ஆயிரத்திச் சொச்சமாவது காதல் கதை

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner

கதைக்குள் செல்வதற்கு முதல் இந்த கதையின் ஹீரோ 'நான்' பற்றி ஒரு சிறிய இன்ரோ. 'இன்ரடக்சன் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை. கதை மட்டுமே போதும் 'நான்' என்று வருகின்ற இடங்களில் எல்லாம் நாங்கள், எங்களையே போட்டு வாசித்து கொள்கின்றோம்' என்று நினைப்பவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் இரண்டாம் பந்தியை தவிர்த்துவிட்டு நேரடியாக மூன்றாம் பந்திக்கு தாவுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் சில நொடிகளை சேமித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த இன்ரோவில் வருகின்ற சில விடயங்கள் கதைக்கு தேவைப்படலாம் என்பதையும் இப்போதே சொல்லி விடுகின்றேன்.

நான்.... இருபத்தாறு பிளஸ் வயதுள்ள எழுமாற்றான ஒரு இளைஞனை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்வீர்களானால் உங்கள் ஞாபகத்துக்கு வருகின்ற முதலாவது ஆளைப் போல நான் இருப்பேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். தவிர நான் ஒரு சிவில் இஞ்சினியர். ராஜகிரியவில் எனது பொறுப்பின் கீழ் பத்து மாடிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. அலுவலர்கள், சப் கொன்ராக்ரர்கள் தொடக்கம் அடிமட்ட தொழிலாளர்கள் வரை கிட்டத்தட்ட ஐம்பது பேர் எனது தலைமையின் கீழ் அங்கு வேலை செய்கின்றார்கள். இந்த தலைமை என்பது ஒரு விதத்தில் சர்வாதிகார ஆட்சியைப் போன்றது. நான் என்னால் இயன்றவரை அங்கு ஹிட்லர் ஆகாமல் நல்லாட்சி நடாத்திக்கொண்டிருக்கின்றேன். ஆனாலும் சில சமயங்களில் என்னையறியாமலேயே நான் ஹிட்லர் ஆகிவிடுகின்றேன். பலமுறை முயன்றும் என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. அதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது தொழிலாளிகளே. மேலும் எனக்கு சொந்தங்களில்; பல சகோதரிகள் இருப்பதாலோ என்னவோ வெளிப் பெண்களுடன் கதைப்பதற்கு எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. அப்படியே கதைத்தாலும் அந்த உரையாடல் ஐந்து நிமிடங்களைத் தாண்டியதாக வரலாறில்லை. ஏனென்றால் ஒரு நிமிட முடிவிலேயே எனது உடல் ஏழு ரிச்ரரை தாண்டிய பூமியதிர்ச்சியை உணர்ந்தது போல பதறத் தொடங்கிவிடும். அந்தப் பதட்டம் என் குரலுக்குப் பரவ, இதனால் நான் வார்த்தைகளைக் கோர்க்கத் திணற..... இதற்கு மேலும் ஏன் அந்தக் கேவலத்தைப் பற்றிச் கதைத்துக் கொண்டு... எனது அலை நீளத்துடன் ஒத்துப்போகக் கூடிய, எனக்கு சமனாக கதைக்கவல்ல ஒரு பெண்ணுடன் மட்டுமே என்னால் சகஜமாக பேச முடியும்' என்று இன்றுவரை மனதார நம்பிக்கொண்டிருக்கின்றேன். அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டும் இருக்கின்றேன்.  இவ்வளவு குணாதிசயங்களையும் உள்ளடக்கிய 'நான்' இந்தக் கதைக்குப் போதுமானது என்பதால் இனி கதைக்குள் நுழையலாம்.  

