கத்தறகம மேவிய பெருமாளே

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.com



Banner

வானம் வெளித்து முகில்கள் அற்று இன்னமும் வெய்யில் அதிகமாகும் என்றே உணர்த்தி கொண்டிருந்தது. வெப்பநிலை 39 டிகிரியை தாண்டி சென்றுகொண்டிருந்தது. கந்தனுக்கு இது புது அனுபவம். செக்கசிவேல் என் சிவந்த அவன் மேனியில் உதிரும் வியர்வைத்துளிகள் ஒவ்வொன்றும் முத்துகளாய் பிரகாசித்தன. உடுத்தியிருந்த சேட்டினுள்ளும் நீள்காற்சட்டையினுள்ளும் வியர்க்க தொடங்க அது கொடுக்கும் கசகசப்பு கந்தனுக்கு புதுமையாய் இருந்தது. கந்தனின் பஸ் கொழும்பை அண்மிக்கும் பொழுது பகல் 11மணியை தாண்டிருந்தது.

1978 இல் இலங்கை சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜானதிபதி ஸ்ரீ லங்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியான ஜுனியஸ் ரிச்சார்ட் ஜயவர்த்தனா கதிரகமவிலுள்ள வேதிகித்திகந்த என்னும் புனித பகுதியை மகாசங்கத்திற்கு தானம் செய்யும் பட்டயமான ஸ்ரீ சன்னாஸ் பத்திரத்தில் கைச்சாத்திட்டதை எதிர்த்து பக்தன் சுந்தரலிங்கம் போராடி தேற்ற பின்னர் கந்தன் கதிரமலை பக்கம் செல்வதை விட்டுவிட்டான்.


சுந்தரலிங்கம், சொப்பனத்தில் வந்து கந்தனின் சங்கிலே மிதிக்க அய்யகோ நம் அடியவனுக்கு என்ன நடந்த எண்டு கண்டுகாமலே விட்டுடமே என்ற குற்ற உணர்வு கொல்ல கந்தன் மீண்டும் கதிரமலை சென்று சுந்தரலிங்கத்தை சந்திக்க சங்கல்பம் கொண்டான்.

கொழும்பு வெய்யில் கந்தனை வாட்டியெடுத்தது. தூரத்திலே ஒரு தள்ளுவண்டியில் நாரத்தங்காய்களை வைத்து பாணம் தயாரித்து விற்பவரிடம் கதிர்காமம் பற்றி விசாரித்தான். அவர் நாரத்தங்காயின் தோலினை சீவி பாதியாக வெட்டி திருகியில் இட்டு சாறு பிழிந்து ஜஸ்கட்டிகளை உடைத்து போட்டு சீனியும் சிற்றேற் உப்பும் போட்டு அத்தொழிலாளி அந்த குளிர்பானத்தை தயாரித்து கொண்டு இருக்கையில் கந்தன் லேசாக பேச்சுகொடுத்தான்.

"கதிர்காமம் பஸ் எப்ப வரும் அண்ணே..?"
"கத்தறகம வா...??"
"ஓம் அண்ணே"
"2மணிக்கு வரும்"
"ஜயோ இன்னும் மூணு மணிநேரம் இருக்கே"
"அந்த கடையில சோறு சாப்பிட்டு போங்க துரை சரியா இருக்கும். துரை எங்க இருந்து வாரீங்க...?"
"யாழ்ப்பாணம் நல்லூர் அண்ணே"
"சூ.. மிச்ச தூரம் தான் துரை. ஏன் இம்புட்டு தூரம் வந்தீங்க"
"முருகனை ஒருக்கா தரிசிக்கனும்
"முருகனா..?? கத்தறகம தெய்யேவ சொல்லுறீங்களா துரை"
"கத்தறகம தெய்யேவா..." கந்தனுக்கு தூக்கிவாரி போட்டது.
"கத்தறகம தெய்யேவ நீங்களும் கும்புடறனீங்களா...??"

