தம்மபதம்

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBanner

கொக்கிளாய் முருகேசின் காணியில் புதிதாய் அரசமரத்தடியில் முளைத்த புத்தர் சிலையால் முருகேசு பதறிப்போய் இருந்தார். முருகேசின் காணி ஆஸ்பத்திரிக்கு பக்கதில் இருந்தது. ஆஸ்பத்திரிக்கு வாறபோற சனம் அரசமரத்தடியில் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து வழிபட தொடங்கியிருந்தனர். முருகேசும் பாவம் சனம் ஆஸ்பத்திரி கவலையை சொல்லி புலம்ப ஒரு இடம் வேணும்தானே என விட்டுவிட்டார். முருகேசின் மனைவி புஸ்பத்திற்க்கு இது பிடிக்கவில்லை முருகேசினை நச்சரித்துகொண்டே இருப்பாள்

'ஒரு நாளைக்கு பார் இந்த அரசடி பிள்ளையார் பெரிய கோவில் கும்பாபிசேகம் எண்டு எங்கட காணியபுடிங்கிட்டு தான் விடப்போறார்.

'அடியே.. சும்மா விசர் கதை கதைக்காத, பெரியவன் ரமேஸ் காட்டும் இல்லாம ஜேர்மனியில  காட்டுக்குள்ள சேளம் சுட்டுதிண்டுட்டு இருக்கான். இந்த குமர வாழவைக்கனும். கடவுளோட விளையாடத சரியோ'
'நான் சொன்னாத எப்ப கேட்டியள்.. எல்லாம் நல்ல அனுபவிப்பியள் பாருங்கோ'

இறுதிச் சமரில் இடம் பெயர்ந்து பின் மீள்குடியேற்;பட்டபின் முருகேசுவின் காணி முருகேசுவிற்க்கு கிடைக்கப்பெறவில்லை. முருகேசுவின் காணியில் 44ம் படையணி ஒரு காம் ஒன்றை அமைத்திருந்தது. ஒரு வருஷம் ரண்டு வருஷத்தில் காலிபண்ணிட்டு உங்கட கையிலயே தந்துடுவம் எண்டு காம்பெறுப்பாளர் ரணவக்க முருகேசுவுக்கு வாக்குகொடுத்திருப்பதால் முருகேசு அக்காவில் காணி ஒன்றில் கொட்டில போட்டுட்டு குந்தீட்டார். ஆனால் முருகேசு இந்த காணிய அவர்ட மகளுக்கு சீதனமாய் தாறதாக ஒப்புக் கொடுத்திருந்தார். மருமகன் முழங்காவில் பார்ட்டி. முழங்காவில இருந்து வரேக்க போகேக்க எப்ப காணிய எழுதபோறியள் எண்ட கதை தான். இது பொரிய தலையிடியாய் இருந்தது முருகேசுசிற்க்கு. இப்பே புத்தர் சிலைவேற.

0000

அளுத்கம புஞ்சிபண்டா ஊரில் பெயர்போன, கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்த தரவளி. புஞ்சி பண்டா அதிகம் படித்திருக்கவில்லை. ஒரு மேசன் கூலியாளாக ஆரம்பித்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இப்பொழுது கொண்ஸ்ரக்சன் கொம்பனி ஒன்றை சொந்தமாக நடத்துகிறார். புஞ்சிபண்டாக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவன் இளையவன் இலங்கை ராணுவத்தில், நடுவிலான் டொக்டர். மூத்தவன் ரணவக்க இளையவன் சுசந்த, நடுவிளான் அனுர. புஞ்சிபண்டா தர்மசானத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்தவர். மும்மணிகளின் ஆசீர்வாதமே தன் மூன்று பிள்ளைகள் என அடிக்கடி கூறிக்கௌ;வார். தன் நன்றியின் நிமிர்த்தம் நீண்டகாலமாய் அவர் குக்கிராமத்துக்கு சொந்தமாய் இல்லாத போதி ஒன்றினை முழுச்செலவில் கட்டுவித்து தீர்த்து வைத்தார். ஊருக்கே சேவை செய்ய பிள்ளைகளையும் அனுப்பிவைத்ததில் புஞ்சிபண்டாவிற்க்கு அதிகளவு பெருமிதம்.

