சங்கீத ஜாதி

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: vibishan.don@gmail.comBanner

கால்களை கீழே வைத்தது தான் குறை கீழே கிடந்த பீர் பாட்டில் ணங் கென்ற ஒலியுடன் உருண்டு கட்டில் காலுடன் மோதியது. வாயில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு சாறத்தை இறுக்கிக் கொண்டான். மாலை நான்கு மணியிருக்கும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் லீவு என்பதால் காலையிலேயே கொஞ்சம் மில்லிகளை ஊத்திக்கொண்டு  போதையாகி விட்டான். இப்போது தான் தெளிந்தது. அதுவும் பூரணமாக இல்லை. லைப் பாய் பொடி வோஷை எடுத்துக் கொண்டு வெறும் டவலுடன் உள்ளே சென்றவன் டெனிமும் ஷேர்ட்டுமாக வெளியே வந்தான். ஏனோ தானோ வென்று மடித்துவிடப்பட்டிருந்த ஸ்லீவ்களும், அயன் பொக்ஸ் தீண்டாத ஷேர்ட்டும், சீப்பைக் காணாத பரட்டைத் தலையும் கொண்டவனாக இருபத்தியாறு வயதில் அவனைத்தவிர எவரும் அவ்வாறு இருக்கமாட்டார்கள். இருபத்தி ஆறு வயதில் மகாத்மா காந்தி கூட கோர்ட்டும் சூட்டுமாகத்தான் லண்டனில் லோ படித்தார். அப்படியிருக்கையில் அவனுள் இருக்கின்ற விரக்தியை விபரிப்பதற்க்கு அவனின் வெளித்தோற்றமே போதுமானதாக இருந்தது. சுருக்கமாக சொன்னால் அவன் இசைக்கலைஞன். இன்னும் சில மணி நேரங்களில் என்று கூட சொல்லலாம்..ஏனென்றால் அவன் தனது வேலையை ரிசைன் செய்ய ஆறு மணித்தியாலங்கள் தான் உள்ளன. அவனுள் இருக்கும் அந்த இசைக்கலைஞனை கொஞ்சம் விரிவாகப்பார்க்கப்போனால். இசைஞானிகளால் ஒரு இசையின் ராகங்களை கண்டுபிடிப்பதும். விரல் தொட்டு ஸ்வரங்களை எண்ணிப்பார்ப்பதுமே ரசனை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த உலகில் அவன் இல்லை. சாரு நிவேதிதா வின் எழுத்துக்களில் இருப்பதாக அவர் சொல்லும் அந்த ஃமாட்நெஸ் அவன் இசையில் கொட்டிக்கிடந்தது. அவனுக்கு இசை வெறும் செவிப்படிமங்கள் இல்லை, அவனால் அவற்றை ஸ்வரங்களாக நினைவில் நிறுத்தமுடியாது. இசை அவனுக்குக் காட்சிப்படிமம். பிரமாண்டமான பிரளயங்களாக அவனுள் ஊற்றெடுக்கும் உணர்வு நிலைகள். இசைக்கணக்கு படித்த மேதைகளும். இசையை அல்ஜீப்ராவாக எண்ணும் ரசிகர்களும் கட்டாயம் அவனை ஏற்கமாட்டார்கள். இயற்கையின் இசையை இறைவனின் இசையை ஆன்மாவால் உணரும் சிலருக்கு மட்டும் அவனது இசை இன்பராகமாக இருக்கும். அவன் பித்தன். இசைப்பித்தன். கிட்டாருடனேயே நித்தம் நித்தம் குலவும் வெறியன். ஆஸ்கார் பரிந்துரை இசைகள் கூட அவனை அந்தளவுக்கு திருப்திப்படுத்த மறுத்தது. ஒரு ராகத்தை விரித்து விரித்து உணர்வுகளை மேடு பள்ளங்களாக்கி சொல்லால் விபரிக்க முடியாதவற்றைக்கூட விளக்கி விளாசி முடிவிலியை நோக்கிப்பயணிப்பது தான் அவனது இசை. அவனது அறையில் அவனது வாழ்க்கையைப்போல வெளிச்சங்களுக்கு இடமில்லை. இருட்டு.... முழு இருட்டு.. முகிலற்ற ராப்பொழுது வானத்தைப்போல அண்ட சராசரமும் தன் கண் முன்னே விரிவதாக எண்ணிக்கொண்டே தனது கிட்டாரை மீட்டிக்கொண்டிருப்பான். இருட்டு அவனின் கவனத்தை இசையில் மட்டும் குவிக்கவல்லதாக இருந்தது.

