டிக்டேசன்

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner

ஒன்று தசம் சொச்சம் கிலோகிராம் நிறையுள்ள மூளையின் வேலை செய்கின்ற அத்தனை சதவீத பகுதிக்குள்ளும் மதனுக்கு நிறைந்திருந்த ஒரே விடயம் 'நாளை பாடசாலைக்கு என்ன காரணத்தைச் சொல்லி கட்டடிக்கலாம்' என்பது தான். அதற்காக அவனது மூளை தன் அறிவுக்குத் தகுந்த பல வழிகளை முன்மொழிந்திருந்தது. கமக்கட்டுக்குள் உரித்த வெங்காயத்தை சில மணி நேரங்களுக்கு வைத்திருந்தால் அரை நாளுக்குள் காய்ச்சல் நிச்சயமாக வரும் என்பது அவ் முன்மொழிவுகளுக்குள் மிகவும் வீரியம் கூடியது. ஆனால் அவன் மேற்கொண்ட எல்லா முன்னெடுப்புக்களுமே, 2011 வேள்ட் கப் பைனலில் மஹேல செஞ்சரி அடித்தது போல எந்த வித பலனையும் அவனுக்கு கொடுக்கவில்லை. வாய்த்தால் வாய்க்கட்டும்  என்று எண்ணியவாறு இறுதி முயற்சியாக, 'மாமி.... இண்டைக்கு காலமை பெஞ்ச தூறல் மழைக்கை நான் நனைஞ்சிட்டன். அதனால தானோ தெரியேலை. எனக்கு தலை சரியாய் இடிக்குது. நாளைக்கு என்னண்டு ஸ்கூலுக்கு போறதெண்டு தெரியேலை' என்று தன் இறுதி அஸ்திரத்தை மாமி மீது பிரயோகித்தான். இந்த அஸ்திரம் எல்லாம் அம்மாவிடம் துளியும் வேலை செய்யாது என்பது அவனுக்குத் தெரியும். 

'பனடோல் ரண்டை குடிச்சிட்டு படியுங்கோ. மாமி இஞ்சி போட்டு தேத்தண்ணி ஊத்தித் தாறன். அதையும் குடிச்சால் தலையிடியெல்லாம் இல்லாமல் போயிடும்.' மாமியிடமிருந்து இப்படியொரு மெடிக்கல் பிறிஸ்கிறிப்சனை எதிர்பாராத மதன் தன் முயற்சிகள் சகலதும் பலனற்றுப் போய் நிராயுதபாணியாக நின்றான். 'எல்லாம் செய்து பாத்தாச்சு. இனியென்ன வருவது வரட்டும்.' என்று எண்ணியவாறு மீண்டும் அந்த ஆங்கிலப் பாடப் புத்தகத்தை தூக்கிக் கொண்டு ஹோலுக்கு நடந்தான். நாளைய நாள் பாடசாலையின் நான்காம் பாட வேளையை நினைக்கும் போது அவனுக்கு உண்மையிலேயே வயிற்றுக்குள் ஏதேதோ செய்தது.

மதன் ஊரிலுள்ள சாதாரண பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தரம் வரை படித்து ஸ்கொலசிப்பில் பாடசாலையிலேயே நல்ல புள்ளிகள் பெற்று சித்தியடைந்து இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையில் எட்டாம் தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஆகா ஓகோ என்று சொல்லுமளவுக்கு கெட்டிக்காரனில்லை ஆனால் கெட்டிக்காரன். ஏழாம் தரத்தின் இரண்டாம் தவணை இறுதி கணித பாடப் பரீட்சையில் பின்னக் கணக்கில் விட்ட கெயலஸ் மிஸ்ரேக்கால் பன்னிரண்டாம் பிள்ளைக்கு போய்விட்டான். மற்றப்படி நாற்பது பேருள்ள அந்த வகுப்பிலே தவணைப் பரீட்சைகளில் அவன் இதுவரை பத்தாம் பிள்ளையைவிட குறைவாக வந்ததில்லை. அந்தப் பாடசாலையில் தவணைப் பரீட்சைகளில் பத்தாம் பிள்ளைக்குள் தனது இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதென்பது, ஒரு கதாநாயகி கவர்ச்சியே காட்டாமல் ஐந்து வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் நிலைத்திருப்பதை விட கடினமானது. இவற்றை விட அவன் கொஞ்சம் சுமாராக சித்திரம் கீறுவான். நன்றாக புத்தகங்கள் வாசிப்பான். பாடசாலை மட்டத்திலும் ஊர் மட்டத்திலும் சில பரிசில்களை பெறுமளவுக்கு பேச்சுத் திறமையும் அவனிடமிருக்கிறது.  