இறுதி சமரில் 44ம் படையணியில் சாகசங்கள் புரிந்த மூத்தவன் ரணவக்க கப்டன் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுவிட்டான். ரணவக்கக்கு கப்டன் பதவி கிடைத்ததும் கொக்கிளாய் தளத்திற்க்கு நகர்த்தப்பட்டுவிட்டான். நீண்ட நாட்களின் மே 18 கொண்டாட்டங்களின் பின் ரணவக்க கொக்கிளாயில் இருந்து அளுத்கமவிற்க்கு விடுமுறையில் சென்றான்.

ரணவக்கைக்கு மீன் குழம்பு எண்டால் பிடிக்கும் அதுவும் குருளே மீன் குழம்பு எண்டால் கொள்ளைபிரியம். ரணவக்கையின் அம்மா குருளே குழம்பு வைப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். ரணவக்கை வந்ததால் மீன் குழம்புக்கு மீன்வாங்க அனுரவை கடைக்கு அனுப்பினாள்.

'மீன் இருக்காப்பா...'
'ஆஆ... டொக்டர். மீன் இருக்கு.. சுப்பிரி படு.. இப்போ தான் கொண்டு வந்தது. என்ன மீன் வேணும்....?'
'இதென்ன நண்டு.. என்ன வில்லை...?'

'துரை சாமன் இப்பே தான் இறக்கினது. உசிரோட இருக்குது. இந்தா பாருங்க. நிலாக்காலம் வேற இப்பே'
'ஓடுது... ஓடுது.. பிடி பிடி...'
'உங்களிட விலை சொல்ல எலுமா சாமி.. நீங்க ஊருக்கே சேவை செய்யுர ஆள்'
'நண்டு வேணாம் கிறிஸ்ரே'
'ஏன் துரை.. உயிரோட தானே இருக்கு'
'அதான் வேணாம் எண்டுறன்'
'ஏன் துரை'
'மடையா.. உனக்கு தெரியாதா நாங்கள் பௌத்தர்கள். கொலை செய்து சாப்பிடமாட்டோம்'
'அம்புட்டு தானே துரை. நான் கொன்னுதாறன்.. நீங்க ஆக்கி சாப்பிடுங்க'
'அதுவும் ஏலாது'
'ஏன் துரை'
'எனக்காக கொல்லப்படும் உயிரை நான் சாப்பிட ஏலாது'
'சரி டொக்டர்.. பின்னேரம் ஆஸ்பத்திரியால வீட்ட போகேக்க இதால வாங்க நண்டு தான செத்துருக்கும் எடுத்துட்டு போங்க.. நான் இதை வேறயாருக்கும். குடுக்காம வைச்சுருக்கன்'

0000

'என்ன ரணவக்க ஜோசனை பலமா இருக்கு'

முல்லைதீவு கட்டளைத்தளபதி கொடிதுவக்கு ரணவக்கைக்கு மிகவும் நெருக்கமானவர். ரணவக்க ஒருசமரில் இடது தோள்பட்டையில் விழுப்புண் ஏந்தி கொடிதுவக்கின் உயிர்காத்தவன். கொடிதுவக்கு தனது ராணுவ வாரிசு ரணவக்க தான் எண்டு அடிகடி சொல்லிகொள்வார்.

'ஸேர்.. எப்பவந்தனீங்கள். நான் கவனிக்கல'

'ம்ம்ம்.. என்ன மனிசியோட சண்டையா'

'இல்ல ஸேர். ஊரில இருந்து எங்கட பன்சல தொடங்கொட ஶ்ரீ சுமங்கல தேரோ கோல்பண்ணியிருந்தவர்'

'நல்ல விசயம். ஆமத்துறு என்ன சொன்னவர்..?'

