முதற் பயணம் தனிப் பயணம் - த பினிசிங்

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner

திடீரென போடப்பட்ட பிரேக்கின் குலுக்கலால், ராஜராஜ சோழனுடனும் ராஜேந்திர சோழனுடனும் கட்டட நுணுக்கங்கள் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த நான் மீண்டும் இவ்வுலகிற்கு வந்தேன். அரை நித்திரை மயக்கத்தில் திருவண்ணாமலை பேரூந்து நிலையத்தின் பெயர்ப் பலகை என் கண்களில் தட்டுப்பட்டது. தட்டுத் தடுமாறி பேரூந்திலிருந்து இறங்கினேன். நேரம் கிட்டத்தட்ட அதிகாலை 2.00 மணி. இந்த பேய் உலாவுகின்ற நேரத்திலும் விழிப்புடன் இருந்த அந்த பேரூந்து நிலையம் எனக்கு வியப்பைத் தந்தது. இங்கு இந்தியாவில் பெரும்பாலும் எல்லா பேரூந்து நிலையங்களுமே, இலங்கையின் சைட் இஞ்சினியர்கள் போல, முற்றாக உறங்கியதாய்ச் சரித்திரமே இல்லை. எந்த நேரமும் பேரூந்துகள் வந்து போய்க் கொண்டு இருப்பது அதற்கு பிரதானமான காரணமாக இருக்கலாம்.
 
இந்த இடத்தில் ஒரு பிரயாணிக்கு ('ட்ரவலர்' என்று சொன்னால் அதன் அர்த்தம் உங்களுக்கு இலகுவாக விளங்கும் என்று நினைக்கிறேன்) இருக்க வேண்டிய சில பண்புகளை நான் சொல்லலாம் என்று நினைக்கின்றேன். இதையெல்லாம் சொல்லுமளவுக்கு நானொன்றும் பெரிய பிரயாணி கிடையாது. ஆனாலும் இதுவரை சென்றிருக்கின்ற ஒருசில பிரயாணங்களை நன்கு அனுபவித்தவன் என்ற அடிப்படையில் சொல்கின்றேன் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு பயணி என்பவன் எங்கும் எதையும் சமாளிக்கக் கூடியவனாக இருந்தேயாக வேண்டும். அது உணவு, பசி தொடக்கம் மொழி கலாச்சாரம் வரை எதுவாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு 'அதிகம் உறைப்பு சாப்பிட்டால் வயித்துக் குத்தும்.', 'இதென்ன சரியான வெய்யிலாய் கிடக்கு', 'இந்த நாத்தத்துக்கையே இருக்க வேணும்', 'இந்த லூசு கூட்டங்களை பாக்கவே இவ்வளவு தூரம் வந்தம்', 'அருமந்த காசு. இந்த காசுக்கு பாகுபலி-2ஐ திருப்ப தியேட்டர்ல பாத்திருக்கலாம்' இப்படியெல்லாம் எண்ணுபவராக நீங்கள்  இருந்தால் பிரயாணம் என்ற ஒன்றையே நினைக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது. 

