தந்ததாது (தொடர்கதை – பாகம் 03)

எழுத்தாளர் : வி.துலாஞ்சனன்மின்னஞ்சல் முகவரி: vthulans@thambiluvil.infoBanner

முந்தைய பாகங்கள்:

பாகம் 01 (  http://www.uvangal.com/Home/getPostView/3284 )
பாகம் 02 ( http://www.uvangal.com/Home/getPostView/3301 )

விடிகாலைச்சூரியன் சிறுகுழந்தையின் வருடல் போல சுட்டெரிக்காத மென்கதிர்கள் உடலைத் தழுவி சிலிர்க்கவைத்துக் கொண்டிருந்தன. சிங்கைநல்லூர் கந்தசுவாமி கோயிலின் வாசலில் விஜயக்கோன் வீதியன் ஆகியோருடன் புதிதாக ஜெயபாலனும் நின்றுகொண்டிருந்தான். ஏழுகோரளையில் சீதாவாக்கைப் படையிடமிருந்து தப்பிய வீதிய பண்டாரத்தின் சிறுபடை, இரவு தான் ஜெயபாலன் தலைமையில் அங்கு வந்து சேர்ந்திருந்தது. ஜெயபாலன் குழுவினரின் வருகை, வீதியனுக்கு இனந்தெரியாத உற்சாகமொன்றை ஊட்டியிருந்ததை விஜயக்கோன் கண்டான். வீதியன் நிலைமை இவ்வாறிருக்க, அன்று யாழ்ப்பாணாயன் பட்டினத்தில் ஆரம்பமாக இருந்த போர்ப்பயிற்சி, அங்கு நின்ற வீரர்களுக்கும் சுற்றியிருந்த மக்களுக்கும் கூட இன்னதென்று தெரியாத கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்தியிருந்தது.

 

வீதியோரம் போதையில் விழுந்து கிடந்த ஒருவன் சண்டைபோடுவதாக அபிநயம் பிடித்து தன் தலைமையில் யாழ்ப்பாணாயன் படை வென்றுவிட்டதாய்ச் சொல்லி, தெருநாயைக் கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தான்.  எடுத்ததற்கெல்லாம் வாயாலேயே வடை சுடும் தம் நண்பனொருவனைப் பலவந்தமாக இழுத்து வந்து வீரர்களிடம் ஒப்படைத்து, போரிட அழைத்துச்செல்லும்படி சொன்னது ஒரு இளவட்டம். வீட்டுத்திண்ணைகளிலும் மரத்தடிகளிலும் அமர்ந்திருந்த சில கிழங்கள், தாம்பூலம் தரித்தபடி “இதென்ன அதிசயம், அந்தக் காலத்திலே…” என்று ஆரம்பித்து, தாம் கனவிலும் போகாத போர்க்களங்கள் பற்றியும் போர்கள் பற்றியும் நேரே பார்த்தது போல கதை அளந்து கொண்டு இருந்தன. தலையில் நீர்க்குடம் சுமந்து சென்ற இளம்பெண்களை வம்பிழுத்தார்கள் சில வீரர்கள். தம் தோழியரிடம் அவர்களைக் கிண்டலடித்து ஏதோ சொல்லிச் சிரித்தபடி சென்றனர் அந்த இளமங்கையர். எங்கும் மகிழ்ச்சி. எதிலும் கொண்டாட்டம்.

 

ஆலய வீதியில் ஆரியச்சக்கரவர்த்தியின் படைவீரர்கள் வந்து திரண்டு கொண்டிருந்தார்கள். சிலர் வீதியனை அடையாளங் கண்டுகொண்டு அருகில் வந்து முகமன் கூறிச் சென்றார்கள். “சுபமான உதயமாகட்டும் துமனி.” என்றபடியே கவசமணிந்து போர்க்கோலத்தில் நெருங்கிய ஒரு வீரன் தலைக்கவசத்தைக் கழற்றிப் புன்னகைத்தான். சேனாதிபதி பெரியபிள்ளை பண்டாரம். “வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், பச்சிலைப்பாலை நான்கு பகுதி வீரர்களும் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு நாழிகைக்குள் எல்லோரும் கூடிவிடுவோம். அடங்காப்பற்று வீரர் படை மாலைக்குள் வந்துவிடும். சிங்கைநல்லூர்க் கந்தசுவாமிக்கு முறைப்படி வழிபாடுகள் செய்துவிட்டு பயிற்சியைத் தொடங்கலாம் என்று அரச ஆணை.” என்றான் பெரியபிள்ளை. ஆமோதித்துத் தலையாட்டிய வீதியன், “அரசர் வரவில்லையா?” என்று கேட்டான்.