'ஆமத்துறுக்கு எங்கட இடத்தில ஒரு பன்சல ஒண்டு போடனுமாம். அவர்ட பன்சல ஆமத்துறு நாலு பேர இங்க அனுப்பி வைக்கிறார் எண்டு சொன்னார்'

'இதுக்கு ஏன் நீ கனக்க யோசிக்கிற. தொடங்கொட ஶ்ரீ சுமங்கல தேரே லேசுப்பட்ட ஆள் இல்ல. எனக்குகோல் எடுக்காம உனக்கு எடுத்துருக்கார் எண்டத நினைக்க பொறமையா இருக்கு'

'ஸேர் இப்போ நான் இடத்துக்கு எங்க போவன்'

'இந்தா இந்த அரச மரத்துக்கு கீழ ஒரு சின்ன புத்தசிலையை வை. ரெண்டு கிழமை சனம்கொந்தளிக்கும். அடங்கினா பிறகு ஒரு பெரிய சிலையை வைச்சுட்டா வேலை முடிஞ்சு'

'இது முருகேசுட காணி. அவன் இங்க தான் பக்கதில இருக்கான். பிரச்சனை குடுப்பான்'

'ரணவக்க ஆமிக்காரன் மாதிரி கதை. இது நாங்க ரத்தம் சிந்தி வெண்ட இடம். இங்க எல்லாம் எங்கடதான். முருகேசுவ நீ என்ன செய்ஞ்சாலும் நான் இருக்கன் பயப்பிடதா. சுமங்கல தேரோவ கோபப்படமா பத்துகோ'

'நாங்க நிலை வைச்சா.. ஶ்ரீ சுமங்கல தேரோ வாறன் எண்டுதான் சொன்னவர் ஒருக்கா'

'பிறகென்ன ஆக வேண்டியத பார்'

0000

போதித்துவ மடைந்த ஒன்பதாவது மாதத்தில் பூச பௌர்ணமியொன்றில் இலங்கையில் அவர்  தர்மத்தை போதிப்பதற்காய் இலங்கை தீவை நோக்கி பயணத்தை ஆரம்பித்தார் புனிதர். தமது மார்க்கம் பிற்காலத்தில் புகழுடன் திகழ்ப்போகும் இடம் இலங்கை என்பது அவருக்கு அப்பொழுதே தெரிந்திருந்தது. அப்பொழுது இலங்கையில் யாஷர்கள் நிரம்பியிருந்தனர். அவர்களை முதலில் அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது. இலங்கையின் மத்தியில் மூன்று யோசனை நீளமும் ஒரு யோசனை அகலமும் உள்ள மனதுக்கு ரம்மியமூட்டும் மகாநாக வனத்தில்யஷர்கள் வழமையாக கூடும் இடம் உள்ளது. அப்பொழுது அத்தீவில் உள்ள அனைத்து யஷர்களும்அவ்வனத்தில் கூடியிருந்தார்கள். அப் போரவை கூட்டத்திற்கு புனிதர் சென்றார். அக்கூட்டத்தின் நடுவே நின்றார்.

அப்பொழுது அவர் வானவெளியில் இருந்து மழையும், புயலையும், இருளையும் உண்டாக்கி அவர்கள் மனத்தில் அச்சத்தை உண்டாக்கினார். பயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட யாஷர்கள் தங்கள் பயத்தினைபோக்கும் படி பயமற்று நின்ற புனிதனை வேண்டினர். மிரண்டு போன யஷர்களை பார்த்து புனிதர் ' யஷர்களே!! உங்களுடைய இந்த பயத்தையும் துயரத்தையும் போக்குகிறேன். இங்கே நான் உட்காருவதற்க்கு ஒரு இடம் கொடுங்கள்' எனக்கூறினார். யாஷர்கள் 'இறைவனே இத்தீவு முழுவதையும் வேண்டுமாயின் தருகிறோம். எங்கள் பயத்தில் இருந்து விடுதலை அளியுங்கள்' என்று கூறினார்கள். அவர் யஷர்கள் பயத்தையும், குளிரையும், இருட்டையும் போக்கிய பின்பு அவர்கள் கொடுத்த மான் தோலினைப்பரப்பி அதில் அமர்ந்து கொண்டார்.

