தந்ததாது (தொடர்கதை – பாகம் 02

எழுத்தாளர் : வி.துலாஞ்சனன்மின்னஞ்சல் முகவரி: vthulans@thambiluvil.infoBanner

 

தூரத்தே கொழும்புத்துறை மேடை தென்பட்டதும் விஜயக்கோன் முதலிக்கு மெல்லிய பதற்றம் ஏற்பட்டிருந்தது. ஆரியச்சக்கரவர்த்தியின் மாலுமியைக் கொன்று பலவந்தமாக அங்கு வருகிறோம் என்பதும், ஆரியச்சக்கரவர்த்தி மாயாதுன்னையின் நண்பன் என்பதும், அவனுக்கு இலேசான கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அருகில் நின்ற வேதியனோ எவ்வித கவலையும் இன்றி கடல்மீது பொற்கம்பம் என விழுந்துகிடந்த சூரிய விம்பத்தின் அழகை இரசித்தபடி வருவது, அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. நேற்று மாலையே அவர்கள் நெடுந்தீவின் மாவெளித் துறைக்கு வந்துவிட்டிருந்தனர். போதிராஜப் பெருமாளை கோழிக்கோடு சாமூத்திரியிடமும், வருஷப்பெருமாளை தஞ்சை நாயக்கனிடமும், படையுதவி கோரி தூது செல்லுமாறு பணித்திருந்தான் வேதியன். அவர்கள் விடைபெற்று, ஊர்காவற்றுறைக்கு சிறுவள்ளமொன்றில் புறப்பட்ட பின், கிளம்பிய கப்பல், இப்போது கொழும்புத்துறையை நெருங்கிவிட்டிருந்தது.

துறைமுகப்பக்கமாகத் திரும்பிய விஜயக்கோன் தன்னையே நம்பமுடியாமல் கண்ணை அகலவிரித்துப் பார்த்தான்.  அப்போது அவனையறியாமலே அவன் வாயில் எழுந்த வியப்பொலியைக் கேட்டு அந்தப் பக்கம் பார்வையைத் திருப்பினான் வேதியன். துறைமேடையிலிருந்து, நகருக்குள் நுழையும் பெருவீதியின்  இருபுறமும், வாழையும் கமுகும் கரும்பும் மாவிலை தோரணங்களோடு உயர்ந்து நிற்பது தெரிந்தது.  யாழ்ப்பாணாயன் பட்டினத்தின் நந்திக்கொடியும், ஜயவர்த்தனபுரக்கோட்டையின் சவுக்கேந்திய  சிங்கக்கொடியும் இறங்குதுறையில் பட்டொளி வீசிப் பறந்தன. அந்தணர் நிறைகுடங்கள் ஏந்தி நிற்க, மேளதாளங்களோடு காணப்பட்ட வாத்தியகாரர்களுக்கு நடுவே, தேவதாசியர் தங்களுக்குள் பகடி பேசிக்கொண்டு கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களைத் தாண்டி, யாழ்ப்பாணாயன் பட்டினத்து அரசவைப்பிரமுகர்கள் பெருங்கூட்டமாக நிற்பது தெரிந்தது. ஓரிருவர், அங்கும் இங்கும் ஓடி, நடைமுறைகளைச் சரிபார்த்துக்கொண்டிருந்தனர். அப்பால் புதினம் பார்க்க வந்த சனத்திரள் காவலர்களின் பிரம்படியையும் அதட்டலையும் மீறி திமிறிக்கொண்டிருந்தது.