ஆனால் இத்தனை சர்வ வல்லமை வாய்ந்த இந்த மதனுக்கு இருக்கின்ற ஒரே பிரச்சினை இந்த ஆங்கில டிக்டேசன். அதற்காக அவன் ஆங்கிலத்தில் மட்டம் என்றில்லை. எப்போதாவது இருந்துவிட்டு அக்டிவ் வொய்சை பசிவ் வொய்சாக மாற்றுவதில் விடுகின்ற மோட்டுத்தனமான பிழைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அவனின் ஆங்கில அறிவில் பிழை சொல்வதற்கு அவ்வளவாக எதுவும் இல்லை. ஆனால் ஆங்கில டிக்டேசன் என்று வந்துவிட்டால் மட்டும் அவனுக்கு உள்ள நாட்டுச் சனியெல்லாம் வந்து பிடித்துவிடும். ஏனோ அவனால் இன்றுவரை இந்த ஆங்கில டிக்டேசனுக்குள் இருக்கின்ற சூட்;சுமத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

'சூரியனுக்கு 's..u..n..' 'சண்'. மகனுக்கு 's...o..n..' 'சண்'. பெரியப்பா சண்முகசுந்தரத்தின் பெயரில் வருகின்ற 'சண்'ணுக்கு 's...h..a..n..' என்று வருகிறது. அப்படியென்றால் சரியான இடத்தில், சரியாக வரவேண்டிய 'சண்'ணை எப்படிக் கண்டுபிடிப்பது...?' இது மதனுடைய ஒரு கேள்வி. அவனின் இப்படியான கேள்விகளுக்கு பெரும்பாலும் இன்றுவரை அவனைத் திருப்திப் படுத்தும்படியாக யாரும் பதில் சொல்லவில்லை. அல்லது இவனுக்கு பதில் சொன்னால் விடிந்துவிடும் என்பதால் எவரும் பதில் சொல்ல முன்வரவில்லை. இதனால் ஆங்கில டிக்டேசனின் மர்மம் ஏதோ ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி இருக்கின்ற பெருங் குகையில் வசிக்கின்ற அரக்கனின் உச்சி மண்டையில் தான் இருக்கிறது என்றும் தான் வாழ்நாளில் அதை அடையவே முடியாது என்றும் முற்றுமுழுதாக இன்றுவரை நம்பிக் கொண்டிருக்கின்றான் மதன்.

கதை இவ்வாறிருக்க, இந்த வருட ஆரம்பத்திலிருந்து அவனது ஆங்கில டிக்டேசனுக்கு புதிதாக இன்னொரு பிரச்சினையும் வந்து சேர்ந்து கொண்டது. அது தான் அவனது வகுப்பின் புதிய ஆங்கில ஆசிரியர் சிவகுமார். பெயரைக் கேட்டதும் 'கந்தன் கருணை' படத்தில் வருகின்ற சிவகுமார் போல வெள்ளையாய், பால் வடியும் முகமும் நெற்றியில் திருநீற்றுப் பூச்சுமாக வந்து 'மாணவச் செல்வங்களே...! எல்லோரும் வந்து அமருங்கள். நாம் இன்று ஆங்கிலத்தில் பாஸ்ட் பாட்டிசிப்பிள் பற்றிப் படிப்போம்' என்றெல்லாம் சொல்லுவார் என்று தப்பாக நினைத்து விடாதீர்கள். இவற்றுக்கு நூறு வீதம் நேர்மாறானவர் தான் சிவா சேர் என்கின்ற இந்த சிவகுமார் ஆசிரியர். கறுத்த பருத்த உருவம். உயரம் கிட்டத்தட்ட ஆறு அடி இருக்கும். உண்மையில் அவர் ஓங்கி அடித்தால் குறைந்தது இரண்டரை டண் வெயிட்டாவது இருக்கும். அவரிடம் முறையாக வாங்கியவர்களிடம் கேட்டால் அதன் சரியான பெறுமானத்தை அறிந்து கொள்ளலாம். இது போதாதென்று முகத்திலே பெரிய வீரப்பன் மீசை வேறு. அவரைப் பார்த்ததுமே இருக்கின்ற ஆங்கில அறிவுடன் சேர்த்து தமிழறிவும் கூட மறந்து போவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. கல்லடி பட்டு நொண்டிக் கொண்டு வந்தவனை விசர்நாய் துரத்திய கதையாகிவிட்டது இப்போது மதனுடைய நிலைமை.