அடுத்ததாக போகின்ற இடம் பற்றிய சில அடிப்படை விடயங்களாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு நீங்கள் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு போகிறீர்கள் என்றால், குறைந்தது ராஜராஜ சோழன் பற்றி இரண்டு வசனங்கள், அக் கோயிலின் கட்டுமானம் தொடர்பாக இரண்டு வசனங்களாவது அறிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் ஊரில் இரண்டு வீடு தள்ளி இருக்கின்ற மரத்தடி வைரவருக்கும் த.பெ.கோயிலுக்கும் பெரிய வித்தியாசத்தை உங்களால் இனங்காண முடியாது. நல்ல பக்திப் பழங்கள், சிறந்த சாப்பாட்டு ராமன்கள் போன்றோரை கூடக் கூட்டிக்கொண்டு போவதை இயன்றவரை தவிர்ப்பது நல்லது. முதலாமவர்கள் போகின்ற இடங்களில் இருக்கின்ற சாமி சிலைகளுக்கு (அது மியூசியமாய் இருந்தாலும் கூட) முன்னால் நின்று தேவாரம் பாடத் தொடங்கி விடுவார்கள். இரண்டாமவர்களுக்கு நேரத்துக்கு சாப்பிடுவதற்கு இடமும் சாப்பிட்ட பின்பு 'இருப்பதற்கு' இடமும் தேடுவதற்கே சில சமயங்களில் புறம்பாக பயணம் செய்யவேண்டி இருக்கும். இவர்களைப் போன்றவர்களால் உங்கள் பயண திட்டங்களும், ரசிக்கவேண்டிய தருணங்களும் குழம்பிப் போய்விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அடுத்தது தான் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விடயம். பார்க்க இருக்கின்ற இடங்கள், அவ்விடங்களில் செலவழிக்கின்ற நேரம், பயணப்பட இருக்கின்ற பாதைகள், இரவு தங்குவதற்கான இடங்கள் போன்றவற்றை மிக மிகச் சரியாக திட்டமிட வேண்டும். (இந்த ஆப்பரேசனில் கூகிள் மப் பெரிய பங்கு வகிக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்றில்லை) பிளான் 'ஏ'ஐ தவிர பிளான் 'பி' ஒன்றையும் வைத்திருப்பது சாலச் சிறந்தது. மழை, போக்குவரத்துச் சிக்கல் போன்ற எதிர்பாராத பிரச்சினைகள் வந்தால் இந்த சப் பிளானுகள் நன்றாகக் கைகொடுக்கும். நிற்க. இனி மாட்டருக்கு வருவோம்.

காலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு திருவண்ணாமலையை அடைவதே எனது திட்டமாக இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் முன்னதாகவே வந்து சேர்ந்துவிட்டேன். அதுவும் சாம நேரத்தில். 'கோயில் திறக்க ஐஞ்சு மணியாகும். இந்த நேரத்தில ஹொட்டல்களிலயும் ஒருத்தனும் றூம் தரமாட்டாங்கள் தம்பி. இதிலயே ஒரு இடத்தில படு' என்று என் கேள்விகளுக்கெல்லாம் ஒரேயடியாக அப் பேரூந்து நிலையவாசிகளில் ஒருவர் அருள்வாக்குச் சொன்னார். இனிவருங் காலங்களில் இப்படியானதொரு அனுவம் எனக்குக் கிடைக்க வாய்ப்புக்கள் மிக குறைவு என்பதால் அந்த பேரூந்து நிலைய நித்திரை அனுபவத்தை நான் மிகவும் விரும்பினேன் என்பதோடு அதைத் தவறவிடவும் நான் தயாராயில்லை. மேலும் தங்குவதற்கு ஹொட்டல்களைத் தேடுவதைவிட, கைவசமிருக்கின்ற நான்கு மணித்தியாலங்களையும் நித்திரைக்கே பயன்படுத்தும்படி உடம்பின் எல்லாப் பாகங்களும் என்னை நச்சரிக்கத் தொடங்கிவிட்டன. எனவே அங்கிருந்த சாய்மனை கொண்ட நீண்ட மர ஆசனத்தில் தலைக்கு பயணப் பையை வைத்துக்கொண்டு நான் படுக்கைக்கு ஆயத்தமானேன். சிறிது நேரத்திலேயே நான் தூங்கிப்போனேன்.