“சிங்கக்கொடி! நம்மை அரசமரியாதைகளுடன் வரவேற்கிறார்கள்!” என்று வியப்புமாறாத விழிகளுடன் கூவினான் விஜயக்கோன். வேதியன் கண்களில் சந்தேகம் மின்னி மறைய “ஆம். குழப்பமாக இருக்கிறது. அரசியல் தஞ்சம் கோரிகளுக்கு எதற்கு இப்படி ஒரு வரவேற்பு?” என்றான். அதற்குள் கப்பல் இறங்குதுறையை அண்மித்துவிட, கடற்கரையோரமாக நின்ற இரு சோனக வீரர்களால் மரியாதை நிமித்தம் ஐந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதை விஜயக்கோன் கண்டான். எந்த உணர்வையும் வெளிக்காட்டாத மலர்ந்த முகத்துடன், வேதியனும் விஜயக்கோனும் துறைமேடையில் இறங்கினர். மேளதாளமும் பெண்களின் குரவையொலியும் ஒருசேர ஓங்கி எழுந்தது.  சுங்க அதிகாரிகளும் துறைமுகக் காவலர்களும் பணிவுடன் வணங்கி அவர்களை வரவேற்றனர்.


கரையோரமாக முன்னணியில் நின்ற இளைஞர் அவர்களை நெருங்கிக் கைகுவித்தார். “வணக்கம், ஆயுள் பெருகுக. யாழ்ப்பாணாயன் பட்டினத்துச் சிங்கை நல்லூரை ஆளும் ஆரியச்சக்கரவர்த்தி ஸ்ரீலஸ்ரீ செகராசசேகர மாமன்னர் பேரில், அமைச்சன் அரசகேசரியாகிய நான், அபின்ன ஸ்ரீ ஜயவர்த்தனபுரக் கோட்டையின் பாதுகாவலர், ஸ்ரீலஸ்ரீ வீதிய பண்டாரம் அவர்களை வரவேற்கிறேன். இலங்கைத்தீவெங்கணும் புகழ்பெற்ற மாவீரரை வரவேற்பதில், சேது காவலரின் திருநகரம் பெருமையுறுகின்றது” என்று பணிவோடு சொன்னார் அவர்.  அந்தணர்களின் முன்னணியில், கையில் நிறைகுடமேந்தி நின்ற இராஜகுரு சோமசர்மா, சிவாகம மந்திரங்களால் ஆசி கூறி, வீதிய பண்டாரம் மீது நெற்பொரி தூவி வரவேற்றார்.

 

“யாழ்ப்பாணாயன் பட்டினத்து மண்ணைச் சிரம்சூடுகிறேன். அடைக்கலம் கோரி வந்த அகதிக்கு சிங்கைநல்லூர் அரசு கொடுக்கும் மரியாதை, நெகிழ்வையும், கூடவே குழப்பத்தையும், ஒருசேர அளிக்கின்றது.” என்று பணிவுடன் வணங்கியபடி கூறினான் வீதிய பண்டாரம். அரசகேசரி புன்னகைத்தார். “மாயாதுன்னை மற்றும் பறங்கியரிடம் தப்பித்தால், மாவீரர் வீதிய பண்டாரம் யாழ்ப்பாணாயன் பட்டினத்துக்கே வரமுடியும் என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை!” என்றார் அவர். வீதியன் கண்களில் அப்போதும் சந்தேகம் இருந்தது. “ஆம். ஆரியச்சக்கரவர்த்தியின் ஒற்றர் படையின் வலிமையை அறிவேன். ஆனாலும் இந்த வரவேற்பு…” என்று இழுத்தான் அவன். அரசகேசரி தலையசைத்தார். “தங்கள் வருகையை அரசியல் தஞ்சம் கோரலாக இல்லாமல், நட்பு நாட்டுக்கு கோட்டை அரசின் இராஜப்பிரதிநிதி உத்தியோகபூர்வ விஜயம் செய்வதாகவே எல்லோரும் அறியவேண்டும் என்பது ஆரியச்சக்கரவர்த்தியின் விருப்பம்” என்ற அவர், குரலைத் தாழ்த்திச் சொன்னார் “பறங்கியர் உட்பட!”