அத்தோல் ஆசனத்தை சூழ்ந்தே எரிதனல் வளரும் படி செய்தார். அத்தனலினை கண்ட யாஷர்கள் அச்சமுற்று தள்ளி வட்டமாக நின்றனர். பின்னர் புனிதர் ரம்மியமான கிரித்வீபத்தினை வரவைத்தார். அதிலே யஷர்கள் யாவரும் போய் தங்கியதும் அதனை மீண்டும் பழைய இடத்துக்கே அனுப்பிவைத்தார்


0000

'அடேய் மசிராண்டி ரணவக்க வெளியில வாடா'

'மிஸ்டர் முருகேசு மரியாதயாய் பேசுங்க'

'எனக்கென்ன வெறி எண்டு நினைச்சியே.. மரியாதயும் மயிரும்'

'இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை முருகேசு'

'நீ யார்டா மயிராண்டி எண்ட காணிக்க புத்தர் நிலை வைக்க'

'புத்த நிலை வைச்சது நாங்க இல்லை. அரசங்கத்திட்ட கேளுங்க'

'அப்பே என்ன இந்தா உள்ளுக்க விடு தூக்கி வெளியில வீசுறன்'

'அப்புடி செய்ய ஏலா.. நீங்க முறையா போலீஸ் கேஸ் போட்டு கோர்ட் ஓடர் எடுத்து வாங்க'

'நீ யார்டா மயிர் எண்ட காணிக்குள்ள எனக்கு கதை சொல்ல.. கிலிசகொட்ட நாயே'

'மிஸ்டர் முருகேசு கொஞ்சம் மரியாதையா கதையுங்க'
முருகேசு போட்ட சத்ததில் கந்தையா, பெரியண்ணன், கமலாக்கா, சுப்பர், சுப்பih சின்னன் சுப்பரை வட்டுகாய், சுந்தரலிங்கம், முத்துசாம,p விசயமக்கா எண்டு ஒரு பதினைஞ்சு இருபது சனம் கூடிட்டு. சுப்பர் ஊரில பெரிய சண்டியன். சுப்பரை உண்மையான பேர் ஊரில யாருக்குமே தெரியாது. சுப்பர் எண்டது வெறும் பட்டபெயர் தான். அப்போது தான் கள்ளு தவறணையில இருந்து வந்தவர் அடிச்ச ஒத்தபனைக்கள்ளு சுப்பரை மண்டைக்குள்ள ஏற்கனவே கிறுகிறு எண்டுட்டு நிக்குது. முருகேசு விட்டா ஆமிகாரனுக்கு அடிச்சு போட்டு நம்மளவிட பொரிய சண்டியன் ஆகிடுவான் போல இருக்கு எண்டு சுப்பர் தொடங்கினார்.


'மிஸ்டர் ரணவக்க, நீ பெரிய கப்டனா இருக்கலாம். ஆன மயிரு இந்த ரீட் வேலை எல்லாம் இங்க வைக்காத சரியோ. சீலம்ப நீங்க யார்ட எங்கட காணிக்குள்ள உங்கட சாமி நிலை வைக்க. இது தமிழர்ட்ட பூமி'
'சுப்புண்ணே இஞ்சால வா... சண்டைய பெரிசாக்காத' கமலாக்கா இடைமறிச்சா..

'அதெப்படி தங்கச்சி.. நானும் முருகேசுவும் ஒண்டா ஓடிப்பிடிச்சு விளையாடின காணி இது. நாளைக்கு உனக்கு ஒரு பிரச்சனை எண்டாலும் நான் முன்னுக்கு தான் நிப்பன். இது நம்மட முருகேசுட பிரச்சனை மட்டுமில்லை. நம்மட மண்ணோட பிரச்சனை'

:சுப்பண்ணே இது சரிவாரது. வா உள்ளுக்க போவம்'

'மிஸ்டர் முருகேசு காம்புக்குள்ள போக யாருக்கும் அனுமதியில்லை'

' டேய் நீயாருடா என்ன மறிக்க...?' எண்டு ரனவக்கையின் சட்டையில் முருகேசு கை வைக்ககாம்புக்குள்ள இருந்த ஆமிகாரங்கள் எல்லாம் ஆர்ம்ஸ்ஸேட வெளியில வர சரி நாளைக்கு கோர்ட் ஓடரேட வந்து இந்த புத்தரதூக்கி வெளில நான் போடல எண்டு சபதம் போட்டுட்டு நைஸ்ஸா எல்லா சனத்தோடும் சேர்ந்து முருகேசும் சுப்பரும் மாறீட்டினம்.