கந்தனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை விறுவிறு எண்டு குடிச்சுமுடிச்சுட்டு காசை குடுத்திட்டு ஓடிடனும் போல இருந்துச்சு. ஓடி போன கதிரைமலையான் எப்படி கத்தறகம தெய்யோ ஆனான் எண்டு தெரிஞ்ச்சுக்க ஏலாது எண்டத விட சுந்தரலிங்கத்தை நினைக்க கந்தனுக்கு தலைசுத்த தொடங்கிற்று."எண்ட கதிரைமலையானே.." எண்டு அடிக்கடி சொல்லிகொள்ளும் பக்தர்கள் எல்லாம் இப்பொழுது கத்தறகம தெய்யேவே எண்டுதான் கூப்பிடுறாங்களா... 

எண்ட கத்தறகம தெய்யேவே....!!

---------------

கதிர்காமம் பஸ் பிடிச்சாச்சு 286 கிலேமீற்றர்கள் தள்ளி கதிர்காமம் போகனும். கதிர்காமத்தில என்ன நடந்தது...? சுந்தர்லிங்கம் என்ன ஆனான்..? கத்தறகம தெய்யே எப்ப உருவானது மனதில் பல கேள்விகளுடன் கந்தன் பயணத்தை தொடங்கினான். பக்கது இருக்கையில் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியுடன் ஒரு சாந்தமான மனிதர் வந்து அமர்ந்தார். அவராகவே உபாலி என தன்னை கந்தனிடம் அறிமுகம் செய்து கொண்டார்
"எங்க போறீங்க"
"கதிரமலைக்கு"
"கதிர மலையா....??"
"கதிர மலை.. கதிர்காமம்"
" கத்தறகம தெய்யோட்டயா....?" 
"ம்ம்ம்"
"களுத்துற தெய்யேட்டவா இல்ல கத்தறகம தெய்யேட்டவா...?" உபாலி சாதரணமாக கேட்டார்
கந்தனுக்கு குண்டை தூக்கி போட்டது போல் இருந்தது. கந்தனுக்கு யூஸ் கடைக்காரன் குடித்த ஷாக்கில் இருந்து மீளமுதல் உபாலி அடுத்த ஷாக்கை குடுத்தார். ஒருவேளை கதிரமலை கந்தனை பெயர்த்து எடுத்து வந்து களுத்துறையில் வைத்து விட்டார்களா..? இல்லை புதிதாக ஒரு புத்த விகாரையினை கட்டி அதற்கு களுத்துறை தெய்யே எண்டு பெயரை வைத்துவிட்டார்களா...? சரி உபாலிட்டையே புடுங்குவம் எண்டு உபாலி வாயைகிண்ட தயாரனான் கந்தன்

"களுத்துறை தெய்யே யாருங்க உபாலி..?"
"அதுவும் கத்தறகம தெய்யே தான்"
"அந்த தெய்யேவும் மயில் மேல வேல்லோட வருவாரா...?"
"ஆமா..ஆமா.. ரெண்டு பொண்டாட்டி கூட இருக்கு அவருக்கு"
கந்தன் மனதுக்குள் "அதை மட்டும் ஞாபகம் வைச்சுருங்கடா அறுவான்களே.."
"அப்பே எப்படி களுத்துறை தெய்யே.. கத்தறகம தெய்யே என ரெண்டு வந்துச்சுனு சொல்லுங்க உபாலி..."
"கத்தறகம தெய்யே தான் களுத்துறையிலயும் இருக்குது. ஆன கத்தறகம இல இருக்கிற தெய்யேவுக்கும் களுத்துறையில இருக்கிற தெய்யேவுக்கும் ஒருக்க சண்டை வந்துச்சாம். களுத்துற தெய்யே தான் சண்டைய தெடங்கினதாம். களுத்துறை தெய்யேக்கு பயந்து சண்டையில தோத்த கத்தறகம தெய்யே காட்டுக்குள்ள போய் ஒழிஞ்சுட்டாம். அதுக்கு பிறகு பெந்தேட்ட கடல் பிரதேசத்துக்கு இங்கால களுத்துறை தெய்யேவும் அங்கால கத்தறகம தெய்யேவும் எண்டு தங்களுக்குள்ள எல்லைய பிரிச்சுட்டுகிட்டாங்களாம்".

இது என்னடா சோதனை..அரசியல்வாதி தொகுதிக்கு அடிபடுறமாதிரி அங்கால உனக்கு இங்கால எனக்கு எண்டு வைச்சுட்டாங்களே.. அதுவும் ஒரே கடவுளே சண்டைபிடிச்சுசா....?? ஈஸ்வரா எது என்ன நாரத கலகம்..