அவனது வாழ்க்கையும் அப்படித்தான். அவனது அனைத்து தேவைகளையும் இசை நிறைவேற்றியது.  கள் உண்ட வெறியையும் கூட.  நிதித்தேவையைத்தவிர ஆனால் அதற்க்கும் காலம் வரத் தொடங்கியது. திறமை என்பது வறுமை என்னும் நீரினுள் முக்கி வைத்திருக்கும் பந்தைப்போன்றது. அது நிச்சயம் தன்னை வெளிக்கொணர்ந்தே தீரும்.. அப்படி வெளிவருகையில் அதற்க்கான அங்கீகாரங்களும் காற்றைப்போல அப்பந்தின் ஈரத்தை அகற்றி தன்னைச்சுற்றிக்கொள்ளும். அவனது திறமையும் வெளி உலகுக்கு வர ஆரம்பித்த நேரமது. தனது கிட்டாரையும் தனது குரலையும் மட்டும் நம்பி அவன் களத்தின் இறங்கினான்.  அவனுக்குத் தெரிந்த சவுண்ட் ஸ்ரூடியோ மூலமாக கொஞ்சம் ஆல்பமாக்கப்பட்டன. இரண்டு... மூன்று.. பத்து... இருபது.. நூறு.. என அவனின் இசைவாசகர் மட்டமும் அதிகரிக்கத்தொடங்கியது. உண்மையில் சடுதியான வளர்ச்சி என்பது எதிலும் சாத்தியமில்லை. ஆனால் மெதுவாக புற்றுநோய்க்கலங்கள் போல அவனின் ரசிகர் மட்டம் அவனுக்குத்தெரியாமலே சத்தமில்லாமல் வளரத்தொடங்கியது. ஆல்பங்கள் கடன்சுமைகளை முற்றாக இறக்கி வைத்தன. ஆனால் கையில் மிஞ்சியது சொற்பம் தான். அடுத்த அடுத்த ஆல்பங்களில் தனது பாதையின் வெற்றியை உறுதி செய்து கொள்ளலாம் என்று கிட்டாருக்கு முத்தமிட்டுக் கொண்டான். ஆனால் குறிப்பிட்ட வர்க்கம் மாத்திரமே அவனது இசையின் ரசிகர்களாக இருந்தது.

அனாதை இருப்பத்தாறு வயது கழிந்து நாற்பத்தைந்து வயதாகிவிட்டது. ஆனால் குடும்பம் என்ற ஒன்று அது வரை இல்லை. அந்தச்சம்பவம் நடக்கும் வரை இனியும் இருக்காது என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான். அன்று வெள்ளிக்கிழமை வழமை போல தனது பிரார்த்தனையை முடித்துக்கொண்டு தனது இருட்டு அறையை திறந்தான். அவனால் சில வித்தியாசமான வாசனைகளை உணர முடிந்தது.  நிச்சயம் ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்.. ஆண்களை கவரக்கூடிய லாவண்டர் பர்பியூம் வாசனை அது.

யாரது

அஹ்.. ஹலோ மதுரன். இந்த இருட்டு எனக்கு பிடிச்சிருக்கு. நமக்குள்ள இப்போதைக்கு வெளிச்சம் தேவையில்லன்னு நினைக்கிறன். அதால உங்கட கையில இருக்கிற லைட்டர கீழ வச்சிடுங்க.

ஓகே..பட் என்னோட ரூம்ல நீங்க என்ன பண்ணுறீங்க.? அதோட ஒண்ண முதல்லயே சொல்லிடுறன். என் பேமிசன் இல்லாம என் ரூமுக்க வாறவங்கள எனக்குப்பிடிக்காது.