தென்னிலங்கையின் இருபெரும் சக்திகளான சீதாவாக்கை அரசும் கோட்டை அரசும் தற்போது போர்த்துக்கேயரோடு நட்பு பாராட்டிக்கொண்டு இருக்கின்றன. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தென்னிலங்கையின் எதிரிக்கு யாழ்ப்பாண அரசு வெளிப்படையாக புகலிடம் கொடுப்பதும், அவனைக் கோட்டை அரசனுக்குச் சமனாக மதித்து அரசமரியாதைகளோடு வரவேற்பதும், போர்த்துக்கேயராலும் தென்னக அரசுகளாலும் என்ன அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதை வீதியனும் விஜயக்கோனும் அடுத்தகணமே ஊகித்துக்கொண்டனர். அதன்மூலம் ஆரியச்சக்கரவர்த்தியின் உள்ளம் செல்லும் திசையையும் அடையாளம் கண்டுகொண்டனர்.  அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி மூலம் அதைப் புரிந்துகொண்ட அரசகேசரி, “நன்று. அரசர் அங்கே அரண்மனை வாயிலில் காத்திருக்கிறார்.” என்றார் புன்னகையுடன்.

 

தேவதாசியர் கூட்டத்தில் நின்ற கறுப்பழகிகள் ஒய்யாரமாக இடைவளைத்து சதிராடத் துவங்கினர். வீதிய பண்டாரமும் விஜயக்கோன் முதலியும் தலைதாழ்த்தி வணங்கியபடி அவர்களுக்காகக் காத்திருந்த தேரில் ஏறிக்கொண்டனர். தேரின் இருபுறமும் இரு குதிரைவீரர்கள் நந்திக்கொடியையும் சிங்கக்கொடியையும் உயர்த்திப் பிடித்தபடி வந்தனர். பணிப்பெண்கள் மலர்களைத் தூவ, கொழும்புத்துறையிலிருந்து சிங்கை நல்லூருக்குச் செல்லும் பெருவீதியின் இருபுறமும் குடிமக்கள் கூடிநின்று வாழ்த்துக்கோஷமிட, முன்னும் பின்னும் பெருமளவு அரசபிரமுகர்களுடன் அந்தத்தேர் சிங்கை நல்லூர் அரச மாளிகையை நோக்கி நகர்ந்தது.

ஊர்வலம், சிங்கை நல்லூரின் பிரமாண்டமான கோட்டை மதில்களை நெருங்கியது. கோட்டையின் உச்சியில் வரிசையாக நந்திச்சிலைகளும் ஆங்காங்கே காவல் கோபுரங்களும் தெரிந்தன. எத்தகைய முற்றுகையையும் எதிர்க்கும் விதத்தில் அக்கோட்டைச்சுவர் விசாலமாக வடிவமைக்கப்பட்டிருந்ததை வீதியன் கண்டான். அகழியைத் தாண்டி திறந்திருந்த மாபெரும் கோட்டைக் கதவுகள் நகருக்குள் இட்டுச்செல்ல, கோட்டையின் முற்றத்து வெளியில் அமைந்திருந்த அந்தப் பெரும் கடைத்தொகுதியே புகழ்பெற்ற முத்திரைச் சந்தை என்பதை உணர அவனுக்கு அதிகநேரம் எடுக்கவில்லை.

 

