சமூகவியல் நோக்கில் பால்நிலைப் பாகுபாடுகள்

எழுத்தாளர் : லக்ஷி குணரத்தினம்மின்னஞ்சல் முகவரி: luxshekuna@gmail.comBanner

ஏய் பொம்பிளப்பிள்ளையா? அடக்க ஒடுக்கமா இருக்கப் பார். என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு. அங்கால பக்கத்து வீட்டுக்காரர் என்ன நினைப்பினம், வெட்கமில்லாம சிரிச்சுக் கொண்டு இருக்கிறாய். 

அவனும் தானே சேர்ந்து சிரிச்சவன். அவன விட்டிட்டு எப்ப பார்த்தாலும் என்னைத் தான் திட்டுங்கோ. 

அவன் ஆம்பிளப் பிள்ள. என்ன செய்தாலும் ஒருத்தரும் ஒன்டும் கேட்காயினம். அவன் ராசா மாதிரி என்னென்டாலும் செய்திட்டுப் போறான். நீ ஏன் அவனைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய்.
 
நாளை பின்ன நீ விற்கவேண்டிய பிள்ளை. இன்னொரு வீட்டுக்குப் போய் வாழோனும். ஆராச்சும் உன்னைப் பற்றி ஏதும் தப்பா சொல்லிப்போட்டா. காலத்துக்கும் வீட்டோட தான் கிடக்கோனும். பார்த்து சூதானமா நடந்து கொள். 

தம்பி சிரிச்சுக் கொண்டே தன் சட்டைக் கொலரைத் தூக்கி விடுகிறான். 

எப்ப பார்த்தாலும் இந்த அம்மா என்னத் தான் ஏதும் சொல்றா. அவன் தம்பிய ஒன்றும் சொல்றேல்ல. அவன் சொன்ன ஜோக்குக்கு நான் சிரிச்சன். அது என்ன அவ்வளவு பெரிய போர்க்குற்றமா? 

அங்க என்ன முனகல் 

அது ஒன்டுமில்ல. நாளைக்கு என்ன உடுப்புப் போடுறதென்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன். 

இவ்வளவே! பெண்ணின் வாய்த்தர்க்கமும், அவள் கொண்ட பிடிவாத குணமும். அடுப்படிக்கும், அலங்கார அறைக்கும் மட்டுமே தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்துபவர்களாகப் பெண்கள் இற்றை வரை தங்களின் பெண்மைத் தன்மையைக் காத்து வருகின்றனர். 

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி  வரை தானே ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே இது கண்ணதாசனின் வரிகள். தனியனாக அவள் பிறந்த வீட்டில் இருக்கும் வரை பின்பற்றும்; குணங்களும், நடவடிக்கைகளும் திருமணத்திற்குப் பின் முற்றாக மாற்றமடைகின்றன. அவள் விரும்பியோ விரும்பாமலோ தன் குணாதிசயங்களை மாற்றத்தான் வேண்டும். ஆனால் ஆண்கள் திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என்ற அடிப்படையில் தங்களின் பழக்கப்பட்ட வாழ்வியல் நடத்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என யாரும் அவர்களை வற்புறுத்துவதில்லை. 

பொம்பிளை சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சா போச்சு,  ஒரு பொம்பிள மாதிரியா பேசுறா அவ: போன்ற வாசகங்களும், அவனுக்கென்ன  ஆம்பிள: சேறு கண்ட இடத்தில மிதிச்சு தண்ணி கண்ட இடத்தில கழுவீற்றுப் போயிடுவான், ஆம்பிள பிள்ள கண்ணில தண்ணி வைக்கலாமா போன்ற கருத்துக்களும் சமூகத்தில் விரவிக் கிடக்க சமுதாயம் தனக்குத் தானே விரித்துக் கொண்ட பண்பாட்டுக் கோலங்கள் தானே காரணம். 

பெண்ணைத் தெய்வமாகவும் அனைத்திற்கும் கருவாகவும் கொண்டாடும் சமூகம் தான் அவளைப் பாலியல் பொருளாகவும், வெறும் அற்ப போகப் பிண்டமாகவும் எண்ணி மகிழ்கின்றது. ஏன் இந்தப் பிரிவினை வாதம். ஆணும் பெண்ணும் இயற்கையில் உடல் கூற்றியல் அமைப்பில் வேறுபாடானவர்களாக உள்ளனரே, அதனாலா?
 