மதனைக் ஹீரோவாகக் கொண்ட இந்தக் கதையின் ஒரே வில்லனாகிய சிவகுமார் ஆசிரியர் மாணவச் செல்வங்களின் ஆங்கில அறிவை வளர்ப்பதற்காக கையிலெடுத்திருக்கின்ற சக்திவாய்ந்த ஆயுதம் தான் 'டிக்டேசன்'. ஒவ்வொரு மாதத்தினதும் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களின் வியாழக் கிழமைகளில் ஆங்கில பாட வேளைகளில் டிக்டேசன் நடைபெறும். ஒவ்வொரு டிக்டேசனும் இருபத்தைந்து சொற்களை உள்ளடக்கியிருக்கும். இவ் டிக்டேசனுக்கான சொற்கள் அதுவரை படிப்பித்த பாடப் பகுதிக்குள் எங்கும் இருக்கலாம். ஒருவர் அதிகமாக ஐந்து பிழைகள் விடலாம். அதாவது சரிகளின் எண்ணிக்கை இருபது அல்லது அதற்கு மேலே என்றால் சிவா சேரின் பூசையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இல்லை என்றால், அடுத்த பத்து பிழைகளுக்கு ஒவ்வொரு பிழைக்கும் ஒரு அடி வீதமும், அடுத்த ஐந்து பிழைகளுக்கு ஒரு பிழைக்கு இரண்டு அடிகள் வீதமும் இறுதி ஐந்து பிழைகளுக்கும் ஒரு பிழைக்கு மூன்று அடிகள் வீதமும் வழங்கப்படும். அடிப்பதற்கான பிரம்புகளையும் வகுப்பினரே தயார் செய்ய வேண்டும். அந்த பிரம்புகள் தரமானவையாக இல்லாத பட்சத்தில் வகுப்பு மொனிட்டருக்கு மூன்று அடிகள் வழங்கப்படும். இந்த மூன்றும் எக்ஸ்ரா. அதாவது கிட்டத்தட்ட போனஸ் மாதிரி. இது தான் சிவா சேரின் டிக்டேசன் கொம்பிரிசனுக்கான ரேம்ஸ் அன்ட் கெண்டிசன்ஸ். 'அது ஏன் வியாழக் கிழமைகளில டிக்டேசன் வைக்கிறது?' போன்ற கேள்விகளுக்கு சிவா சேரிடம் மட்டுமே சரியான பதிலுண்டு. இதே கேள்வியை மதனின் வகுப்பிலுள்ள எழுமாற்றான ஒருவரிடம் கேட்டால், 'மிச்ச எல்லா நாட்கள்லயும் மற்ற வகுப்புகளுக்கு இதே டிக்டேசன் இருக்கு. ஒரே நாள்ல ரண்டு வகுப்புக்கு அடிச்சால் வீரப்பர் களைச்சுப் போடுவாராம்' என்று பதிலளிப்பர். இங்கு வீரப்பர் என்பது சாட்ஷாத்  சிவகுமார் ஆசிரியர் தான் 

