காதல் பட்டாம்பூச்சி

எழுத்தாளர் : கோ (சாமானியன்)மின்னஞ்சல் முகவரி: gkthangaraj@gmail.comBanner

        சீனப் பெருஞ்சுவரைக் காட்டிலும் நீளத்தில் குறைவான ,சிகப்பு நிறச் செங்கற்களால் அடுகப்பட்டச் சுற்றுச்சுவர் அது. அங்கு தான் தட்டையானத் தார்ச்சாலையில் மூன்று மாதப் பிரசவச வயிற்றைப் போல் ஒரு வேகத் தடையிருக்கும். அருகினில் மஞ்சள் பூ சொறிந்தக் கிளையொன்று , சுற்றுச்சுவரை விட்டு நிழல் பரப்பி அதன் அழகைப் பறைசாற்றிக் கொள்ளும், அப் பூக்களின் மையத்தில் சுரக்கும் மகரந்த சேர்க்கையின் நறுமணம் காற்றில் கலந்து ஒரு வித மனோநிலையை தரும். அதிக நடமாட்டம் அற்ற நீண்டப் பிரதானச் சாலையில் பேருந்து நிற்க, இதை விட சிறப்பானதொரு இடம் அங்கில்லை. நான் தினமும் காலையில் ; அந்நிறுத்தத்தில் தான் அரசு பேருந்துக்குள் புகுவது , பணி நிமித்தமாக.

        மஞ்சள் பூக்கள் சிதறிக் கிடக்கும்,  அச்சாலையை நீங்கள் தனியாக பார்த்தால், பார்த்த வண்ணமே இருக்கலாம். கரு நிறக் கூந்தலில் சூரியகாந்தி மலரைச் சூடிய ஒருத்தியை எப்படி ரசிக்காமல் கடப்பது ?

அப்படியான அழகை ரசிப்பதற்காகவே பயண நேரத்திற்கு முன்னமே அங்கிருப்பேன். ஒரு ஏழு அல்லது ஏழரை மணியளவில் என்னுடைய விஜயம் நிச்சயமாக அங்கிருக்கும்.  ஆளற்ற சாலையது. எப்போதாவது சிலர் அங்கு வருவதுண்டு. மற்றபடி பெரிதாக ஒன்றும் பரபரப்பு  இருக்காது. அரசு பேருந்து  அதன் நேரத்திற்கு வரும் நம் அவசரங்களைப் பற்றின கவலை இல்லா வயோதிக வண்டிகள் அல்லவா அவைகள்.

        தினமும் நான் வந்த பிறகு , ஒரு நாற்பத்தைந்து வயதொத்த ஒருவர் சதுரக் கண்ணாடி அணிந்தும் ,வலது கையில் காஃபி பிரவுன் பட்டியிட்ட கைகடிகாரத்தோடு வந்திடுவார்.எட்டு மணிப் பேருந்தைப் பிடிக்க. ஐந்து பள்ளி மாணவர்கள் சரியாக எட்டு இருபதுக்கு வந்து சேர்வார்கள். எட்டு முப்பதுப் பேருந்தைப் பிடிக்க. எல்லோரும் துணிப் பளுவைத் தாளாத கொடிக்கயிற்றைப் போல , முகம் தொங்கிக் நடப்பார்கள். ஒரு மூட்டையை முதுகில் சுமந்த நத்தை நடையெனலாம் அதை. நான் , இவர்கள் யாரிடமும் பேசியதில்லை. எனக்குள்ளே, எனக்கு தானேப் பேசிக்கொள்ளும் பழக்கம்  அதிகமென்பதால் .இவர்களைப் பற்றி நானே பேசிக் கொள்வேன் அவர்களுக்கு கேட்காத வண்ணம்.சில சமயத்தில் சாலையிடமும்,

அசைந்து வருகிற பேருந்திடமும் ,காற்றின் சிலிர்ப்பல் சிரிக்கும் மஞ்சள் பூக்களிடமும் பேசுவது என் வழக்கம்.எனக்கு ஒன்பது மணி பேருந்து என்பதால் யாரோ ஒருவர் எப்போதுமே என்னிடம் பேச்சுத் துணைக்கு இருப்பதுண்டு.

