காதலித்துப்பார் உன் கையெழுத்து அழகாகும்

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: vibishan.don@gmail.comBanner

பயங்கரமான அலுப்பு... தனியார் வைத்தியக்கல்லூரிக்கு எதிராக பதினைந்து கிலோ மீட்டர்கள் கால் தேய்த்தது அதற்கான பலனை கொடுத்துக்கொண்டிருந்தது. அடமென்ரியம் உலோகத்தை உருக்கி காலுக்குள்ளே வார்த்தது போல் மலையாய் கனத்தது கால். ஆறு மணி நேர அளவான நித்திரை ஒன்றே அப்போதைக்கு என்னுடைய ஒரே தேவையாக இருப்பதை உணர்ந்து கொண்டு ஹொஸ்டலுக்கு ஏறும் மலைப்படிகளை ஊன்றிக்கொண்டிருந்தேன்.  பேராதெனிய என்ற சிங்கள வார்த்தையால் பேராதனை என்ற தமிழ் உரு கொடுக்கப்பட்டிருந்த பிரதேசம் அது. மத்தியமாகாணத்தில் அதிக ஜீவன்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த கண்டி மாவட்டத்தில் இருந்து தெற்குப்புறமாக ஆறுகிலோ மீட்டர்கள் சென்றால் அதை அடையலாம். அதை என்பதை விட அவள் என்று விளித்தல் ரசமாக இருக்கும். எனக்கு நன்றாய்த்தெரிந்த வனதேவதை அவள்...நூறு மீட்டர் தொலைவில் மகாவலி பாய்வதால் அநியாயத்திற்க்கு செழித்து பெருமரங்கள், பூமரங்கள், படர்புற்கள் என பலவகையறான வர்க்கங்கள் ஐதான ரீதியில் ஆக்கிரமித்த மென் காடு தான் பெராதெனியா என்னும் சமவெளிப்பிரதேசம். ஹந்தன மலையடிவாரத்தில் இருந்ததால் மென் குளிருக்கும் அடை மழைக்கும் பஞ்சம் இல்லாத பிரதேசம்.. பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் வகைப்படுத்தப்பட்டிருக்கும் பெராதெனிய பொட்டானிக்கல் கார்டினின் பிரதான நுழைவாசல் திறக்கும் பகுதியில் மூன்று சாலைகள் ஒன்றுசேர முத்தமிட்டுக்கொண்டதால் உண்டான சந்திப்புத்தான் கலஹா சந்தி.. கலஹா சந்தி ஒவ்வொரு நாளும் நிச்சயம் குறைந்தது ஆயிரம் பஸ் பயணிகளாவது உச்சரிக்கும் சொற்களில் ஒன்றாகும்.. அந்த கலஹா சந்தியில் கொழும்பு , கண்டியை நோக்கிய பாதைகள் தவிர்ந்த மற்றைய பாதையின் ஆரம்பத்தில் தான் நான் படிக்கும் பல்கலைகழகவளாகம் இருந்தது.