 

சுற்றுமுற்றும் பார்வையைச் சுழற்றிய பெரியபிள்ளை மெல்ல அவனிடம் குனிந்து, “பொன்னாலைப் பகுதியில் பறங்கி வீரர்கள் ஊடுருவியிருப்பதாகக் செய்தி. முன்னே அறிவிக்கவில்லை என்ற கோபத்தில் மன்னர் ஒற்றர்களைத் திட்டிக்கொண்டிருக்கிறார். இப்போது அப்பகுதி உடையார், அடைப்பனாருடன் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்” என்ற பின் இயல்பான குரலில் “எனவே இரண்டு நாழிகைகளில் மன்னர் வந்துவிடுவார். தாங்கள் விரும்பினால் பூசையிலும் கலந்துகொள்ளலாம்.” என்றான். “பரவாயில்லை. அதிகாலைப்பூசைக்கே சென்றுவிட்டேன். நான் பயிற்சிக்களத்தில் காத்திருக்கிறேன்.” என்றான் வீதியன். “அப்படியென்றால் சரி. பூசை முடித்து வருகின்றேன். அடேய். இவர்களுடன் துணைக்குச் செல்” என்று அருகில் நின்ற வீரனிடம் கூறி, அவர்களிடம் விடைபெற்று நகர்ந்தான் பெரியபிள்ளை.

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

சிங்கைநல்லூர்க் கோட்டையின் வடக்கு வாசலில் இருந்தது பயிற்சிக்கள மைதானம். சட்டநாதர் கோயிலுக்கு சற்றுத்தள்ளி, பூதக்குளத்தின் கரையில் அது வடக்கு தெற்காகப் பரந்து கிடந்தது. ஓரமாக இலாயத்தில் கட்டப்பட்டிருந்த குதிரைப்படையும், ஆனைப்பந்தியிலிருந்து வரிசையாக வந்துகொண்டிருந்த யானைகளும் அங்கு பயிற்சிக்குத் தயாராகிக்கொண்டிருந்தன. அவற்றின் சிறுநீரும் இலத்தியும் கலந்த மெல்லிய மணம் அந்தப்பகுதி முழுவதும் பரந்திருந்தது.

 

களத்தின் மேற்கு மூலையில் பச்சை மலை போல ஒரு புளியமரம் பிரமாண்டமாக நின்றது. காலைச்சூரியனை புளியமரத்தின் கிளைகள் ஆங்காங்கே மறைத்து தரையில் ஒளிக்கோலங்கள் போட்டிருந்தன. புளியமரத்தடியில்  கிடந்த தென்னைமரக்குற்றியில் வீதியன் அமர்ந்துகொண்டான். அவர்களுக்குத் துணையாக வந்த யாழ்ப்பாணப் படைவீரன் தரையில் உட்கார ஏனையவர்கள் சுற்றுமுற்றும் புதினம் பார்க்கத் தொடங்கினார்கள். புளியமரத்தை ஒட்டியபடி, தெற்குப்புறமாக ஆயுதப்பட்டறை  நீளமாக இருந்தது. அங்கு கொல்லரின் சுத்தியல், ஆயுதங்களை அடித்து வளைக்கும் ஒலி, நடனமாடும் மங்கையின் சலங்கையொலி எனக் கேட்டுக்கொண்டிருந்தது. புளியமரத்தின் இந்தப்புறம் சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருந்த ஒரு குடிலைப் பார்த்த வீதியன் “அது என்ன?” என்று கேட்டான். தரையில் குச்சியொன்றால் கோலமிட்டபடி நிமிர்ந்து பார்த்த அந்த வீரன். “அது வெடிமருந்துக் களஞ்சியம். துவக்கை வெடிக்கப் பயன்படுத்தும் வெடிமருந்தை அங்கு வைப்பது வழக்கம்.” என்றான்.