இந்த வருடத்தில் இதுவரை நடந்த டிக்டேசன்களில் மதன் வாங்கிய அடிகளை கணக்கிட்டுப் பார்த்தால், தற்போதைய அவனது அடிகளின் சராசரி 7.3. அதிகப் படியாக இருபத்தைந்துக்கு ஒன்பது சரிகள் மட்டுமே எடுத்து பன்னிரண்டு அடிகள் வாங்கியிருக்கிறான். இரண்டு தடவைகள் அவனே எதிர்பார்க்காத வகையில் பதினெட்டு சரிகள் எடுத்திருக்கின்றான். அதேபோல 'டிக்டேசன்' என்பதையே பிழையாய் எழுதி எக்ஸ்ராவாக வாங்கிக் கட்டிய வீர வரலாறுகளும் மதனுடைய டிக்டேசன் சரித்திரத்தில் உண்டு. 

நாளைய தினம் இந்த மாதத்தின் இரண்டாவது வியாழக் கிழமை. இந்த இரண்டாம் தவணையினுடைய இறுதி வியாழக் கிழமையும் இது தான். எனவே 'ஒரு மாதிரி நாளைய நாளைக் கடத்திவிட்டால், பிறகு ரேம் எக்சாம், அதுக்குப் பிறகு ஒரு மாதம் லீவு எண்டு ஒண்டரை மாதத்துக்கு வீரப்பரின் பயமில்லாமல் இருக்கலாம்' இதுதான் மதனுடைய நாளைய நாள் பாடசாலை கட்டடிப்புக்கான நோக்கம். ஆனால் அவன் எப்படி முயன்றும் அது சரிவரவே இல்லை.

கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஆங்கில புத்தகத்துக்கு முன்னால் இருந்தும் அவனுக்கு தலையினுள் எதுவும் ஏறியதாகத் தெரியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் ரியூசனில் நடைபெறவிருக்கின்ற சமூகக்கல்வியும் வரலாறும் பரீட்சைக்காக மூளைக்குள் ஏற்றிய  துட்டகைமுனுவும், அனுராதபுர இராசதானியும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். மாமி கொடுத்த இஞ்சி பிளேன் ரீயால் அவனது நித்திரையை வெறும் ஒரு மணி நேரமே தாமதிக்க வைக்க முடிந்தது. நேரம் இரவு பதினொரு மணியாவதற்கு முதலேயே அவன் மேசையிலே தூங்கிப் போய்விட்டான். மதனது கனவிலே அன்று வீரப்பர் (எ) சிவா சேர் தன் நீண்ட மீசையை முறுக்கியவாறு சூரனாக காட்சியளித்தார். மதனோ ஆறுதலை முருகனாகி அவரை வேலால் குத்தினான். இன்னொரு தடவை அவர் எல்லாளனாகவும் இவன் துட்டகைமுனுவாகவும் உருமாறி துவந்த யுத்தம் செய்தார்கள். இந்த கனவு யுத்தத்தில் வென்றதென்னவோ எல்லாளன் தான். இவற்றைத் தவிர சோம்பியாக, நயனா வீட்டு அல்சேசன் நாயாக, 'பாளயத்து அம்மன்' படத்தில் வருகின்ற சைத்தான் சரண் ராஜ்சாக என்று கமலையே விஞ்சுமளவுக்கு பலவித கெட்டப்புகளில் சிவா சேர் இரவு முழுவதும் மதனுடைய கனவில் வந்து அவனைப் பயமுறுத்தினார்.

'தம்பி இண்டைக்கு டிக்டேசன் எல்லோ. எழும்பிப் படியுங்கோ..' அம்மாவின் சுப்பிரபாதம் அவனை படுக்கையிலிருந்து எழுப்பியது. டிக்டேசன் தொடர்பான நிபந்தனைகளோ அல்லது அடிவாங்குவதில்   இவனுக்கு இருக்கின்ற 'நல்ல' அவரேச், ஸ்ரைக்ரேற் பற்றிய விபரங்களோ அம்மாவுக்கு இன்னும் தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தால், இந்த அதிகாலை சுப்ரபாதம் வேறு லெவலில் இருந்திருக்கும். முகத்தைக் கழுவிவிட்டு கடமைக்கு ஆங்கில புத்தகத்தைத் தட்டினான். இரவு ஞாபகம் இருந்த சொற்கள் கூட இப்போது மறந்து விட்டது போல அவனுக்கு தோன்றியது. 'ஒருவேளை இண்டைக்கு தான் கைஸ்கோர் அடிக்கப்போறனோ தெரியேலை' என்று எண்ணமிட்டவாறு கொஞ்ச நேரத்தை மேசையிலே கடத்திவிட்டு, பாடசாலைக்கு ஆயத்தமானான்.