        வழக்கமான நாளுக்கும் , வழக்கத்திற்கு மாற்றான நாளுக்கும் இடைப்பட்ட வேறுப்பாட்டை உனர்ந்த நாள் அன்று. நான் அன்றைய அதிகாலைப் பறவைகளின் காதலைப் பார்த்தேன். யன்னல் கதவுகளின் திறப்பிற்கு வெளியே தென்பட்ட , மா மரக்கிளையில். குருவிகள் இரண்டு கொஞ்சிப் பேசிய அமுத மொழியை கேட்டேன். அம்மொழிகளை எனக்குள் மொழிமாற்றம் செய்த படி , என்னுடைய வழக்கமான இடத்தில் நின்றேன். பேருந்து நிலையமென்ற வாசகப் பலகைக்கு பதிலாக நான் , என்பது போல் இருந்தது அன்று. புதிதாக பார்ப்பது போல ஒரு தோற்ற மாயை, சாலையும் , பூக்களும் எனக்கு அதிகப் பழக்கப்பட்ட தோழமைகளே இருந்தாலும் , இன்று தான் பார்ப்பதாய் ஓர் உணர்வெழுந்தது எனக்கு. இதற்கெல்லாம் , ஒரு தாமரை பூவிதழ் ஒத்த ஒருத்தியின் வருகைக்கான முன்னேற்பாடென்பதை அவள் வரும் வரையில் அறியவில்லை நான்

        மறக்கவே முடியாத ஒரு ஓவியத்தை அன்று  பார்த்தேன். உண்மையில் பார்த்தேன், அழகு என்று ஒரு சொல்லில் அழகை யார் சொன்னார்கள். மனம் படபடத்தது முதல்முறை. என் கண்கள் தடுமாறுகிறது. சிறகிருந்தும் , பறக்க மறுக்கும் ஒரு பறவையை என் செய்வது .

அப்படியான நிலை தான் அச்சமயம் எனக்கு வித்திட்டது. அவளின் குண்டூசிக் கண்கள் இதயத்தை சல்லடையாக ஓட்டை இட்டது அதன் இஷ்டப்படி, அளவான உயரம், தாழம்பு வாசமாய் வீசி நின்றாள். கருத்த புருவம் குவிந்த அதரம், வளைந்து நெளிந்த முல்லைக்கொடி போல் ஒரு  உடலசைவு, எங்கிருந்து வந்தாளோ ! .

என்னிதயம் பாழ்பட. அவள் சாலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் அவரவர்களின் நேரத்திற்கு வந்துச் சேர்ந்தார்கள். அந்த அழகி பள்ளி மாணவர்கள் செல்லும் பேருந்தில் சென்றாள். கூடவே என்னோடு இருந்த  என்னையும் கூட்டிக் கொண்டு போனாள்.

நான் இப்போது தனியானேன். காதல் வந்ததிற்கான முதல் அறிகுறி இது.

        அடுத்தநாள் விடியலை நான் முந்திக் கொண்டேன். என்னிடம் என்னை விடவும் களிப்புற்றிருந்தது என் ஆன்மா. மனதுக்குள் யாரோ ஒருவர் வயலின் வாசிக்க மெய் மறந்து நின்றேன். அந்த மஞ்சள் பூக்களிடம் கேட்டேன் அவளைப் பற்றி, அவைகளுக்கு கோபம் வந்தது என்மேல். அவளை நான் ரசிப்பதால் இனி தன்னிடம் பேசாதே ! என்பது போலொரு மௌனத்தை தந்தது . இவ்வளவு பொறாமையை தரும் அழகானவளா அவள் ? என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கையில் , அவளே வந்துவிட்டாள். இன்று நான், என்மனதை ஒரு கடிவாளமிட்ட குதிரையின் கண்களைப் போலவே அவளை பார்க்காமலிருக்க முடிவெடுத்திருந்தேன். பாழாய் போன மனம், அவள் என்முன்னால்  நின்ற அடுத்த நொடி; அவளைச் சுற்ற , இனி கண்கள் எங்கு என் பேச்சை கேட்கப்போகிறது. அவளையே தரிசித்திருந்தன கண்கள். ஒரு மின்னல் வெட்டுப் போல் தன் விழியால் என் கண்களுக்குள் ஒரு மின்னலை பாய்ச்சினாள். அதிர்ந்து போனது அண்டமே எனக்குள். ஓரிரு நொடிகளே இருக்கும், அவள் பார்த்தது. ஆனால், தீர்க்கமான பார்வை அது. என் உள்ளுணர்வை உணர்ந்த பார்வை அது. நிச்சியமாய் என்னால் சொல்ல முடியும், நான் காதலில் சிக்கித் தவிக்கிறேன்

