பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகவியல் நோக்கு

எழுத்தாளர் : சர்மிலா சண்முகநாதன் மின்னஞ்சல் முகவரி: shanmuganathansharmi@gmail.comBanner

உலகில் சமூக அமைப்பின் இயக்கம் என்பது குடும்பத்தைப் பிரதான அலகாகக்; கொண்ட ஒரு நீண்ட வரலாறாக இருந்து வருகின்றது. இலங்கையின் சமூகக் கட்டமைப்பில் குடும்பம் எனும் சமூக நிறுவனமானது ஆண் தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே நிலை பெற்றுள்ளன. எனினும் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் பெண்; தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இலங்கையில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற யுத்த நிலைமைகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் அதிகரிப்புக்கு காரணமாகியதுடன் இது பல்வேறு வகையான சமூக பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்திவிட்டமை குறிப்பிடத்தக்கது.

“குடும்பத் தலைமைத்துவம் என்பது குடும்பத்தின் பிரதான வருவாயைத் தேடித்தருதலும் குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைகள், வெளித் தொடர்புகளை நிர்வகித்தல் ஆகும். குடும்பங்களில் ஏதாவது காரணங்களால் கணவன் இழக்கப்படும் போது பெண்கள் குடும்பத் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டி ஏற்படுகிறது. அதாவது சமூக, அரசியல், குடும்ப சூழ்நிலைகள் எதுவெனினும் பெண்களே முன்கொண்டு செல்ல வேண்டி ஏற்படுகிறது” இவ்வகையில் அமையும் குடும்பங்களைப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்கிறோம்.

“இன்று இலங்கையில் கிட்டத்தட்ட 20% ஆன குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாகும். இது 5:1 எனும் வகையில் அமைந்துள்ளது. 40-50 வயதிற்குற்பட்ட பெண்களே பெரும்பான்மையான பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வழிநடாத்துகின்றனர். இத்தகைய குடும்பங்களில் 50% ஆன குடும்பங்கள் விதவைப் பெண்களால் வழிநடாத்தப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

ஆண் தலைமைத்துவக் குடும்பங்களே பொதுவானவையாகவும் இலட்சியத்தன்மை வாய்ந்தவையாகவும் இச்சமூகத்திலே கருதப்படுகின்றது. இவ்வாறான ஒரு பண்பாட்டுச் சூழலின் வேதனையான பின்னணியில் தோற்றம் பெற்றுள்ளவையாகவே பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவ்வமைப்பு மாற்றம் குடும்பத்தில் ஏற்பட்டதன் காரணமாக வாழ்வியலோடு இணைந்த பல்வேறு விடயங்களும் தாக்கத்துக்குள்ளாகத் தொடங்கின.

இத்தகைய ஓர் சூழலில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்பாகவும், அவற்றினது சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பாகவும் போதிய கவனம் செலுத்துதல் அவசியமாகின்றது. ஏனெனில் சமூக அடுக்கமைவுகளினால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமுதாய வாழ்க்கைக்குள் சவால்கள், சிக்கல்கள் என்பது தவிர்க்க முடியாத பகுதியாகின்றன. இந்த நிலைமை பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ளச் செய்கின்றது என்பதை இக்கட்டுரை ஆராய்கின்றது.

குடும்பம் பற்றிய ஓர் அறிமுகம்

சமூக மற்றும் பொருளாதார அளவில்; மிகவும் அடிப்படையான அலகு குடும்பம். குறிப்பாகக் குடும்பம் என்பது திருமணத்தின் மூலம் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே நிலையான, நெருக்கமான இணைப்பினால் அவிழ்க்க முடியாதபடி பிணைக்கப்பட்டவொன்றாக இருக்கின்றது. அது அவர்களுடைய உறவுகளை ஒரு குறிப்பிட்ட திட்ட வட்டமான வழியில் ஒழுங்கு படுத்துகின்றது. அந்தப் பிணைப்பு இருவருக்குமிடையே ஒருவித ஈடுபாட்டையும், கவர்ச்சியையும், பொது நல உணர்ச்சியையும், கணவன், மனைவி என்ற ஆத்மீக இரத்த உறவையுமே முதன்மையாகக் கொள்கின்றது.