வழமையான காலை நேர பேரூந்து நிலைய ஆரவாரங்கள் என் நித்திரையைக் கலைத்தது. உண்மையில் பேரூந்து நிலைய நித்திரை என்பது ஒரு சுகானுபவம் தான். என்ன...!!! தோள் மூட்டுக்குள் தான் கொஞ்சம் லேசான வலி. நேரம் ஐந்து மணியைக் காட்டியது. பேரூந்து நிலையத்தில் சொல்லியிருந்தவாறு கோயிலுக்கு போகும் வழியிலே குளிப்பதற்கான இடத்தைக் கண்டுபிடித்தேன். ஒரு ஹொட்டலின் முன்பகுதியை குளிக்கின்ற இடமாக மாற்றி இருந்தார்கள். அருகிலேயே மலசலகூடங்களும் இருந்தன. இவற்றுக்கெல்லாம் சேர்த்து ஒரு கட்டணம் அறவிடப்படுகின்றது. பொருத்தமான இடங்களில் பொருத்தமான தொழில்களை நடாத்தி பணமீட்டுவதில் நம்மவர்கள் எப்போதுமே கெட்டிக்காரர்கள். நான் ஓரளவுக்கு திருப்தியாக குளித்து முடித்தேன். அப்போது தான் எனது போன் சார்ச் இல்லாத விசயம் ஞாபகத்துக்கு வந்தது. அருகிலிருந்த ரீ கடைக்குள் நுழைந்தேன். முகத்தைப் பார்த்ததுமே வெளியூர்காரன் என்பதைக் கடைக்காரர் கண்டுபிடித்துவிட்டார் என்பது அவரின் பலமான வரவேற்பிலேலே தெரிந்தது. ரீயை ஓடர் செய்ய முதல் போன் சார்ச் போடுதல் தொடர்பாக விசாரித்தேன். அருகிலிருந்த பிளக் பொயின்டைக் காட்டினார். இதற்கென்றே செய்து வைத்தது போல் தோன்றியது. 'இதற்கும் காசு கேட்கப் போகிறார்களோ' என்று நினைத்துக் கொண்டேன். ரீயும் வடையம் வந்தது. எனக்கும் போனுக்கும் உயிர் வர ஆரம்பித்தது. பதினைந்து நிமிடங்களையும் இருபது இந்திய ரூபாய்களையும் அங்கு செலவு செய்தேன். போன் சார்ஜிங்கிற்கு காசு வாங்கவில்லை. திருண்ணாமலை கோயில் கோபுரம் மிக அருகில் தெரிந்தது.


கார்த்திகை விளக்கீட்டு நாட்களில் உங்கள் ரீவியில் எழுமாற்றான ஒரு இந்திய சனலைத் தட்டினீர்கள் என்றால், அதில்  சர்வ நிச்சயமாக மலை உச்சியில் தீபம் எரிகின்ற பின்னணியில் இவ் ஆலயத்தைக் காண்டிருக்க முடியும். ஏனெனில் இதன் புராண வரலாறு கார்த்திகை விளக்கீட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் இவ் ஆலயமானது இந்தியாவிலுள்ள பஞ்ச பூத தலங்களில் அக்கினிக்கான தலமாக கருதப்படுகிறது. பதினொரு அடுக்குகளைக் கொண்ட பிரதான கோபுரம் உட்பட மொத்தமாக ஒன்பது கோபுரங்களைக் கொண்டிருக்கின்ற இவ் ஆலயமானது இருபத்தைந்து ஏக்கர் பரப்புள்ள பரந்த வெளியில் திருவண்ணாமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைந்து கிழக்கு நோக்கி திரும்பினீர்கள் என்றால் நீங்கள் நிற்கின்ற இடத்தைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று கோபுரங்கள் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டில் தெரியும். இந்த கோபுரங்களுக்கிடையால் சூரியன் உதித்து மேலெழுகின்ற காட்சி நிச்சயமாக வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டதே. (நான் கோயிலுக்கு போனது சூரியன் உதயமாகிக் கொண்டிருந்த நேரம் என்பதைக் கவனிக்குக) 

