அடிச்சேரன் 01

எழுத்தாளர் : துவாரகன்மின்னஞ்சல் முகவரி: Thuvvva@gmail.comBanner

நடைமுறையில் கோவில்கள் தான் தமிழர் வாழ்வியலில் சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகளின் மையப்புள்ளி என்ற புரிதலில்லாத கருத்துக்கள் தமிழ்ச்சைவர்களிடத்தேயே பரவிக்கிடக்கின்றன. ஆபிரகாமிய மதங்களைச்சாராத தமிழர்களில் பெரும்பாலானோருக்கு இன்னும் இருக்கின்ற விசனம் தான் கோவில்களுக்குள் கருவறைக்குள் புகவோ வழிபடவோ முடிவதில்லையே என்பது. இந்த விசனங்கள் எங்கள் தொன்மையை மறுதலிக்க வைக்கின்றன. இருண்ட காலமொன்றில் இருந்து வந்த ஒரு குடிகள் என்ற ஒரு மனப்பாங்கை ஏற்படுத்திவிடுகின்றன. மனுதர்மமே அல்லது நால்வருணக்கோட்பாடே எங்களின் வாழ்வியல் என்றும் இவைகளின் அடிப்படையில் உருவானது தான் தமிழ்ப்பண்பாடு சைவப்பண்பாடு என்றும் பல உரையாடல்களை சமூகவலைத்தளங்களிலும் நேரடியாகவும் தினமும் கடந்து வரவேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில் தமிழர்களிடையே மொழிப்பற்றிலும் சமத்துவப்போராட்டங்களிலும் பெண்ணுரிமைக்கருத்துக்களிலும் முன்னோடியாக நின்று தானும் வளர்ந்து தமிழர் கலைகளையும் இலக்கியங்களையும் வளர்த்துக்கொண்டதே சைவமாகும் என்றால் பலர் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. காரணம் தமிழன் என்றோ தமிழ் என்றோ சொல்வதை இனப்பெருமை கொள்வதை பிற்போக்குத்தனம் என்று புரியாத தன்மையில் உழல்வதே. இனப்பெருமை கொள்ளாதவனுக்கு இனப்பற்று இருக்கப்போவதில்லை.

தாம் கட்டிய கோவில்களின் கருவறைகளுக்குள்ளே எப்போதிலிருந்து தமிழர்களால் நுழைய முடியாமல் போனது என்ற கேள்விக்கான விடையை வரலாற்றில் தேடிக்கொள்ள முடியும். சிலர் பல்லவர் காலம் களப்பிரர் காலமென்பர் விஜயநகரத்து காலம் என்பர் இப்போது சிலர் அருண்மொழிச்சோழன் தான் நிலங்களை பிரம்மதேயம் என்று பெருவாரியாக பிராமணர்களுக்கு அளித்தான்  என்பர். எப்படியோ படிப்படையாகத்தான் எங்களுக்குள்ளே திணிக்கப்பட்டதுஃநாமாகவே ஏற்படுத்திக்கொண்டது எனலாம். ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவெனில் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டஃ அவைகளை பிரதிசெய்யப்பட்ட இந்த ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமை நச்சையும் தமிழ்க்குடிகள் எதிர்க்கவேயில்லையா என்பதே. அப்படியே விமர்சனங்களில்லாது வடவரின் நால்வருணக்கோட்பாட்டை தம்மீது தமிழர்கள் வரித்துக்கொண்டார்கள் என்றால் அது மிகத் தவறானது. இந்தக்கேள்விக்கான விடையை எத்தகைய எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை இலக்கியங்களின் துணையோடு தேடித்தருவதே இந்த அடிச்சேரன் கட்டுரைத்தொடரின் நோக்கமாகும்.  தமிழின் மிகப்பெரிய இலக்கியச் வளங்களான பெரியபுராணம் திருமுறைகள் மற்றைய பக்திஇலக்கியங்கள் மற்றும் தொடர்புடைய புறச்சான்றுகளையும் கொண்டு இக்கட்டுரைத்தொகுதியை வளர்க்கலாம் என்று நுழைகின்றேன். இக்கட்டுரை தொடர்பான உவங்கள் வாசகர் பெருமக்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களும் கட்டுரையின் அடுத்தடுத்த பகுதிகளை வழிநடத்தட்டும்.