சோனகர், சீனர், யவனர், சாவகர் என்று  பலநாட்டு வணிகர் உள்ளூர் மக்களுக்குள் அங்கங்கே தலைகாட்டி ஊர்வலத்தை ஆர்வத்துடன் நோக்கிக் கொண்டிருந்தனர். சந்தையின் மத்தியில் நந்திக்கொடி பறந்த கோபுரமொன்று, வெளிநாட்டு வாணிபர்களுக்குச் சுங்கம் விதிப்பதிலும், வாணிபப் பொருட்களைத் தரம்பிரித்து அரச முத்திரை இடுவதிலும், அப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதை வீதியன் கண்டான். வன்னிக்காட்டின் யானைத்தந்தங்களும் தேனும் சாயவேரும், மன்னார்க்கடலின் முத்துக்களும், தென்னிலங்கையின் இரத்தினக்கற்களும், ஏலம் கறுவா முதலான வாசனைத்திரவியங்களும் அங்கு தனித்தனிக் கடைத்தெருக்களில் குவித்துவைக்கப்பட்டிருந்தன. விதவிதமான வணிகர்கள். விதவிதமான ஆடை அணிகலன்கள். யானைவண்டிகள். மாட்டுவண்டிகள். குதிரை இரதங்கள். பல்லக்குகள். பெருந்தேர்கள். கொடிகள். பந்தல்கள். துணிக்கூடாரங்கள். அந்த சந்தைப்பகுதியே மாபெரும் பலவண்ணப் பட்டாடையொன்றைத் தரையில் விரித்தது போல் வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்தது.

 

அப்பால் சந்தைக்கு சற்றுத் தள்ளி அமைந்திருந்த மூன்றடுக்கு மாளிகை வாயிலில் அலங்காரங்களுடன் நின்ற பட்டத்து யானை, துதிக்கை தூக்கிப் பிளிறி அவனை வரவேற்றது. மாளிகை வாசற்படியில்,  வெண்கொற்றக்குடை நிழலில் பட்டத்தரசி மங்கையற்கரசியுடனும், இளவரசன் புவிராஜ பண்டாரத்துடனும் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தான் ஆரியச்சக்கரவர்த்தி. வீதியன் காதில் “செகராசசேகரன் சங்கிலி மன்னன்” என்று கிசுகிசுத்தான் விஜயக்கோன். 

 

போர்த்துக்கேயரின் சிம்மசொப்பனம். யாழ்ப்பாணாயன் பட்டினத்து மக்களின் உள்ளம் கவர்ந்த ஆட்சியாளன்.  எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துவதில் கிஞ்சித்தும் பின்காலெடுத்து வைக்காத செயல்வீரன். திண்ணிய கறுத்த உடலும், நரையோடிய நெடுந்தாடியும் தீர்க்கமான பார்வையுமாக ஆரியச்சக்கரவர்த்தி நின்று கொண்டிருந்தான்  சீனப்பட்டாடையும் தலைப்பாகையும் மார்பில் சன்னவீரமும் இடையில் உடைவாளும் அவன் கம்பீரத்துக்கு அணிசேர்த்தன. அவன்  கையசைத்ததும் சிங்கக்கொடியும் குடையும் ஆலவட்டமும் உபசாரங்களாக ஏந்திய பணியாட்கள், தேரிலிருந்து இறங்கிய வீதியனைச் சூழ்ந்துகொண்டனர்.

 

ஒரு முதிய தேவதாசி, வீதியன் மீது பன்னீர் தெளித்து நெற்றியில் திருநீறும் சந்தனமும் குங்குமமும் சாற்றி, வெற்றிலையும் பாக்கும் கையில் கொடுத்து வாழ்த்தி வரவேற்றாள். அரண்மனையின் முதிர்ந்த சலவைத்தொழிலாளர் அவன் முன்வந்து பணிந்து வெண்ணிற நிலப்பாவாடையை விரித்தார். அரசவை வள்ளுவர் இருபுறமும் கூடி பறையடித்து வரவேற்க, நிலப்பாவாடையில் நடந்து மாளிகை வாசலை நெருங்கினான் வீதியன். புன்னகையுடன் கைகளை விரித்து முன்னகர்ந்த சங்கிலியன் அவனை ஆரத்தழுவிக்கொண்டான். “ஆயுள்பெருகுக.  சிங்களத்தின் மாவீரரை யாழ்ப்பாணாயன் பட்டினத்துக்கு அன்போடு வரவேற்கிறேன். தங்களைத் தோள்தழுவக் கிடைத்தது என் பாக்கியம்.” என்றான் சங்கிலியன். “ஒரு அகதிக்கு இந்நாடு செய்யும் உபசாரங்கள் என்னைக் கூசச்செய்கிறது. இதற்காக நான் உத்தர தேசத்துக்கு என்றும் கடன்பட்டிருப்பேன்” என்று நெகிழ்ச்சியோடு சொன்னான் வீதியன்.