மற்றும் குடும்பம் அதன் உறுப்பினர்களுக்குப் பொதுவான உறைவிடத்தை அளிக்கின்ற ஓர்; உயிரின மூல அலகுக் குழுவாகும். இது கணவன் மனைவியரிடையே நிறுவப்பட்ட பாலின உறவும் புணர்ச்சியும் ஏற்பட வழிவகுக்கிறது. இது தவிர உறவுமுறைப் பெயர்களை ஏற்படுத்திக் கொள்ளவும் தலைமுறையைத் தீர்மானிக்கவும் குறிப்பிட்ட நெருங்கிய உறவினர்களிடையே மண உறவு நிகழாமல் தடுக்கவும் இது வழிவகை செய்கிறது. உறுப்பினர்களிடையே காணப்படுகின்ற ஒரு நெருக்கமும் பாசமும் தான் அதனுடைய இயல்பான ஒற்றுமைக்கும் கூட்டுச் செயலுக்கும் அடித்தளமாக அமைகின்றன. இதிலிருந்து அது சமூகத்தில் மிகச் சிறிய வரையறுக்கப்பட்ட குழுவாயிருப்பினும்; கூட குடும்பம் அதன் நிறுவன மதிப்பிலும், சமூக வாழ்க்கையில் அது செலுத்தும் ஆதிக்கத்திலும், தனக்கு நிகராக, எந்தக் குழுவையும் நிறுவனத்தையும் பெறாது தலைதூக்கி நிற்கின்றது என்பது புலனாகும்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

பொதுவாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வரையறுக்கும் போது இயற்கை அனர்த்தங்களினால் கணவன் மரணம் அடைந்தமைஇ  விபத்தின் போது கணவன் இறந்தமை யுத்தத்தினால் கணவனை இழத்தல்இ விவாகரத்து அல்லது கணவனால் கைவிடப்படல்இ குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினர் குடும்பத்தை விட்டு விலகுதல்இ குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினர் அங்கவீனராக இருத்தல், கணவன் காணாமல் ஆக்கப்பட்டமைஇ கணவன் தற்கொலை செய்து கொண்டமை மற்றும் வேறு காரணங்களினால் பெண்கள் குடும்ப தலைமைத்துவத்தை ஏற்றல் எனச் சொல்ல முடியும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்தின் படி வயது வந்த ஆண்கள் இல்லாத, விவாகரத்துச் செய்யப்பட்ட, பிரிந்து வாழ்கின்ற, திருமணமாகாத, குடிபெயர்ந்து வாழ்கின்ற, குடும்ப வருமானத்திற்கான பங்களிப்பை வழங்க முடியாத ஆணைக் கொண்ட மற்றும் குடும்ப உடைவினால் தனித்து வாழ்கின்ற நிலைமைகளினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தோற்றம் பெறுகின்றது.

ஆகவே, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்பது குடும்பத் தலைமைத்துவம், பொருளாதாரம், திட்டமிடல், தீர்மானம் மேற்கொள்ளல் போன்ற அனைத்துமே பெண்களால் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு மேற்கொள்ளப்படுவதாக அமைகின்றது. ஆயினும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மீதான சில பிற்போக்கு சிந்தனைகள் இன்னும் சமூகங்களில் தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்கிறது.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர் கொள்கின்ற சமூக பொருளாதார பிரச்சினைகள் ஒரு சமூகவியல் நோக்கு