அதென்ன 'அடிச்சேரன்' ?

திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர் திருவந்தாதியை கடக்கும் போது கருத்தைக்கவர்ந்த பகுதி ஒன்று வருகின்றது.

'மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறி நீறார்
தன்னர் பிரான்தமர் போலவருதலும் தான் வணங்க
என்னர் பிரான்அடி வண்ணான் என 'அடிச் சேரன் 'எனும்
தென்னர் பிரான்கழறிற்றறி வான்எனும் சேரலானே '.

நம்பியாண்டார் நம்பிகள் பாடிய பகுதியை இன்னும் சுவைப்படுத்திய சேக்கிழார்

'சேரர் பெருமான் தொழக் கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி
யார் என்று அடியேனைக் கொண்டது அடி வண்ணான் எனச்
சேரர் பிரானும் 'அடிச்சேரன்' அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் '

என்று பெரியபுராணத்தில் விரிவாக்கி பக்திச்சுவையோடு பாடித்தந்திருக்கிறார்.

இந்தச்சம்பவம் தரும் செய்தி எப்படியானதெனில் தமிழர் வாழ்வியல் தம்மீதான படிமுறைத்திணிப்பான தொழில்முறை வகுப்புக்களையும் ஏற்றத்தாழ்வையும் உடைத்து தமக்குள்ளேயான  இணைப்புக்களோடே இருக்க முனைந்தனர் என்பதே.

பாடல்கள் தரும் பொருள் இது தான்.  சேரப்பெருங்குடிகளின் மன்னன் பெருமாக்கோதை என்கின்ற சேரமான் பெருமாள் தனக்கேயான மரியாதையுடன் நகர்வலம் வருகின்றான். எதிரே உவர்மண்பொதி சுமந்தபடி ஒருவன் எதிர்ப்படுகின்றான். உப்புமண் ஈரம் படிந்து பின் உலர்ந்த உடம்போடு எதிர்ப்பட்டவனைக்கண்டதும் மன்னன் இறங்கி வந்து தொழுது நிற்கின்றான். தாங்கள் யார் என்று கண்ணீர் சொரிந்தபடி வினவுகின்றான். எதிரே நின்றவன் பதறியப்போனான். தங்களுக்கு பணிசெய்யும் அடிமை என்கிற பொருளோடு 'அடியேன் அடிவண்ணான்' என்கிறான். பதிலுக்கு அரசனோ உங்கள் கோலத்தால் திருநீறு பூசிய சிவனடியாரை நினைப்பித்தீர் என்றவாறு உங்களுக்கு பணி செய்கின்ற அடிமை அரசன் நான் 'அடியேன் அடிச்சேரன்' என்கின்றான்.

அந்த வசனத்தொடரான அடியேன் அடிச்சேரன் பொருத்தமாக தெரிந்ததால் அதையே கட்டுரையைச்சுட்டும் தலைப்பாகவும் தெரிந்திருக்கின்றேன். இருப்பினும் அடிச்சேரனாக தன்னைச்சொல்லிக்கொண்ட சேரமான் பெருமாளின் முடிவு தான் என்ன? கடைசி வாழ்நாள்வரை நாட்டிலேயே வாழ்ந்தானா என்றால் இல்லை. வெள்ளைக்குதிரையில் ஏறி சுந்தரரோடு கயிலைக்குச்சென்றார் என்கிறது பெரியபுராணம். ஆனால் புறச்சான்றுகள் வேறுபல விதமாக இருக்கின்றனவே. ஆனாலும் சேர நாட்டை விட்டு சேரமான்பெருமாள் அரசனாக இருக்கும் போதே வெளியேறினான் என்ற விடயத்தில் பெரியபுராணம் புறச்சான்றுகளோடு ஒத்துப்போகின்றது. கடைசிச்சேரனான இவரில் தொடங்கி கண்ணப்ப நாயனார் வரை மிகச்சுவாரசியமான ஐதீகங்கள் வரவிருக்கின்றன.