இன்ரஸ்ரிங். நான் உங்கட ஃபேன். 
இப்போதைக்கு இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க.

இந்த உரையாடல் தொடங்கிய போதே அவர்களுக்கிடையில் ஒரு பிணைப்பும் உருவாகத் தொடங்கியது. அது பெண் தான் என்று நிச்சயமாக சொல்வதற்க்கில்லை.  பெண் குரல் கொண்ட ஆணாகவும் இருக்கலாம். ஆனால் கடந்த ஒரு மாதத்தில் அவன் ஒரு முறை கூட அவள் உருவத்தைப்பார்த்திருக்க வில்லை. ஆனாலும் அவன் அவளைப் பரிபூரணமாக நம்பத்தொடங்கி விட்டான். அவர்களது சம்பாஷணைகள் தொண்ணூறு சதவீதம் சங்கீதத்தைப்பற்றியது தான்.மிகுதி பத்து ஹலோ பாய் குட்மார்னிங் போன்ற தேவையற்ற வார்த்தைகளால் நிரம்பிவிடும். அவளைப்பற்றி ஒரு வீதம் கூட அவனுக்குத் தெரியாது. அவள் என்பதே கொஞ்சம் சந்தேகம் தான். ஆனால் அவன் அவளைப்பற்றித் தெரிந்து கொள்ளவோ.  அவளைப்பார்க்கவோ பிரயத்தனப்படவில்லை. ஆனால் அவளின் அறிமுகத்தின் பின்னர் அவனது இசையின் உரம் சற்றுக்கூடி இருந்தது.

நீ உண்மையில் யார்..
உன்னை அருவமாக மட்டுமே பார்த்து சலித்துப்போயிட்டு.. 
தயவு செஞ்சு சொல்லு..

ஓகே ஓகே.... நான். சுருக்கமா சொல்லணும்ன்னா.  உங்கட பரம விரோதி. இல்ல இல்ல.. பரம துரோகி.. அப்டீன்னு ஒரு சொல் இருக்கான்னு தெரியல.. பட் அதான் மீனிங்புல்லா இருக்கு..

விளங்கேல்ல..

வைஷ்ணவியையும் மறந்திட்டீங்களா.

அவனது மூளையில் பல மின்னலைகள் சட்டென்று உருவாகி பல நினைவலைகளை கடத்தத் தொடங்கியதால் அதை அதிர்ச்சியாக உணர அவனுக்கு அப்போது அவகாசமில்லை.

அந்தப்பிரபலமான பள்ளியில் உயர்தரத்தில் அதுவும் உயிரியல் பிரிவில் முன்னுக்கு வருவது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனாலும் அவன் தன் வகுப்பில் இரண்டாம் பிள்ளையாகத்தான் வந்து கொண்டிருந்தான். அவனது வயதில் அந்த மாவட்டத்தில் அவள் தான் முதல் தரமான அழகி. சல்வார் கூட அவள் அணிந்ததால் அழகாகத் தெரியும். அவள் என்னென்ன நிறத்தில் சல்வார் வைத்திருக்கிறாள் என்று கூட அவனுக்கு மனப்பாடம். நீலத்திலேயே மூன்று. மெல்லிய நீல சல்வாரும் வெள்ளை ஷோலும்.. பூப் போட்ட கடும் நீல சல்வார்..மெல்லிய நீலத்தில் மரூன் கலரில் வேலைப்பாடு கொண்ட சல்வார்.. இப்படி பல தடவை உயிரியல் பாடம் படிக்கும் போது மனனம் செய்து இருக்கிறான். ஒரு முறை இருப்புக் கொள்ளாமல் போகவே ப்ரோபோஸும் செய்து விட்டான். அவள் பக்கத்திலும் பச்சைக் கொடி. அவனுக்கே அதை ஜீரணிக்க கஸ்ரமாகத்தான் இருந்தது. சரியாக மூன்று மாதம் கடந்திருக்கும்.. இன்னும் சரியாக நான்கு மாதங்களில் உயர்தரப்பரீட்சை. தனியார் வகுப்பில் அவளின் தோழியின் வருகைக்காக காத்திருந்தான். அவள் தான் தபால்காரி.. கடிதம் வந்தது.

