் என்ற விடயம் திருமணத்தினுள் உட்புகுந்துள்ளது என்பதனை கண்டறிய வேண்டும். இந்துத் திருமணம் என்றாலே சீதனம் எவ்வளவாம் என்ற கேள்வியினை எழுப்புகின்றனர். இந்தக் கேள்வியினை படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரும் எந்த வேறுபாடுமின்றி எழுப்புகின்றனர். தமிழர்கள் மாத்திரமன்றி ஏனைய இனத்தினைச் சேர்ந்தவர்களும், 'யாழ்ப்பாணத் திருமணங்களில் அதிகம் சீதனம் வாங்குவார்கள் தானே' வெகு சாதாரணமாகக் கேட்கின்ற அளவுக்கு சீதனம், அவர்களின் சிந்தனைகளிலும் வேரூன்றிய ஒரு அம்சமாக தவிர்க்க முடியாததாக அமைந்து விட்டது. ஒரு காலத்தில் தமிழர்களிடத்தே காணப்பட்ட தாய்வழி முறைமை மற்றும் கேரள மக்களிடத்துக் காணப்பட்ட மருமக்கட் தாயச் சட்டம் போன்றன யாழ்ப்பாணத்தில் சீதன முறைமை புகுந்தமைக்குக் காரணம் என எச். டபிள்யு. தம்பையா விளக்குவார். 

ஆரம்பத்தில் நிலவுடைமைக் கலாசாரம் காணப்பட்டமையினால் மக்கள் நிலச் சுவாந்தகர்களாக இருந்தனர். எனவே திருமணம் முடிக்கின்ற போது மணமகளின் தந்தை தன் மகள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பதற்காகவும் தனது மனத் திருப்திக்காகவும் தன்னிடமிருக்கும் காணி, நிலம், நகை, வீடு மற்றும் ஏனைய சொத்துக்களைத் தன் பிள்ளைகளுக்குச் சம பங்காகப் பிரித்து வழங்கும் முறைமை காணப்பட்டது. எனவே கடன் என்ற தன்மையின்றி தனது சமூக அந்தஸ்து என்கின்ற போர்வையின்றி எந்தவிதமான தங்குதடையுமின்றி தனது மகளின் திருமணத்தில் தனக்கு விருப்பமான முறையில் பரம்பரை சொத்துக்களை வழங்கி வைக்கும் தன்மை காணப்பட்டது. 

எதற்காகப் பெண் வீட்டாருக்கு மட்டுமே சீர் கொடுக்கும் முறைமை காணப்பட்டது என நீங்கள் கேட்பது புரிகின்றது. சொல்கிறேன், ஏனெனில் பாரம்பரியச் சமூகத்திலே பெண்கள் கல்வியறிவோ வேலைக்குச் செல்கின்ற மரபோ அற்றவர்களாகத் தான் இருந்தனர். எனவே வேலைக்குச் சென்று குடும்பத்தின் பொருளாதாரத் தேவையினை நிறைவு செய்கின்ற குடும்பத் தலைவனோ அன்றில் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் ஒன்று சேர்ந்து தமது குடும்பப் பெண்ணிற்குத் தம்மாலான சீர் கொடுத்து மணமகன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இன்னொரு வீட்டுக்குச் செல்கின்ற தம் குலப் பெண் யாரிலும் தங்கி வாழாது தனது சொந்தக் காலிலே சுகபோகமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் சீதனம் கொடுக்கும் மரபு காணப்பட்டது.

சிலரிடம் சீதனம் ஏன் கொடுக்கிறீர்கள், ஏன் வாங்குகிறீர்கள் எனக் கேட்டால், சொல்வார்கள் அது எங்களுடைய எழுதப்படாத சட்டம், தேச வழமையில் சொல்லப்பட்டுள்ளது என்பர். அப்படிக் கூறுவார்களாயின் நிச்சயம் அவர்கள் தேச வழமையினை முழுமையாக் படிக்கவில்லை என்பதே அர்த்தமாகும். தேச வழமை, சீதனம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. சீதனம் கொடுத்தால் தான் திருமணம் என்றும் கட்டாயப்படுத்தவில்லை. திருமணத்தின் போது சீதனம் கொடுக்கப்பட்டால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படிக் கொடுக்க வேண்டும் என்று அது சில நடைமுறைகளை மாத்திரமே வலியுறுத்துகின்றது. திருமணத்திற்குத் தடையாக இருக்கின்ற சீதனம் என்கின்ற மாயையினைக் கட்டாயப்படுத்துமாக இருப்பின், தேச வழமையினை எவ்வாறு ஒரு தொன்மைக் கலாசாரத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாக, தனி அடையாளமாக, இவ்வளவு காலமும் அம் மக்கள் பின்பற்றியிருக்க மாட்டார்கள் அல்லவா?