இலங்கையில் பெண் தலைiமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கை அண்மைக்காலம் முதலாக திடீரென ஓர் அதிகரிப்பைக் காட்டுகின்றது. இலங்கைச் சமூகத்தைப் பொதுவாக நோக்குகின்ற போது பெண் என்பவள் பிறந்தது முதல் பெற்றோராலும் திருமண வாழ்வில் கணவனாலும் கணவன் இறந்த பின்னர் பிள்ளைகளாலும் கட்டுபடுத்தப்பட்டவளாகக்; காணப்படுகின்றாள். சட்ட ரீதியாக 18 வயதுக்குப் பின்னர் பெண்; தனித்துச் சுதந்திரமாகச் செயற்படக் கூடியவளாக இருக்கின்ற போதிலும் பண்பாடு மற்றும் ஒழுக்கமுறை காரணமாக பெண்கள் நடைமுறை வாழ்வில் தனித்து எக்காரியத்தையும் செய்யத் துணிவதில்லை. திருமணமாகிய இளவயதில் கணவனை இழந்ததன் பின்னர் பெண்  தனித்து வாழுதல் என்பது இயலாததாகும். அவளது வாழ்க்கைக்கான பொருளாரத்தை மீண்டும் பெற்றோரோ அவனது சகோதரர்களோ தான் வழங்க வேண்டி உள்ளது. ஆனால் இப்போது பெண்கள் தனித்துத் தமது குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். 

இலங்கைச் சனத்தொகையில் 48.1% ஆண்களும் 51.9% மான பெண்களும் காணப்படுகின்றனர். இங்கு மொத்த சனத்தொகையுடன் நோக்கும் போது பெண் தலைமைத்துவக்; குடும்பங்கள் ஆண் தலைமைத்துவக் குடும்பங்களுடன் ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்பட்ட போதும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் போருக்குப் பின்னர் திடீர் அதிகரிப்பைக் காட்டுகின்றது.

மூன்று தசாப்த காலத்துக்கு மேற்பட்ட போரின் விளைவாக அதிகமான பெண்கள் விதவையாக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக 40,000 விதவைகள் வடக்கிலும் 49,000 விதவைகள் கிழக்கிலும் உள்ளனர். மேலும் 8,000 விதவைகள் 3 பிள்ளைகளோடு உள்ள அதேவேளை  12,000  விதவைகள் இளவயதில் உள்ளனர் என்று கே. சயந்தன் தன்னுடைய ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

வயதடிப்படையில் பெண் தலைமைக் குடும்பங்களை நோக்கும் போது அதிகமானோர் 40-59 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தங்கி வாழ்வோராக இருக்கின்ற காரணத்தால் வாழ்வாதாரம் கீழ் நோக்கிச் செல்கின்ற தன்மையைக் காணலாம். இலங்கையில் சமூக மாற்றங்கள் பல நிகழ்ந்த போதும் சாதாரண பெண்களை விடப் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பெண்களைச் சமூகம் சற்று வேறுபடுத்தியே நோக்குகின்றது. இலங்கையில் காணப்படும் மத மற்றும் கலாசாரக் கட்டுப்பாடுகள் இப் பெண்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாகவே உள்ளன. தமது வறுமையைப் போக்கத் தொழில் செய்யும் நிலையில் சமூகத்தின் பல்வேறுபட்ட சவால்களை எதிர் கொள்ளும் இப்பெண்கள் சொல்லெனாத் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள்.

பொதுவாகவே பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமூகத்தில் தனக்கான அந்தஸ்த்தைத் தக்க வைத்துக்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்கின்றன. வடக்குக் கிழக்குப் பிரதேசங்களை எடுத்துக் கொள்வோமேயானால் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, போர், இடப்பெயர்வு மற்றும் மீள்குடியேற்றம் என்பன குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தொடர்ச்சியாக இடம் பெற்ற பிரதேசமாகவும் காணப்பட்டது. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல தடைவைகள் தொடர்ச்சியாக மக்கள் இடம்பெயர்ந்தமையால் அவர்கள் தமது பெறுமதியான மனித வளங்களை இழந்தது மாத்திரமன்றி பொருளாதார, சமூக மூலதனங்களை முதலானவற்றையும் இழந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இவை விரக்தி, சோர்வு, தனிமை முதலான உளவியல் தாக்கங்களிற்கு இட்டுச் சென்றுள்ளது. 