0000

1993 இல் தென் அமெரிக்க புகைப்பட கலைஞர் கெல்வின் காட்டர் சூடானில் எடுக்கப்பட்ட The vulture and The little girl எனும் புகைப்படம் மிக பிரசித்தமானது. சூடான் அயேட் கிராமப்பகுதியில் உணவுவிற்காக ஜக்கியநாடுகள் சபை உணவூட்டல் திட்ட முகாமிற்கு ஊர்ந்து செல்லும் ஒரு சிறுமியின் அருகில் ஒரு கழுகு வந்தமர்ந்தது. அச்சிறுமியின் பெற்றோர்கள் நிவாரண விமானத்தில் இருந்து உணவினை சேகரிப்பற்காய் சிறிது நேரம் சிறுமியை தனித்து விட்டு சென்றிருந்தனர். கழுகு சிறுமியை எந்த விததொந்தரவும் செய்யவில்லை. இருபது நிமிடத்திற்க்கும் மேலதிகமாக கழுகு அமைதியாக சிறுமியின் இறுதி தருணத்திற்காய் பொறுத்திருந்தது. இது கெல்வினை போதையூட்டியது. கொல்வினின் முழுக்கவனமும் இக்காட்சியை சிதைவுறாது ஒளிபடமாக்குவதில் இருந்தது. கொல்வின் இதை 10 மீற்ற்ரிலும் குறைவான தூரதில் இருந்து ஒளிபடமாக்கினார்.

இப்புகைப்படம் The Newyork times பத்திரிகையில் மார்ச் 23 1993 முதல் முதலில் அட்டைப்படமாய் வெளியாகியது. கொவின் எடுத்த புகைப்படம் உலக பிரித்தமானது. 1994 இல் கெல்வினுக்கு இப்புகைபடம் Pulitzer விருதினையும் பெற்றுக் கொடுத்தது. ஆனால் இவ்விருது கிடைத்த சிறிது காலத்தில்கெல்வின் தனது காரில் பாலம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். The Newyork times இல் புகைப்படம் வெளியானதுடன் அதன் வாசகர்கள் பலரும் கொவினை தனிபட்டரீதியில் தொடர்பு கொண்டு கேட்டிருந்தனர் அந்த சிறுமி இப்பொழுது எங்கே...? அவளுக்கு என்ன ஆயிற்று...? கொவின் புகைப்படம் எடுத்ததும் அந்த கழுகினை விரட்டியடித்து விட்டு சென்றுவிட்டார். அச்சிறுமிபற்றி சிறிதும் சிந்தை கொள்ளவில்லை. பின்னாட்களில் அந்த குற்றவுணர்வு வாட்ட கெல்வின் காட்டர் பாலத்திலிருந்து குதித்துக் கொண்டார்.

0000'அப்பா, என்னப்பா கோடிக்க நாய் எல்லாம் நிண்டு இண்டைக்கு தீர்த்தம் போடுது'
'சும்மா படடி புஸ்பம் புலம்பாம.. ஏதும் பாம்பு பூச்சியா இருக்கும்'
'இல்லப்பா.. டேர்ச்சுலைட்டு வெளிச்சமும் ரெண்டு மூண்டு தெரியுது'
'எடி இவன் சுப்பர்ட்ட வண்டுகள் எதும் முயல் வேட்டைக்கு போகுதுகள் போல அதான் நாய் குலைக்குது. நீ போசமா படு'
'இல்லை இது எதோ வித்தியாசம கிடக்கு. ஐய்யோ அப்பா பின் கதவை தட்டுறாங்கள்'
'இஞ்ச விடு இவங்களுக்கு இதே வேலையா போட்டு இண்டைக்கு சுப்பர்ட்டைக்கு பல்லுடைச்சுவிடுறன்'
ஐய்யே போகாதீங்கே.. இது வேறயாரே போல இருக்கு'
'எவண்டா மயிராண்டி கதவை தட்டின'

டொடெட்..டொப்..டொடெட்ட்ட்...

'எண்ட ஐய்யோ'

0000

ஏதேன சச்சேன சுவத்தி ஹோது

இந்த சத்தியத்தின் பலத்தினால் அனைவருக்கும் நன்மை கிடைப்பதாக !

Views: 1055