கொழும்பு வெள்ளவத்தையில் உருத்திராமாவத்தையை உங்களில் பெரும்பாலானவர்களிற்கு தெரிந்திருக்கலாம். (தெரியாதவர்கள் கூகிள் மைப்பை நாடவும்.) அந்த உருத்திராமாவத்தையால் காலி வீதி நோக்கி வந்து, காலி வீதியில் இடது பக்கம் திரும்பினீர்கள் என்றால் நீங்கள் முதலில் எதிர்படுவது வெள்ளவத்தை கொமஷல் வங்கியின் கட்டடமாகத்தான் இருக்கும். மிக அண்மையில்தான் கட்டபட்டு இன்னமும் கூட புதுப் பொலிவு மங்காத அந்த வங்கி கட்டடத்திற்கு இப்போது போய்க்கொண்டிருப்பதையும் சேர்த்து கடந்த இரு மாதங்களில் மட்டும் நான் இருபத்தாறு தடவைகள் சென்று வந்திருக்கிறேன் (பெரும்பாலும் காரணங்களே இல்லாமல்). இடையில் நான்கைந்து தடவைகள் ஒரே நாளிலேயே இரண்டு தரமெல்லாம் கூடப் போயிருக்கிறேன் இவ்வாறு அடிக்கடி போய்வருவதால் அந்த வங்கியில் எல்லா விடயங்களும் எனக்கு அத்துப்படி என்று நீங்கள் நினைப்பீர்கள் ஆயின் நீங்கள் என்னைத் தவறாக கணித்து வைத்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம். இந்த விடயத்தில் நான் அhர்ஜூனன் மாதிரி. கிளியின் கழுத்து மட்டும் தான் எனக்குத் தெரியும். வேறு எதுவுமே தெரியாது. ஏனென்னறால் அந்த கழுத்தின் ஈர்ப்பு அப்படி. இங்கு அந்த சக்திவாய்ந்த 'கழுத்து' என்னவென்று உங்களுக்குப் போகப்போகத் தான் தெரியும். 

இன்று காலை, சைட்டில் தனக்கு புதிய வங்கிக் கணக்கு திறப்பதற்கு அரை நாள் லீவு வேண்டும் என்று கேட்ட ஒரு சிங்கள தொழிலாளியின் (பெயர்: அஞ்சன) அருளால் எனது இந்த இருபத்தாறாவது பயணம் ஏற்பட்டிருக்கிறது. அல்லது சிவனே என்று தனியே போக இருந்தவனை வலுக்கட்டாயமாக நான் கூட்டிப் போவதால், இந்த பயணம் என்னால் வன்முறையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். இப்படி ஒரு 'மாத்தையா' தனக்குக் கிடைத்திருப்பதை எண்ணி அந்த பாமர அஞ்சன தன் மனதுக்குள் என்னைப்பற்றி பெருமைப் பட்டிருக்கக் கூடும். ஆனால் இந்த செயலுக்குள் மறைந்திருக்கின்ற என் சுயநல ராஜதந்திரம் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

நானும் அஞ்சனவும் வங்கிக்குள் நுழைந்தோம். நேரம் காலை 10 மணி. ஏசியின் உபயத்தால் குட்டி சுவிஸ்லாந்தாகவே மாறியிருந்தது அந்த வங்கி. சுமாரான படத்துக்கு இரண்டாம் வாரத்தில் தியேட்டரில் இருக்கின்றளவு கூட்டம் உள்ளே இருந்தது. நான் வழமை போல அவளைத் தேட ஆரம்பித்தேன். வழக்கமாக அவள் இருக்கும் இடத்தில், சில கணங்களில் வெடித்துவிடக் கூடிய நன்கு ஊதிய பலூன் போல ஒருவன் இருந்து என் மீது சந்தேகப் பார்வை ஒன்றை  எறிந்துகொண்டிருந்தான். தொடர்ந்து இருபத்திச் சொச்சமாவது தடவையாக நான் இங்கு வந்திருப்பதால் ஒருவேளை அவன் என்னைக் கவனித்திருக்கக் கூடும். 'நீயெல்லாம் என்னைக் கவனித்து என்னடா பிரயோசனம்?' என்ற பதில் அலட்சியப் பார்வையுடன் நான் என் தேடுதலைத் தொடர்ந்தேன். 