மதுரன்...

நேற்று என்ர வீட்டில விசயம் தெரிஞ்சிட்டுது. எனக்கும் நேற்றுத்தான் இன்னொரு விசயம் தெரியும். நீ சாதி குறைவு எண்டு எனக்கு ஏன் நீ முதல்லயே சொல்லேல்ல. நீ என்னை ஏமாத்திட்டாய். அப்பா தான் எல்லாம் சொன்னார். எனக்கு சாதி முக்கியமில்லை. நான் சாதி பாக்கவும் மாட்டன். ஆனா தங்கச்சிக்கு கல்யாணம் பேசேக்குள்ள பிரச்சினை வருமாம். இன்னுமொண்டு அப்பிடியே நான் உன்ன கல்யாணம் பண்ணினாலும் எங்களுக்குப் பிறக்கப்போற பிள்ளை என்ன பாவம் பண்ணினது. உன்ன என்ர அப்பா நிராகரிச்ச மாதிரி என்ர பிள்ளைய யாரும் நிராகரிக்கக்கூடாது.  தயவு செஞ்சு என்ன மறந்திடு...

இப்படிக்கு
வைஷ்ணவி..

இந்த முறை அவன் முழுமையாகவே பித்துப்பிடித்துப்போனான். உண்மையில் அவன் நல்லவன். அழகானவனும் கூட. குடும்பமும் வசதி தான். நன்றாகவும் படிப்பான். அப்படியிருக்கையில் சாதி என்ற முன்னோரின் பருப்புக்கள் அவனின் இதயத்தை சல்லடையாக்கிக் கொண்டிருந்ததை அவனால் இதற்க்கு மேலும் பொறுத்துக் கொள்ளவில்லை. அதற்க்குப்பின் அவனுக்கு வேறு காதல் வரவில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பெட்டி.. புகைத்து புகைத்துத் தள்ளிக்கொண்டே யோசித்துக்கொண்டிருப்பான். நான்கு வருடம் வீட்டில் உக்கார்ந்து உக்கார்ந்து இடுப்புத்தசையே பிடித்துக் கொண்டது.  உயர் தரத்தில் மூன்று சாதாரண சித்திகள். அதை வைத்து கொழும்பில் நாப்பதாயிரத்துக்கு வேலை எடுத்தான். அவனுள் எப்போதுமே ஒரு கலைஞன் இருப்பான். அக்கலைஞனால் கடமைக்கு வேலை பார்க்க முடியவில்லை. ரிசைன். பிறகு எல்லாமே மியூசிக் தான். அவன் பிறந்ததில் இருந்து இருப்பத்தாறு வருடங்கள் எடுத்து விட்டன அவன் தன்னை மியூசிக் ரைடக்டராக  உணர்ந்து கொள்வதற்க்கு..இப்போது நாற்பத்தைந்து. பத்தொன்பது வருடங்கள் விதைக்கப்பட்டனவா வீணாக்கப்பட்டனவா என்று அவனுக்கே உண்மையில் தெரியவில்லை...

நினைவலைகள் ஓய்வடைந்தன...

நீ வைஷ்ணவியா

இல்ல இல்ல.. நான்.. அஹ்.. வைஷ்ணவி என்ட அம்மா..

அஹ்... உனக்கு என்னை எப்பிடித் தெரியும்.. உங்கொம்மா சொன்னாளா...

ம்ம்

ஏய் என்ன ம்ம்ங்கிற.. தெளிவா சொல்லு.. ஏன் இங்க வந்த..

அம்மா செத்திட்டாங்க..

அஹ்.. செத்திட்டாளா.. போய்த்துலையட்டும்.. சனியன்..உங்கொப்பன் இருக்கான்ல.. அது சரி
எப்டி..

எயிட்ஸ்

யாரு..உங்கொப்பனா..

ம்ம்..

ஹாஹா.. நல்லது.. ஆண்டவன் இருக்கான்ல.. 
ஏய்.. அதுக்கு ... ஏன் இங்க வந்த..உங்ஙொம்மா காட்டினது பத்தாதுன்னு....நீயும் எனக்கு.. அஹ்..
என்ன விளையாட்டு காட்டிறியா..