அதிக எண்ணிக்கையான இளவயதுப் பெண்கள் தமது கணவனை இழந்து கடந்த காலங்களில் விதவையாக்கப்பட்டவர்களாக உள்ளனர். அது மட்டுமன்றி மூப்படைந்த பெண்களில் அதிகமானோர் தமது கணவர் இயற்கையாக மரணமானதால் விதவையாக்கப்பட்டவர்களாவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இங்கு சற்று ஆழமாக நோக்குவோமேயானால் தங்களுடைய இளவயதில் கணவனை இழந்த, காணாமல் ஆக்கப்பட்ட, மாற்றுத் திறனாளியாக்கப்பட்ட மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதிகமாகவும் உள்ளனர். இந்த நிலையானது திடீரென குறுகிய காலப் பகுதிக்குள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தமை சமூக பொருளாதார கலாசார மற்றும் உளவியல் ரீதியாக அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சார்ந்தோர் வாழும் சமூகத்துக்கும் பல்வேறுபட்ட எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஒரு பெண் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கையென எல்லா உறவுகளோடும் இணைந்திருந்து தனது குடும்பத்துடன் சந்தோசமாகக் காலத்தைக் கழித்து விட்டுத் திடீரென ஒரு ஆணைத் திருமணம் செய்யும் போது பல்வேறுபட்ட இடைஞ்சல்கள் ஏற்படும். இருந்தாலும் அந்த இடைஞ்சல்களுக்கெல்லாம் முகம் கொடுத்து ஒரு ஆணைக் கரம் பிடித்துத் தனியாக வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது, தன்னுடைய கணவன் இறந்து விட்டார், காணாமல் போய்விட்டார் அல்லது கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி அவளுடைய காதுகளை வந்தடையும் போது அவளுடைய மனம் சுடும் வெய்யிலில் துடிக்கும் புழுவைப் போல் ஆகிவிடுகிறது. 

கணவனோடு இருக்கும் வரைக்கும் ஒரு தனித்தன்மையான கட்டுக்கோப்பான சமூகமாக இருந்த குடும்பங்கள் இன்று தனிக் குடும்பங்களாகவோ பெண் தலைமைத்துவக் குடும்பங்களாகவோ குறிப்பாக விதவையாகத் திடீரென உருவாக்கப்படும் போது சமூகத்தாலும் அதனைச் சரிவர ஏற்றுக்கொள்ள முடியாத தன்மை காணப்படுகின்றது. மேலும் அதுவரை காலமும் தன்னுடைய கணவனால் செய்யப்பட்ட ஒவ்வொரு வேலையையும் தானே தனித்துச் செய்ய முற்படும் போது வருங்காலத்தில் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்;கொடுக்கின்றாள். அவள் விதவை என்ற சூழலுக்குள் காலடி எடுத்து வைக்கும் போது நான் அதை அப்படிச் செய்தால் ஏதும் நினைப்பார்களோ அல்லது இப்படிச் செய்தால் இவர்கள் இதை வேறு விதமாக நினைப்பார்களோ என்று ஒவ்வொன்றையும் பயந்து பயந்து செய்யவேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றாள். 

அத்துடன் சமூக செயற்பாடுகளில் இப் பெண்கள் ஈடுபடும் போது சமூகத்தில் அவப்பெயர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகின்றது. பெண்தலைமைத்துவக் குடும்பத்தில் உள்ள பெண்ணையும்; அவளுடைய பிள்ளைகளையும் சமூகம் சற்று வேறுபடுத்தியே பார்க்கிறது. இதனால் திருமணம் என்று வரும்போது  பெண் தலைமைத்துவக் குடும்பத்தில் பெண் எடுப்பதற்கு எல்லோரும் பெரிதும் விரும்புவதில்லை. அதுமட்டுமல்லாது  பொருளாதார ரீதியிலே ஆண் தலைமைத்துவக் குடும்பத்துடன் இத்தகைய குடும்பத்தை ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கிய நிலையே காணப்படுகின்றது. ஏனெனில் ஆண்களைப் போன்று பெண்கள் வெளிச் செயற்பாடுகளிலோ, கடினமான வேலைகளிலோ ஈடுபடுவதென்பதனைச் சமூக விழுமியங்கள் சில ஏற்றுக் கொள்வதில்லை.

