சகுனம்

எழுத்தாளர் : லக்ஷி குணரத்தினம்மின்னஞ்சல் முகவரி: luxshekuna@gmail.comBanner

அன்றும் அப்படித்தான், அவள் வழமையாக ஏறும் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். இன்று கட்டாயமாக ஆஸ்பத்திரிக்கு வரவேணும் எண்டு டொக்கர் சொல்லியிருக்கார். போகாட்டி ஏன் வரேல்ல எண்டு வீட்ட வந்தாலும் வந்திரும் அந்த மனுஷன். அவ்வளவு நல்ல குணம் அந்தாளுக்கு. இண்டைக்கு எப்படியும் ஆட்டோ பிடிச்சாவது போயிடவேணும். ஆனால் நெடுகலும் இந்த நேரம் வாற பஸ்ஸ இன்னும் காணேல்ல. வேளைக்குப் போயிருக்குமோ? சீ...சீ இருக்காது. நாங்க தான் இண்டைக்கு நேரத்தோடேயே வந்திட்டமே. பிறகென்ன. 

பல்வேறு சிந்தனைகளை மனதில் எண்ணியவாறு வாசுகி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாள். அம்மாவுக்கு உடம்புக்கு இயலாது என்ற காரணத்தால் தான் இன்று தனியாகவே போவதாக ஒரு வித தைரியத்தை வரவழைத்துக் கொண்டு யோசனைகளை ஓட விட்டவாறு நிற்கிறாள். 

அவ்வேளையில் தான் வாசுகி சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பம் ஒன்றைச் சந்திக்க வேண்டியதாயிற்று. 
அழகாக ஆடையுடுத்தி அறுபது வயது மதிக்கத்தக்க காவோலைப் பக்குவம் எய்திய முதிர்பெண்ணும்  நாற்பத்தைந்து மதிக்கத்தக்க பெண்மணியும் வந்து கொண்டிருக்கிறார்கள். 
அவர்களின் அலங்காரங்களைப் பார்த்தவாறே நிற்கிறாள். 

கொழுத்த வசதி போல கிடக்கு. அம்மன் சிலையை வெளிக்கிடுத்தி விட்ட மாதிரி வருகினம். யார்டையோ கல்யாண வீடு போல. 
ம்...குடுத்து வைச்சதுகள். கல்யாணம் பண்றதுகள். நானெல்லாம் பார்த்து சந்தோஷப் படுறதோட நிறுத்திடனும். கனவிலும் நினைச்சுப் பார்க்கக் கூடா. நடக்காது எனத் தெரிந்தும் ஆசைகளை வளர்த்துக் கொள்வது அபத்தம் தானே.

யாரிடியம்மா இவ. பார்க்க எங்கட ஊருக்குப் புதுசா இருக்கு. இது அந்த அறுபது வயதுப் பெண். 
போன மாசம் தான வந்ததுகள். உங்க ஆலையடிப் பக்கம். உங்க புதுசா இப்ப வீடு கட்டிக் குடுத்தவங்களெல்லோ. காணியுள்ளவைக்கு. யாழ்ப்பாணத்தில இடம்பெயர்ந்து இருந்திட்டு. இப்ப தான் வந்திருக்கினம். பழைய சனங்கள். இது மற்றப் பெண்மணி. 

நாங்கள் நல்ல காரியத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறம். என்ர பிள்ளைக்கு இண்டைக்குத் தான் நிறைய நாள் கழிச்சு ஜாதகம் பொருந்தி வந்திருக்கு. பொண்ணைப் போய்ப் பார்க்கிறதுக் கிடையில இவளைப் பார்க்க வேண்டிப் போச்சு. 
இந்த நேரத்தில் யார் இவள இங்க வந்து நிற்கச் சொன்னது. 
நான் அப்பவும் சொன்னான். ஆட்டோவில போவம். அல்லது வேற வாகனம் பிடிப்பம் என்று. நீ தான், பக்கம் தானே என்று பஸ்ஸில போவம் எண்டாய் இப்ப பாரு. 
இவளில முழிச்சுப் போக வேண்டிக் கிடக்கு. 
ச்ச்....கொஞ்சம் மெதுவாக் கதையுங்கோ. அவளின்ர காதில விழப் போகுது.
விழுந்தா விழட்டுமே. எனக்கென்ன. என்னத்த சொல்லி வளர்த்து விட்டிருக்குதுகளோ. உவளின்ர அம்மாவாச்சும் சொல்லி விட்டிருக்கலாம். கொஞ்சம் ஓரமா நிற்கச் சொல்லி. நடுவில வந்து நிற்கிறாள். அதுவும் முன்னுக்கு எட்டி எட்டி பார்த்துக் கொண்டு வேற.
 