இல்ல.. நான் ஓபினாவே சொல்றன்.. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. முதல்ல உங்கள பாத்து அம்மாக்கு பதில் நான் சொரி சொல்லணும்ன்னு தான் வந்தனான். ஐ கான்ட் டெல் எனிமோர். உங்கட இசையில அம்மாவை வச்சுப்பார்த்தன். பொறாமையா இருத்திச்சு. அதே காதலா மாறும்ன்னு நான் நினைக்கல. உளர்றன்னு நினைக்கிறன். பட்  வன்திங் உங்களுக்கு பிடிக்கலன்னா  இதுக்கு மேல நத்திங்...

என்ன தான் சொன்னாலும்..இந்தக்கதையின் முடிவு என்னவென்று அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அவனது புலன் அவளால் சிதறடிக்கப்பட்டாலும்.. மீண்டும் அவளிலேயே குவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பகாலங்களில் அவனது இசை அதியுச்சமாக இருந்தாலும் அது ஜீவ நாதமாக ஆதாரசுருதியாக இருந்திருக்கவில்லை.. புலனைப்புள்ளியாக்கி மீட்டி முடித்தாலும் ஏதோ ஒரு குறை.. இனங்காணமுடியாத குறை இருந்து கொண்டே தான் இருந்தது..அது வைஷ்ணவியாக இருக்கலாம்.. அல்லது.. வைஷ்ணவியின் காரணமாக ஒதுக்கப்பட்ட சப்ஜெட்டுகளாக இருக்கலாம்.. ஆரம்பத்தில் சாதாரண மக்களுக்கு அவனது இசை பிடிக்கவில்லை என்பதை விட பிடிபடவில்லை என்றே சொல்லலாம்.. காரணம் அதன் கருவில் பெண் என்னும் ராட்சஷியோ தேவதையோ இருந்திருக்கவில்லை.. காதலோ  காமமோ இருந்திருக்கவில்லை..  ஆரம்பத்தில் அவனது சில வயலின்கள் அன்பை கருவாக்கி கண்ணீரை ஊற்றெடுக்க வைத்தாலும் அந்த அன்பை விவரிக்கமுடியாமல் இனம்காணமுடியாமல் இருந்தது..  இதுவே குறையாகவும் இருந்தது..

ஆனால் இம்முறை ஏதோவொன்று அவனை இதயத்தால் மீட்டச் சொன்னது. இருட்டறை தேவையில்லை. புலனடக்கம் தேவையில்லை.. உயர்ந்த மலைகளில் பரந்த வெளிகளில் பறந்து திரியச்சொன்னது. பார்க்கச்சொன்னது. பாடச் சொன்னது.
இயற்கையை காதலை கருவாக்கு என்றது. அவள் பூக்களின் சுகந்தத்தை  சமுத்திரங்களை அதன் குளிர்மையை வெம்மையை தாய்மையை இப்படியாக உணர்ச்சிகளை இரையாக்கு உணர்வுகளை இசையாக்கு என்றாள். ரசனையை வளர்த்துக்கொள். இயற்கையை ரசி. இசை ருசிக்கும் என்றாள்..

கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு உலகம் பிடிக்கத் தொடங்கியது. கண்களால் கரு எடுத்து மூளையால் பதப்படுத்தி கைகளால் இசைப்படுத்தினான்..உலகத்திற்க்கும் அவனைப்பிடிக்கத் தொடங்கியது.. இருட்டில் மல்லிகையை மட்டுமே மலரச்செய்தவன் உதய சூரியனுடன் சேர்ந்து செந்தாமரையையும் உருவாக்க ஆரம்பித்தான்..செந்தாமரையுடன் சேர்த்து அவன் வாழ்க்கையும் மலர்ந்து விட்டது..ஆனால் கடைசி வரை அது எந்த மாதிரியான உறவுமுறை என்று அவனால் புரிந்து கொள்ளவேமுடியவில்லை. ஆனால் அவள் தாய் பட்ட கடனை வட்டியோடு சேர்த்து அடைத்துவிட்டாள் என்று மட்டும் அடிக்கடி சொல்லிக்கொள்வான்...

Views: 545