மிகப் பிரமாண்டமான நன்கு அலங்கரிக்கப்பட்ட லிங்கம் மூலஸ்தானம் முழுவதும் நிரம்பியிருந்தது. அப்போது தான் ஐந்து பேர் கொண்ட ஓரு வரிசையையும் மக்களால் நிரம்பியிருக்கின்ற இன்னொரு வரிசையையும் கவனித்தேன். முதலாவதற்கு அருகில் சிறப்புத் தரிசனம் என்றும் இரண்டாதற்கு அருகில் பொது தரிசனம் என்றும் எழுதப்பட்டிருந்தது. சி.தரிசனத்துக்கு கட்டணம் அறவிடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அது ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஒரு தரிசனத்துக்கும் போகாமல் வெறுமனே வீதி சுற்றினேன். மிக அண்மையில் ஆலயத்தைத் திருத்தி இருக்கிறார்கள் என்பதை இன்னமும் சந்தனம், வீபூதியால் மாசாகாமல் இருந்த தூண்களும் சுவர்களும் எனக்குச் சொல்லியது. நல்ல பரந்த வீதிகளில் அம்பாள், பிள்ளையார், முருகன் போன்ற பல தெய்வங்களுக்கு தனித்தனியாக பெரிய சன்நிதிகள் அமைத்திருந்தார்கள். நான் சென்ற நாள் மிகவும் சாதாரணமான நாளாக இருந்தாலும் கூட கோயிலில் குறிப்பிடத்தக்களவு கூட்டம் இருந்தது. இம் மக்கள் சினிமா, அரசியல் என்பவற்றில் மட்டுமல்ல பக்தியிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். வழமைபோல கோயிலின் வெளி வாயிலில் பூ விற்றுக் கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவருக்கு பத்து ரூபா கொடுத்துவிட்டு எதுவும் வாங்காமல் புறப்பட்டேன். 

நேரம் 8.00.மீண்டும் பேரூந்து நிலையத்தை அடைந்து, அங்கிருந்து வேலூர் போகும் பஸ்சில் ஏறினேன். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரப் பயணம். கொஞ்சம், வெய்யில். கொஞ்சம் தூசு, கொஞ்சம் நெரிசலாக இருந்தாலும் கூட காலை நேர பஸ் பிரயாணமும் யன்னலோரக் காட்சிகளும் எனக்கு புத்துணர்ச்சியைத் தந்தது. இந்த யன்னலோரக் காட்சிகளில் பெரும்பாலானவற்றை தென்னிந்திய தமிழ் சினிமாக்களில் ரசித்திருந்தாலும் கூட அவற்றை நேரடியாக பார்க்கின்ற அனுபவம் வித்தியாசமானதல்லவா..?

ஏறத்தாள 1.30ற்கு வேலூரை அடைந்தேன். வயிறு பசியில் லேசாக கிள்ள ஆரம்பித்தது. முதலில் சாப்பிடுவோம் என்று முடிவு செய்தேன். 'அம்மா உணவகம்' என்ற எழுத்துக்களுக்கு அருகில் ஜெயலலிதா கூப்பிய கரங்களுடன் வரவேற்றார். தமிழ் நாட்டில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் 'அம்மா' என்கின்ற பெயரில் நிச்சயமாக குறைந்தது ஐந்து கடைகளாவது இருக்கும். அக் கடைகளை ஆராய்ந்தால் அவற்றின் முதலாளிகள் மட்டுமல்லாது அங்கு வேலை செய்கின்ற அடிமட்ட வேலையாட்கள் வரை எல்லோருமே தீவிரமான அ.தி.மு.க தொண்டாகளாக இருப்பார்கள். 

கடை ஜெயலலிதாவின் பலவித புகைப் படங்களால் நிரம்பியிருந்தது. போனை சார்ஜ் போட கொடுத்துவிட்டு சாப்பிட உக்கார்ந்தேன். நல்ல பெரிய வாழையிலையில் கூட்டு, பொரியல், குழம்பு, வறை, பப்படம், ரசம், மோர் எக்சற்றாவுடன் ஒரு பெரிய சைவ விருந்தே சாப்பிட்டேன். இறுதியில் அந்த நெய்யில் தோய்த்த கேசரித் துண்டு தொண்டைக்குள் இறங்கும் போது 'டிவைன் மீல்' என்பதன் பூரண அர்த்தத்தை உளமார உணர்ந்து கொண்டேன். உண்மையில் என் அம்மாவின் சாப்பாடு சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. கடை முதலாளியை அழைத்துப் பாராட்டினேன். மனிதர் பூரித்துப் போனார். வயிறும் மனமும் நிறைந்த திருப்தியுடன் ஸ்ரீபுரம் லக்சுமி நாராயணி கோயிலுக்கு பஸ் ஏறினேன். 