இங்கே பெண்ணியம் பேச வரவில்லை. எதற்கு சமூகம் இரண்டு கண்களாலும் இரண்டு வேறுபட்ட பார்வையினைச் செலுத்துகின்றது என்பதனை ஆராயவே முனைகின்றது. பால் மற்றும் பால்நிலை நோக்கிலும் வேறுபட்ட எண்ணக் கருத்துக்களைக் காணலாம். ஆக, இத்தகைய வேறுபாட்டின் அடியாகத் தோன்றும் பால்நிலைப் பாகுபாடுகள்; தோற்றம் பெறுவதற்கான காரணங்கள் எவை, அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் யாவை என்பன தொடர்பான அலசலாகவே இக்கட்டுரை அமைகின்றது.

இயற்கையில் பிறப்பின் அடிப்படையில் வருவது பால் என்ற எண்ணக் கருவாகும். அதுவே சமூகமயமாக்கல் செயற்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற போது அதனைப் பால்நிலை என்போம். பாலுக்கும் பால்நிலைக்கும் வேறுபாடு உண்டு. எம்மால் பால் என்ற எண்ணக்கருவை மாற்ற முடியாது. ஆனால் பால்நிலையினைச் சமூகமயமாக்கல் செயற்பாட்டின் மூலம் மாற்றலாம். நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இன்று பால்மாற்று அறுவைச் சிகிச்சை செய்து தம்மை உடல் ரீதியாக மாற்றிக் கொள்பவர்களும் உண்டு. அதனை மரபணுமாற்றம் என்று அழைப்பர். எனினும் அவை விலை மதிப்புக் கொண்டவையாகவும் இலகுவில் மாற்ற முடியாதவையாகவும் உயிருக்கு உத்தரவாதம் அற்றவையாகவுமே விளங்கக் காணலாம். 

ஆனால் பால்நிலைப் பாகுபாடுகள் சமூகத்தால் படிப்படியாக குடும்ப அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு ஊட்டப்படுகின்ற அம்சமாக மிளிர்கின்றது. எனவே பால்நிலை வேறுபாடுகளை அடைந்து கொள்வது சமூகமயமாக்கல் நிறுவனங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அந்த வகையிலே குடும்பம் முதன் நிலை சமூகமயமாக்கல் நிறுவனமாகவும் பாடசாலை, ஊடகம், சமயம், கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் நிறுவனங்கள் இரண்டாம் நிலைச் சமூகமயமாக்கல் நிறுவனங்களாகவும் பங்கு கொள்கின்றன. 
பண்டைய காலத்தை எடுத்துக் கொண்டால் மனிதனுக்கு உணவுத் தேடுதலே பாரிய முதன்மைத் தொழிலாக  இருந்தது. வேட்டையாடுதலும், உணவு சேகரித்தலுடன் அவனது காலம் கரைந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சனத்தொகை பெருக்கம் அதிகரிக்கவே அவன் தனக்கான குடும்பம், உறவு முறை, நண்பர்கள் என்று குழுக்களை அமைத்துக் கொண்டான். அதன் பின்னரே விவசாய உற்பத்தி முறைமைகள் தோற்றம் பெற்றன. தொடர்ந்து, அதனோடு தொடர்பான தொழில் பிரிவினை நிகழ்வுகள் ஆணையும் பெண்ணையும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கின. 

மனிதன் என்ற அடிப்படைத் தன்மை மாறி ஆண் வர்க்கம், பெண் வர்க்கம் என்ற நோக்கில் ஆண்கள் செய்ய வேண்டிய கடைமைகள், பெண்கள் செய்ய வேண்டிய கடைமைகள் எனப் பிரித்துச் செயற்படுத்தப்பட்டனர். வலிமை கொண்டவர்கள் எனத் தங்களைத் தாங்களே எண்ணிக் கொண்ட நிலச்சுவாந்தகர்களான ஆண்கள் நிலத்தில் கூலி வேலை செய்யும் நிலமற்ற ஆண்களை வலிமை குறைந்தவர்களாக ஆள முற்பட்ட வேளையில் ஆண்டான் அடிமை என்ற சமூக சமத்துவமின்மை தோற்றம் பெற்றது. அது காலப்போக்கில் பெண்களுக்கெதிரான அடக்குமுறையாக மாறி இற்றை வரை பெண்கள் பிறருக்காகவே வாழ்கின்ற போக்குக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற தன்மையினைக் காணலாம்.

