இரவலை
எழுத்தாளர் : லாவண்யா குமார் | மின்னஞ்சல் முகவரி: v.lawanyakumar@outlook.com |
6/3/2017 8:34:08 AM
நேற்றோடு நிறைவுதான்
என் மனமும் நானும்..!
விட்டு விட முடியாத
உன் கரங்களின் அணைப்பில்
என் இரவுகள்..
குளிரையும்.. குறைகளையும் விழுங்கி ஏப்பமிட்ட பொழுதுகள்..
உன்னோடான நிமிடங்கள்
உறக்கம் கலைந்திருக்க
உனக்குள் புதைந்திருந்தேன்..
விடிகாலை வரையிலும்..
யாரோ சொன்னதையெல்லாம்
உன்னோடு கதைபேசி
இல்லை... நீ பேச கேட்டேன்...!
அழகான முகமும்
வார்த்தைகளும்.
உன்னகமும்...
இதோடு ஏழாவது இரவாயிற்று...
நாளை பிரிந்து விடத்தான் வேண்டுமா ..
உன்னை நெருங்கிவிட்டேன் ஆனால் அடைந்துவிடவில்லை..
யாசித்து
வாசித்து
என்னோடான என்னை நேசிக்கவும்
வைத்த நீ
இதோ.. ..
என் இல்லாமை எனும் இயலாமை காட்டி..
வெறுக்கவுமா??
வந்துவிட்டாள் உன் சொந்தக்காரி !
மடிப்புகள் குலைக்காது..
உன்னை மீண்டும் அவள் கைகளில் கொடுக்கிறேன்...
விரும்பியா செல்கிறாய்...??
காற்றில் படபடக்கும் உன் காகித ஒலிகள் காதை அடைக்கின்றன...
நம் காதலுக்கு
எல்லையே கிடையாதே..!!
இனிய உறவே.. ..
இரவல் புத்தகமே... ..
சொந்தமாவாயா?? ….!