மேலும் மக்களிடம் காணப்பட்ட பேராசையும் அதிக எதிர்பார்ப்புக்களும், சமூகத்தில் தம்மை உயர்த்திக் காட்டி தமக்கான உயர் சமூக அடுக்கமைவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவா, மக்களிடம் காணப்பட்ட கல்வியறிவின்மை, அறியாமை போன்றவற்றினால் சில கலாசார ஊடுருவல்கள் ஏற்படும் போது எது தமது உண்மையான கலாசாரம் என்ற பகுத்தாராயும் சிந்தையற்று எல்லாவற்றையும் பின்பற்றத் தலைப்பட்டமை போன்றனவும் சீதனம் என்ற சமூக விலகல் தோன்றக் காரணங்கள் என்று வகைப்படுத்த முடியும். இதற்கு எதிரான சட்டங்களும், கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்ட போதும் அது தொடர்பான தெளிவான அறிவின்மை பாமர, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களிடையே காணக் கிடைக்கின்றமையினால் இற்றை வரை கொடூரமான முறையிலேயே தொடர்கின்றது. 

சீதனச் சந்தையின் இன்றைய நிலை

இன்று ஆண்கள் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் சீதனம் நிர்ணயிக்கப்படுகின்றது. பெண்கள் எவ்வளவு தான் படித்துப் பட்டம் பெற்று ஆண்களுக்குச் சமமாக வேலை செய்தாலும் கூட திருமணம் என்று வருகின்ற போது கட்டாயம் சீதனம் கொடுத்தே திருமணம் செய்கின்ற தன்மை காணப்படுகின்றது. சில இடங்களில் பெண் வீட்டார் வலுக் கட்டாயமாக, மணமகன் வீட்டார் கேட்காதவிடத்தும் தமது பெண்ணிற்குச் சீதனம் கொடுத்தே திருமணம் செய்து வைக்கின்றனர்.

பெண் உயர் கல்வி கற்று உயர் அந்தஸ்துள்ள தொழில் மேற்கொண்டாலுமே, ஆண் குறிப்பிட்ட தொழில் ஒன்றும் இல்லாதவராக, அப் பெண்ணை விடக் குறைவான கல்வியறிவு கொண்டவராக இருந்தாலும் கட்டாயம் சீதனம் கொடுத்தே திருமணம் செய்யும் போக்குத் தற்காலச் சமூகத்திலே காணப்படுகின்றது. 

ஒரு ஆணின் பாரம்பரியக் குணமோ, பழக்கவழக்கங்களோ, அவரின் நடத்தைக் கோலங்களோ முன்னுக்கு நிற்காது அவர்களின் தொழில் அந்தஸ்தை மையப்படுத்தியே சீதனம் பேரம்பேசப்படுகின்றது. 

யுத்தத்திற்கு முன்னர், யுத்தத்திற்குப் பிற்பட்ட காலம், யுத்த காலம் என்ற அடிப்படையில் சீதனம் வாங்கும், கொடுக்கும் மரபினை வகைப்படுத்த முடியும். யுத்தத்திற்கு முன்னர், பாரம்பரிய, வழி வழியான பழக்கவழக்கத்தின் அடிப்படையில் சீதன நடைமுறைகள் பேணப்பட்டன. ஆனால் யுத்த காலத்தின் போது காணப்பட்ட அரசியல் சூழல் காரணமாக சீதனம் வாங்குகின்ற மரபோ, கொடுக்கின்ற மரபோ தமிழ் மக்களிடத்துக் குறைவாகக் காணப்பட்டது. ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னரோ, சீதனம் வேறு ஒரு திசையில் வாய் வழி மூலம், படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடுமின்றி அனைவரும் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்ற அடிப்படையில் சீதனம் கேட்கின்ற தன்மைகளும் கொடுக்கின்ற தன்மைகளும் தற்காலச் சமூகத்தில் காணப்படுகின்றன. 