ஒருமாதிரியாக அறைக்குள் நுழைந்து விட்டேன். நுழைந்து தான் தாமதம் 'தம்பி 'என்று அழைத்தவாறு வாசலில் நின்றார் கைலாசம்பிள்ளை.  கைலாசம்பிள்ளை பேராதனை கலைப்பீடத்தில் பேராசிரியவட்டத்தில் இருப்பவர்.. பேராதனை தமிழ் இலக்கிய வட்டத்தால் எனக்கு அறிமுகமானவர்.. வாழ்க்கை முழுதும் இராமயணமும் மஹாபாரதமும் பாடி இலக்கியப்புகழ் சூடிக்கொள்ளும் கிழடுகள் மத்தியில் இளமையான எண்ணம் கொண்டவர்.. இளசுகளோடு தகுதிப்பாரபட்சமின்றிப் பழகுபவர்.. வழமையில் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை எனது சிறுகதைத் தொகுப்புகளை அவரிடம் கொடுப்பேன்... அவர் அக்கறையாக சில மணி நேரங்கள் மெனக்கெட்டு தனது கிறுக்கல்களால் சிறுகதைகளில் சித்திரம் கீறி தனது விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் குறித்துத் தருவார்... எனக்கும் அவருக்கும் இடையில் சிவபெருமானுக்கும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் இடையில் இருந்த தோழமையே இருந்தது... பேராசிரியர் என்று நான் நடுங்குவதும் இல்லை... எளியோன் என்பதால் அவர் என்னிடம் கை கட்டல்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.. என் கால்கள் கடுத்ததால் வழமை போல வாசலிலே வைத்துக் கதைக்காமல் உள்ளே அழைத்தேன்.. அவரிடம் நான் கற்றுக் கொண்டதில் முக்கியமான ஒன்றை இங்கே சொல்லியாகவேண்டும்.. சாதி.. அவர் சாதி வெறியர்... ஆனால் அவரைப் பொறுத்த வரை இரண்டு சாதிகள்.. சாதி பார்க்கும் வர்க்கம். சாதியை எதிர்க்கும் வர்க்கம்.. சாதிபார்ப்பவர்கள் அனைவரையும் அவர் கீழ் ஜாதியாகவே வரிந்திருந்தார். காலத்தால் பின்னிற்க்கும் குரங்கு இனம் என்று வசைகூறுவார். 'என்னப்பா.. ஏதும் எழுதினியே..' என்றார்.. 'இந்த முறை வேலைகள் கொஞ்சம் கூட ஐயா அதால...'என்று இழுத்தேன் .. 'உன்ர வயசுப் பெடியல் தரவளி காதல் கீதல் எண்டு கிறுக்கித்தள்ளுவாங்களே... உன்ர எழுத்துல ஒரு சீலையையும் காணேல்ல 'என்றார்... 'இல்லை ஐயா .. காதல் என்டதுக்கான அர்த்தமே எனக்கு இன்னும் முழுசாய் தெரியேல்ல.. கடமைக்கு காதலிக்கேலுமோ ஐயா...' என்றேன்.. 
'நான் இன்னும் அஞ்சு வருசம் இருப்பன் கண்டியோ.. பாக்கத்தானே போறன் ... உதுல வந்தன் அதான் உன்னையும் பாத்திட்டு போவமென்டு..சரி என்ன..' என்றவாறு வெளிக்கிட்டார்..

இதென்ன கொடுமையப்பா.. காமம்...ஈழயுத்தம் இல்லாமல் ஈழ இலக்கியம் இல்லையோ என்று பல தடவை அவருடன் வாக்குவாதப்பட்டிருக்கிறேன்... இந்த முறை மனுசன் காதல் என்டு ஒண்ட கொண்டருதே.. வறுத்தெடுக்காமல் விடாதே என்று அங்கலாய்த்தவாறு நித்திராதேவியை அணைத்துக் கொண்டேன்... அடுத்த நாள் வெள்ளிக்கிழமை..