இங்கு முக்கியமான விடயம் ஒன்றை அவதானிக்க முடிகின்றது என்னவெனில், இயற்கைக் காரணங்களால் கணவன் இறந்து விதவையாக்கப்பட்ட பெண்ணுடைய செயற்பாடுகள் மற்றும் போக்குகள் வித்தியாசமானவையாகவும் போரால் கணவனை இழந்து விதவையாக்கப்பட்ட அல்லது மாற்றுத் திறனாளியாக்கப்பட்ட அல்லது போர் நடைபெற்ற காலத்துக்குள் விவாகம் செய்து பின்னர் கணவனால் கைவிடப்பட்ட பெண்களினுடைய மனநிலை அவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் சற்று வித்தியாசமானவையாக் காணப்படுவதேயாகும். உதாரணமாகத் தன்னுடைய முதுவயதில் நோயின் காரணமாக கணவன் இறந்தால், அந்தப் பெண் விதவையாக்கப்படுவது என்பது  இயல்பு. அங்கு அவளைப் பார்ப்பதற்கு அவளுடைய பிள்ளைகள் இருப்பார்கள், கதைப்பதற்குப் பேரக் குழந்தைகள் இருப்பார்கள், மற்றும் கோயிலுக்கு என்றெல்லாம் சென்று தன்னுடைய நேரத்தை அமைதியாகக் கழிப்பாள். இவ்வாறாக முதுமையான விதவைப் பெண்களுக்குப் பாதுகாப்பும் பொதுவானதே. ஆனால் போரின் காரணமாக உருவான விதவைகளுக்கும்  குடும்பங்களில் தலைமைத்துவத்தைக் கொண்ட பெண்களுக்கும் பாதுகாப்பு, வேலை வாய்ப்புக்கள், சுதந்திரம் முதலானவை கிடைக்காமலே போகின்றது. 

திருமணம் செய்த அடுத்த நாளோ அடுத்த கிழமையோ மாதமோ இல்லை வருடமோ ஒரு பெண் தன்னுடைய கணவனை இழக்கின்றாள் என்றால் அவளுடைய வலிகள் கஷ்டங்கள் வேறுபட்ட தன்மையாகவே இருக்கும். 2006-2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இளம் வயதில் இருந்த பிள்ளைகள் தங்களுடைய திருமண வயதை பூர்த்தி செய்து கொள்வதற்கு முன்னதாகச் சில பல காரணங்களால் கட்டாயத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டது என்பதைக் கூட அறிந்து கொள்ளாத வயதில் திருமணமான பெண்கள் வடக்கைப் பொறுத்தவரைக்கும் ஒப்பீட்டளவில் அதிகமாகவே இருந்துள்ளனர். குறித்த அந்தப் பெண் சந்தோசமான சூழலில் இருந்துவிட்டு பாதுகாப்புக் கருதி ஒரு ஆணுடன் திருமணத்தை சம்பிரதாயத்துக்காகச் செய்து வைத்துள்ளனர். அங்கு அந்தத் திருமணம்; பதிவுத் செய்யப்பட்டதா இல்லையா அல்லது இன்றாவது அந்தத் திருமணம் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரிய விடயமேயாகும்.