இதோ கண்டுபிடித்தவிட்டேன். வெளிநாட்டுப் பணம் பரிமாற்றும் பிரிவில் அவள் இன்று அமர்ந்திருந்தாள். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனாலும் அந்த வரிசையிலேயே என் அப்பாவி அஞ்சனவை நிற்க வைத்தேன். இது நான் ஹிட்லராக மாறுகின்ற ஒரு சந்தர்ப்பம். வாசிப்பறிவில்லாத அவனும் அந்த வரிசையில் ஏழாவது ஆளாகப் போய் நின்று கொண்டான். அவனின் ரேண் வரும்போது நான் வருவதாகக் கூறிவிட்டு நல்லதொரு வியூ கிடைக்கக் கூடிய இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன். 

இன்று அவள், அதுதான் நயனா இளம் வெள்ளையில் கடும் வெள்ளையால் மெல்லிய வேலைபாடுகள் செய்யப்பட்ட நீல கரை சேலை அணிந்திருந்தாள். அது அவளின் அழகை பல ஆயிரம் மடங்காக உருப்பெருக்கிக் காட்டியது. தங்களின் அழகை துளி கவர்ச்சியும் இல்லாமல் சிறப்பாக வெளிக்காட்டுவது, அழகான பெண்களுக்கு மட்டுமே கைவரப்பெற்றிருக்கின்ற கலை. அல்லது அவ்வாறு கைவரப்பெற்றவர்களே அழகான பெண்கள் எனப்படுகிறார்கள். வழமைபோலவே இன்றும் அவள் தலை முடியை முற்றாக வாரி பின்னால் இழுத்து குதிரைவால் போல கட்டியிருந்தாள். 'டயானா' கட்டுக்கு அடுத்தபடியாக பெண்களை மிக மிடுக்காக காட்டுகின்ற தலையலங்காரம் நிச்சயம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். மந்தைக் கூட்டத்திலிருந்து தவறிவிட்ட ஆடுகள் போல அவளின் அந்த குதிரைவாலிலிருந்தும் சில முடிகள் தப்பி வந்து அவளின் முகத்தை தழுவியபடியிருக்கும். சரியாக ஒரு நிமிடம் நாற்பது செக்கன்களுக்கு ஒருமுறை அவள் தப்பிவந்த அந்த ஆடுகளை எடுத்து தன் காதுகளின் பின்னால் விட்டுக்கொள்வாள். அடுத்த பதினைந்து செக்கன்களில் அவை அவளின் முகத்தைத் தழுவ மீண்டும் வந்துவிடும். மீண்டும் அவள் அவற்றை எடுத்து தன் காதுகளின் பின்னால் விட்டுக் கொள்வாள். இது ஒரு ஊசல் இயக்கம் போல அல்லது பூமியின் சுழற்சி இயக்கம் போல சீரான இடைவெளிகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இது, நான் இங்கு வந்த முதல் இருபது தடவைகளில் செய்த ஆய்வுகளின் பலனாக கிடைத்திருந்த முடிவு. ஆனால், இன்றுடன் சேர்த்து இறுதி ஆறு தடவைகளும் அந்த முடிவில் சற்று விலகல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஒருவேளை நானே காரணமாக இருக்கலாம்.

வழமையான லொக்கேசனில் புள்ளியாய் கறுப்புப் பொட்டு, மேம்போக்காக பூசப்பட்ட கண் மை, அலட்சியமான காது வளையங்கள், சற்றே வட இந்திய சாயல் மூக்கு என்று இந்த இருபத்தைந்து நாட்களில் நான் அவளில் பார்த்து மனப்பாடமாக்கியிருந்தவற்றை ஒரு முறை மீட்டிப்பார்த்துக்கொண்டேன். எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் அவளின் மூக்கு நுனியில் இருக்கின்ற அந்த ஒரு வியர்வைத் துளி மட்டும் இன்று எக்ஸ்ரா. 'அட... இவள் மூக்குத்தி குத்தினால் இன்னும் அழகாக இருப்பாளே.' என்ற இன்ஸ்ரன்ட் எண்ணத்தை அந்த வியர்வைத்துளி எனக்குள் ஏற்படுத்தியது. பொட்டு, புள்ளி மச்சம் போல மூக்குத்திகள் எல்லாப் பெண்களுக்கும் அழகைக் கொடுப்பதில்லை தான். ஆனால் இவளுக்கு மூக்குத்தி பொருத்தமாக இருக்கும் போல தான் படுகிறது. 'முதல் சந்திப்பின்போது மூக்குத்தியை அவளுக்கு ரெக்கொமன்ட் பண்ண வேண்டும்.' என்று அபத்தமாக முடிவெடுத்துக் கொண்டேன். அவளின் நாடியின் ஓரத்தில் திருஸ்ட்டி பொட்டு போல சின்னதாய் ஒரு மச்சம் இருக்கும். அவள் குனிந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்ததால் அது எனக்கு தெரியவில்லை. அதை தேடும் முயற்சியில் நான் முற்றுமுழுதாக என்னை அர்ப்பணித்திருந்த வேளை,