சங்க காலத்தில் நிலவிய ஆரம்ப சமூக-பொருளாதார அமைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவம் நிலவியதை அவதானிக்க முடிகின்றது. சுயம்வர முறைமைகளும், காந்தர்வ மணமுறைகளும் பெண்கள் தமக்கான வாழ்க்கைத் துணையினைத் தேர்வு செய்யும் பாலியல் சுதந்திரம் கொண்டவர்கள் என்பதைப் பறைசாற்றும். இதன் அடிப்படையில் பண்டைத்தமிழர் மத்தியில் தாய்வழிச் சமூக அமைப்பு நிலவியுள்ளது என்ற முடிவுக்கு வரலாம்.

எனினும் பிற்பட்ட காலங்களில் ஏற்படுத்தப்பட்ட சமூக மாற்றங்களால் ஆண்கள் பாலியல் சுதந்திரம் கொண்டவர்களாக மாற்றமுற்றனர். அவன் தன் விருப்பப்படி அந்தப்புரம் அமைத்துக் கொள்ளவும், பல பெண்களை மணந்து உல்லாச வாழ்க்கை வாழவும் அனுமதிக்கப்பட்டான். ஆளும் அதிகாரமும் பொருளாதார அதிகாரமும் பாலியல் சுதந்திரமும் கொண்டவனாக ஆண் மாற்றம் காணவே பெண்ணுக்கான பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்டு ஆணுக்கான பரம்பரையினை உருவாக்குபவளாக, ஆணின் சொத்தாக, ஒருவனையே மணந்து ஏக பத்தினி விரதம் அனுஷ்டிப்பவளாகப் பெண் உருமாறினாள். அதனால் தந்தை வழிச் சமுதாயம் உருவாகி வலிமை கொண்ட ஆண்கள் பெண்களை மாத்திரமன்றி வல்லமை குறைந்த ஆண்களையும் தாழ் சாதி ஆண்களையும் ஆண்டனர். 

மனித குல வரலாற்றில் பெண், ஆணின் சொத்தாக மாறியதையும், தாய் வழிச் சமூகம் மறைந்து போனமையும் பெண்பாலினத்தின் உலகளாவிய வரலாற்றுத் தோல்வியே ஆகும்  என்கின்றார் சமூகவியலாளரான பிரட்ரிக் ஏங்கல்ஸ். பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் வளர்ந்து உற்பத்தி முறைக்கேற்ற பாத்திரங்களில் தங்களைப் பொருத்திக் கொள்கின்றன. ஒரு நிலச்சுவாந்தாரின் மகன் தன் தந்தையின் நிலங்களைப் பெற்றுக் கொள்கின்றான். துணி துவைப்பரின் மகன் தந்தையின் தொழிலைத் தொடர்கின்றான். பெண்கள் பெற்றெடுக்கும் பெண்பிள்ளைகளோ அவர்களது தாய்மார்களைப் போலவே குடும்பத்தைச் சிதறாமல் பாதுகாத்து, உறவுகளைத் தொடரச் செய்து குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்குகிறார்கள் என உற்பத்தி முறைமைகளை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் ஆண் பெண் தன்மைகளை கார்ல் மாக்ஸ் ஆராய்கின்றார் 

விலங்குகள், சூத்திரர்கள், பெண்கள் ஆகிய மூன்று பிரிவினரையும் அசுத்தமானவர்கள் என்கின்றது மனுஸ்மிருதி. மேல்சாதி ஆண்கள் அவர்கள் அனைவரையும் அடக்கியாள வேண்டும் என்று வரையறுக்கின்றது. உயர்சாதிப் பெண்களுக்கு கீழ் சாதிப் பெண்களுக்கு எனத் தனித்தனியாக அவர்களின் சமூக இருப்புத் தன்மையையும் வெளிப்படுத்துகின்றது. எனவே இத்தகைய அடிப்படையிலேயே ஆண் பெண் நிலைமைகள் பண்டைக்காலம் தொட்டு இற்றை வரை பேணப்பட்டு வந்தவாற்றைக் காணக்கூடியதாகவுள்ளது.  

ஜெர்டா லெர்னரின் கருத்தாக்கத்தின் படி பெண்ணின் அடிமைத்தனமும் அவள் மீதான ஆணின் கட்டுப்பாடும் கீழ்க்காணும் படி நிலைகளில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. 