தமிழ்ச்சமூகத்தை அறிய இது வரை கிடைத்தவற்றில் மிகப்பழைமையான சங்கத்து இலக்கியங்களிலேயும் சரி தொல்காப்பியத்திலும் சரி காப்பியங்களிலும் சரி ஏற்றத்தாழ்வற்ற தமிழ்ச்சமுதாயக்காட்சிகளை பல இடங்களில் காணமுடியும்.  பல ஆராய்வுக்கட்டுரைகளும் நூல்களும் இவை தொடர்பாக வந்தாகி விட்டன. எடுத்துக்காட்டாக பெண்களும் நேரடியாக வெறியாட்டு போன்ற வழிபாடுகளில் கலந்துகொண்டதையும் சொல்லலாம். மனிதர்களிடையே மட்டுமல்லாது அனைத்து உயிர்களிற்கும் மாண்பளிக்கிற ஏற்றத்தாழ்வுகள் இல்லாத 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றதான நடைமுறையைப் பின்பற்றியதே சங்க காலத்து நம் மரபு ஆகிறது. பக்தி இலக்கியக்காலமே இங்கே பேசப்படவிருக்கின்றது. பக்தி இலக்கியத்தின் தேவாரமுதலிகளான சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரரை  எளிய மக்களிற்கான சமத்துவத்திற்கான சமுதாயப் புரட்சியை செய்தவர்களாகவே நான் பார்க்கின்றேன். சமணத்தை எதிர்த்ததும் பௌத்தத்தை எதிர்த்தும் மட்டுமல்ல சைவத்தை சமூகத்துக்கான மாற்றங்களோடு வளர்க்க நின்றவர்கள் அவர்கள். பெரியபுராணத்தினை ஆராய்ந்தால் அதற்காக அவர்கள் வாழ்க்கைக்காலம் முழுவதையும் அர்ப்பணித்ததையும் அறிய முடியும்.  சமத்துவமான மக்கள் வாழ்வை தமிழ்ச்சமூகத்தில் வேண்டி நின்ற பலதரப்பட்டவர்களின் தொகுப்பை நாயன்மார்களாக தொகுத்த வரலாற்று ஆவணமே பெரியபுராணம்.  சேக்கிழார் சொல்கின்ற அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்தும் அகச்சான்றுகளான பதிகங்களிலிருந்தும் திரட்டித்தரும் தகவல்களே கட்டுரைப்பகுதிகளை நிரப்பவிருக்கின்றன.

சேக்கிழார் பெருமகனின் சிறப்பு உண்மைச்சம்பவங்களை குறிப்புக்களாக தந்திருப்பதே. சீவகசிந்தாமணியில் திளைத்திருந்து சமணத்தின் பக்கம் சாயத்துணிகிற அரசனை மனம் மாற்றுவதற்கு சைவ சமயத்து நூல் ஒன்றை எழுதவும் வேண்டும், ஆனால் அதில் வரலாற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற தன் அத்தனை நோக்கங்களையும் நிறைவேற்றப்போன சேக்கிழார் நேரடியாக வெறும் சைவ இலக்கியமாக தெரிந்தாலும் வரலாற்றையும் நுட்பமாக ஆவணப்படுத்தியே இருக்கிறார்.

எடுத்துக்காட்டாக சம்பந்தரின் வரலாற்றில் வருகின்ற திருமறைக்காட்டு பதிகத்தின் பின்னணியை பார்க்கலாம். இப்போது வேதாரணியம் என்றழைக்கப்படுகிற திரு மறைக்காட்டுக்கோவிலின் கதவுகளை வேதங்கள் பூட்டி விட்டதாகவும் மக்கள் மறைவுப்பாதையில் சென்று வழிபட்டுவந்த காலத்தில் அங்கே வந்து கோவிற் கதவுகளைத்திறக்கவும் மூடவும் தமிழ்ஞான சம்பந்தனும் நாவுக்கரசனும் பாடல் பாடினார்கள் என்கிற பெரிய புராணச்செய்தி பலருமறிந்ததே.