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

“யாழ்ப்பாணாயன் பட்டினத்திடம் உலகின் மிகச்சிறந்த கப்பற்படை ஒன்று உள்ளது. அதனுடன் அடங்காப்பற்று வன்னியரும் தெற்கே கண்டிச் செங்கடகலபுரத்தை ஆளும் கரலியத்தை பண்டாரமும் கிழக்கே திருக்கோணமலையிலும் மட்டக்களப்பிலும் உள்ள வன்னியர்களும் இணைந்து கொள்ளும்போது, மாயாதுன்னையின் உதவி இல்லாமலே பறங்கியரை நாட்டிலிருந்து முற்றாகத் துரத்தியடிக்கமுடியும்.” உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான் சங்கிலி மன்னன். யமுனா ஏரியின் அருகே பண்டாரத்தோப்பில் இருந்த அவனது திருவோலக்கமண்டபம், ஓரிரு இருமல் செருமல்களும் மர நாற்காலிகள் அசையும் ஒலிகளும் அன்றி வேறேதும் ஒலிக்காத மயான அமைதியுடன் அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தது.

 

சீனப்பட்டாலும், கலிங்கத்துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது அம்மண்டபம். நடுநாயகமாக ‘சேது’ எழுதிய நந்திச்சின்னத்துக்கு முன்புறமாக, இரண்டு யானைத்தந்தங்களின் நடுவே அமைக்கப்பட்டிருந்த அரியணையில் சங்கிலியன் அமர்ந்திருந்தான். இடப்புறம் முதலமைச்சர் அரசகேசரியும் இராஜகுரு சோமசர்மாவும் உட்கார்ந்திருந்தனர். வலப்புறம் இடப்பட்டிருந்த இரண்டு விசேட இருக்கைகளில் வீதியனும் விஜயக்கோனும் அமர்ந்திருந்தார்கள். 

 

வலப்புற நிரையின் முன்னணியில் யாழ்ப்பாணாயன் பட்டினத்தின் சேனாதிபதி பெரியபிள்ளை பண்டாரம் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அருகே வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், பச்சிலைப்பாலை நான்கு பிரிவுகளின் அதிகாரிகளும், பூநகரி, பல்லவராயன்கட்டு, இலுப்பைக்கடவை என்பவற்றின் அதிகாரிகளும் அமர்ந்திருக்க, அடுத்த நிரையில் கரிக்கட்டுமூலை, மேல்பற்று, கிழக்குமூலை, மேற்குமூலை, செட்டிகுளம், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி,  கரைச்சி முதலான வன்னிப்பற்றுகளை ஆளும் வன்னியர்கள் ஆழமான சிந்தனையுடன் அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இடப்புற நிரையில், வெயிலுகந்த பிள்ளையார், கைலாசநாதர், வீரமாகாளியம்மன், சட்டநாதர், மாவிட்டபுரம், திருத்தம்பலேஸ்வரம், சிங்கை நல்லூர்க் கந்தன் ஆகிய கோயில்களை பரிபாலிக்கும் தலைவர்களும், வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த முதலிகள், பண்டாரப்பிள்ளைகள், கண்காணிகள், உடையார்கள், பட்டங்கட்டிகள், அடப்பனார்கள் முதலிய பல திறத்தவரும் கூடியிருந்தார்கள். மண்டபத்தின் வாயிலின் அருகே சிறு காவற்படை ஒன்றும், பறை, பேரிகை முதலியவற்றை ஒலிப்போரும் நின்றுகொண்டிருந்தார்கள். உப்பரிகையில் கேட்ட வளையலோசைகள், அங்கு அரசகுலத்துப் பெண்கள் அமர்ந்திருப்பதை ஊகிக்கச் செய்தது.