1. பெண்களைக் கடத்தல், பாலியல் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நுட்பமான செயல்திட்டத்தின் மூலம் ஆண்கள், பெண்களின் பாலியல் மறுஉற்பத்தித் திறன்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 

2. பெண் பரிவர்த்தனை, கடத்தல் போன்றவை அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் மீதும் கட்டுப்பாடு செலுத்த ஏதுவாக அமைந்தது. பெண்கள், குழந்தைகள் மேல் வயது கூடிய ஆண்கள் செலுத்திய அதிகாரமும், தமது சொத்து நீண்டு நிலைத்து காக்கப்பட வேண்டும் என்ற அவர்களது ஆசையுமே தனிச்சொத்து என்ற அமைப்பை உருவாக்கியது. 

3. பின்னாட்களில் விதைத்துப் பயிரிடும் விவசாய முறை நடைமுறைக்கு வந்து மன்னராட்சி முறை அறிமுகமான பின்னர் சட்டங்களும், அவற்றை ஒட்டிய கட்டுப்பாடுகளும் உருவாக்கப்ட்டு தந்தை வழி குடும்ப அமைப்பு நிலைநாட்டப்பட்டது. 

4. பெண்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின், அதே மனப்பான்மையைக் கொண்டு அதிகாரமற்ற பிற குழுக்களையும் அடக்க ஆண்கள் முற்பட்டனர். அடிமை முறையும் உருவானது. கூடவே தனிச் சொத்து, மிகப் பெருமளவான விவசாய சாகுபடி ஆகியவையும் தோன்றின. 

5. உற்பத்தியில் தாம் வகிக்க வந்த தீர்மானகரமான பங்கை ஆதிக்கத்தையொட்டி ஆணின் அதிகாரமும் அந்தஸ்தும் தீர்மானிக்கப்பட்டது போல, ஆணோடு கொண்டுள்ள பாலியல் உறவுகளைப் பயன்படுத்தியே பெண் தனது   தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. 

6. பெண்கள் நேரடியாக எந்த அதிகாரமும் அற்றவர்களாக இருந்தாலும், அவர்களின் தாய்மைப்பேறு, படைப்புத்திறன் தொடர்ந்து வழிபடப்பட்டே வந்தன. பொருளாதார, பாலியல் தளங்களில் அவர்கள் செயலிழந்து போனபோதும் குறிசொல்பவர்களாக, பூசாரிணிகளாக, இறைவனின் அடியார்களாக சமூகத்தில் ஏற்கப்பட்டிருந்தனர். 

7. பெண்கள் விரும்பினாலும் கூட தங்களது கட்டுப்பெட்டியான நிலையிலிருந்து மீள முடியாத வண்ணம் தந்தை வழிச் சமூக அமைப்பு, கல்வி, பல்வேறு அறிவுத் திறன்கள் போன்றவற்றை அவர்களுக்கு மறுத்தது, அவர்களுக்கு அந்தத் திறன்கள் கிடைக்க விடாமற் பார்த்துக் கொண்டது. 

எனவே தந்தை வழி ஆணாதிக்க சமூகம் வரலாற்றின் ஒரு கட்டத்தில் உருவாக்கப்பட்டது எனில் அதனை நம்மால் அசைத்துப் பார்த்து சவாலுக்கு உள்ளாக்க முடியும் என்கின்றார்.

தனிமனித உணர்வு நிலை பற்றிய புரொய்டின் கருத்தாக்கம்; ஆண்மை பெண்மை நிலைகளைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள அடித்தளமாக உள்ளது. குழந்தைகள் வளரும் போது தங்களைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் புரிந்து கொள்கிறார்கள். இட், ஆளுமை, பேராளுமை ஆகிய மூன்று நிலைகளினூடாகவும் இதனைச் செய்கின்றார்கள். தனியனின் ஆளுமை உருவாக்கத்தில் சமூகப் புலத்தின் இன்றிமையாமையும் புரொய்டின் உளப்பகுப்பாய்வுக் கொள்கையூடாகத் தெளிவுபெறும். நனவிலியை அறியும் வழிமுறையாகவும், சிகிச்சை முறையியலாகவும் அமைகின்றது, ஆளுமையின் கூறுகளையும் விருத்தியையும் விளக்கும் ஒரு கோட்பாடாகவும் விளங்குகின்றது, சமூகம் பற்றிய பிரதான நிறுவனங்களைப் பற்றியதுமான சில முக்கிய கூற்றுக்களையும் முன்வைக்கின்றது. 

