புறப்படு பிறப்பெடுக்க !

எழுத்தாளர் : ஷாக்கீர்மின்னஞ்சல் முகவரி: saakir.mim@gmail.comBanner

கனதூர தேசசஞ்சாரியை விடவும்
நெடுந்தூரம் நீந்தியடைந்து 
நேசப்பிணைப்பால் ரசாயணங்களைப் பரிமாறி
முத்தமிட்டு முட்டி மோதி 
மோகனவிலாசம் பொருந்திய பின்னர்
தந்தையூடும் தாயூடும்
பாட்டனும் பாட்டியும்
பூட்டனும் பூட்டியும்
சேயோனும் சேயோளும்
ஒட்டனும் ஒட்டியும்
பரனும் பரையும்

ஆதனும் அவளும் கொடுத்தனுப்பிய
ஆதனமரபுகளை ஒப்படைத்து
ஒருயிராய் 
ஒன்றெனக் கலக்கையில் - அந்தக்
கலங்களின் பெருக்கத்தோடு 
ஒட்டியும் ஒட்டாமலும் 
உறைந்து கொள்கிறது ஆன்மா!

ஒன்றுமற்ற 
ஒளியுமற்ற வெளியுமற்ற
காலமற்ற காட்சியற்ற
கற்பனைக் கெட்டாத
ஏகாந்த மௌனத்தில்.

குன்னென்ற அர்த்தம் 
கனத்த கட்டளை
கலைத்துப் போட்ட வெறுமுடிச்சின்
ஒளியிலும் வெளியிலும் - அதிற்
சிதறிய துகளிலும் அணுவிலும்
பெருகிய புவியிலே
விரவிய நீரிலும் 
பரவிய மண்ணிலும்
உப்பிலுஞ் சாறிலும்
உறுஞ்சி முளைத்த 
விதையிலும் - அதன்
கனியினைச் சுவைத்த 
மாமிசத் துண்டிலும்,
அரத்தம் சுரத்த பாலிலும்
மதுகரம் கழித்த தேனிலுங்
கொண்ட சத்திலே
திழைத்து வளர்ந்தது ஓருடல்.

வர்ணமயமான கைப்பணி
வர்ணித்து ஓயாத கலைப்படைப்பு
ஒழுங்கிலும் ஒழுங்காய்
அழகிலும் அழகாய்
வாரத்தெடுக்கப்பட்ட படிமம்.
நெகிழ்ச்சியான 
நீர்ம உலகத்தில்
விழுதோடு ஆடிவிளையாடி
இழுதோடு நீச்சலடித்துவிட்டு
உலர்ச்சியான திடமான சவால்களை
நெருங்குவதற்கு
பொறாமையும் குரோதமும் 
பொய்யும் புரட்டும்
கொண்ட தரையில்
நவானுபவத்தைச் சேகரித்து
மீண்டும்
மறக்க – நினைக்க - சுவைக்க
புறப்படுகிறது 
பிறப்பெடுத்து !  
Views: 651