"அப்பே தேத்து போன கத்தறகம தெய்யே இண்டை வரைக்கும் திருப்ப சண்டை பிடிக்கம சும்மா இருக்குதா..?"
"இல்லை இப்போ இரண்டு தெய்யேக்குள்ளையும் சமாதனம் ஆகிட்டு"
"அது எப்படி சமாதனம் ஆனது உபாலி"
"சண்டைக்கு பிறகு காட்டுக்குள்ள போய் கத்தறகம தெய்யே ஒளிஞ்சுட்டு. பிறகு போத்துகேயர் ஶ்ரீலங்காவில இருக்கிற சாமி கோவில் எல்லாம் இடிச்சு பள்ளி கட்டனும் எண்டு திரியேக்க கத்தறகம தெய்யேவ காட்டுக்குள்ள தேடி அலைஞ்சாங்களாம். ஆன தெய்யேவ கண்டுபிடிக்க முடியலயாம். பேத்துகேயர் எல்லாம் களைச்சு போய் விட்டுட்டு வந்துட்டங்களாம். களுத்துற தெய்யேவேட சண்டபிடிக்க போய் தானே காட்டுக்குள்ள போய் ஒளிஞ்சது கத்தறகம தெய்யே அதால கத்தறகம தெய்யே களுத்துறை தெய்யேட்ட மன்னிப்பு கேட்டு சமாதனம் ஆகிட்டாம்."

"ஈஸ்வரா..ஈஸ்வரா.." " அப்பே களுத்துறை தெய்யேவ விட்டுடாங்களா போத்துகீசர்"
"இல்லை இல்லை களுத்துறை தெய்யேவ தேடி கோவில இடிச்சு போட வந்தாங்களே"
"அப்பே எப்படி களுத்துற தெய்யே மட்டும் தப்பிச்சு"
"களுத்துற தெய்யே பயங்கர சக்தி வாய்ந்த தெய்யே. இடிக்க வந்த ஆளுநர் கோயில காலடி வைச்ச உடனேயே ஒரு பக்க பாரிசதவாதம் வந்து விழுந்தாராம். ஆதலா பயந்துபோய் போத்துகீசர் எல்லாம் விட்டு ஓடிட்டாங்களாம்."
"நீங்க எங்க போறீங்க இப்போ உபாலி"
"மகளுக்கு .ல் எக்ஸ்சாம் வருது ஆதலா களுத்துற தெய்யேட்ட போய் ஒரு நேத்திகடன் வைக்கனும் அதான் போயிட்டு இருக்கன். நீங்களும் வாங்களன் களுத்துறை தெய்யேட்ட போய்ட்டு கத்தறகம தெய்யேட்ட போகலாம்."

கந்தனுக்கு பெரும் குழப்பமாக இருந்தது. சுந்தரலிங்கத்தை தேடி வந்து இப்படி ஒரு சோதனையா. சரி உண்மை அறிய வேண்டின் களுத்துறை தெய்யே தேவாலயத்துக்கு போகவே வேண்டும். களுத்துறை தெய்யே தேவாலயம் களுத்துறை காலி பிரதான வீதியிலேயே உள்ளது. களுத்துறை தெய்யேவின் கோவிலில் இருந்து மீள கத்தறகம செல்ல பஸ் எடுக்கனும். பஸ் எடுத்து மீள கதிரை மலை செல்ல எப்படியும் இருண்டிவிடும் போன உடனே சுந்தரலிங்கத்தை சந்திக்க இயலாட்டியும் பரவாயில்லை சுந்தரலிங்கத்துக்கு சொல்ல சுவையா ஒரு களுத்துற தெய்யேட கதையிருக்கு தானே என நினைத்து கொண்டு களுத்துறை தெய்யே தரிசனத்துக்கு தாயாரானன் கந்தன்.