இதில் இட் மனிதனின் ஆதிகால வாழ்வின் விலங்குணர்ச்சி நிலையை விளக்கும்,  தனிமனிதக் கூட்டமான வாழ்வு மாற்றம் நிகழ்ந்த போது கூட்டு வாழ்வின் இன்றியமையாமை கருதி அவன் விலங்குணர்ச்சியைச் சற்றுக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் விளைந்தது, நபழ இன் உயர் நிலை வடிவம் தான் ளரிநச நபழ. தான் வாழும் சமூகப் பண்பாட்டிலிருந்து தனிமனிதன் வளர்த்துக் கொள்ளும் பண்பாட்டுணர்ச்சியின் வளர்ச்சி கண்ட பகுதியாக இதனைக் குறிப்பிடலாம்.

இயற்கையாகவே ஆண், பெண் பாலினம் என்ற அடிப்படைவாதத்தைப் பின்பற்றும் மக்கள் தாம் பின்பற்றுகின்ற பண்பாட்டின் அடிப்படையில் பால்நிலை உறவுகளை வலுப்படுத்தக் காணலாம். இங்கே சமூகமயமாக்கற் செயற்பாட்டின் மூலம் பால் நிலைத் தன்மைகள் மனிதர்களிடையே புகுத்தப்படுகின்றன. புகழ்பெற்ற மானிடவியலாளரான மாக்ரட் மீட் இன் ஆரம்பகால ஆய்வுகள் சமூகமயமாக்கத்தினால் ஏற்படும் மனித இயல்புகளை வெளிப்படுத்தும். நியூகினியில் வசிக்கும் அரபேஷ் என்ற இனத்தவர்களின் ஆண், பெண் மெல்லியல்புகளுடனேயே வளர்க்கப்படுகின்றனர். இவர்களிடையே கூட்டு வாழ்வு, ஏனையோரின் தேவைகளில் துணையாய் உதவும் பண்பு என்பன வழக்கமானவை. முண்டுகமூர் இனத்தவர்களின் ஆண், பெண் இருபாலாருமே வல்லியல்பு கொண்டவர்களாக வளர்க்கப்படுகின்றனர். தஸ்கம்புலி என்ற இனத்தவர்களின் ஆண், பெண் இருபாலாரிடையே பெண்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், ஆண்களை விடப் பொறுப்பும், முகாமைத்துவத் திறனும் கொண்டவர்களாக வளர்க்கப்படுகின்றார்கள்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கின்ற போது ஆண், பெண் என்ற இயற்கை அடிப்படையின்றி அவர்களின் வளர்ப்பு முறையே இங்கு முக்கியத்துவமடைகின்றது. ஆண்கள், பெண்கள் என்ற இருபாலாரையும் எடுத்துக் கொண்டால் இன்றைய சமுதாயத்திலும் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும், அவள் தன் ஒத்த வயதினருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தன்னை விட வயது குறைந்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தன்னை விட மூத்தவர்களுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்ற விதிமுறைகள் சொல்லியே வளர்க்கப்படுகின்றார்கள். ஆண்களுக்கும் இத்தகைய நடைமுறைகள் காணப்படுகின்றன. ஆனாலும் அவை பின்பற்றியே ஆக வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதுமில்லை, விமர்சனத்திற்கு உட்படுத்துவதுமில்லை. ஒரு பெண் கலாசார விழுமியங்களில் இருந்து பிறழ்கின்ற போது அது மாபெரும் குற்றமாகப் பார்க்கப்பட்டு குறிப்பிட்ட பெண்ணை சமூக அளவில் விமர்சனப்படுத்தும் போக்கு இன்றுவரை தொடர்கின்ற கதையே.  
ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அதற்குப் பயன்படுத்தும் பொருட்களின் நிறத்தை வைத்து அந்தக் குழந்தையை அடையாளப்படுத்துகின்றனர். ஆண் குழந்தை பிறந்தால் நீல நிறத்திலே உடுக்கின்ற உடை முதற் கொண்டு அனைத்து உபயோகப் பொருட்களும் அமைக்கப்படும். அதுவே பெண் குழந்தையாக இருந்தால் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தையே தெரிவு செய்கின்றனர். ஆண் குழந்தை எனில் ஆண் குழந்தையென மிடுக்குடன் சொல்வதும், அதுவே பெண் குழந்தை பிறந்துள்ளதெனில் பொம்பிளப் பிள்ளையாம் என ஒருவித சலிப்புடன் சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது. 