மலை நாட்டில் இருப்பதால் மட்டும் கண்டியை குளிரான பிரதேச வகையறாக்களுக்குள் அடக்க இயலாது.. வெயில் மண்டையுள் கொதிக்கிறது... சரசவிகம புகையிரத நிலையத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்... என்னயும் பத்தி கொஞ்சம் சொல்லிக் கொள்ளுறன் . என்னோடு ஒப்பிடின் பாலையும் பசுமை தான்.. என்னை பாலைக்கள்ளி என்றும் உருவகிக்க இயலாது.. கள்ளியும் தன் பச்சைத் தோற்றத்தால் பசுமையாகத்தான் உள்ளது.. வரண்ட பிரதேசத்தில் வளர்வதால் மட்டும் அதற்கு வரட்டு முத்திரை குத்த இயலாது.. நான் வரண்டவன்... நா வும் கூட .. தண்ணீர் போத்தல்கள் வாங்கச் சென்றேன்.. உண்மையில் பார்த்தவுடன் காதல் வராது.. கவர்ச்சி தான் இழுக்கும்... என் கண்ணுக்கு அந்த நெரிசலில் அப்போது அவள் அழகியாக தெரியவில்லை...என் குரல்வளைகள் தண்ணீர் குவளைகளுடன் மேலும் கீழுமாக ஓடிக் கொண்டிருந்தன.. ஓடி வந்த களைப்பில் வெப்பம் ஏறிய உடலுக்கு திடீர் என்று கொடுத்த குளிர் தண்ணீர் பிரயோகம் சடுதியான வேர்வைக்கு வழி சமைத்திற்று.. எண்ணூற்று அறுபது ரூபாய் டீ ஷேர்ட்டை வியர்வையில் ஊறப்போட்டிருந்தேன்.. வீட்டுக்கு போனதும் துவைத்துக் கொள்ளலாம்..தேட் கிளாஸ்.. மேற்க்கு நோக்கி விரைவதற்க்காக இரண்டு இன்ஜின் பூட்டி, குதிரைவலு கூட்டி பதுளையில் இருந்து இழுத்து வந்த ரதம்.. தன் பாட்டுக்கு பொது இடத்தில் புகைப்பிடித்துக்கொண்டிருந்தது..போலீசும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை..இதனால் தான் புகையிரதம் என்று பெயர் வந்ததோ.. புகைத்தல் எவ்வளவு மோசமான விடயம் என்பது அதன் தோற்றத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலில் தெரிந்தது... சீட்டில் ஃபாக் ஐ வைத்துவிட்டு வழமை போல புட்போட் அடிப்பதற்க்காக வாசலில் நின்று கொண்டிருந்தேன்.... ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தேன்.

சிரிப்பு வந்து கொண்டே இருந்தது... காதல்?.. எனக்கு காதல் வந்ததா இல்லையா என்று எனக்கே உண்மையில் தெரியலில்லை.. உண்மையில் அழகான பெண்களை பார்த்ததும் வியந்து போய் யோசித்திருக்கின்றேன்.... பழகிப்பார்ப்போமா என்று... ஆனால் மூளை உடனேயே உருவம் பார்த்து வருவது காதல் இல்லை என்று பஞ்சாங்கம் பாடும்.. தன்மானம் தடுக்கும்... ஏன் வம்பு என்று பேசாமல் இருந்து விடுவேன்... அன்று ஏனோ தெரியவில்லை அப்படித் தோன்றியது.. காதலை கருவாக்கி சிறுகதை எழுது என்றது மனம்.. ஐந்து மணித்தியாலம் நிறைவாகப் போதும் .. போய் சீட்டில் உட்கார் என்றது... காதல் பாடல்களை கேட்டால் அந்த பீலிங் வரும் என்று நினைத்தேன்... எ ஆர் ஆர் ஐ ஹெட்போனில் ஒலிக்க விட்டேன்... கண்களை மூடி ஜன்னலில் சாய்ந்தேன்... பொதுவாக பாடல்களை விட தனி இசையையே என்னை அதிகம் கவரும்.. எனது ப்ளே லிஸ்டுகளில் கூட லிறிக்ஸ்ஸுகள் இல்லாத ப்ளூட் , பியானோ மியூசிக்குகள்,பி.