 

யாழ்ப்பாணாயன் பட்டினத்துக்கு வீதிய பண்டாரம் வருகை தந்திருக்கும் பின்னணி, போர்த்துக்கேயரின் போர்வல்லமை, அவர்களது சூழ்ச்சித்திறன், அவற்றுக்குப் பலியாகித் தவித்துக்கொண்டிருக்கும் தென்னிலங்கை, அதை எதிர்த்த வீதிய பண்டாரம், அவன் மீது கோபம் கொண்டு கோட்டை அரசின் ஆட்சிப்பொறுப்பை அவனிடமிருந்து பறித்து அவன் மகன் தர்மபாலனிடம் ஒப்படைத்த போர்த்துக்கேயர், இன்னொருபுறம் கணம் பித்தம் கணம் சரணவாதம் என்று மாறிக்கொண்டிருக்கும் மனநிலை கொண்ட சீதாவாக்கை மன்னன் மாயாதுன்னை என்று இலங்கைத்தீவின் அப்போதைய அரசியல் சூழ்நிலையை சுருக்கமாக எடுத்துரைத்துக் கொண்டிருந்தான் சங்கிலி மன்னன்.

 

“இதோ ஜயவர்த்தனபுரக் கோட்டையின் மாவீரர் இன்று நமக்கு நட்புக்கரம் நீட்டியிருக்கிறார். நம் படைக்கும் அடங்காப்பற்று வன்னியரின் படைக்கும் போர்ப்பயிற்சி அளிக்க வீதிய பண்டாரம் சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் தலைமையில் இந்தப்படைகள் எல்லாம் இணைந்தால் அது வடக்கே சென்று விஜயநகரப் பேரரசையும் வெல்லும் வல்லமையைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கண்டிக்கும் கீழைக்கரைக்கும் ஏற்கனவே தூதர்கள் சென்றுவிட்டார்கள். வீதிய பண்டாரத்தின் தூதர்களும் படையுதவி கோரி சோழமண்டலத்துக்கும் மலையாளக்கரைக்கும் சென்றிருக்கிறார்கள் என்று அறிந்தேன். எப்படியும் ஒரு மாத காலத்துக்குள் முடிவு தெரிந்துவிடும். எவர் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிடினும் ஒன்று மட்டும் உறுதி. கூடியவிரைவில் பறங்கியரை வீதிய பண்டாரத்தின் தலைமையில் யாழ்ப்பாணாயன் பட்டினத்தின் படை சின்னாபின்னமாக்கும்.” சங்கிலியன் சொல்லிமுடித்ததும் அரசவையே கரகோஷத்தில் அதிர்ந்தது.

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

விஜயக்கோனும் வீதியனும், இரு காவல்வீரர்களின் துணையுடன், இராசாவின் தோட்டத்தில் அவர்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். விஜயக்கோன் முகமும் உள்ளமும் மலர்ந்தவனாகக் காணப்பட்டான். மாளிகையில் அவனோடு பேசிய அரசவைப்பிரமுகர்களெல்லாம் வீதியனை ஆகா ஓகோ என்று அவனிடம் புகழ்ந்து தள்ளியிருந்தார்கள். தலைசிறந்த மாவீரன் ஒருவனின் அருகாமையில் தான் இயல்பாக வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து அவன் உள்ளம் விம்மிதத்துடன் பொங்கிக்கொண்டிருந்தது.