---------------

களுத்துறை தெய்யேவின் தேவாலயம் களுத்துறை நகர்பகுதி தாண்டி சற்று தொலைவில் காலி பிரதான வீதியிலேயே இருந்தது. உபாலி இடம் வந்ததும் இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள கந்தனும் எழுந்துகொண்டான். காலி பிரதான வீதியை கடந்து அடுத்த பக்கமாய் செல்லவேண்டும் களுத்துறை தெய்யேவின் தேவாலயத்துக்கு அதற்கு வசதியாய் காலி பிரதான வீதிக்கு குறுக்காக பாதசாரிகடவை மஞ்சள் நிறத்தில் பூசப்பட்டிருந்தது. உபாலி முன் செல்ல உபாலி பின்னால் கந்தனும் சென்றான். களுத்துறை தெய்யேவின் வாசலிலேயே ஆறு அடி உயரத்தில் கண்களை மூடி தியானம் செய்யும் புத்தர் சிலை ஒண்டு ஆலமரத்தின் கீழே அமர்ந்திருந்தது. கந்தனுக்கு அப்பவே இருப்புகொள்ளல

"இதுவா களுத்துறை தெய்யே உபாலி...?"
"இல்லை.. இது புத்தபெருமான். தெய்யே உள்ளுக்கு இருக்கு வாங்கோ"
களுத்துறை தெய்யே தேவாலய வாசலை மறைத்து புத்தபெருமானுக்கு என்ன வேலை என கந்தனுக்கு கேக்கனும் போல இருந்துச்சு. இதைக்கேட்கப்போய் உபாலி கடுப்பாகி மிச்ச விசயங்கள் நடக்கமா போயிட்டா என்ன செய்வது.. சுந்தரலிங்கத்துக்கு சொல்ல களுத்துறதெய்யேவின் கதை இல்லாமல் போய்விடுமே என்பறக்காய் அந்த கேள்வியை அப்புடியே தனக்குள் புதைத்து கொண்டான் கந்தன். வழமையான ஆகம விதிமுறைகளுக்கு அமைவாக இருக்கவில்லை தேவாலயம். நல்ல உயரமான கட்டிடம் ஓடு கூரை கருவறை திரைச்சீலை போட்டிருந்தது. தேவாலயத்தின் பெயர், பூசை நடைபெறும் நேரங்கள், சில அறிவித்தல் பலகைகள் என சகலதும் சிங்கள மொழியிலேயே எழுதப்பட்டிருந்தது. ஒரு குண்டுமணியளவிற்க்கு கூட அங்கு தமிழ் இருக்கவில்லை. வாசலில் மயில் மேல் வேலுடன் ஒரு உருவத்தை வரைந்திருந்தார்கள். வெறும் எலும்பு போர்த்திய தோல் மட்டும் கம்பீரம் இல்லாதிருந்தது அந்த உருவம்.

உள்ளே சென்றதும் கொண்டு வந்த மூட்டையை பிரித்து ஒரு தட்டில் பரப்பி அர்ச்சனை தட்டை தயார் செய்தான் உபாலி. பெரிய பாதியாக வெட்டிய நாரத்தங்காய், இரண்டாக பிளந்த கரும்பு துண்டங்கள், அன்னாசி, மாதுளம் பழம் என பரவி வைத்தான். பூசகர் வந்ததும் பெயர் ராசி நட்சத்திரத்தினை கூற பூசகர் தட்டேடு உள்ளே சென்றவர் புரியாத ஒரு புது மொழியில் கஸ், புஸ், துஸ் என மந்திரம் கூறி மணியடித்து சூடம் காட்டி பூசையை முடித்து வைத்தார்.
உபாலி மகிழ்ச்சியில் " எண்ட களுத்துறை தெய்யேவே.. எல்லாம் இனி உன்னை கையில் தான். நான் கத்தறகம தெய்யே பக்கம் கூட போனதில்ல. உன் பிள்ளையை நீ தான் பாத்துகனும்"
பூசை முடிந்ததும் பூசரி விபூதி வழங்கினார். உபாலி பயபக்த்தியுடன் வாங்கி கண்களில் ஒத்திகொண்டு நெற்றியில் பூசி கொண்டான். பூசைமுடிந்து உபாலியும் கந்தனும் சற்று நேரம் கோவிலில் அமர்ந்திருந்தனர்.
"உபாலி களுத்துறை தெய்யே வாசலிலும், கத்தறகம தெய்யே பக்கதிலும் புத்த பகவான் இருப்பதும், புத்த பகவான் விகாரைகளுக்குள் கத்தறகம தெய்யே சிலைகள் இருப்பதும் ஏன்...??"
"கத்தறகமவுக்கு புத்தபகவான் வந்தார் தானே..."
"புத்தரா...? கத்தறகமவிற்க்கா..?"