அவளுக்கென்ன ஐஞ்சும் ஆம்பிளப்பிள்ளையாப் பெத்துப் போட்டாள், கெட்டிக்காரி, வயசு போன காலத்தில இருத்தி வைச்சு சாப்பாடு குடுப்பாங்கள் என ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பாராட்டுவது சமூக வழமையாயுள்ளது. ஆனால் பெண்பிள்ளைகள் வரிசையாக ஐந்தினைப் பெற்றுவிட்டால், “ஐஞ்சும் பொட்டப்பிள்ளைகளே! என்ன செய்யப்போறாளோ, சீதனம் கொடுத்தே மாளாப் போறாள், பேசாமல் சாமத்தியப்பட்டோன்ன  யாரிட்டயும் கையில பிடிச்சுக் குடுத்துப் போடு. சும்மா இவளவைய படிப்பிச்சுக் காசக் கரியாக்கிப் போடாத” என கேட்காமலே வலிய வந்து அறிவுரை கூறுவார்கள். 
சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கின்ற போதும் பால்நிலை வேறுபாடுகள் வளர்க்கப்படுவதைக் காணலாம். ஆண் பிள்ளை என்றால் இராணுவம், துப்பாக்கி, வாகனங்கள்,  கனரக விளையாட்டுப் பொருட்கள் வாங்கி விளையாடுவதற்காகக் கொடுப்பார்கள். பெண் குழந்தைகளுக்குச் சமையல் உபகரணப் பொருட்களும், பொம்மைகளும், மென்மையான பொருட்களையுமே விளையாடக் கொடுக்கின்றனர். சமூகத்தைப் பற்றிக் கற்கத் தொடங்குகின்ற ஆரம்ப ஸ்தானத்திலேயே இது தான் உன் எல்லை என விளையாட்டுப் பொருட்களூடாக சமூகமயமாக்கப்படுகின்றனர். எதையும் கற்கின்ற ஆர்வத்திலிருக்கின்ற பிள்ளைகள் தமக்குச் சொல்லித் தருகின்ற விடயங்களை அப்படியே பின்பற்றத் தொடங்கி விடுகின்றன. அவை நாளடைவில் அவர்களின் அன்றாட பழக்கவழக்கங்களாகி ஆண் என்றும் பெண் என்றும் வகைப்படுத்த அடிகோலுகின்றன.
தமது உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துபவர்களாக பெண்களும், உணர்வுகளை வெளிப்படுத்தாது அதனை மனதினுள்ளே பேணுபவர்களாக ஆண்களும் இருக்க வேண்டும் என்ற சமுதாய சிந்தனை, பால் நிலை வேறுபாட்டின் பரிணமிப்பன்றோ. என்ன பாடம் கற்க வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதும் பால் வேறுபாட்டின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றது. ஆண் கணிதம், விஞ்ஞானத் துறைகளில் கற்று பொறியிலலாளர், வைத்தியர், விஞ்ஞானி ஆகிய தொழில்களில் பிரகாசிக்க வேண்டும் என்றும் பெண் பிள்ளை எனில் அவள் கலைத்துறையில் தான் கற்க வேண்டும் என்ற எண்ணப்பாங்கும் வேலைக்குச் செல்லாமல் வீட்டுடன் குழந்தைகளையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டாலே போதும் என்ற சிந்தனையும் தான் விரிவிக் காணப்படுகின்றது. 
பெண்களுக்கென்று தனிப்பட்ட கனவுகள், ஆசைகள் உண்டு, அவர்களின் விருப்பப்படி வாழ கலாசாரம் உண்டாக்கும் பல சமூகத்தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். ஆனால் அதிலிருந்து தொழில் செய்பவர்கள் கால்வாசியினர். அங்கிருந்து மேல் தட்டு உயர் அதிகாரத்தில் வேலை செய்பவர்கள் ஆண்களாகவே இருக்கக் காணலாம். அதற்கு முதன்மையான காரணமாக அமைவது பெண்கள் திருமணம், குழந்தை வளர்ப்பு போன்ற குடும்பக் காரணங்களினாலும், இரண்டு வகிபங்குகளை வகிக்க வேண்டும்; என்ற தேவை காரணமாகவும் உயர்பதவி, மேல்படிப்பு இவற்றிலிருந்து ஒதுங்கி விடுகின்றனர்.