 

வீதியன் எதையோ சிந்தித்தவண்ணம் குதிரையில் அமர்ந்தபடி, தலைகுனிந்து வந்துகொண்டிருந்தான். வடக்கே டாண் டாணென்று ஒலித்த மணியொலி அவனது சிந்தனையைக் கலைத்தது. வீதியன் அந்தப்பக்கம் தலைதிருப்பிப் பார்ப்பதைக் கண்ட விஜயக்கோன், குதிரையை மெதுவாகச் செலுத்தி வீதியனை நெருங்கினான். “அது மாலை வேளைக்கான பூசை மணி, துமனி. சிங்கை நல்லூர் கந்தசுவாமி கோயிலில் ஒலிக்கிறது.” என்றான் விஜயக்கோன். வீதியன் ஆம் என்பது போல் தலையசைத்தான். “இன்று காலையும் பணியாள் ஒருவன் வந்து தங்களை அழைத்தான். முடிந்தால் பூசைக்கு வரச்சொல்லி மன்னன் அழைத்திருந்தானாம். நான் தான் கொஞ்ச நாள் இங்கு தானே தங்கப்போகிறோம். ஆறுதலாக  வருகிறோம் என்று அனுப்பிவிட்டேன்” என்ற விஜயக்கோன் திரும்பிப்பார்த்தான். மரமுகடுகளினூடே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் பிரமாண்டமான இராஜகோபுரம் கம்பீரமாக மறைந்தும் தோன்றியும் கண்ணாமூச்சி காட்டி உடன் வந்துகொண்டிருந்தது.

 

“அந்தக் கோயிலின் கோபுரத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். எத்தனை அழகானது! இலங்கைத்தீவில் கோணேஸ்வரத்துக்கும் தேனவரைக்கும் அடுத்து இப்போதுள்ள மிகப்பெரிய தேவாலயமே இதுதானாம். தேவந்துறையில் வணிகர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.” என்றான் விஜயக்கோன்.  “ஆம். அறிந்திருக்கிறேன்.” என்று வீதியன் சொன்னான். அவன் தலைகுனிந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பதை விஜயக்கோன் கண்டான். “உடல்நலம் இல்லையா துமனி? என்ன நேர்ந்தது?” என்று கேட்டான் விஜயக்கோன்.

 

வீதியன். நீண்ட பெருமூச்சு விட்டான். “உடலுக்கு ஒன்றுமில்லை முதலி. மனதுக்குத்  தான். புத்தளக்காட்டிலிருந்தே ஏதோ நடக்கக்கூடாத ஒன்றை என் உள்ளம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.” என்றான் வீதியன். அவன் கூரிய நுண்ணுணர்வு கொண்டவன். அர்த்தமில்லாமல் எதையும் நினைத்துக் குழம்புபவன் அல்ல.  அவன் எண்ணுவது போல ஏதேனும் ஏடாகூடமாக நடக்கப்போகிறதா? விஜயக்கோன்  தலையசைத்தான். “கொஞ்சநேரத்துக்கு முன் தான் உங்களைப் பற்றி பெருமைப்பட்டுக்கொண்டிருந்தேன் துமனி. யாழ்ப்பாணாயன் பட்டினமே உங்கள் வீரத்தையும் விவேகத்தையும் புகழ்வதை எண்ணிப் பூரித்துப்போயிருப்பவன் நான். நம் நோக்கம் நிறைவேறும் காலகட்டம் இது. அதை மட்டுமே சிந்தியுங்கள். கொழும்புத்துறையில் இறங்கி நடக்கும் வரை, ஆரியச்சக்கரவர்த்தி நம்மை ஏற்றுக்கொள்வான் என்றே நாம் நம்பவில்லையே? எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தநேரம் பார்த்து  வீண் எண்ணங்களால் மனதைத் தளரவிடாதீர்கள்” என்றான் அவன்.