 

“பறங்கியரின் துவக்கு பலமிகுந்த ஆயுதம். எங்கள் படையில் பலருக்கும் தெரியாது. அதற்கென்றே சோனக வீரர்களை எங்கள் படையில் மன்னர் வைத்திருக்கிறார். அவர்கள் பறங்கியரை விட சிறப்பாகவே சுடுவார்கள். உங்களுக்கு துவக்கால் சுடத் தெரியுமா? எனக்கும் கற்றுத்தருவீர்களா?” என்று அவன் கேட்டான். வீதியன் பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.

 

இருந்தாற்போல “எல்லாரும் வருகிறார்கள். பூசை முடிந்துவிட்டது போலும்.” என்று சொல்லி எழுந்து தன் பின்புறத்தில் அப்பியிருந்த மண்ணைத் தட்டினான் அந்த வீரன். படைவீரர்கள் மெல்ல வந்து திரள ஆரம்பித்திருந்தனர். சிறிது நேரத்தில் தளபதி பெரியபிள்ளை பண்டாரம் பூசைத்தட்டுடன் வந்தான். “பயிற்சியைத் தொடங்கலாம் துமனி. கோயில் பிரசாதம். பெற்றுக்கொள்ளுங்கள்” என்றபடி அவன் தட்டை நீட்டினான். அதில் பழங்களும் மலர்களும் வைக்கப்பட்டிருந்தன. எரிந்துகொண்டிருந்த ஊதுவத்தியை  தொட்டு வணங்கிய வீதியன் ஒரு நெல்லிப்பழத்தை மட்டும் எடுத்துக்கொண்டான்.

 

பயிற்சிக்களம் ஆயிரக்கணக்கான படைவீரர்களின் தலையால் நிறைந்திருந்தது. இளரத்தங்கள். சிலர் தங்கள் நண்பர்களை, உறவினர்களை அக்கூட்டத்தில் கண்டுபிடித்து வம்பளந்துகொண்டு நின்றார்கள். இன்னும் சிலர் ஆயுதங்களை பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். ஓரிருவர் பயிற்சி வாட்சண்டைகளைத் தொடங்கி இருந்தார்கள். படையைக் கண்ணால் அளந்துகொண்டு இடுப்பில் கைவைத்தபடியே நின்ற வீதியன் “எத்தனை பேர்?” என்று கேட்டான். “”குதிரைகள் ஆயிரம், யானைகள் இருநூறு. வீரர்கள் மூவாயிரம். தங்கள் வீரர்கள் முந்நூறு பேர். அடங்காப்பற்றும் சேர்ந்தால் சுமார் எண்ணாயிரம்” என்றான் பெரியபிள்ளை. அவன் பக்கம் திரும்பிய வீதியன்,   “விரைவும் வேகமுமே படையொன்றின் வெற்றியைத் தீர்மானிப்பவை. படைகளை அணிவகுக்கச் சொல்லும் ஆணையை இடுங்கள். எத்தனை சீக்கிரத்தில் அணிவகுக்கிறார்கள் என்று பார்க்கலாம்” என்றான்.

 

தலையசைத்த பெரிய பண்டாரம் ஓங்கிய குரலில் அணிவகுக்கும் ஆணையை விடுத்தபடி முன்னகர்ந்தான். குதிரைகளும் யானைகளும் அங்குமிங்கும் நகர்ந்தன. காலாட்படை சீரான அடித்தாளங்களுடன் அணிவகுக்க ஆரம்பித்தது. நேர்கோடுகளும் சதுரங்களும் களத்தில் விரிந்தன. அந்த நேரத்தில் அடுக்கப்படும் அனைத்தையும் கலைக்கும் எதிர்விசை வெண்மேக உருவெடுத்து எழுந்து சூரியனை மறைத்து நகைத்தது. பிரபஞ்சப் பெருவிதியால் முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்த அந்தக்கணத்தை, காலம் அப்போது வந்தடைந்தது.