'தம்பி மேனே இந்த போமை ஒருக்கா நிரப்பித் தாறியே..?' 

ஒரு எழுபதைத் தொட்ட ராஜ்கிரண் சாயல் கிழம் ஒன்று என் கலை தாகத்தையும் காதல் தாகத்தையும் ஒரே வார்த்தையில் குலைத்தது. 

'கொழும்பில இருக்கிறியள். எழுதப்படிக்கத் தெரியாதே..' 

என்ற பதில் கவுண்டரை கண்களாலேயே அந்த ராஜ்கிரணுக்குக் கொடுத்தேன். அது அந்தாளுக்கு நன்றாக விளங்கிவிட்டது போலும்.

'இல்ல மோனே கண்ணாடியை மறந்துபோய் வீட்ட விட்டிட்டு வந்திட்டன்.' 

பதிலளித்தார். பார்க்க வேறு பாவமாய் இருந்தார். மனதுக்குள் கறுவியவாறு அந்த படிவத்தை நிரப்பத் தொடங்கினேன். இதை அவள் பாத்திருந்தால் நிச்சயமாய்; ஒரு சிரிப்புச் சிரித்திருப்பாள்.
 
அந்த ராஜ்கிரணின் படிவத்தை நிரப்பி முடித்து நிமிர, அஞ்சன என்னைப் பார்த்து 'மாத்தையா என்ட...' என்று கொஞ்சம் சத்தமாகவே விழித்தான். குறைந்தது பதினைந்து தலைகளாவது என்னைத் திருப்பிப் பார்த்திருக்கும். அதில் ஒன்று நிச்சயமாய் அவளுடையது. 'வெற்றிக் கொடிகட்டு...' கரோக்கி மனதுக்குள்; பாட நான் ரஜனிகாந்தாய் நடந்து போய் ஒரு 'ஹாய்'உடன் அவள் முன்னாலிருந்த கதிரையில் அமர்ந்தேன். நான் வருவதை உணர்ந்து எதையோ எழுதுபவள் போல பாசாங்கு செய்துகொண்டிருந்த அவள், தன்னை மறந்து பதிலுக்கு 'ஹாய்..' என்றுவிட்டாள். அந்த ஹாயின் முடிவில் தான் தன்னை உணர்ந்து கொண்ட அவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். கவிதை...!!!

'சொல்லுங்கோ சேர். உங்களுக்கு என்ன வேணும்..?' சமாளித்துவிட்டாள். அவளின் பேச்சு முதலாம் தடவை நான் வந்தபோது கதைத்த மாதிரி இல்லாமல் மிகச் சகஜமாகவும் இயல்பாகவும் இருந்ததை நான் குறித்துக்கொண்டேன்.

'நீ தான் வேணும்' என்று சொல்ல நினைத்து, 'சேர் எல்லாம் தேவையில்லை. அவ்வளவு பெரியாளில்லை நான்...' என்று அப்பட்டமாக வழிந்தேன்.. 

'சரி. ஓகே. சொல்லுங்கோ அண்ணா. எதுக்கு வந்திங்கள்..?' சொல்லி முடித்துவிட்டு கொடுப்புக்குள் லேசான ஒரு சிரிப்புடன் மேல் கண்களால் என்னை வேவு பார்த்தாள். ராட்ஸசி...!!!