என்பதை திடமாய் உணர்ந்த அவளின் பார்வை அதுவென. மறுகணமும் பார்த்தாள். நான் முழுவதுமாய் காதலாகிப் போனேன். பேருந்து வர கிளம்பளானாள் .

இன்றும், அவளுடனே என்னுள்  இருந்த  என்னைக் கூடிப் போக மறக்கவில்லை அவள்.

       இரவு உறக்கமற்ற நாளின் விடியல் மட்டுமே !  மெதுமெதுவென நகர்ந்தது. பேருந்து நிறுத்தத்தில் ஆசைகளுடன் நின்றுக் கொன்றிருக்க, என் முதுகுக்கு பின்னால் ஆதவன் பரவசமாக ஒளிர , சாலையில் என் நிழல் பிம்பம் கருத்தே இருந்தது. என் தேவதையின் வரவை , மெல்ல தன் விடுபடுதலை கிளையில் இருந்து விடுத்த மஞ்சள் பூக்கள் அறிவித்தன.நான் எதிர்ப்பார்க்காத ஓர் அதிசயமும் அப்போது நிகழ்ந்தது. நேற்றுவரையில் இதனை கவனிக்க மறந்திருந்தேன். ஆனால் , இன்று அகப்பட்டது என் கண்களில் அக்காட்சி. அதாவது அவளது நிழல் பிம்பமும் , சாலையில் என் நிழலருகில சேர்ந்திருந்தது. கிட்டதட்ட முகங்கள் இரண்டும் சரியாக சந்திக்கும் படியான நிழல் உருக்கள். சட்டென்று ஒரு யோசனை , மன்மதன் தவறவிட்ட அம்பின் விளைவாக கூட இருக்கக்கூடும் அது.நான் என் நிழலை அவளின் நிழலுக்கருகில் நகர்த்தினேன், ஒருவேளை என் எண்ணம் சரியென்றால் .

அவளுக்கும் என் மீதான ஒரு பிரியம்  இருந்தால் , அவளின் நிழலும் நெருங்கி வர வேண்டுமென யூகித்தேன் . நான் நினைத்ததுப் போலவே, அவளது மனம் என்மீதான ஏதோவொரு அன்பில் தவழ்ந்திருகிறது போலும். மெல்ல , மெல்ல அவளின் நிழல் என் நிழலருகில் வந்தது. என்னால் நம்பவே முடியாத ஒரு புரிதலின் நிலை, இருவருக்குள்ளும். அந்நேரம் இதயத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்தது. எதையெதையோ மனம் யாசித்தது.

        பிரம்மன் சிருஷ்டித்த ஒரு உயிரி. எங்கள் நிழலுக்கு உயிர் கொடுத்ததை இன்னும் நம்பவே முடியாத ஆச்சரியத்தில் என்னை ஆழ்த்துகிறது. அதற்காகவே , படைப்பின் உன்னதத்தை ஆராதிக்கலாம். அப்படியே யாரோ  சொல்லி வைத்தது போல் என் நிழல் முகத்தின் உதட்டில் ஒரு பட்டாம்பூச்சியும் .

அவளின் நிழல் முகத்தின் உதட்டில் மற்றொரு பட்டாம்பூச்சியும் அமர்ந்து தத்தம் தங்களது சிறகுகளை அசைத்த வண்ணமிருந்தது.