" ஆமாம் புத்தரின் மூன்றாவது விஜயத்தில் புத்தர் கத்தறகமவிற்க்கு வந்தாராம். புத்தர் அங்குள்ள வேடுவ குலத்தினர்க்கு ஞான உபதேசம் வழங்கினார். அதன் பின் அவ்வேடுவ குடியினர் பெளத்தாகமத்தையே தொடரதொடங்கினர். அப்பொழுது தான் வேதிகித்திகந்த விகாரையும் உருவாகியது"

என்னதான் காற்று அடித்து படகு திசை திரும்பினாலும் தென்கிழக்கே உள்ள பிரதேசத்திற்க்கு புத்தர் வந்து ஞான உபதேசம் கொடுத்தார் என்பது கந்தனுக்கு சிரிப்பை வரவழைத்தது. இருந்தாலும் கதைகளை தொடரவேண்டும் என
"சரி உபாலி புத்தபெருமான் வந்தார் அதனால் விகாரை உருவானது. விகாரைகளில் என் கத்தறகம தெய்யே உள்ளார்...?"
"பெளத்தாகமம் ஶ்ரீலங்காவிற்கு வரும் பொழுது விகாரைகளை கட்டுவிப்பதற்காக அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்து விகாரை கட்டும் பணிகளுக்கா வந்தவர்கள் கத்தறகம தெய்யே வழிபாட்டில் இருந்தவர்கள். விகாரை கட்டும் இடங்களில் அவர்கள் கத்தறகம தெய்யேவை வைத்து வணங்கினர். பின் அவர்கள் சென்ற பின் கத்தறகம தெய்யே உருவ சிலைகளை அப்படியே விட்டு சென்று அவை விகாரை வழிபாட்டில் உள்வாங்கிகொள்ளப்பட்டன"
"கத்தறகம தெய்யே அப்பே உங்கட கடவுள் இல்லையா உபாலி...?"
"இல்லை. தெய்யே தமிழ் கடவுள் தான்"
உபாலி அப்படி பச்சையாக ஒத்துகொண்டதும் கந்தனுக்கு சிறிது நிம்மதி தந்தது.
"ஆனால்....."
"ஆனால் என்ன உபாலி"
"கத்தறகம தெய்யே எங்களுக்கு தான் கூட செய்வார்"
"ஏன் அப்புடி சொல்லுற உபாலி"
"உங்களுக்கு தெரியாதா...? துட்டகைமுனு எல்லாளனுடன் போருக்கு போக முன் கத்தறகமதெய்யேக்கு நேத்தி வைத்தான். பின் துட்டகைமுனு எல்லாள மகரஜாவை போரில் வென்றான்"
"அப்படியா...?"
"அப்ப சொல்லுங்க எங்களுக்கு தானே கூட செய்யுறார். அதால தான் நாங்க வழிபடுறம்"

----------------

உபாலியிடம் இருந்து விடைபெற்று கொண்டு கத்தறகம பஸ்வண்டியை பிடித்து கந்தன் கதிரைமலை நோக்கி பயணமானான். பஸ்வண்டி காலி வீதி ஊடறத்து கதிரமலை நோக்கிப் பயணமானது. இனி அருகில் இருப்பவரிம் பேச்சு குடுக்கவே கூடாது என கந்தன் முடிவு பண்ணிக் கொண்டான். கதிரமலை மாத்தறை காடுகள் நிறைந்த பகுதிகள் ஊடக செல்ல வெண்டும். காடுகளின் ஊடே பக்கதர்கள் கால்நடையாக வந்து கந்தனை தரிசித்தனர். மாத்தறை காடுகள் நிறைந்த பகுதியாய் இப்பொழுது இல்லை குடிமனைகள் தரமான வீதிகள் விமானநிலையம் என மாறிபோய் இருந்தது.