தற்காலத்தில் சீதன நிலவரங்கள் பின்வருமாறு அமைகின்றன.


விபரம்

காசு

 வீடு, வளவு, வாகனம்

நகை

வைத்தியர்

2 கோடி

கல்வீடு, வளவு, கார்

35 பவுண்

பொறியியலாளர்

1.5 கோடி

கல்வீடு, வளவு, கார்

35 பவுண்

 சட்டத்தரணி, அரச உத்தியோகம், ஆசிரியர்கள்

20-40  லட்சம்

கல்வீடு, வளவு

40 பவுண்

தனியார் வங்கிகள் மற்றும் தனியார் துறை, கம்பனிகளில் தொழில் புரிவோர்

15-30 லட்சம்

கல்வீடு, வளவு

30 பவுண்

சவூதி, கட்டார், டோகா போன்ற நாடுகளிலிருந்து வருவோர் 

15 லட்சம்

கல்வீடு, வளவு, வாகனம்

25 பவுண்

ஐரொப்பிய நாடுகளில் பிரஜாவுரிமையுள்ளோர்

10-20 லட்சம்

இருந்தால் வாங்குவோம்

30 பவுண்

விவசாயி, கூலி வேலை மற்றும் சாதாரண வேலை செய்வோர்

8-10 லட்சம்

வெறும் வளவு

15 பவுண்

சும்மா வேலையற்று இருப்போர்

 8 லட்சம்

வீடு, வளவு (சில தருணங்களில்)

10 பவுண்

மூலம்: நேரடிக் கள ஆய்வு, 2017


சீதனத்தால் ஏற்பட்ட தாக்கங்கள்

ஒன்றா இரண்டா! சீதனத்தினால் ஏற்படுத்தப்பட்ட தாக்கங்களைப் பட்டியல்படுத்திக் கொண்டே போகலாம். அத்தகைய தாக்கங்களைப் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவே சீதனம் காணப்படுகின்றது. நூற்றுக்குத் தொண்ணூறு வீதமானவர்கள் சீதனம் ஒரு தேவையற்ற பொருள் என்று எண்ணவில்லை. சீதனம் கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றாகவே கருதுகின்றனர். இதனால் பெண் மட்டுமே பாதிப்புக்கு உட்படுகின்றாள் என்று மேலெழுந்த வாரியாகச் சொல்லிவிட முடியாது. அவளுக்குச் சீதனத்தைக் கொடுத்துத் திருமணத்தை வெகு சிறப்பாகக் கொண்டாட அவளின் தந்தை மற்றும் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் முன் வருகின்றனர். இதனால் தன் தங்கைக்கும் தமக்கைக்கும் திருமணம் செய்து வைக்கும் வரை அல்லது அவர்களைக் கரை சேர்க்கும் மட்டும் கல்யாணம் என்ற எண்ணமேயின்றி வேலை செய்யும் உழைப்பாளர்களாக அவர்கள் மாற்றமடைகின்றனர். இதனால் ஆண்களின் வயது கடந்த திருமணங்களைச் சமூகத்தில் காணக்கிடைக்கின்றது.

இது ஒரு வகை என்றால் அடுத்த வகை, அனைத்துத் தகுதிகளும் இருந்தும் திருமணத்திற்குச் சீதனம் இல்லை என்ற காரணத்தினால் முதிர்கன்னிகளாக வீட்டில் இருக்கும் பெண்களையும், காலம் கடந்து திருமணம் முடிக்கும் பெண்களையும் சமுதாயத்தில் காணலாம். 

'பெண்களும் கை நிறையச் சம்பாதிக்க 

தொடங்கிய இந்த சமூகத்தில் தான்...

 வரதட்சணை  இல்லாத வறிய குடும்பங்களில் 

முதிர் கன்னிகளும் நிறைந்திருக்கிறது.' (நெடுந்தீவு முகிலன்)

தனது பெண் சகோதரிகள் திருமணம் முடிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து அங்கு குளிரிலும் பனியிலும் இளைஞர்கள் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமது சகோதரிகள் திருமணம் முடித்ததன் பின்னர், திருமணம் என்ற எண்ணக்கரு கசந்த பின்னரே தமக்கான துணையைத் தேடிக் கொள்ளும் விசித்திர சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் சில இடங்களில் மூத்த பெண் பிள்ளைகள் ஏனைய சகோதரிகளின் வாழ்க்கைக்காகத் தமது வாழ்க்கையினையே தியாகம் செய்து உழைக்கின்ற பான்மையினைக் காண முடிகின்றது. இது எதனால், லௌகீக வாழ்க்கையின் அடித்தளமாம் திருமணத்தை முடிக்க முடியாமல் சீதனம் என்பது பெரும் தடையாக விஸ்வரூபம் எடுத்துள்ள ஒற்றைக் காரணம் தானே. 