ஜி.எம்கள் தான் அதிகம்.. இசையை ரசிக்கும் போது தேவையில்லாம் மூளை பாடல் வரிகளை ஆராய்வதை பொதுவாக நான் விரும்புவதில்லை.. ஏதும் வேலை செய்யும் போது.. தனியாக நடந்து போகும் போது அவை சுகமளிக்கும் என்றாலும்.. தனி இசையை ரசிப்பதற்க்கு அவை ஏற்றவை இல்லை என்பது என் கணக்கு.. முதல் இசை முடிய இரண்டாவதாக யுவனின் காதல் கொண்டேன் தீம் இசைக்க ஆரம்பித்தது..ஏதோ மெசச் வந்திருக்க வேண்டும்..கண்களைத்திறந்தேன்.. கைலாசம்பிள்ளை தான் அவர் புகையிரதநிலையத்தில் என்னைப்பார்த்ததாகவும் நான் கண்டுகொள்ளவில்லை என்றும் சினந்திருந்தார்.. அதற்க்கு மறுமொழி அனுப்பும் மனநிலையில் நான் அப்போது இல்லை..தொடர்ந்தேன்.. அந்தப்புத்தகம் அறம் என்று தலைப்பிடப்பட்டிருந்தது.. ஜெயமோகன்...? நிச்சயமாக நான் அதை எதிர்பாக்கவில்லை.. ரமணிச்சந்திரனைத் தாண்டிய பெண்கள் நான் அறிந்த வரையில் மிகச் சொற்பம். எங்கள் தமிழ் மாமன்றத்தில் ஒரு அக்கா.. அடுத்ததாக என் தோழியொருத்தி... அறிந்த வரையில் என்பதை அழித்துவிட்டு நேரில் கண்ட வரையில் என்றாக்கி அந்தச்சொற்பத்தை எண்ணாக்கினால் இந்த இரண்டும் தான்... மெல்ல புத்தகத்தை தாண்டி முகத்தைப்பார்க்க முயற்சித்தேன். அதை அவள் கண்டுபிடித்திருக்க வேண்டும்.. புத்தகத்தை விலத்தி ஒரு தடவை பார்த்தாள்.. மீண்டும் மறைத்துக் கொண்டாள்... இது...இந்த.. இவள்... அவளல்லவா...மறுபடியும் முகத்தை கற்பனை பண்ணிப்பார்த்தேன்.. ஒரு மில்லி மீட்டர் தடிப்பில்.. அரை சென்ரிமீட்டர் அகலத்தில் குட்டியாக ஒரு திருநீறு. புருவ இணைப்பில் புள்ளியாய் ஒரு குட்டிப் பொட்டு.. கண்மை பூசிய விழிகள்.. அவை மட்டும் தான் ஞாபகம்.. ஆனால் நான் ஜெயமோகனிலேயே விழுந்துவிட்டேன்..எழும்பி நிற்பதற்க்குள் இன்னும் ஒரு பலத்த அடியா.. என்னை மரணப்படுக்கைக்கு அல்லவா தள்ளி விட்டாள்.. இப்படிப் பார்ப்பது அவளுக்கு நிச்சயமாக அசௌகரியத்தை உண்டு பண்ணும். பார்வையைத் தாழ்த்திக் கொண்டேன்..ஆனால்..ஒரு ஆடவன் எதிரில் ஒரு பெண்ணால் எப்படி சௌகரியமாக இருக்கமுடியும்.. இது ஜெயமோகனா?. ஆரம்பிப்போமா என்று நினைத்தேன்.. அந்தாள் கொஞ்சம் ராசியில்லை.. வேண்டாம்... அந்த மனநிலையை இலக்கியம் ஆக்க வேண்டும் என்று தோன்றியது..சிறுகதை என்ன சிறுகதை கவிதை அல்லவா கொட்டுகிறது.. ஃபோனில்நோட் பேட்டை எடுத்துக் கொண்டேன்...