அந்த நேரத்தில் பதிவுத் திருமணத்தை விட பிள்ளையின் பாதுகாப்புக்காகத் திருமணம் செய்ததே அதிகம். இவ்வாறு திருமணம் செய்து கொண்ட பல ஆண்கள் கட்டாயத்தின் பேரில் விரும்பியோ விரும்பாமலோ போரில் இறந்தனர். இன்னும் சிலர் சில பல காரணங்களினால் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டதுடன் பலர் இன்று வரைக்கும் காணாமலும் ஆக்கப்பட்டனர். இத்தகையோரின்; மனைவி பிள்ளைகள், உறவினர்கள் தமது கணவன், தந்தை, மகன், சகோதரன் உயிருடன் இருக்கின்றார்களோ இல்லையோ என்று கூடத் தெரிந்து கொள்ளாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். யுத்த காலத்தில் பாதுகாப்புக்காகத் திருமணம் செய்துகொண்ட பெண்களின் வாழ்க்கை கணவனின் இறப்பையும் தாண்டி, திருமணத்துக்கான பதிவு சான்றிதல் இல்லாமையாலும், முகாம்களில் ஏற்பட்ட புதிய உறவுகளின் தொடர்ச்சியாலும், சுய விருப்பம் இன்றிச் செய்யப்பட்ட திருமணத்தாலும் மற்றும் அந்தப் பெண் சீதனம் தரவில்லை அல்லது வறுமையானவள் என்பதாலும் அவளுக்கு விதவைப்பட்டம் கொடுத்துவிட்டு அவளையும் பிள்ளைகளையும் தனித்துவிட்டுவிட்டு ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் நிலையும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வழமைக்கு மாறாக சற்று அதிகமாகவே இருக்கத்தான் செய்கின்றன. 

இவ்வாறான குடும்ப அமைப்புக்கள் சமூகக் கட்டமைப்பு மற்றும் கட்டுக்கோப்பான சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கலாசாரத்தின் மீது எதிர் மறையான தாக்கத்தைச் செலுத்துகின்றது. இவ்வாறு போரின் காரணமாக உருவான பெண் தலைமைத்துவக் குடும்பங்களால் அந்தத் தலைமைத்துவம் வகிக்கும் பெண்ணுக்கு மட்டும் அல்லாமல் அவளைச் சார்ந்த சமூக சூழலுக்கும் தாக்கத்தை ஏற்படுகின்றது.

பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சமூக ரீதியான சவால்களில் பண்பாடோடு இணைந்த விடயங்கள் மிகவும் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. பொதுவாகப் பண்பாடு என்பது பெண்களை அடக்கும் கருவியாகவே கொள்ளப்படுகிறது. இது பெண்களின் வாழ்வில் அனைத்துப் பக்கங்களிலும் விரிந்த பார்வையை செலுத்துகிறது. இதனால் பெண்கள் மீதான பண்பாட்டின் தாக்கம் உயர்வாக உள்ளது. அதிலும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களில்; தமது அன்றாட நடவடிக்கைகள், அடிப்படைத் தேவைகள், பிற செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் என்பவற்றில் பண்பாட்டைப் பேண வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் சிலவேளைகளில் தமது செயற்பாடுகளை இடைநிறுத்தக்கூடிய நிலைகளும் ஏற்படுவதாக குறிப்பிடுகின்றனர். 

பண்பாடு என்பது இன்றைய பெண் தலைமைக் குடும்பங்களின் மீது பாரிய செல்வாக்கினைச் செலுத்துகின்றது. தொழில், உறவுகள், உணர்வுகள் என அனைத்திரும் பண்பாட்டின் வழியே தங்களை செயற்படுத்த வேண்டியவர்களாக பெண்தலைமைக் குடும்பத்தில் உள்ள பெண்கள் காணப்படுகின்றனர். பண்பாட்டு அடையாளங்களாக பெண்களைப் பேண முயலும் சமூக கட்டுப்பாடுகளினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தமது செயற்பாடுகளை, தேவைகளை சரிவர நிறைவேற்றிக் கொள்ளமுடிவதில்லை. இது சமூக நடத்தையின் அனைத்து வடிவங்களிலும் தாக்கம் செலுத்தும் ஒன்றாக காணப்படுகிறது.