 

பெருஞ்சத்தத்துடன் வெடிமருந்து களஞ்சியக்குடில் வெடித்துச் சிதறியது. புளியமரத்தடியில் நின்ற வீதியனும் விஜயக்கோனும் சட்டென அப்பால் தரையில் விழுந்து உருண்டார்கள். புளியமரத்திலும் தீ பற்றிக்கொள்ள  கீறல் காயங்களுடன் எழுந்த அவர்கள் வாளை உருவிக்கொண்டார்கள். “கொலை முயற்சி. உங்களைத் தான் கொல்ல முயன்றிருக்கிறார்கள்” நடுங்கும் குரலில் ஜெயபாலன் குளறினான். அவன் தலையில் காயம்பட்டு இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.  அதிர்ச்சி விலகாத முகத்துடன் அவனையும் படைகளையும் மாறிமாறிப் பார்த்தான் வீதியன்.

 

அணிவகுக்க ஆரம்பித்த படையிலோ பெருங்குழப்பம் ஏற்பட்டிருந்தது. வெடிச்சத்தம் கேட்டதுமே போர்ப்பயிற்சியில் அது ஒரு ஒத்திகை என்று தான் வீரர்களின் மனம் சொல்லிக்கொண்டது. ஆனால், வெடித்தது வெடிபொருட்களஞ்சியம் என்பதையும் ஆயுதப்பட்டறையும் புளியமரத்தின் ஒருபுறமும் தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதையும், முன்னணியில் நின்ற ஓரிருவருக்கு எரிகாயம் வந்திருப்பதையும் கண்டதும், அவர்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். சிலர் தீயை அணைப்பதற்காக நீர்க்குடங்களையும் குளத்தையும் நோக்கி ஓடினர். அணிவகுப்பில் நின்ற சிலர் யாழ்ப்பாணாயன் அரசுக்கு எதிராக எதிரி நாட்டரசன் யாரோ சதி செய்திருப்பதாகக்  கூவினர். படைப்பயிற்சி என்ற பெயரில் அனைத்து வீரர்களையும் ஒன்றுதிரட்டி மொத்தமாக யாழ்ப்பாணாயன் படையை அழித்துக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக இன்னும் சிலர் கத்தினர். “ஆரியச்சக்கரவர்த்தியின் கோட்டைக்குள் வந்து வஞ்சம் தீர்க்கும் தைரியம் உள்ளவன் யார்?” என்ற கூக்குரல் எழுந்தது. கூச்சலையெல்லாம் மீறி பெருஞ்சத்தத்தில் எழுந்தது ஒருகுரல். “வேறு யார்? சிங்கள நாட்டிலிருந்து நண்பன் வேடமிட்டு வந்திருக்கும் அந்த வீதிய பண்டாரக் கும்பல் தான். கொல்லுங்கள் அந்தத் துரோகிகளை!”

 

ஒருகணம் அசையாது ஸ்தம்பித்து நின்ற படை, அடுத்தகணமே தாம் எதிர்பார்த்தது அந்தப் பதிலைத் தான் என்பது போல பெருங்கூச்சலுடன் புளியமரத்தடியை நோக்கி ஓடியது. அக்கூட்டத்தில் ஒருவனாக நின்ற பெரியபிள்ளை பண்டாரமோ அதிர்ச்சியுடன் வீதியனைப் பார்த்தான். வீதிய பண்டாரத்தின் சிறுபடை, உடனே வீதியனைச் சுற்றி அரண் அமைப்பதையும் வீதியனும் அவன் துணைவனும் வாளை உருவுவதைக் கண்டதும் பெரியபிள்ளைக்குச் சினம் தலைக்கேறியது. “நல்லூர்க் கந்தா, நண்பன் என்று வந்தவன் உண்மையில் எதிரியா?” அலையால் தூக்கிச் செல்லப்படுபவன் போல அவனும் தன் வாளை உருவி பல்லைக் கடித்துக்கொண்டே ஏனைய படைவீரர்களுடன் அவர்களை நோக்கி ஓடத்தொடங்கினான்.