தியானத்திலும் கொலுசுச்சத்தம் என்றவாறு ஆரம்பித்தேன்.. கண்களை மூடி சொப்பனத்தில் ரஹ்மானுடன் பயணித்தவாறு.. நிஜத்தில் அவளோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன்.. பார்த்ததும் காதல்.. அதுவும் இலக்கியத்தில் தொடங்கிய காதல்... ரஹ்மானும் சம்மதிக்கிறார்.. வேறென்ன வேண்டும்..ஹொஸானா தீம் ஓடிக்கொண்டிருந்தது.. என்னையறியாமல் விண்ணைத்தாண்டி வருவாயா? என்றுவிட்டேன்... மீண்டும் புத்தகம் சரிந்தது... ஆனால் இந்த முறை அவளை விட நான் தான் அழகாக எக்ஸ்பிரசன்களை பரிசளித்தேன்... கொஞ்சமாக அவளின் உதடு அசைந்தது... ஏதோ இடித்தது.. அட வில்லன் எங்கே ? என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டேன்... தண்ணீர் போத்தல் வாங்கும் போது யாருடனோ அவள் பேசிக்கொண்டிருந்ததாக ஞாபகம்.. நரைத்த தாடி.. கட்டாயம் அப்பாவாகத் தான் இருக்க வேண்டும்.. ஆனால் ஆளைக் காணோமே... சுற்றிப்பார்த்தேன் ... மெல்லமாக எழும்பி எட்டியும் பார்த்தேன்.. அதையும் கவனித்து விட்டாள்.. இந்த முறை சிரிப்பு அவள் உதட்டைத்தாண்டி வந்தது.. அவளுக்கு நான் விளையாட்டுப்பையனாகத் தெரிந்திருக்க வேண்டும்.. எனக்குச் சப்பென்று ஆகிவிட்டது... அவளுக்குச் சொல்ல வேண்டும்.. நானும் பெரியவன் தான்... இலக்கியம் அறிந்தவன்.. ஜெயமோகன் தாண்டியவன் .. அந்தக் கவிதையை அவளுக்குக் காட்டி.. இதை வாசித்து விட்டுச்சிரி.. இது உனக்கானது.. என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது...இசையை ரீவைனில் கேட்பது எனக்குப்பிடிக்காது... ப்ளேலிஸ்ட் முடியப்போவதையும் உணர்ந்து கொண்டேன்... ரஹ்மானும் கைவிட்டால் அடியேன் எப்படிச்சமாளிப்பது... வெறுமனே ஃபோனை நோண்டிக்கொண்டு இருப்பதும் இயலாத காரியம்.. புதுப்பழக்கக்காரர்கள் பிரயாணங்ளில் நிறைய நேரம் புத்தகம் வாசிக்க முடியாது.. கண்கள் நமட்டும் .. தலை சுற்றவது போல் வரும்... போட்ட கணக்குத் தப்பவில்லை.. அவளை ஜெயமோகனும் என்னை ரஹ்மானும் ஒரே நேரத்தில் கை விட்டார்கள்... புத்தகத்தை பைக்குள் வைத்துக் கொண்டாள்.. எனக்கும் சரி அவளுக்கும் சரி அதற்க்கு மேல் வழிகள் ஏதும் இல்லை.. ஏதோ கட்டாயத்தின் பேரில் இருவரும் மெதுவாகப் புன்னகைத்துக் கொண்டோம்..

தம்பி இது என்ன ஸ்டேஷன்?

அதற்க்கு மேல் என்னால் உண்மையில் முடியவில்லை.. உண்மையில் எனது மூளை அப்போது பயங்கரமாக சோர்வடைந்திருந்தது.. எவ்வளவு நேரம் தான் என் கண்களை ஏமாற்றுவது..சிறுகதை என்ன சிறுகதை.. இப்படிக் கிழவியை குமரியாக வரிந்து தான் எழுத வேண்டும் என்று எனக்கு என்ன கடப்பாடா..நான் என்ன பழுத்தவனா..அனுபவிக்காமல் அனுபவங்களை வரிவதற்க்கு..தேவையில்லை என்றது மனம்.. மிச்சத்தை வீட்ட போய் மாமரநிழலின் கீழ் புனைந்து கொள்ளலாம் என்றது மனம்.