உண்மையில் நான் சற்றுத் திகைத்துத் தான் போனேன். நல்ல அல்ஜிபிரா கணக்கு ஒன்றை நிறுவ முடியாமல் போகும் போது ஏற்படுகின்ற ஒருவிதமான கவலை எனக்குள் லேசாக எட்டிப்பார்த்தது. 'இதுக்கு சேரே பரவாயில்லை போல கிடக்கு' என்று நான் முணுமுணுத்தேன். அது அவளுக்கு கேட்டிருக்க வேண்டும்.
'அப்ப மாத்தையா எண்டு கூப்பிடட்டா..?' என்ற அவளின் அடுத்த டூஸ்ராவில் நான் சகலதும் இழந்து நிராயுதபாணியாகி அப்பாவியாகச் சிரித்தேன். அதை அவள் நன்றாக இரசித்திருக்கக் கூடும். கிராதகி...!!! அதை லேசாக சாமாளித்து மழுப்ப 'இவனுக்கு புதுசாய் எக்கவுண்ட் ஒண்டு தொடங்க வேணும். அதுக்குத் தான் வந்தனாங்கள்..' என்று அடுத்த ஸ்ரெப்புக்கு தாவி அஞ்சனவை உள்ளே இழுத்துவிட்டேன். விளக்கவுரை இல்லாத கமல் ருவீட் வாசித்த சாமானியன் போல அஞ்சன என்னைப் பார்த்து விழித்தான்.

உண்மையில் அவள், 'இது வெளிநாட்டு காசு மாத்திற பகுதி. எக்கவுண்ட் ஓப்பிண் பண்ண வேணும் என்றால் அடுத்த லைன்ல போய் நில்லுங்கோ' என்று எங்களைக் கட்பண்ணி விட்டிருக்க வேண்டும். ஆனால் அவளோ அதற்குப் பதிலாக 'பைவ் மினிற்ஸ் வெயிட் பண்ணுங்கோ. இதோ வாறன்' என்றுவிட்டு எழுந்தாள். ஆக அவள் என்னோடு தொடர்ந்து கதைக்க விரும்புகின்றாள் அவளின் இன்றைய நடவடிக்கைகள் எனக்கு வியப்புக்கு மேல் வியப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அவள் நேராக அருகிலிருந்த ஊதிய பலூனிடம் சென்று என்னவோ கதைத்துவிட்டு அவனிடமிருந்து சில படிவங்களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று மறைந்தாள். இப்போது அந்த ஊதிய பலூன் என்னை வில்லன் பார்வை பார்த்தது. நான் ஹீரோ ஆகிக்கொண்டிருந்தேன். 


அடுத்த ஐந்து நிமிடங்களில் அவள் மீண்டும் வந்தாள். கைகளில் அதே படிவங்கள். ஆனால் முகத்தில் கொஞ்சம் அவசரமான தேஜஸ். ஆம், அந்த ஐந்து நிமிடங்களில் அவள் முகம் கழுவி, பொட்டை நேராக்கி, மூக்கு நுனி வியர்வை ஒற்றி, சேலையை இன்னும் சீர்ப்படுத்தியிருந்தாள். இதை எனது மூளை குறிப்பெடுத்து பழைய முடிவுகளுடன் ஒப்பிட்டு ஒரு நல்ல முடிவுக்கு வர எத்தனித்திருந்தது.

தன் திடீர்ப் பொலிவை நான் கவனித்து விட்டேன் என்ற உணர்வு அவளுக்கு ஒருவித வெட்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தலையை தாழ்த்தியவாறு வந்து, அமர்ந்து அந்த படிவங்களை நிரப்பத் தொடங்கினாள். அவளின் அந்த வெட்கத்தின் முடிவில் 'இவள் உனக்கானவளாகிவிட்டாள்' என்ற நல்ல முடிவை எனது மூளை பகிரங்கமாக எனக்கு அறிவித்தது. எனது ஏனைய அங்கங்கள் எல்லாம் அந்த முடிவின் குதூகலத்தால் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தன. இது சினிமாவாக மட்டும் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த இடத்தில் ஹரிகரனின் குரலில், வெளிநாட்டு லொக்கேசனில் நல்லதொரு மெலடி டூயட் ஒன்றை வைத்திருந்திருக்கலாம்;. 'மாத்தையா மகே ஐ.சி ஓணத..?' கிராதகன் அஞ்சன என் கனவைக் கலைத்து பூமிக்குக் கொண்டுவந்தான். நான் தட்டுத்தடுமாறி அவன் சொன்னதை அவளுக்கு தமிழில் மொழிபெயர்த்தேன். அவள் சிரித்துவிட்டு 'எனக்குச் சிங்களம் தெரியும்' என்று சிரித்தாள். மறுபடிம் நான் 'சட்டப்' ஆனேன். அடுத்த பத்து நிமிடகளுக்குள் அஞ்சனவின் வங்கிக் கணக்கு வேலை ஒரு முடிவுக்கு வந்தது. அந்த பத்து நிமிடத்துக்குள் நான் அவளை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு ஒரு முழு பிரபந்தமே இயற்றி முடித்திருந்தேன்.