 

படைவீரர்களுக்கு மத்தியில், கொஞ்ச நேரத்துக்கு முன் அன்போடு பழங்களை வழங்கிய தளபதி பெரியபிள்ளை, வாளை உருவிக்கொண்டு தம்மை நோக்கிப் பாய்வதை கண்டதும் ஒருகணம் உடைந்துபோனான் விஜயக்கோன். திரும்பி வீதியனின் கட்டளையை எதிர்நோக்கினான். வீதியன் அசையாத கண்களுடன் உருவிய வாளுடன் நின்றான். “இப்பெரிய படையை எதிர்த்து நாம் உயிரோடு மீளமுடியாது. முடிந்தவரை தற்காத்துக் கொள்ளுங்கள்.” என்றபடியே எதிரே பல்லைக் கடித்துக்கொண்டு ஓடிவந்த ஒருவீரனின் வாள்வீச்சிலிருந்து இலாவகமாக விலகினான் வீதிய பண்டாரம்.  

உறுமியபடி வேகமாக ஓடிவந்த பெரியபண்டாரம் ஒரு வீரனின் காலிடறி கீழே விழுந்து, பல கால்களால் மிதிக்கப்பட்டான்.பலத்தையெல்லாம் திரட்டி பெரியபிள்ளை எழுந்த போது, வீதியனையும் விஜயக்கோனையும் பெரும்படை சூழ்ந்திருப்பதையும் அடுத்தகணமே அது சிதறடிக்கப்பட்டு ஓடுவதையும் கண்டான். அவன் அங்கு ஓடி நெருங்குவதற்குள் எல்லாம் முடிந்திருந்தது. நூறுக்கும் மேல் படைவீரர்கள் கையும் காலும் தலையும் இழந்து துடித்துக்கொண்டிருந்தார்கள். இரத்தம் படிந்த வாளுடன் விஜயக்கோனின் தலையறுந்த உடல் கீழே கிடந்தது. அந்த உடலுக்கு மேல் மார்பில் குறுவாள் தாங்கி மாண்டுகிடந்தான் ஜெயபாலன்.

 

உடல் முழுதும் குருதி தெறித்து சிவப்பாக வழிய, ஓங்கிய கையில் வாளுடன் களங்கமற்ற கண்களுடன் நின்றான் வீதியன். பின்புறம் பெருத்த ஒலியுடன் வெடிமருந்துக் களஞ்சியம் மீண்டும் வெடித்தது. அனல்கங்குகளின் நடுவே இரத்தச்சிவப்பில் அவன் உடல் சூரியன் போல ஒளிவீசியது. ஒருகணம் தாங்கமுடியாத துக்கம் தொண்டையை அடைக்க, பெருந்தவறு ஏதோ நடந்துவிட்டது போல் பெரியபிள்ளையின் உள்ளம் பதறியது.

வீதியன் தள்ளாடியபடி விழுந்து முழங்காலில் நின்றான். கடைவாயில் குருதி வடிய, குனிந்த தலையை நிமிர்ந்து நோக்கி  பெரியபிள்ளையைப் பார்த்து ஏன் இப்படி என்று கேட்பது போல் கைகளை அசைத்தான். அப்படியே சரிந்து மல்லாந்து விழுந்தான். அப்போது தான் அவன் மார்பில் பாய்ந்திருந்த ஈட்டியைக் கவனித்தான் பெரியபிள்ளை.  வீதியனுக்குக் சற்று அப்பால், சில நிமிடங்களுக்கு முன் பெரியபிள்ளை கொடுத்த பழத்தட்டு தென்னங்குற்றி மீது அப்படியே இருந்தது. அதில் முன்பிருந்த ஊதுபத்திகள் இருக்கவில்லை என்பதை பெரியபிள்ளை சற்று நேரம் கழித்து தான் உணர்ந்தான். கலைந்த வீரர்களெல்லாம் திரும்பிவந்து அமைதியாக அவனைச் சூழ ஆரம்பித்திருந்தார்கள். அவர்களில் வீதியன் தரப்பினர் என்று எவரும் இருக்கவில்லை.