'தெரியேல்லயே பொறுங்கோம்மா' ...என்று விட்டு யன்னலின் வெளியே தலையை நீட்டினேன்.. உண்மையில் அவளே தான்...இது வரை நான் யாரைக்கற்பனை செய்து கொண்டிருந்தேனோ அவளே தான்...வெளியே தலையை நீட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள்... நான் பார்ப்பதைப் பார்த்ததும் சட்டென்று தலையை உள்ளிளுத்துக் கொண்டாள்.. சிரித்துக் கொண்டேன்..அடுத்த பெட்டியில் ஏறி இருக்கலாம்.. தலையில் இவ்வளவு பெரிதாக எழுதி இருக்கும் போது விதியை யாரால் மாற்றமுடியும்..ஆனால் திடீரென்று குழப்பமானது மனம்.. யார் அவள்.. ஏன் சும்மா அவளைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்...அதனால் என்ன பயன்... அதன் பிறகு அவள் என்னை ஆக்கிரமிக்க இடம் கொடுக்கவில்லை மீண்டும் அவளை பெராதனையில் காணும் வரை.. அவளும் அங்கு தான் படிக்கிறாள்..கலைப்பீடம்.. கைலாசம்பிள்ளையிடம் உதவி கேட்டுப்பார்ப்போமா.. ஆனால் அவர் அதை சங்கடமாக எடுத்துவிட்டால்.. இல்லை.. எல்லாத்துக்கும் காரணம் அந்தக்கிழடு தானே ... தேமேவென்று இருந்த என் நெஞ்சில் இப்படி கல்லெறிந்து குழப்பியது அவர் தானே.. அவருக்காக காதலை கருவாக்கித் தானே இவ்வளவு பிரச்சனை... ஆனால் எப்படி வரிவது.. என் உள்ளம் முழுவதையும் திறந்து காட்டி யோசனை கேட்க வேண்டும்..இலக்கியம் தாண்டி நான் அவருடன் பேசியது மிகச்சொற்ப்பம்..யோசனை தோன்றியது.. உடனே நடந்த எல்லாவற்றையும் சிறுகதையாக எழுதித்தள்ளினேன்.. அடுத்த நாள்பக்கல்ரி முடிந்ததும் உடனேயே அவரிடம் அதை சமர்ப்பித்துவிட வேண்டும்...கொடுக்கும் போதே விமர்சனங்கள் மாத்திரம் எதிர்பாக்கப்படுகின்றன என்றும் சொல்ல வேண்டும்..அவரின் பாராட்டுக்கள் யாருக்கு வேண்டும்... அடுத்த நாள் நாலரைக்கு கலைப்பீடவாசலில் காத்துக் கொண்டிருந்தேன்.. கன்ரினுக்கு வாடா என்று மெசேச் வந்தது... போனேன். 'டேய் தம்பி இங்க..' என்று கையைத்தூக்கி அசைத்துத் தன் இருப்பைக்காட்டினார்..யாரோ ஒரு பெண்ணுடன் கதைத்துக்கொண்டிருந்தார். ஆனால் ரகசியான விசயம் அல்லவா..ஐயா உங்களோட கொஞ்சம்..ஆரம்பிக்கும் போதே ஆயிரம் அலவாங்குகள் இதயத்தை குத்திக் கொண்டன..
மீண்டும் அதே கண்கள்.. இந்த முறை ஐந்து வினாடிகள் பார்த்தேன். நிஜத்தில் பார்த்தேன்.
'இவள் தான் என் பேத்தி...
இங்க தான் படிக்கிறாள்...
நான் சொன்ன பெடியன் இவன் தான்மா.. 
எங்கடா.. கொண்டந்தனியே' என்றார்..
அப்படியானால் அந்த நரைத்த தாடி.. அவர் தானோ..ஒன்றுமே கதைக்கவில்லை .. அவளும் தான் ..
விசயம் சீரியஸ் ஆனதை உணர்ந்து கொண்டேன்.. ஆனால் பேப்பர்கள் கைலாசம்பிள்ளையின் கைகளில் இருந்தன.. அவருக்கு தன் பேத்தி தான் கதாநாயகி என்னும் விசயம் தெரிவதற்க்கான வாய்ப்பில்லை... இருந்தாலும்..
இரவு மெசேச் வந்தது...
'உனக்கு காதல் வராது..
ட்ரை பண்ணாத..
சச் எ வோர்ஸ்ட் ஸ்டோரி.. குப்பை டா.. நீ பிக்சன் த்ரில்லர்ன்னே போ...
கம்பன்,ஷெல்லிய கொஞ்சம் கூட வாசி...'
அவர் உணரவில்லை.. வெறும் கதையாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்.. இருந்தாலும் எனக்கான எல்லா பதிலும் அதிலே தெளிவாக இருந்தது..
சுந்தரரின் திருமணத்தை சிவபெருமான் தடுத்தாட்கொண்டது போல... 
Views: 524