உண்மையில் எங்கள் இருவரின் உதடுகளும் அசைவதாய் உணர்ந்தேன். எனக்குள் இருக்கும் காதலை அந்த சிறகசைப்பில் அவளிடம் சொன்னேன். அவளும் அதற்கு சம்மதம் சொல்வதுப் போல் அந்த பட்டாம்பூச்சி சிறகசைத்தது. என் பிறவி வேண்டுதல் ஒன்று இப்போது நிறைவேறியது.

       அன்றிரவு காதலைச் சொன்ன அகமகிழ்ச்சியில் நிலவில் அவளுருவத்தைக் காணக் கண்டேன். பித்துப் பிடித்த குணம் பிதற்றலாகவே இருந்தது. சட்டென்று எனக்குள் இருக்கும் நான் , ஒரு கேள்வியை எழுப்பினேன். "அதெப்படி நியாயமாகும் ?

மணமான ஒருத்தியின் மீது காதல் கொள்வது எத்தனைப் பெரிய சமூக அவலம் ". இக்கேள்விக்கு பதில் .எனக்குள் தான் இருக்கிறது. இச்சமூக அமைப்பில் ஒரு பெண்ணுக்கான முடக்குவாத கேள்விகள் ஏராளம். நான் அவளை நேசிக்கிறேன் , அன்புச் செய்கிறேன், காதலிக்கிறேன். ஒரு மழையாக ,ஒரு காற்றாக, ஒரு நிலவாக, ஒரு ஓவியமாக, ஒரு நானாக இவ்வளவு ஏன் ? தினமும் ரசிக்கின்ற அந்த மஞ்சள் மலராகவும் கூட இருக்கட்டுமே அவள். எனக்கு இதில் ஏதோ ஒன்றாக அவள் இருந்தால் போதும். எனக்கு அவளது அங்கத்திலேதும் ஆசையில்லையே !. அவளின் ஆன்மாவை தானே நேசிக்கிறேன் .நிறையவேப் பேசிய அவளதுக் கண்களைத் தானே நேசிக்கிறேன். நான் அவளிடம் வாய் மொழியாய் எப்போதும் பேசப்போவதே இல்லை. பிறகென்ன இருக்கிறது சமூக குற்றம்?. அவளுக்குள்ளும் என் மனவோட்டத்தில் தொன்னூறு சதவிகிதம் நிச்சயமாக இருக்கும். ஒருமித்த புரிதலாலே அவளின் நிழல் என்னருகினில் நின்றது. அதுவே போதும், இவ்வாழ்வை வாழ. அவளுக்கு ஏன் திருமணமானது ? நான் ஏன் அவளின் மனத் தவிப்புகளை யூகிக்கிறேன் ? குழப்பத்தில்  உறங்காது தவித்தது தான் மிச்சம். அவரவரின்  நியாயங்களில் குற்றமேதும் இல்லை இது தான் தீர்க்கமான முடிவு. என்  வாழ்வில்  அவளின் நிழலோடு பயணிப்பதை என்னைப் பொறுத்த மட்டில் அவ்வளவு நியாயம். இந்த மனப்போரட்டத்தில் விடிந்த இரவு தெளிவான வெளிச்சத்தைப் பரப்பியது.

        நிலையான முடிவுக்குள் அவளும் வந்திருக்க கூடும் , ஒரு நேர்த்தியானப் பார்வை. சின்ன புன்னகை. அதோடு நிழல் பேச்சு. இப்படியே தினங்கள்தோறும் கழிந்தது. எங்கள் நிழல்கள் மிகச்சரியாக ஒருவரை ஒருவர்  புரிந்துக் கொண்டார்கள். மறுபடியும் பிரம்மன் படைத்த பட்டாம்பூச்சி திடீரென்று சொல்லி வைத்தது போல்  நிழல் உதட்டில் அமர்ந்து சிறகசைக்க , இதுநாள் வரையில் மனதிலிருந்த அத்தனை ஆசைகளையும், கேள்விகளையும் கேட்டுக் கொண்டோம். இரவல் உதடுகளான பட்டாம்பூச்சியின் சிறகசைப்பில். அன்று இருவருமே பேருந்து தவறவிட்டோம், தெரிந்தே செய்த ஒரு காதல் செய்கை எனலாம் இதனை. இதைவிடவும் இனியோரு காதல் ஜனிக்க வாய்ப்பில்லை இவ்வுலகில், என எனக்குள் தோன்றியது.