அப்போது அவளின் மேலதிகாரி ஒருவர் பெரிய தொப்பை மற்றும் நரைமுடி சகிதமாக அவளருகில் வந்து 'நயனா, மற்றவர்களின்ர வேலையையும் நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாமல் அவர்களுக்கும் வேலைசெய்ய கொஞ்சம் சந்தர்ப்பம் கொடுங்கோ' என்று சொல்லிச் சிரித்தார். அதற்கு அவள், 'இல்லை சேர். இவர்கள் எனக்கு தெரிஞ்சவர்கள் அது தான்....' என்று இழுத்தாள்.

ஆக 'நான் அவளுக்கு தெரிந்தவனாகிவிட்டேன்' என்ற எண்ணம் என் மனதில் உருவாக ஆரம்பிக்க நான் என்னையே கட்டுப்படுத்த இயலாதவனாகி கொஞ்சம் சத்தமாகவே விசிலடித்தேன். அந்த சத்தத்தால் அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். அவளின் முகம் முழுவதும் வெட்கம் அப்பியிருந்தது. பொய்க் கோபத்தால் அதை மறைக்க முயற்சித்திருந்தாள். ஆனால் அது அவளால் இயலவில்லை.

'அப்ப என்ர எக்கவுண்ட்டை எப்ப தொடங்கிறது..?' என்று நான் ஆரம்பித்தேன்.
'அது தான் ஓல்ரெடி ஓப்பிண் பண்ணியாச்சே. பிறகென்ன..?' 'என்னிடமா டரிள் மீனிங்கில் கதைக்கிறாய்?' என்ற ஏளனம் அவளின் பதிலில் தெரிந்தது.
'அப்ப எப்பெப்ப இனி எக்கவுண்டை அப்டேட் பண்ண வேணும்' – எனது பவுண்ஸர்.
'இவ்வளவு நாளும் எப்பிடி அப்டேட் பண்ணினிங்களோ, அப்பிடி தான்.' – அவள் சளைக்காமல் இலகுவாக சிக்சர் அடித்தாள்.
'இனியும் இங்க பாங்கில தான் அப்டேட் பண்ண வேணுமா..?'- கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இந்த முறை யோக்கர் ஒன்று போட்டேன்.
'இப்போதைக்கு இங்க தான்...' அதுவும் சிக்சர் தான். 

அவளின் பதில்களிலிருந்த தெளிவையும், சிலேடையையும் மனதுக்குள் இரசித்தவாறு, எனக்கானவளைக் கண்டபிடித்துவிட்ட திருப்தியுடன் அவளிடமிருந்து விலக மனமில்லாமல் கதிரையிலிருந்து எழுந்தேன். கிட்டத்தட்ட அதே எண்ணங்கள் அவளின் முகத்திலும் பிரதிபலித்தன. இன்னும் நான்கு அடிகள் வைத்து வங்கியின் வெளிக் கதவை திறக்கும்போது நான் திரும்பி அவளைப் பார்ப்பேன் என்றும், அவ்வளவு நேரமும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும் ஒரு வெட்க சிரிப்புடன் வேறு எங்கேயோ பார்ப்பது போல நடிப்பாள் என்றும் எனக்கு நன்றாகத் தெரிந்தே இருந்தது.

Views: 1014