நேரம் சரியாக 7.15. அவன் பாடசாலை போகின்ற பஸ் ஆடி அசைந்தபடி வந்து அவனது தரிப்பிடத்தில் நின்றது. 'இண்டைக்கெண்டு பாத்து கரக்ட் ரைமுக்கு கொண்டு வந்திடுவாங்கள்' என்று மனதுக்குள்ளே திட்டியவாறு பஸ் ஏறினான்;. பஸ் நகர ஆரம்பித்தது. கொம்பிரிசனுக்கு 'pந'யா அல்லது 'pi'யா வரும் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்த மதனுக்கு 'இந்த பஸ் அரை வழியிலேயே பழுதாகி நின்று விட்டால் எப்படி இருக்கும்' என்ற எண்ணம் தோன்றியது. உடனேயே கொம்பிரிசனுக்கான பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டு சிவபெருமான் தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு முதல் எங்கேயோ புதிதாக கேள்விப்பட்ட பாம்பாட்டிச் சித்தர் வரை தனக்கு தெரிந்த வரம் கொடுப்பவர்களிடமெல்லாம் பாடசாலை போவதற்கிடையில் பஸ்சை எப்படியாவது பழுதாக்கிவிடும்படி மன்றாடத் தொடங்கினான் மதன்.

அவனது வேண்டுதல் சிவபெருமானுக்கு கேட்டதோ அல்லது பாம்பாட்டிச் சித்தர் தான் அவனுக்கு அருளினாரோ என்று சரியாகத் தெரியாது. ஆனால் அவனது பஸ் நல்லூர் கோயில் தெற்கு வீதியில் அப்படியே நின்று விட்டது. 'எஞ்சின் பழுதாய் போனதால இனி பஸ் இண்டைக்கு ஓடாது' என்ற ரைவரின் சொற்களைக் கேட்டபோது தான் மதன் 'தேன் வந்த பாயுது காதினிலே' என்ற வரியின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்தான். உடனடியாகப் போய் நல்லூர் முருகனை சாட்ஷhங்கமாக விழுந்து வணங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். சில நிமிடங்களிலேயே எதிர்த் திசையால் வீடு நோக்கிச் செல்லும் மினிவானைக் கண்டதும் 'அடுத்த கிழமை போவம்' என்று தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு வீட்டுக்கு பஸ் ஏறினான். அவனுடன் கொஞ்சப் பேர் வீட்டுக்குப் புறப்பட மிகுதிப்பேர் லைன் பஸ்சிலாவது பாடசாலைக்குப் போவது என்ற முடிவுடன் நடக்கத் தொடங்கினர். சிவா சேரின் இடதுகை தடி வீச்சுப் பற்றி அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. 

ஏறத்தாள 9.00 மணிக்கு மதன் வீட்டை அடைந்தான். வீட்டில் மாமி மட்டுமே இருந்தார். அவரை ஏதேதோ சொல்லிச் சமாளித்து விட்டான். அவனின் சந்தோசத்தை அவனாலேயே அளவிட முடியவில்லை. ஸ்கொலசிப் றிசள்ஸ் வந்த நாளுக்கு அடுத்ததாக அவன் மிகுந்த சந்தோசமாக இருந்தது இன்றைய நாளாகத் தான் இருக்கும். 