 

பறையும் சங்கும் முழங்க பெருவேகத்தில் அங்கு வந்து நின்றது ஆரியச்சக்கரவர்த்தியின் தேர். அதிலிருந்து பாய்ந்து இறங்கிய சங்கிலியனும் இராஜகுரு சோமசர்மாவும் அங்கு ஓடோடி வந்தனர். “யாரங்கே? தீயை அணையுங்கள். எங்கே வீதிய பண்டாரம்? பெரியபிள்ளை எங்கு சென்றாய்?” என்று கூவியபடியே ஓடிவந்தான் சங்கிலியன். பலரும் ஓரிடத்தில் கூடிநிற்பதைக் கண்டதுமே அவனுக்குப் புரிந்துவிட்டது. ஒருகணம் நெஞ்சுவிம்ம பாய்ந்து கூட்டத்தை விலக்கிய சங்கிலியன், அங்கே சடலங்களுக்கு மத்தியில் கிடந்த வீதியனைக் கண்டுவிட்டான்.  யாழ்ப்பாணாயன் பட்டினத்துக்குத் தஞ்சம் கோரி வந்த இலங்கைத்தீவின் மாவீரன் இரத்த வெள்ளத்தில் நனைந்து புழுதியில் பரிதாபமாகக் கிடந்தான். சங்கிலி உதட்டைக் கடித்தான். அவனை மீறி கண்ணீர் இருகண்ணிலும் பெருகியோடியது.

 

தயக்கத்துடன் அவனை நெருங்கிய பெரியபிள்ளை “திடீரென இவ்வாறு நிகழும் என எதிர்பார்க்கவில்லை அரசே. களஞ்சியம் தீப்பிடித்ததும் அதற்குக் காரணம் இவர் தான் என்று எல்லோரும் கருதிவிட்டார்கள்.” என்று இழுத்தான். “வாயை மூடும் பெரியபிள்ளை!” என்று பற்களைக் கடித்தான் சங்கிலியன். “வெடிமருந்து வெடித்ததுமே சிந்தித்திருக்கவேண்டாம்? களஞ்சியத்தை தீமூட்டி உங்களைக் கொல்லத் திட்டமிடுவோர் படைகளை தூரத்தில் நிற்கச்செய்து, இத்தனை அருகாகவா அதனருகே நின்றுகொண்டிருப்பார்கள்?” சங்கிலியனுக்கு மூச்சிரைத்தது. “எந்தச் சிக்கலான கணத்திலும் மிக விரைவாக சிந்தித்து மிகச்சரியான முடிவுகளை எடுப்பவன் தான் அறிவாளி. அப்படியே சிந்திக்க நேரமில்லாவிட்டாலும் பரவாயில்லை. எதிரிகளே என்றாலும் இத்தகைய தருணத்தில் சதிகாரர்களை சிறை பிடிப்பது தான் உண்மையான வீரம். ஈட்டியால் குத்திக் கொன்று வீசுவது அல்ல.” என்று இரைந்தான் சங்கிலியன்.

 

பாதி கருகி நின்ற புளியமரத்தின் கீழ், வீதியனது சகாக்களின் சடலங்கள் நிறைந்திருந்தன. பத்துப் பதினைந்து பேர் தான் குற்றுயிராகக் கிடந்தார்கள். சங்கிலி கைகாட்ட, அவர்களையும் தீக்காயம் பட்ட தம்மவர் சிலரையும், ஓரிருவர் ஆதுரசாலைக்கு தூக்கிக்கொண்டு ஓடினர். முன்னணியில் நின்ற சில குதிரைகளும் யானைகளும் எரிகாயத்தின் வலி தாங்காமல் இட்ட ஓலம் அப்பகுதியின் பயங்கரத்தை அதிகரித்தது. 

 

“ஆனால், அவர்கள் வாளை உருவி நின்றார்கள் அரசே. அதைக் கண்டதும் தான் படைவீரர்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்கள்.” என்று மெல்லச் சொன்னான் பெரியபிள்ளை. “முட்டாள் போல் உளறாதீர். இந்தப் பெரிய படையை வெறும் முந்நூறு பேராக எதிர்க்க இவர்கள் என்ன அத்தனை பெரிய மடையர்களா? நம் படையினரை அவர்கள் கொல்லமுயல்கிறார்கள் என்று நீங்கள் கருதியது போல், தங்களை நீங்கள் கொல்லமுயல்கிறீர்கள் என்று அவர்கள் சிந்திக்கக்கூடாதா என்ன?” என்று சங்கிலியன் மீண்டும் கத்தினான்.