சீதனம் சமூக உளவியல் தாக்கத்தினை ஏற்படுத்துவதாகவும் அண்மைக்கால ஆய்வுகள் செப்புகின்றன. மனப்பிறழ்வு, மன எழுச்சி, மன நோய், சமூகப்புறவொதுக்கம், சுயநலம், உலோப மனப்பாங்கு, அநீதியின் வழியான மனப்போக்குப் போன்ற தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் வளம் மிக்க இளைஞர்களின் ஒட்டு மொத்த திறமைகளையும் இழந்து கொண்டிருக்கின்றோம். சமூகத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் போதும் சமூகத் தொடர்புத்தன்மை அதிகரிக்கும் போதும் கலாசாரம் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் எனத் திணிக்கப்படும் போதும் யுடவசரளைவiஉ ளரiஉனைந என்று சொல்லப்படுகின்ற தற்கொலைகள் சமூகத்தில் அதிகரிக்கின்றன. 

யாழ்ப்பாணத் தமிழர்கள் அனைத்தையும் சேமிப்பதில் வல்லவர்கள், எதையும் தேவையற்று செலவழிக்க மாட்டார்கள் என்ற வழக்கம் உண்டு. காரணம் அவர்கள் தமது பெண் பிள்ளைகளுக்குச் சீதனம் கொடுத்து கல்யாணம் கட்டி வைக்க வேண்டும் என்ற நோக்கிலே எந்தவித சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்காது பணத்தையோ பொருளையோ சேர்ப்பது தான். இதனால் அவர்களின் வாழ்க்கை முழுவதுமே பணத்தின் பின்னால் ஓடியதாகவே இருக்கும். இது காலப்போக்கில் பரம்பரையில் உளநோய்த் தாக்கங்கள் ஏற்படப் பின்புலமாக அமைவதாக அண்மைக் கால ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் 'பெண்பிள்ளை பிறந்தாலே சாபக்கேடு' என்றும், அவளுக்கென்ன கெட்டிக்காரி மூன்றும் ஆம்பிளைப் பிள்ளையளாப் பெத்துப் போட்டாள்' போன்ற சொல்லாடல்களைப் புழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

தற்பொழுது திருமணத்தில் சீதனம் கேட்பதில் புதுப் போக்கு உருவாகியுள்ளது. அண்மையில் நண்பி ஒருவருக்குப் மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஆரம்ப கட்டச் செயற்பாடுகள் அனைத்தும் ஒத்து வர திருமணம் பேசி முடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இரு பக்கப் பெற்றோரும் கலந்து பேசுவதென்று தீர்மானித்து, தொலைபேசியூடாக உரையாடல் நிகழும் போது அந்த மாப்பிள்ளையின் தாயார் உங்களது மகளுக்கு நீங்கள் இருக்கின்ற வீடு, காணி, நகை இவ்வளவும் சீதனமாகத் தர வேண்டும், விரும்பினால் வாகனமும் எடுத்துத் தரலாம், அது உங்களுடைய விருப்பம். ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் வீட்டை என்னுடைய (மணமகனின் தாயார்) பெயருக்கு எழுதிக் கொடுத்திட வேண்டும் என்பது அவரது மென்மையான நிபந்தனை. 

நண்பியின் தந்தை முற்போக்குவாதி என்பதனால் காசுக்கு ஆசைப்படும் குடும்பம் எனது மகளுக்கு வேண்டாம் என்று திருமணத்தை அத்தோடு நிறுத்தி விட்டார். ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாகி விட்டது சீதனமும் திருமண பந்தங்களும் என்று சமூக சேவையாளர்களும் சமூக சீர்திருத்தவாதிகளும் கவலை கொள்கின்றனர். 