சமூகக் கட்டுப்பாடுகளைச் சரிவர மேற்கொள்வதில் சமயமும் முக்கியம் பெறுகிறது. சமூகத்தின் ஒவ்வொரு விளிம்பிலும் சமயத்தின் தலையீடு தவிர்க்க முடியாததாக அமைகிறது. குழந்தை வளர்ப்பு, குடும்பம் சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதும், கணவனின் சொத்துக்களைப் பாதுகாப்பதும் பெண்களின் பொறுப்புகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் வாழ்ந்து பழகிய பெண்கள் திடீரெனக் கணவன் இல்லாத புதிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும்; போது பெண்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. ஏற்கனவே கணவன் வெளி வேலைகள் மற்றும் குடும்பத்திற்கான பொருளாதார வேலைகளை மேற்கொள்ள அது தவிர்ந்த வீட்டு வேலைகளில் மாத்திரமே பெண்கள் அனுபவமுள்ளவர்களாக இருந்தனர். ஆனால் கணவனின் மரணத்திற்குப் பின்னர் கணவனால் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்துக் கடமைகளையும் தனது அன்றாட கடமைகள், செயற்பாடுகளையும் சேர்த்துத் தானே தனித்து நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாகியுள்ளனர். ஆயினும் இத்தகைய கடமைகளை நிறைவேற்றும் போது சமயத்தின் கட்டுப்பாடுகளும் இன்னொரு வகையில் தாக்கம் செலுத்துகிறது.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் துரித அதிகரிப்பானது குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களுக்கிடையில் மாத்திரமல்லாமல் அயலவர்கள் மற்றும் கலாசாரத்துக்கிடையிலும் பாரிய இடை வெளியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைவெளிதான் இன்று பல்வேறுபட்ட சமூக பொருளாதார உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்கமுடியாததாகும். 
 
இன்னும் சொல்லப்போனால் வடக்கு கிழக்குப் பகுதிகளில் போருக்குப் பின்னர் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகமாக உள்ளது என்பதைத் தெரிந்து கொண்ட நாம் அதிலும் குறிப்பாக எந்த வகையான பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகமாக உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது போரால் கணவனை இழந்து விதவையாக்கப்பட்ட பெண்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ள அதே வேளை இன்றைய நாட்களில் போர், இடப்பெயர்வு, அகதி முகாம் வாழ்க்கை, மீள் குடியேற்றம் என்பவற்றுக்குப் பின்னர் குடும்பங்களுக்கிடையில் விரிசலும் பிளவுகளும் இன்றுவரை ஏற்பட்ட வண்ணமே உள்ளன.

போர் முடிவுக்கு வந்து இன்று கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளைக் கடந்தாலும் கூட  பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பாரிய சவால்களை எதிர் கொள்கின்றன. போரின் வடுக்கள், அதிகரித்துவருகின்ற சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கும் மற்றும் சமூகச் சிக்கல்களுக்கும் பெண் தலைமைக் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கும் நேர்கணியத் தொடர்பு உள்ளது என்பதை அவதானிக்க முடிகின்றது.

உசாத்துணை

Sajanthan. K., 2014, “Vulnerability of war widows in the post-war development scenario: A case study of war torn Kandawale DS Division of Kilinochchi District in Sri Lanka”, International research session Vol.18, Proceeding of the Peradeniya University.

 

The ILO Thesaurus., 2005, Retrieved September 16, 2010, from International Labor organization (ILO) Web Site: http://www.ilo.org/public/libdoc/ILO-Thesaurus/english/tr3578.htm


வாசுகி, 1998, “மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண் தலைமைக் குடும்பங்கள்”, பெண், தொகுதி-03 , மட்டக்களப்பு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்.

பாலகிருஷ்னண்.என்., 2010 , “இலங்கைப் பொருளாதாரத்தின் அபிவிருத்திப் பிரச்சினைகள் - ஓர் சமகால மீளாய்வு”, சென்னை: குமரன் புத்தக இல்லம்.

Views: 2883