பஸ் வந்தா நிற்கும் தானே. நொண்டிக் கழுதைக்கு தன்ர நிலைமை புரிய வேண்டாமோ. இப்பவும் பழைய நினைப்புல சீவிச் சிங்காரிச்சுக் கொண்டு வந்து நிற்கிறாள். கொஞ்சம் கூட யோசனையில்லாம. 
அந்தம்மாள் தலையில கை வைத்துப் புலம்பத் தொடங்குகிறார். 
ஐயோ! கடவுளே. இப்ப செய்ய போற காரியம் உருப்பிட்ட மாதிரித் தான். அவன் அங்க லண்டன்ல இருந்து போன் பண்ணப் போறான் ராவைக்கு. பொண்ணைப் பார்த்தனீங்களோ. என்னெண்டு. அவனுக்கு என்ன பதிலைச் சொல்ல இப்ப நான். 
பிள்ள. எல்லாருக்கும் போனைப் போட்டுச் சொல்லு. இண்டைக்கு பொண்ணு பார்க்;கப் போறேல்ல. வேறு ஒரு நாளைக்குப் போவம் எண்டு. 
ச்சீ....என்ன ஆட்களோ. எல்லாத்தையும் கெடுத்துப் போட்டாள் பாவி. 
நீ நல்லா இருடியம்மா. 
வயிற்றெரிச்சலில் வாசுகியைப் பார்த்துக் கூறி விட்டு வந்த இருவரும் தமது வீட்டை நோக்கிச் சென்று விட்டனர். 
பஸ் வந்து பஸ் நிறுத்தத்தில் நிற்கிறது. இவ்வளவு நேரமும் வேடிக்கை பார்த்தவர்கள் பஸ்ஸில் ஏறுகின்றனர்.  
வழமையாக பஸ் ஏறுகின்ற போது உதவிக்கு வரும் கொண்டைக்ரர் கைப்பையையும் ஊன்றுகோலையும் வாங்கி பஸ்;ஸில் ஏற்றி விட எத்தனிக்கிறார். 
திரும்பி நின்றவாறே இண்டைக்கு வரேல்ல அண்ணா. நேரமாகுது நீங்க போங்க. என்கிறாள். சொன்னது தான், அவர் விசில் ஊதுகிறார். பேரூந்து புறப்பட்டுச் சென்று விட்டது. 
பக்கத்தில் துணைக்கு ஒருவரும் இல்லை. வருகின்ற கண்ணீரும் மடை திறந்தாற் போல் நிற்காது ஓடுகின்றது. என்ன செய்வது. எங்கே நிற்கின்றோம் என்ற எண்ணம் ஏதுமின்றி நிலை தடுமாறி நின்கிறாள் அந்த பழகிய பஸ் நிறுத்தத்தில். 
அரங்கையே கரகொலியால் நிரப்பிய என் நடனத்தைக் கண்டு இந்த ஊரே மெச்சி நின்ற இதே இடத்தில் இண்டைக்கு கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்க வேண்டியதாயிற்றே. 
அண்டைக்கு விழுந்த செல் அப்பாவ மட்டுமில்லாம என்னையும் சேர்த்து கொண்டு போயிருக்கலாம்.......இது அரை குறையா என்ர ஒற்றைக் கையையும் காலையும் அல்லோ பறிச்சுபோட்டுது. 
பிறப்பில வந்திருந்தா போன ஜென்மத்து விட்ட குறை தொட்ட குறை என்று நினைச்சு வாழப் பழகி இருப்பன். 
சின்ன வயசில இருந்து இந்த மாதிரி வசைமழை கேட்டு காது மரத்திருக்கும்.
என்னைப் புரிஞ்சு கொள்ளவும் முடியாம, வெளியால தேவைக்கு வரவும் முடியாம, இப்புடிப் பண்ணீட்டாரே கடவுள். 
இந்தப் பாழாய்ப் போன பஸ்ஸூம் இப்பத் தானா வரோணும். கொஞ்ச நேரத்துக்கு முன்னுக்கு வந்திருக்கக் கூடாதா? 
இனி எங்க ஆஸ்பத்திரிக்குப் போறது. மருந்தொன்றும்.......தேவையில்ல. 
நானா..... என்ர மனசைத் தேத்தி வாழலாம் எண்டு ஆசைப் பட்டாக்கூட இந்த சனங்கள் விடுகுதுகளில்லையே.
அது தான் அம்மாட்ட அப்பவே சொன்னான். தெரியாத இடத்தில நிம்மதியா ஒதுங்கியே வாழுவம் என்று. சொந்த இடம், சொந்த வீடு என்று கூட்டிட்டு வந்து இப்ப எவளோ ஒருத்தி என்னைய அபசகுனம் என்டிட்டுப் போறாள். 
அழுகை ஆத்திரமாக மாற தன் சோகத்தைக் கொட்டித் தீர்க்க தனக்கு உற்ற துணையாய் இருக்கும் ஒரேயொரு ஜீவனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள். 
தூரத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க திருமணமாகாத ஒரு சமூக சேவை உத்தியோகத்தர் இவை அல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நிற்கிறார். 

-சுபம்-
 
Views: 563