        அந்த பரிபாஷைக்கு பிறகு, நான் பணி நிமித்தமாக தஞ்சை வரைப் போக வேண்டியிருந்தது. சுமார் இருபத்தியொரு நாட்கள் அவளது நிழல் நினைவைத் தாங்கித் திரிந்த பாரம், பெரும் பாரம். மனமுழுக்க அவளது நிழலும், அந்த பட்டாம்பூச்சிகளும் என்னை படுத்தியப் பாட்டைச் சொல்லி மாளாது. என் இருபத்தி இரண்டாவது நாளில், அதீத கனவுகளுடன் அந்த நிறுத்தத்தில் நின்றிருந்தேன் .

        என் நிழல், அன்று வண்ணத்தில் இருந்தது. வழக்கமாய் வருபவர்கள் வந்தார்கள், ஆனால்  என் ஆன்மாவைக் காணாமல் தவித்திருந்தேன். கொஞ்சம் அழுதிருந்தேன் என்பதே முற்றிலும் உண்மை.

அப்போது தான் , அந்த பள்ளி மாணவர்கள் பேசியதை கவனித்தேன், "டேய் நம்ம கூட வருமே ஒரு அக்கா அது ஆக்ஸிடன்ட் ல செத்துப் போச்சு டா.....வெள்ளிக்கிழமை நைட்டு...." என்று தன் சக மணவர்களுடன் ஒருவன் பேசியதைக் கேட்டு, அழ முடியாமல்  அழுத அவஸ்தை. அந்த கடவுளுக்கும் வரக் கூடாது.

        பிரம்மை பிடித்தவனானேன். அன்று இருண்ட பகலானது. வாழ பிடிக்காத தருணம். வெற்றுச் சாலையில் அவள் ஓவிய நிழல் படரும் இடத்தைப் பார்த்தபடி கண்ணீரை துடைக்க மறந்திருந்தேன். கலங்கிய கண்கள் வழியே அப்பெரும் துயரைப் பார்த்தேன். என்னால் நம்பவே முடியாத ஒரு பிம்பம், அது காட்சிப் பிழை.

அச்சமயம் என்னால் தாளமுடியாமல், ஓவென கத்தி அழ ஆரம்பித்தேன். அவளின் இரவல் உதடு ,அந்த பட்டாம்பூச்சியை காலன், ஒரு மிதிவண்டி சக்கரத்தின் வழியே கொண்டு சென்றுவிட்டான். அந்த சாலையில் நைந்துக் கிடந்த பட்டாம்பூச்சியின் சிறகை பார்த்து. பதறி அழுத அழுகையை யாரும் அறிவதற்கில்லை. அந்த மஞ்சள் பூக்கள் , கிளையில் இருக்க பிடிக்காமல் உதிர்ந்து,

ஒரு மலர்வளையம் போல் சூழ்ந்திருந்தது அவ்விடத்தில். நான் மண்டியிட்டு, அஞ்சலி செலுத்தும் பொருட்டு, என் உதடுகளால் அவளின் இரவல் உதட்டிற்கு முத்தமிட்டேன். அந்த பட்டாம்பூச்சியின் வர்ணம் என் உதடுகளில் ஒட்டிக் கிடந்தது . அது என்னுயிரை பருக , பருக நான் அழ மட்டுமே செய்தேன் .

        என் கண்ணீரின் ஏதேனும் ஒரு துளி. என் பிரியமான ஆத்மாவிற்கு என்னுடைய பவித்தரமானக் காதலை எடுத்துச் சொல்லாதா? எனும் ஆன்ம அழுகையோடு அழுது கொண்டே இருந்தே.

Views: 672