கதிரமலை அடைகையில் வாசலில் ஓம் என்ற எழுத்துடன் காணப்பட்ட வேல் ஓம் எழுத்தில்லாமல் இருந்து. அதை தாண்டி செல்கையில் கத்தறகம மகா றுகுணு தேவாலயம் என வளைவெழுத்தில் போட்டிருந்தது. முற்றாக பெளத்தசலவை செய்யப்பட்ட கதிரமலையினுள் கந்தன் வியப்போடு நுழைந்தான். இரவு ஆகிவிட்டது தங்குவதற்கு இடம் வேண்டும் இராபொழுதில் சுந்தரலிங்கத்தை தேடி அலைய ஏலது. சுந்தரலிங்கம் என்ன வேலையாய் இருந்தாலும் காலைப்பூசைக்கு மறக்காமல் வந்துவிடுவான். காலை பூசை வேளையில் அவனை சந்தித்தலே உசிதமானது. இராமகிருஷ்ன மிசன் நடத்தும் விடுதியில் தங்கிகொள்ளலாம் அல்லது தத்தாராமகிரி சுவாமிகளின் மடத்தில் தங்கிகொள்ளலாம் விடிந்ததும் கோவிலில் சுந்தரலிங்கத்தை சந்தித்துகொள்வோம் என நினைத்துகொண்டான்.

இராமகிருஷ்ண மடமும் தத்தாராமகிரி சுவாமிகள் மடமும் இருந்த இடத்தில் இல்லை. கதிரமலை எங்கும் குட்டிகுட்டியாக புத்தர்சிலையும் பழ அர்ச்சனை தட்டுகடைகளும் தொதல் மஸ்கட் கடைகளும் மட்டுமே நிரம்பியிருந்தன. அர்ச்சனை தட்டு விற்பவர்கள் ஒவ்வொருவரும் 100 தொடங்கி 1500 வரையில் விலைகளுக்கு தட்டங்களை தருவதாய் இழுத்துபிடித்துகொண்டிருந்தனர். ஒரு தட்டம் ஒரு கடையில் வாங்கினால் தட்டதுடன் ஒரு இலக்கம் போட்ட துண்டு சீட்டு தருவார்கள் அதில் ஒரு நபரின் பெயரும் ஒரு இலக்கமும் எழுதப்பட்டிருக்கும். தூரத்தில் ஒருவர் மிகப்பெரிய கூடையை சுமந்தவாறு வந்துகொண்டிருந்தார் அக்கூடை நிறைந்து பழ அர்ச்ச்னை தட்டுகள் காணப்பட்டன. விற்கப்படும் ஒவ்வொரு பழ அர்ச்சனை தட்டுகளும் சுழர்ச்சி முறையில் மீளமீள விற்பனை செய்யப்படுகின்றன. அர்ச்சனை தட்டுகள் விற்பனை செய்பவர்கள் யாருக்குமே இராமகிருஷ்ணமிசன் விடுதி பற்றியே அல்லது தத்தாராமகிரி சுவாமி விடுதி பற்றியே தெரிந்திருக்கவில்லை. அவ்விடுதிகள் இருந்த இடதில் எதுவித அடையாளமும் இல்லை விடுதிகள் பெயர்த்தெடுக்கப்பட்டதா என பெருங்குழப்பத்துடன் இலங்கை பெளத்த இளைஞர் யாத்திரிகர் விடுதியில் ஒரு தங்குமிடத்தினை தயார்செய்து கொண்டான் கந்தன்.