அது தரும் வரலாற்றுச்செய்தி என்ன? வேதங்கள் கோயிற்கதவைப் பூட்டக்கூடியவையா? இல்லையே. ஆகவே இங்கே வேதங்கள் என்று குறிப்மாகச்சொல்லப்பட்டவர்கள் எவர்? வேதங்களை ஓதும் அந்தணர்கள் தான் இங்கே ஆலயக்கதவுகளைப் பூட்டிவைத்திருந்த வேதங்களாக சொல்லப்படுகிறார்கள் என்று கொள்வதே பொருத்தமானது. கோவிலை தமது கட்டுப்பாட்டிலே வைத்திருந்த அந்தணர்கள் தமிழர்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்காத போது தான் அப்பரும் சம்பந்தரும் அங்கே அடியார் கூட்டத்துடன் வந்து சமத்துவப்புரட்சி செய்து சாதாரண மக்களும் வழிபடும் வகையில் கோவிலைத்திறந்து விட்டனர் என இதைப்பொருள் கொள்வதில் தவறில்லையே.

அக்காலச்சூழலின் படி பெண்கள் இப்பிறவியில் முத்தியடைய முடியாது என்றும் தமிழில் இறைவனை பாடக்கூடாது என்றும் இசை தவிர்க்கப்படவேண்டியது என்றும் இருந்த பிற்போக்குத்தனங்களை எதிர்த்து  ' பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகையிருந்ததே' என்றும் , 'தமிழோடிசை பாடல் மறந்தறியேன்' என்றும் சைவத்து நாயன்மார்கள்  பாடித்திரிந்தனர்.

இசை விலக்காக ஆக்கப்பட்ட சமணச்சூழலில் யாழ் மீட்டுவதில் வல்லாரான திருநீல கண்ட யாழ்ப்பாணரையும் தன்னோடே அழைத்துச்சென்று ஊரூராகச்சென்று மக்களை சமத்துவமான சமுதாயமொன்றுக்காக ஈடுபடுத்தினார் தமிழ்ஞானசம்பந்தன். 

அக்காலத்தில் எல்லோரும் சென்று இறைவனை அண்மித்து வழிபடுவதை வலியுறுத்திய தேவார முதலிகள் நடைமுறையிலும் அவற்றை நிகழ்த்தி தாமும் அடியவர்களோடு அடியவர்களாக பங்கெடுத்தார்கள். 'போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்' என்று அப்பர் பாடினார். திருவையாற்றுக்கோவிலின் அக்காலத்து நடைமுறையின் படி சைவத்தவர்கள் குடங்களில் தூய நீரையும் அவற்றுள்ளே பூக்களையும் சேர்த்து கருவறைவரை சென்று வழிபடச்செய்ததே நாவுக்கரசர் சொல்கிற மேற்படி திருவையாற்றுக்காட்சி. அவரும் அந்த வரிசையிலே நீர்க்குடத்தினோடு செல்பவர்கள் பின்னால் ஒருவனாக நின்று நீராட்டி வழிபடப்புகுகின்றேன் என்று தொடர்கிறார். அப்பதிகம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட வரிகள் இறைவனை 'தரகர்' இல்லாத வழிபாட்டை வேண்டிநிற்பன. 

திருவிடைமருதூர்க்கோவிலில் சம்பந்தர் ஏற்படுத்தித்தந்த காட்சியும் பக்தி இலக்கிய காலத்தில் தமிழரின் சமத்துவ வாழ்க்கைக்கான அகச்சான்றாய் சொல்லலாம். 'தடங்கண்டதோர்  தாமரை திருவடி தன்மேல் குடங்கொண்டு  அடியார் குளிநீர் சுமந்தாற்ற' என்று குடங்களில் நீரும் பூக்களும் கொண்டு சென்று அடியவர்கள் நேரடியாக இறைவனைத்தொழுத தன்மையாற் காண முடியும். 