சீதனத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள்

சமூகமயமாதல் செயற்பாடு சமூகத்தின் பிரதான அலகான குடும்பத்தின் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்படுமாக இருப்பின் தேவையற்ற மூடப்பழக்க வழக்கங்களைக் களைந்து நிச்சயம் புத்துணர்வு பெற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். பெற்றோராதல்  என்பது ஒரு கலை. அதனை எல்லோராலும் சரி வரச் செய்வதென்பது கடினமே. எனவே நமது பிள்ளைகள் எவ்வாறு இருக்க வேண்டும். எத்தகைய நற்பழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களைச் சிந்தித்து எமது எதிர்கால பிரஜைகளுக்குச் சொல்லி வளர்க்கின்ற எமக்கான உப கலாசாரத்தை  உருவாக்குவோமாக இருப்பின் சீதனம் என்ற வார்த்தையே காலப்போக்கில் இல்லாது போய்விடும்.

சீதனம் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும். சீதனம் என்பது என்ன, ஏது என்ற விழிப்புணர்வின்றி, திருமணம் என்றால் சீதனம் வாங்கத்தான் வேண்டும், அவ்வாறு வாங்கா விட்டால் மற்றவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற தன்னிலை சமூகப் புறவொதுக்க (ளநடக ளவபைஅய) நிலையினைக் கவனத்திற் கொண்டு செயற்படுகின்ற போது சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் அதிகரிக்கின்றது. பணமாகச் சீதனம் பெறுவது இப்பொழுதெல்லாம் புதிய நாகரிக நிலையாகி விட்டது. மக்களால் பெரிதும் பாவனைக்குட்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் சீதனம் தொடர்பான விழிப்புணர்வுகள் ஊட்டப்படுகின்றன. 

'முதுகெலும்பற்ற ஆண்கள் எதிர்பார்க்கும் பிச்சைக்காசு', 'என்னிடம் சீதனம் வாங்கி என்னைத் திருமணம் செய்த என் கணவருக்கு பெண் குழந்தைகளாகவே பெற்றுக் கொடுக்க ஆசை' போன்ற வாசகங்களை இன்றைய முகப்புத்தக வலைத்தளங்கள் பரப்புகின்றன. அவை ஏட்டுச்சுரைக்காய் போன்றே இருப்பது ஒரு புறம் இருக்க, எறும்பூரக் கல்லும் தேயும் கதையாக மீண்டும் மீண்டும் அச்சு ஊடகத்திலிருந்து இலத்திரனியல் ஊடகத்திலிருந்து எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் சீதனச்சட்டம் தொடர்பாகவும் சீதனம் தொடர்பாகவும் கூறி வருகின்ற போது மக்களின் மனங்களில் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்கலாம். 

கல்வியறிவினைப் பெண்களுக்கு ஊட்டுகின்ற போதும் சீதனத்தின் பாதகத்தன்மையினைக் குறைக்கலாம். ஆனால் படித்த பெண்கள் தான் சீதனம் அதிகம் கொடுத்துத் திருமணம் முடிக்கும் துர்ப்பாக்கியசாலிகளாக இன்றைய சமூகத்தில் வாழ்கின்றனர். அதனால் கொழும்பு போன்ற மாநகரங்களில் இடம்பெயர்ந்துள்ள பெண்கள் சீதனத்தைக் காரணங்காட்டியும், தமது தொழில், உயர் அந்தஸ்து, தங்கி வாழாது சுயமாக வாழும் தன்மை போன்றனவற்றுக்குப் பழக்கப்பட்டுள்ளதனால் திருமணப் பேச்சினையே தள்ளிப் போடுகின்ற தன்மைகளைக் காணலாம்.

அதனுடன் பால் சமத்துவத்தினை உருவாக்கினாலும் சீதனத்தைக் குறைக்கலாம். சிறு வயதில் இருந்தே யாழ்ப்பாணத் தமிழர்கள், ஆண்களை ஒரு விதமாகவும் பெண்களை ஒரு விதமாகவும் வளர்க்கின்ற தன்மையே காணப்படுகின்றது. ஆண்பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்தே, 'நீ உனது அக்கா தங்கைகளைக் கரைசேர்க்க வேண்டும், உனது வாழ்க்கையினைக் கொண்டு செல்ல வேண்டும் எனவே நன்றாகப் படித்து ஒரு உத்தியோகத்தை எடுக்கிற வேலையைப் பார்' என்று சொல்லி சொல்லியே வளர்ப்பர். 