எனினும் பெண்களுக்கு உயர்பதவிகளில் வேலை செய்ய, படிக்க விருப்பமிருந்தும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். அதற்கான காரணம்: ஒரு பொம்பிளைக்குக் கீழ வேலை செய்வதா. அவர்களுக்கு ஆண்களை ஆளத்தெரியாது. பெண்கள் உயர் பதிவியிலிருந்தாலுமே பெண் பெண் தானே. அவள் சொல்வதை நாம் என்ன கேட்பது. படிச்சிட்டா பொம்பிள இல்லையென்று ஆகி விடுமா. எப்படி நிர்வகிக்கிறாள் என்று பார்க்கத்தானே போகிறோம் போன்ற சமூக சலசலப்புக்களை ஒரு பெண் கேட்டுத் தான் தன் கடைமைகளை அவள் ஆற்ற வேண்டியுள்ளது. இதனால் மன அழுத்தம், குற்றவுணர்ச்சி, பாலியல் தொல்லைகள் கூச்ச மனப்பாங்கு போன்ற உளத் தாக்கங்களுக்குப் பெண்கள் ஆட்பட்டுக் கடைசியில் குடும்ப வாழ்வுமின்றி, தொழில் வாழ்வுமின்றி தற்கொலை, மனநோய் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். இவையெல்லாம் எதனால்? திறமை இருந்தும், தகுதி இருந்தும் பெண் என்ற போர்வை போர்த்து சமூகம் அவளைப் பார்க்கின்ற பார்வை தானே காரணம். 

நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து உடை உடுத்தல் என்பதன்றி பெண்ணின் மானத்தை மறைப்பதற்காகவே ஆடை அவசியம் தேவைப்படும் ஒன்றாக இருக்கின்றது. பூனையைக் குறை சொல்வதைக் காட்டிலும் பாலை மூடி வைப்பதே சிறந்தது என்பர். குறை சொல்வதென்றாலுமே ஆணின் மீது தவறு இருப்பினும் பெண் தான் பலிக்கடா ஆக்கப்படுகின்றாள். சீதனம், சடங்குகள், சம்பிரதாயம், ஆசாரம், சாதி, சமயம், கற்பு என ஆயிரம் காரணங்களை வைத்து ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தி இச் சமுதாயம் பார்க்கின்றது. “கற்பு நிலையென்றுசொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று பாரதி பாடக் காரணம் இந்த பால்நிலை வேறுபாடுகளின் வீரியத்தன்மை தானே. 

பிள்ளை இல்லாது ஒரு குடும்பம் இருக்கிறதெனில் அதற்குக் காரணம் அந்தப் பெண் தான் என்று முடிவு கட்டி அப் பெண்ணை மட்டுமே அச்சமூகம் குற்றஞ்சாட்டும். ஆணுக்கு இன்னொரு திருமணம் முடித்துத் தமது சந்ததியைப் பெருக்கிக் கொள்ளவே முனையும். இன்றைய கால கட்டத்திலும் வீட்டில் உணவுக்கு முன்னுரிமை ஆண்களுக்கே கொடுக்கப்படக் காணலாம். வீட்டில் இன்டைக்கு ஒரு முட்டைப் பொரியல் தான் பொரிச்சிருக்கு… அத அண்ணணுக்கு வைச்சிரும்மா… வெளியால போயிற்று வாறவன் தெம்பா சாப்பிடட்டும் எனத் தாய் கூற, அதனை அண்ணனுக்கென்று பக்குவப்படுத்தி வைக்கும் தங்கைகளைக் காணலாம். உடலினால் வலிமை குறைந்தவள் எனப் பெண்களை வர்ணிக்கும் சமுதாயம் உணவிலும் பாரபட்சம் காட்டுவது எதனால்? ஆண்கள் வெளியுலகுக்குரியவர்கள். பெண்கள் வீட்டையே சுற்றி வந்து வீட்டிற்குள் இருக்கும் பட்டுப்புழு தானே என்ற நரம்பில் ஊறியிருக்கும் பண்பாடு என்ற ஒற்றைக் காரணம் தானே?

அடுப்பங்கரை பெண்களுக்கான இடம் என ஒதுக்குகின்றனர். சமையல் பெண்கள் தான் வீட்டில் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் நட்சத்திர ஹோட்டல்களில் வேலை செய்கின்ற பிரதான சமையல்காரர்கள், சமையல் உதவியாளர்கள் அனைவருமே ஆண்களாகவே உள்ளனர். ஸ்திரி பாகம் என்று சொல்வதில்லை. நளபாகம் என்று தானே சொல்கின்றனர். பார்க்கப்போனால் நாங்கள் எமது கலாசாரப் பின்புலங்கள் எனப் பின்பற்றி வருகின்ற விடயங்கள் முன்னுக்குப் பின் முரணாகவே பால்நிலையினைத் தரப்படுத்தக் காணலாம். 