இத்தேவார முதலிகள் வலியுறுத்தியதும் எல்லோரும் சமம் என்பதுவே. இதில் மிகச்சிறப்பான விடயம் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் வழிபட்டார்கள் என்பதற்கு கூட சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக அந்தணர் குலத்து பெண்மணி திருநீலநக்கரின் மனைவியைப்பற்றி கூற முடியும். கதையின்படி அப்பெண்மணி கருவறைக்குள் சென்று இறைவனை வழிபடும் நாட்களைப்பற்றி வருகின்றன. ஒருநாள் திருநீலநக்கரின் கனவில் தோன்றிய இறைவன் சொல்கின்றதாக ' உன்னுடைய மனைவி ஊதிய இடங்களில் மட்டும் தான் எனக்கு புண்ணில்லை' என்று முன்னோர் குறிக்க விளைவதும் பெண்களுக்கான வழிபாட்டுரிமையையே. 

பக்தி இலக்கியக்காலத்தில் திருப்பனந்தாளில் தாடகை என்கிற இளம்பெண் தினந்தோறும் பூமாலை சாத்தி வழிபடுவாளாம். ஒருநாள் கருவறைக்குள்ளே இருக்கிற இறைவனாரின் மீது மாலையைப்போட புகுந்த வேளை ஆடை நெகிழத்தொடங்கியதில் அவள் திணறினாளாம். மாலையை கைவிடவும் முடியாமல் நெகிழ்கிற ஆடையை சரிசெய்யவும் முடியாத நிலையில் நின்றவளுக்கிரங்கிய சிவலிங்கம் சாய்ந்து பூமாலையை வாங்கிக்கொண்டதான ஐதீகப்பதிவுகள் உள்ளன. இச்சம்பவம் நிகழ்ந்ததா சாத்தியமானதா என்பதல்ல இங்கே விடயம். இதைத்தொடர்ச்சியாக சொல்லிச்சொல்லி கடத்திவருவதன் காரணம் ஆண்களுக்கிணையான பெண்களின் ஆலய வழிபாட்டுரிமையை ஏற்றுக்கொண்டவர்கள் நாங்கள் என்பதே.

உலகியலும் இசையும் மணவாழ்க்கையும் வெறுத்து ஒதுக்கப்பட்ட சமண சமயத்தின் அனைத்து நூல்களையும் கற்றுத்தேர்ந்த தருமசேனன் மறுபடி சைவத்திற்குத்திரும்பியதும்  திருநாவுக்கரசனாக மாறிய முதலாவது பதிகத்திலேயே 'தமிழோடிசை பாடல் மறந்தறியேன்' என்கிறார்.  சுந்தரர் மீது இறைவனால் இடப்பட்ட ஆணையாக 'அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் சொற்றமிழில் பாடுக' என்கிறார் சேக்கிழார். போகுமிடமெல்லாம் தன்னைத்தமிழ்ஞானசம்பந்தன் என்றே சொல்லிக்கொண்டார் சம்பந்தர்.

தமிழ்ச்சமூகத்தில் இப்போது தாழ்த்தப்பட்டவர்கள்/ஒடுக்கப்பட்டவர்கள் என்று தொழில்ரீதியான சாதிய வகுப்புக்கள் நிலவுகின்றன. ஆழ நோக்கி ஆராய்ந்ததில் சேக்கிழார் சொன்ன அறுபத்துமூன்று பேரும் பல்வேறு குலத்து மரபுக்குரியவர்கள். ஆனாலும் ஐயர் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் சொன்னது மூன்றே மூன்று பேரை மட்டும் தான். ஒடுக்கப்பட்ட தன் சமூக மக்களின் சமூகநீதிக்காக புரட்சி செய்ததில் தீயில் முடிந்த திருநாளைப்போவாராகிய நந்தனாரையும், திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் சொன்னார். மூன்றாவதாக வேடுவர் சமூகத்து கண்ணப்பரைச்சொன்னார். மூவருமே ஒடுக்கப்பட்டவர்கள் என்று இப்போது சொல்லப்படுகின்ற குலங்களிற்குரியவர்கள் என்பது சேக்கிழாரின் பெரிய புராணத்தின் மனவோட்டத்துக்கும் நடைமுறைச்சமுதாய வழக்கங்களிற்கும் முரணாகத் தெரிகின்றதல்லவா?


தொடரும்..

  
Views: 1688