இதுவே பெண்ணாக இருப்பின் அவள் என்ன கல்வி கற்க வேண்டும், என்பதனை முடிவு செய்வதுடன் அவளுக்கென்ன வேலைக்குப் போக வேண்டும் என்ற தேவை இல்லை. வாறாவன் பார்த்துக் கொள்ளுவான் தானே, சும்மா படித்து உனக்கான அறிவை மட்டும் எடுத்துக் கொள் என்பதாகவே இருக்கும். இதனால் அங்கே பால் சமத்துவமின்மை தோன்றி விடுகின்றது. எனவே பால் சமத்துவத்தை, ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணத்தை இரு பாலாரிடமும் வளர்க்க வேண்டும்.  

சீதனத்தை முற்றாக ஒழிக்க என்னென்ன வகைகளைக் கையாளலாம் என்று இந்தியாவின் 'நஷனல் ஹெரால்ட்' என்ற பத்திரிகை ஒரு விளம்பரத்தினைப் பிரசுரித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. பெற்றோரே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளித்து, அவளைத் தனது சொந்தக் காலிலே நிற்கச் செய்யுங்கள், சீதனம் கொடுப்பதை நிறுத்துங்கள், சீதனம் பற்றிப் பேசுவதையும் நிறுத்துங்கள், திருமணத்தின் பின்பு சீதனம் காரணமாக உங்களின் மகள் துன்புறுத்தப்படும் போது அவளைக் காப்பாற்ற முன் வாருங்கள்.

பெண்களே! இளைஞர்களே! சீதனத்துக்கு முக்கியங் கொடுக்கும் திருமணப் பேச்சுக்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள், நண்பர்களே! உறவினர்களே! சீதனத்தை வாங்கும் அல்லது கொடுக்கும் குடும்பங்களுடன் தொடர்பெதையும் வையாதீர்கள், சட்டத்தரணிகளே! சீதனக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுங்கள், சீதனத்தை வற்புறுத்துவோருக்குத் தண்டனை அளிக்க முயலுங்கள், சமூக நிறுவனங்களே! சீதனக் கொடுமையால் துயர் அடைபவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள், இக் கொடுமையை ஒழிக்கப் பாடுபடுங்கள், சீதன முறை சமூக அநீதிகளில் ஒன்றாகும். அனைவரும் இணைந்து போராடினால் இந்த அநீதியினை வென்று விடலாம். என்று எழுதப்பட்டிருந்தது. எவ்வளவு உண்மைச் சம்பவம் இது. நிச்சயம் சமூகத்திலிருந்து களையப்பட வேண்டிய ஒன்றே, இந்தச் சீதனம் என்னும் அழிக்க முடியாக் களை. 

முடிவுரை

ஆகவே ஒட்டு மொத்தமாக பார்க்குமிடத்துத் திருமணம் என்பது அத்தியாவசியமான ஒன்று. அங்கே சீதனம் என்பது அநாவசியமானது. எனவே தேவையானவற்றை எம்முடன் கொண்டு செல்வோம் தேவையற்றவற்றைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வெளியேறுவோம். அவை மண்ணோடு மண்ணாகி உக்கி உருக்குலைந்து போகட்டும். 

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகள். சீதனத்தை வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் சீதனம் தப்பு அந்தத் தப்பை நாம் மேற்கொள்ளக் கூடாது என்ற வைராக்கியத்துடன் அச் செயற்பாட்டைச் செய்யாது விடின் சீதனம் என்னும் சமூகக் குற்றம் களையப்படும். இல்லாவிடில் ஆயிரம் பெரியாரென்ன இன்னோரன்ன சீர்திருத்த வாதிகள் வந்து மேடைகளிலும் தமது எழுத்துக்களிலும் முழங்கியும் பலனில்லை. 


உசாத்துணை நூற்பட்டியல்

Perinbanayagam, R.S. (1992), The Karmic Theatre, Self, Society and Astrology in Jaffna, The University of Massachusetts, Press Amherst.

Thambiah S.J (1973), Dowry Bride wealth and property rights in South Asia in Bride wealth and Dowry. Jack Goody and S.J.Thambiah, ed. Cambridge University Press, London.

Thambiah, H.W. (2009), The Laws and Customs of the Tamils of Jaffna, Women’s Education and Research Centre, Colombo.

திருச்சந்திரன் செல்வி, (1997), தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு, குமரன் பதிப்பகம், சென்னை-26.

பத்மநாதன், சி. (2002), இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

Views: 1321