தொழில்நுட்ப முன்னேற்றத்தால் மனிதன் உயர்வடைந்திருக்கின்ற இன்றைய காலத்திலுமா பால் நிலையினை இறுக்கிப் பிடித்துள்ளது சமூகம். இதனை மாற்றவே முடியாதா? மாற்றம் ஒன்று தான் வாழ்வில் மாறாதது. மாறுவதெல்லாம் உயிரோடு, மாறாததெல்லாம் மண்ணோடு. முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை. மெய் வருந்தக் கூலி தரும்; என்ற வாசகங்கள் தனி மனித முன்னேற்றத்துக்கு மாத்திரம் தானா? குழு முயற்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியாதா? முயற்சி நடக்குமா? விடிவு கிடைக்குமா? என்பனவே இப்போதைக்கு எழும்; வினாக்கள். ஆண்களுக்கான குணங்கள், பெண்களுக்கான குணங்;கள் என்ற குணவியல்பின் வேறுபாடுகளைச் சிறுவயதிலிருந்தே ஊட்டுவதைத் தவிர்ப்பதனூடாக பாகுபாட்டினைக் குறைக்கலாம். 

விளையாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துகின்ற போதோ அல்லது அவர்களுக்கான நிறங்களைத் தெரிவு செய்கின்ற போதோ ஆண், பெண் என்ற பாகுபாட்டை மறந்து விரும்பிய நிறத்தைத் தெரிவு செய்யலாம். கடினமாக விளையாடக் கூடிய விளையாட்டுப் பொருட்களைப் பெண்பிள்ளைகளுக்கும் கொடுத்து அவர்களைச் சமூகத்தில் தைரியமானவர்களாக, வலிமை மிகுந்தவர்களாக வளர்க்கப் பார்க்கலாமே. அப்படியே மென்மையான பொருட்களைப் ஆண் பிள்ளைகளுக்கும் கொடுத்தும் மெல்லியல்புகளை ஆண்களுக்கும் புகுத்தலாமே. என்ன கதை கதைக்கிறாய். என்ர ஆம்பிளைப் பிள்ளைய பொட்டப் பிள்ளையா வளர்க்கச் சொல்லுறியா? அப்படிச் சொல்லவில்லை. இத்தகைய பாகுபாடுகள் வேண்டாமே என்று தான் சொல்ல வருகின்றோம். 

உயிரியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் பார்த்தால் ஹோர்மோன்கள் தான் எமக்கான குணாம்சங்களைத் தீர்மானிப்பவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை ஏனைய விலங்குகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியே ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்துவன. ஆனால் சமூக உயிரியல் ஆய்வு முடிவுகள் இதற்கு எதிர்மாறானவை. நடத்தை வழி தான் ஹோர்மோன் சுரப்புக்களேயன்றி ஹோர்மோன் வழி நடத்தைக் கோலங்கள் உருவாக மாட்டா என கட்டியம் கூறுகின்றன. எனவே இதிலிருந்து நிச்சயம் சமூகமயமாக்கல் செயற்பாடு தான் பால்நிலைப் பாகுபாடுகளை சமூகத்தில் உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு எம்மால் வர முடியும். பண்டைக்காலத்திலிருந்து நாம் பின்பற்றி வரும் எமது வளர்ப்பு முறைமைகளில் சற்றே மாற்றத்தை ஏற்படுத்துவோமாக இருப்பின் நிச்சயம் பால்நிலைப் பாகுபாடுகளற்ற சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்கலாம்.


உசாத்துணை நூல்கள்

கீதா. வ, கிறிஸ்டி சுபத்ரா. (2009), பாலினப்பாகுபாடும் சமூக அடையாளங்களும், சென்னை 600018: பாரதி புத்தகாலயம்.
சண்முகலிங்கன், என். (2000), சமூக மாற்றத்தில் பண்பாடு, பால் நிலை உறவுகள், சென்னை 600002: சவுத் விஷன்.
தாயகம், (1986: 51-56), பெண்கள் வீட்டு அடிமைகளா, தாயகம், யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண அச்சகம்.
திருச்சந்திரன், செ. (1998), பெண்நிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடும் ஒரு சமூகவியல் நோக்கு, கொழும்பு: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்.

Views: 4676