தனிப்பட்ட ரீதியாக எனக்கு இந்தக் கோயிலில் அவ்வளவு அவிப்பிராயம் இல்லை. ஆனாலும் அந்தக் கோயிலின் கட்டுமானங்கள் வித்தியாசமானதாகவும் புதுமையானதாகவும் இருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் சொன்னதன் பெயரில் அங்கு பயணமானேன். உண்மையில் அக் கோயில் கவர்ச்சிகரமான,  கொஞ்சம் புதுமையான, சற்றே வித்தியாசமான கட்டுமானம் தான். அதை மறுக்கவே முடியாது. கோயிலையும் அதன் வளாகத்தையும் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கின்றார்கள். பல வளைவு நெழிவான 'சிக்சக்' நடைகளுக்குப் பிறகு தான் கோயிலின் மூலஸ்தானத்தை அடையக் கூடியதாக இருந்தது. நான் வளைந்து நெழிந்து நடந்து வந்த பாதை ஒரு நட்சத்திர வடிவமுடையது என்பதை அவ் ஆலயத்தின் 'பேட் ஐ வியூ' புகைப்படம் ஒன்றைப் பார்த்த பின்னர் தான் அறிந்து கொண்டேன்.

அங்கிருந்து மீண்டும் வேலூர் பேரூந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து காஞ்சிபுரத்துக்குப் பறப்பட்டேன். இரண்டு மணிநேர பயணம் அன்ட் பத்து நிமிட நடைக்குப் பின்னர் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலை அடைந்தேன். அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான இவ் ஆலயமானது ஆதி சங்கரரின் காலத்துடன் பெரும் ஆலயமாக தோற்றம் பெற்றிருக்கிறது. நான் போயிருந்த வேளையில் சனக் கூட்டம் அவ்வளவாக இல்லை. மிகவும் சுத்தமாக பேணப்பட்டிருந்த ஆலயத்தின் உட்புற பகுதிகள் 'இங்கு ஆன்மாக்கள் இலகுவாக இறைவனுடன் லயித்துவிடும்' என்று கட்டியம் கூறின. எனக்கு நம் நல்லூர் கோயிலின் ஞாபகம் வந்தது. மூலஸ்தான கட்டட அமைவுகள் சாதாரண கோயில்களின் அமைவுகளிலிருந்து வேறுபட்டதாகவும் ரசிக்கக் கூடியனவாகவும் இருந்தன.

எனது திட்டப்படி பார்க்க வேண்டிய இடங்கள் அனைத்தையும் பார்த்த திருப்தியோடு அங்கிருந்து சென்னைக்கு பஸ் ஏறினேன். இரண்டரை மணி நேர பிரயாணத்தின் பின்னர் இரவு 10.00க்கு சென்னை மதுரவாயிலில் நண்பர் சிவாவை மீண்டும் சந்தித்தேன். அன்றைய நாளும் எனது உடம்பின் மொத்த சக்தியும் கிட்டத்தட்ட முற்றாக தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் எனது நண்பரை காணப் போகின்றேன் என்ற சந்தோசம் சற்று உற்சாகத்தைத் தந்தது. சிவாவுடன் அரைமணி நேர மோட்டார் சைக்கிள் பிரயாணத்தின் பின் நண்பரின் தொழிற்சாலையை அடைந்தேன். அங்கு அவர் இரவு உணவுடன் எனக்காக காத்திருந்தார்.
பல தடவை தொலைபேசியில் கதைத்திருந்தாலும் அவரை அப்போது தான் நேரில் பார்க்கிறேன். நல்ல உயரமாக வெண்மை நிறத்துடன் ஒரு கம்பனி அன்ட் தொழிற்சாலைக்கு முதலாளியாக இருப்பதற்கான அத்தனை பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். 'எவ்வாறு கோபமாக பேசுவது?' என்பதற்கு அவருக்கு தனியாக வகுப்பு எடுக்க வேண்டும் போல இருந்தது. தீவிரமான ஷPர்டி பக்தர். அவருடன் அளவளாவியவாறு இரவு உணவை முடித்தேன். எனது தமிழை மிகவும் ரசித்தார். நான் சென்னை உணவை ருசித்தேன். அன்;று இரவு அந்த தொழிற்சாலையின் விருந்தினர் அறையில் தங்கினேன். என்னிடம் முழுமையாக இன்னும் ஒரு நாள் இருந்தது. (எனது இலங்கை மீழ்தல் நாளை இரவு 11.00 மணிக்கு நிகழவிருந்தது) 
  