 

“எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்றால் தான் சற்று சிந்திக்கவேண்டும் முதலி” என்று விரக்தியோடு புன்னகைத்தான் வீதியன். “எந்தத்தடங்கலும் இல்லாததாக நம் பாதை இருந்தால், எங்கோ முன்னால் படுகுழி காத்திருக்கின்றது என்று அர்த்தம்.” என்றான் அவன். விஜயக்கோனின் கண்கள் சுருங்கின. “ஆரியச்சக்கரவர்த்தியை ஐயப்படவேண்டும் என்கிறீர்களா?” என்று கேட்டான் அவன். இல்லை என்று வீதியன் கைகளை அசைத்தான். “ஜயவர்த்தனபுரக் கோட்டையிலிருந்து நான் அளவற்ற பெருஞ்செல்வத்துடன் தப்பித்துச்சென்றதாகவும், அவற்றைக் கைப்பற்றவே மாயாதுன்னையும் தர்மபாலனும் பறங்கியரின் உதவியை நாடியிருப்பதாகவும் அவனுக்கு ஒற்றுச்செய்திகள் வந்திருந்தன. ஆனால், அது பணமோ பொன்னோ இல்லை. ஏதோ முக்கியமான செல்வமாக இல்லாதவரை அதைக் கைப்பற்ற தென்னிலங்கை மன்னர் முயலப்போவதில்லை என்பதை அவன் ஊகித்துவிட்டான். என்னைச் சந்தித்தபோதே அது தென்னிலங்கையின் அரியணையை ஆளும் திருப்பற்சின்னம் என்று அறிந்துகொண்டு வியந்தான். இப்போது அவன் நோக்கமெல்லாம் உத்தரதேசத்திலிருந்து பறங்கியரைத் துரத்துவது தான். பற்சின்னமோ தென்னிலங்கையின் ஆட்சியோ அவனுக்கு இப்போது ஒரு பொருட்டல்ல. ஆரியச்சக்கரவர்த்தி மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது.  ” என்றான் வீதியன்.

 

“பிறகு யாரை அஞ்சுகிறீர்கள்? பறங்கிகளையா?” என்றான் விஜயக்கோன். சிலகணங்கள் அமைதியாக இருந்த வீதியன், “இல்லை. அப்படி யாரை - எதனை நான் அஞ்சுகிறேன் என்றே தெரியவில்லை. பலம்வாய்ந்த ஒன்று. நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஏதோ ஒன்று. ஆம். என் உள்மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.” என்றான் வீதியன். விஜயக்கோன் அவன் தோளில் ஆதரவாகக் கையை வைத்தான் “வீண் குழப்பங்களுக்கு ஆளாகாதீர்கள். உங்களுக்கு எப்போதும் துணையாக நான் இருக்கிறேன். இதோ உங்கள் நம்பிக்கைக்குரிய ஆரியச்சக்கரவர்த்தி இருக்கிறான். தலதா சமிந்து துணையிருக்கிறது. நாளை முதல் உத்தரதேசத்தின் பெரும்படையே துணைக்கு நிற்கப்போகிறது. வீரனுக்கு முன்னெச்சரிக்கை அவசியம் தான். ஆனால் அவநம்பிக்கை கூடாது, துமனி. மும்மணிகள் நம்மைக் கைவிடாது” என்றான் விஜயக்கோன். “ஆம். கைவிடாது என்று நம்புவோம். பார்க்கலாம்” என்றான் வீதியன்.

மாளிகையை அடைந்ததும் குதிரையிலிருந்து இறங்கிய அவர்கள், அதைக் காவல் வீரனொருவனிடம் ஒப்படைத்துவிட்டு நடந்தனர். மாளிகைத் தாழ்வாரத்தில் நுழையும்போது,  “ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் முதலி. காலை நான் கனவில் திருப்பற்சின்னத்தைக் கண்டேன்” என்றான் வீதியன். விஜயக்கோன் திரும்பிப் பார்த்தான். வீதியன் மெல்லச் சொன்னான் “அது கோட்டையின் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது. இரத்தத்தில் தோய்ந்து... சிங்கத்தின் பல் போல! சிவந்த பிறைச்சந்திரன் போல!”

 

ஓவியம் மூலம்: ஷண்முகவேல் (‘வெண்முரசு” நாவல் தொடரிலிருந்து: http://www.jeyamohan.in/89272#.WSRd0vl97IU)

 

Views: 714