 

“நன்கு திட்டமிடப்பட்ட சதி. மிகச்சிறப்பான காய்நகர்த்தல்கள். நரிகள். குள்ளநரிகள்” என்று தனக்குள் என முனகினான் சங்கிலி. அவன் சொல்வது புரியாமல் “என்றால்……” என்று இழுத்தான் பெரியபிள்ளை. “பறங்கியர்! பொன்னாலையில் பிடிபட்ட பறங்கி ஒற்றர்களிடம் இப்போது தான் செய்தி அறிந்தேன். இங்கிருந்தவை காங்கேசன்துறையில் பறங்கிக்கப்பல்களிலிருந்து நாம் சூறையாடிய சீனவெடிப்பொதிகள். வெடியை வெடிக்கச்செய்து வீதியரைக் கொன்று பழியை எம்மீது போடுவது பறங்கியரின் சதி. அதற்குப் பழிவாங்கும் சாக்கில் சீதாவாக்கையையும் கோட்டையையும் நம்முடன் மோதச்செய்வது பறங்கியர் திட்டம். வெடிவிபத்தில் தப்பியோரை நீங்கள் கொன்று, பறங்கிகளின் வேலையை இலகுவாக்கி விட்டீர்கள்! இப்போது நமக்கு வெடியும் இல்லை. வேதியனும் இல்லை. பறங்கியருக்கு ஒரேகல்லில் பலமாங்காய்கள்.” என்று பற்களைக் கடித்தான் சங்கிலியன்.

 

“பறங்கியரின் மிகப்பெரிய பகை ஒன்று அழிந்தது! நாமே அவரைக் கொன்றொழித்துவிட்டோம். நம் கையாலே நம் கண்ணைக் குத்திவிட்டோம். இலங்கைத்தீவுக்கு இனிக் கனவிலும் மீட்பில்லை” சங்கிலியன் தலையில் அடித்தபடி இடிந்துபோய் நின்றான். “நான் அஞ்சியது இதைத்தான் அரசே. கிரகநிலைகள் சரியில்லை என்றதும் போர்ப்பயிற்சியை நிறுத்தச்சொல்லி அரண்மனைக்கு இப்போது ஓடிவந்ததும் அதற்காகத் தான்” என்று அச்சத்துடன் சொன்னார் சோமசர்மா. “அதிதி தேவோ பவ என்பது வேதவாக்கு. விருந்தினரைக் கொன்றிருக்கிறோம். அதுவும் அடைக்கலம் கோரி வந்தவரைக் கொன்றிருக்கிறோம். பரிகாரமே இல்லாத பெரும்பாவம் இழைத்திருக்கிறோம். இந்த மண்ணை இனிப் பெரும்பழி சூழும்.”  என்று நடுங்கும் குரலில் சொன்னார் சோமசர்மா.

 

ஏதோ கேட்கவருவது போல் வெறித்த விழிகளுடன் வானத்தைப் பார்த்தபடி கிடந்தான் வீதியன். ஏமாற்றமும் ஏக்கமும் துயரமும் அந்த முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தன. இரத்தம் படர்ந்த வாளை அப்போதும் வலதுகரம் இறுக்கமாகப் பற்றிப் பிடித்திருந்தது. இடது கை விரல்கள் ஏன் என்ற கேள்வியுடன் விரிந்து நின்றன. போர்ப்பயிற்சிக்கு வந்த பெரும்படை  அவனைச் சுற்றி அமைதியாகக் கூடிநின்றது. தீயை அணைப்பதில் ஈடுபட்டிருந்த சில வீரர்களின் முயற்சியில், பாம்பு சீறும் ஒலியுடன் இறுதிக் கங்கும் உறுமியபடி அடங்கியது. அங்கிருந்து கிளம்பிய பெரும்புகை வானைச் சூழ்ந்துகொண்டது. யாழ்ப்பாணாயன் பட்டினத்தை பட்டப்பகலில் இருள் கவிந்தது. சோகத்துடன் காகங்கள் பெருங்குரலெடுத்துக் கரைந்தன.