சரியாக இரண்டு தினங்களுக்குப் பிறகு நல்லதொரு நித்திரை. எழும்பும் போது  நேரம் காலை 10.00 மணி. காலை உணவை முடித்துவிட்டு நண்பரை அவரின் அலுவலகத்தில் சந்தித்தேன். 'இன்று தி.மு.க செயல் தலைவர் ஸ்ராலினின் பிறந்தநாள். அதனால் சென்னை முழுவதும் கொண்டாட்டங்களும் ஊர்வலங்களும் பேரணிகளுமாக இருக்கும். எனவே நீங்கள் எங்கும் வெளியே போகாமல் நம் தொழிற்சாலையையே சுற்றிப் பாருங்கள் ' என்றார் அவர். கிட்டத்தட்ட நானும் அதையே விரும்பினேன். எனவே அதற்கு உடனே சம்மதித்து விட்டேன்.

அது ஒரு பிள்ஸ்ரிக் பொருட்கள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலை. பல்வேறு வடிவங்களில் விதம்விதமான சத்தங்களுடன் பலவகை இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. பலர் அவற்றை இயக்கிக் கொண்டிருந்தனர். சில மணித்தியாலங்களுக்குள்ளேயே நான் அங்கு வேலை செய்கிறவர்கள் அனைவருடனும் (எல்லோருமே ஆண்கள் தான்) நண்பனாகிப் போனேன். கன்யாகுமாரி, மதுரை, சீர்காழி என்ற பல இடத்தவர்கள் எல்லாம் அங்கு வேலை செய்தனர். தங்களின் ஊர்களுக்கு நான் போகவில்லை என்று குறைபட்டுக் கொண்டனர். அடுத்த தடவை வரும்போது நிச்சயம் வருவதாக நம் அரசியல்வாதிகள் போல கூச்சமே இல்லாமல் வாக்களித்தேன். தன் வேலைப் பழுக்களுக்கு இடையிலும் எனது நண்பர் அவ்வப்போது வந்து என்னுடன் நிறைய விடயங்கள் பற்றிக் கதைத்தார். நான் இதுவரை சந்தித்த ஆகச் சிறந்த சில மனிதர்களுக்குள் அவரும் ஒருவராகிப் போனார். 

மாலை ஆறு மணிக்கு எல்லோரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டு ஆட்டோவில் விமான நிலையத்துக்குப் பயணமானேன். அது என் நண்பருடைய ஆஸ்தான ஆட்டோக்காரர். பெயர் அல்பேட். ரஜனி ரசிகர். தி.மு.க ஆதரவாளர். அந்த பயணம் முடிவதற்குள் ஸ்ராலினைப் பற்றி ஒரு முழு டொக்குமென்ரறியையே நிகழ்த்தி முடித்திருந்தார். இடையிடையே சில பைலா பாடல்களும் பாடிக் காட்டினார். இந்த உலகம் எத்தனை விதமான மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் அல்பேட்டிடமிருந்து விடைபெற்றேன். விமான நிலையத்துக்குள் நுழைந்து, காத்திருந்து, முதலாம், இரண்டாம் கேட்டுகளை கடந்து, அங்கு வேலை செய்கின்ற எல்லா தமிழ் பெண்களையும் பாரபட்சம் இல்லாமல் காதலித்து, விமானமேறி, எயர்கொஸ்ரேசுக்கு மாக்ஸ் போட்டு.......... இனியென்ன... மீண்டும் இலங்கை, மீண்டும் சைட், மீண்டும் ஓட்டம். அடுத்த பயணம் அமையும் வரைக்கும் இந்த அனுபவங்களின் போதையுடன் வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான். எது என்னவோ ஒரு பயணம் என்பது எல்லாவற்றையும் விஞ்சிய.. உன்னதமான... அதி சிறப்பான...... உச்சமான...... (சரியான வார்த்தை கிடைக்கவில்லை. மன்னிக்குக)    

Views: 805