'இப்போது இரண்டாம் பாடம் நடக்கும்.... இப்போது மூன்றாம் பாடம்..... இதோ மூன்றாம் பாடம் முடிவதற்கான மணி அடிக்கிறது..... இனி நான்காம் பாடம்.... இதோ வீரப்பர் மீசையை தடவியவாறு வகுப்புக்கு வருகிறார்..... டிக்டேசன் ஆரம்பிக்கிறது..... இதோ சரி, பிழை திருத்தப்படுகிறது.... பிழை விட்டவர்களுக்கு வீரப்பர் தனது இடது கையால் வெழுத்து வாங்குகிறார்...... அப்பர் கட், சுவிச் nஷhட், இடையிடையே கெலிகொப்ரர் என்று எல்லா அடிகளிலும் வாண வேடிக்கை காட்டுகின்றார் வீரப்பர்...... ஆனால் நான் இன்று அடி வாங்கவில்லை......' இதை நினைக்கும் போது மதனுக்கு கடந்த வருடம் அவனது பிறந்த நாளுக்கு நயனா வந்து வாழ்த்துச் சொன்ன போது ஏற்பட்ட அந்த இனம்புரியாத சந்தோசம் கலந்த சிலிர்ப்பு மீண்டும் ஏற்பட்டது.

அடுத்து 'இன்று ஆங்கில பாடவேளையில் என்ன நடந்தது..? யார் யாருக்கு எத்தனை அடிகள் கிடைத்தன...? குறிப்பாக அந்தக் கட்டையன் குமரன் எத்தனை அடிகள் வாங்கினான்..? என்றெல்லாம் அறியவேண்டும்' என்ற ஆர்வம் மதனைத் தொற்றிக் கொண்டது. அதற்காக மாலை ரியூசனில் மயூரனை காணும் நேரத்துக்காக காத்திருந்தான். மயூரனும் மதனுடைய பாடசாலையில் அவனுடைய வகுப்பில் தான் படிக்கின்றான். ஆனால் அவன் பிறைவேற் வானில் பாடசாலை செல்வதால், 'பஸ் பிரச்சினைகளால் பாடசாலை கட்டடித்தல்' போன்ற இனிய தருணங்களை தன் வாழ்க்கையிலேயே கண்டிராதவன்.

மாலை 4.00 மணி ரியூசனுக்கு 3.30ற்கே போய்விட்டான் மதன். 4.10ற்கு மயூரன் வந்ததுமே அவனிடம் மதன் முகம் முழுக்க சந்தோசத்துடன் கேட்ட முதல் கேள்வி,

'இண்டைக்கு இங்கிலிஸ் டிக்டேசன் எப்பிடி...?'

'அட நீ வேற... இண்டைக்கு வீரப்பர் பள்ளிக்கூடத்துக்கு வரேல்லையடா.....' இது மயூரன்.

'என்னடா சொல்லுறாய்...? சும்மா புளுகாதை...' இது நம்மாள் மதன்.

'உண்மையாய் தானடா. அவர் இண்டைக்கு எங்கயோ கலியாண வீட்டுக்கு போட்டாராம். எங்களுக்கு இண்டைக்கு நடக்க இருந்த டிக்டேசன் நாளைக்கு நடக்குமாம். நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு வராத ஆக்களை அவர் ரேம் எக்சாம் எழுத விடமாட்டாராம். எண்டு பதினோராம் ஆண்டு அண்ணா ஒராளிட்ட சொல்லி விட்டிருக்கிறார்..' என்று சொல்லி முடித்தான் மயூரன்

'அட கடவுளே..... காலமையே நல்லூருக்கு போட்டு வந்திருக்கலாமோ...?' என்று மனதுக்குள்ளே தன்னைத் தானே திட்டிக் கொண்ட மதனுக்கு உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.
எதுவித பதிலும் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்த மதனைப் பார்த்து 'என்னடா பேசாமல் நிக்கிறாய்...?' என்று கேட்டுவிட்டு நகர ஆரம்பித்தான் மயூரன்.
'இல்லையடா... கொம்பிரிசனுக்கு 'pe'வருமா..? அல்லது 'pi'வருமா..? ' என்ற மதனின் பதில் கேள்வியை எதிர்பாhக்காத மயூரன் நின்று நிதானமாக திரும்பி அவனைப் பாhத்தான். ஒரு போருக்கு ஆயத்தமாகின்ற களை மதனது முகத்தில் வியர்வைத் துளிகளுக்கு நடுவே தெரிந்தது.


 
Views: 1162