 

சங்கிலியன் ஒருகணம் தலையசைத்த பின்னர் நடந்து வீதியனின் சடலத்தை நெருங்கினான். “என்னை மன்னித்துவிடு நண்பா. உன் இறுதி இலட்சியத்தை இனி என் இலட்சியமாகக் கொள்வேன். என் உயிருள்ளவரை நீ என்வசம் ஒப்படைத்த திருப்பற்சின்னத்தைக் காப்பேன். போர்த்துக்கேயரை ஓடஓட விரட்டுவேன். இதை நிறைவேற்றுவதில் நான் அணுவிடை பிசகினாலும் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம் என்னையும் என் தலைமுறையையும் சூழட்டும். இது சத்தியம்.” என்றபடி, சங்கிலியன், வீதியன் கால்களைப் பற்றி தொட்டு வணங்கினான்.

அப்படியே விருட்டென எழுந்து சுற்றியிருந்தோரைப் பார்த்து ஓங்கிய குரலில் சொன்னான். “யாரங்கே. இவர் சடலத்தையும் இவர் துணைவர் சடலத்தையும் மாளிகைக்கு எடுத்து வாருங்கள். நகரம் முழுவதும் அமங்கலத் தோரணங்களால் அலங்கரிக்கப்படட்டும். மூன்று நாட்களுக்கு சிங்கை நல்லூரில் அடுப்பு எரியக்கூடாது. மாலை இதே புளியமரத்தடியில் சகல ராஜ மரியாதைகளுடன் வீதிய பண்டாரத்தின் திருவுடலம் தகனம் செய்யப்படும். அப்போது, பட்டினத்தின் எல்லாக் குடிகளும் இங்கு வந்து மரியாதை செலுத்தவேண்டும்.” என்றான் சங்கிலியன். அவன் குரல் தழுதழுத்தது. “மனிதன் மன்னிக்காமல் போகலாம். தெய்வம் மன்னிக்கும். நம்பி வந்து அடைக்கலம் புகுந்தவருக்கு நம்மால் இழைக்கப்பட்ட துரோகத்துக்கு, அவரைத் தெய்வமாக்கித் தினம் தினம் மன்னிப்புக் கோருவது ஒன்றே பரிகாரம். இங்கேயே வீதிய பண்டாரத்துக்கு பள்ளிப்படைக் கோயில் அமைக்க ஆணையிடுகிறேன். சந்திராதித்தர் உள்ள காலம் வரை, யாழ்ப்பாணாயன் பட்டினத்தின் ஒவ்வொரு குடிமகனும் நாளொன்றுக்கு முறைவைத்து இங்கு நந்தா விளக்கெரிக்கவேண்டும். இனி இவர் சிங்கை நல்லூரின் இன்னொரு காவல் தெய்வம்.” என்று கூறி வீதிய பண்டாரத்தின் சடலத்தின் காலில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தான் சங்கிலியன்.  

சுற்றிநின்ற எல்லோரும் ஒருகணம் தயங்கியபின் அவனைப் பின்பற்றி தரையில் விழுந்தனர். அவன் எழுந்ததும் படைவீரர் மத்தியில் வாழ்த்துக்கோஷம் எழுந்தது. “மாவீரர் வீதிய பண்டாரம் வாழ்க! வீர சொர்க்கமடைந்த வேதியர் வாழ்க!” அந்தக் கோஷங்களைக் கேட்டு விரக்தியுடன் தலையசைத்த சங்கிலியன் தளர்ந்த நடையுடன் சோமசர்மரை நெருங்கினான், “இறுதிக்கிரியைகளுக்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள் குருவே, இரு தரப்பிலும் இறந்த எல்லா வீரர்களுக்கும்!” என்று சொல்லி தேரை நோக்கி நடந்த அவன், ஒருகணம் தயங்கி நின்று வீதிய பண்டாரனைத் திரும்பிப்பார்த்தான்.  அவன் சடலம் அதேபோலப் புழுதி படிந்து கிடந்தது. ஆனால், சற்று முன்வரை ஏன் என்ற கேள்வியுடன் வெறித்திருந்த அந்த முகத்தில் எதையோ புரிந்துகொண்டது போல் மெல்லிய புன்னகை மலர்ந்திருந்தது


ஓவியம்: ஷண்முகவேல் (வெண்முரசு நாவல் தொடரிலிருந்து)


மைங்கணான் மகிழறிவன்

Views: 765