---------------

காலையிலே எழுந்து குளித்து கதிரமலை செல்ல தயாரனான் கந்தன் செல்லும் வழியெங்கும் உபாலி போன்று வெள்ளை நிற ஆடை அணிந்தவர்களே நிறந்திருந்தனர். கதிரமலையில் ஒரு நீளவரிசையில் வெள்ளை நிற ஆடைகள் அணிந்தவர்கள் நின்றார்கள். பழத்தட்டுகள் வாங்கப்பட்டன அர்ச்சனை செய்யப்படதாய் அறிகுறிகள் இல்லை. வரிசையில் தூரத்தில் நிற்பவர் ஒரு ஆயிரம் ரூபாயினை தூக்கி காட்டினார். தூரத்தில் இருந்து வந்தவர்கள் அவரை முன்வரிசையில் கொண்டுபோய் விட்டனர். கதிரமலை, கத்தறகம தெய்யே பெயரில் வியாபாரத்தளமாய் மாறியிருந்தது. சுந்தரலிங்கம் கதிரமலையில் இல்லை.
சொல்லகதிர்காமம் களுத்துறை தெய்யே கோவில் மாதிரி இல்லாமல் இங்கு இரு மொழிகளிலும் பூசை நேரம் விளம்பரப்பலகைகள் இருந்தன. பூசை செய்பவர்கள் பிராமணர்கள் சாயலில் வேட்டி அணிந்து குடும்பி வைத்து பூணுல் அணிந்திருந்தார்கள் ஆனால் சிங்கள மொழியிலே கதைத்தார்கள். வரிசையில் நின்றவர்கள் பழத்தட்டுடன் பெயர் ராசி நட்சத்திரம் கூறினார்கள். இன்னும் சிலர் வாகன இலக்கங்களும் கூறினார்கள் அப்பூசாரியும் "ஓம் சூம் சாம் WP CAU ..." என வாகன இலக்கம் கூறி அர்ச்சனை செய்தார். வழமையாக சுந்தரலிங்கம் அர்ச்சனை சீட்டு விற்கும் காரியாலத்தில் தான் இருப்பான் பூசை முடிந்ததும். காரியாலத்தில் விசாரிப்போம் என காரியாலம் பக்கத்தில் சென்றான் கந்தன். காரியாலத்தின் அருகில் நிறைய வர்ணமான நூல்கள் யந்திர செப்பு தகடுகள் குட்டிகுட்டி பிள்ளையார் முருகன் புத்தர் நிலைகளுடன் ஒரு பூசகர் நின்றார். இவரிடம் சுந்தரலிங்கத்தை விசாரிப்பம் என கந்தன் நினைத்து கொண்டான்.
"வாங்க நூல் கட்டவா..?"
அவராகவே சிங்கள மொழியில் பேச்சை தொடங்கினார்.
"சுந்தரலிங்கம் இருக்கிறாரா...?" கந்தன் தமிழில் கேட்டான். பூசகருக்கு தமிழ் விளங்கவில்லை. அவர் மறுபடியும் 
"நூல் கட்டவா என் கேட்டார்...?"
" சுந்தரலிங்கத்தை தேடி வந்தேன்.." கந்தன் சிங்கள மொழியில் கேட்டான்
"சுந்தரலிங்கம் என்ற பெயர்வழியில் இங்கு யாரும் இல்லை. நான் இங்கு பதினைந்து வருடமா நூல் கட்டுறன்"
"உங்கட பெயர் என்ன"
"அபயசிங்க"
"தமிழா"
"இல்லை நான் சிங்களவன்"
"சிங்கள இந்துவா..?"
"இல்லை சிங்கள பெளத்தன்"
"கோவில்ல எப்புடி பூசை செய்யுறீங்க"
"இல்லை நான் நூல் மட்டுமே கட்டுகிறன். எனது பரம்பரைக்கு அது மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது"
"அப்பே பூசை செய்ய வேறு பரம்பரை உள்ளதா..?"
"உபதிஸ்ஸ பரம்பரை உள்ளது"
"வேறு யார் யார் பரம்பரை உள்ளது"
"அனுர பரம்பரை பேயோட்டுறங்க"
"பேயோட்ட எல்லாம் பரம்பரையா..."
"ஆமா.."
" என்னடு பேயேட்டுறாங்க...?"
"அண்ணன் தம்பி ரெண்டு பேர் செய்யுறாங்க.. முதல்ல தம்பிட்ட போய் தேசிக்காய் வெட்டி பேயேட்டுவாங்க.. சரிவரல எண்டா அண்ணனிட்ட போய் கோழி வெட்டி களிப்புகழிப்பார்கள் அத்தேடு எல்லா முனியும் ஓடிடும்"
"இங்க எல்லாத்துக்குமே பரம்பரை இருக்குதா..."
"அர்ச்சனை தட்டு விற்க, தொதல் விக்க கூட பரம்பரையா தான் செய்யுறாங்க"
"அப்பொ வேட்டி குடும்பி பூனூல் எல்லாம் போட்டுருகீங்க பெளத்தரா இருந்து கொண்டு...??
"தொழிலுக்கு ஏற்ற வேசம்"

கந்தன் மூர்ச்சை இழந்தான்

கத்தறகம தெய்யே சரணம் கச்சாமி!!

 

Views: 383