மனிதன்?

எழுத்தாளர் : அகராதிப்பொடியன்மின்னஞ்சல் முகவரி: agaradhipodiyan@gmail.comBanner

உழைப்பிலும் குறைவில்லை
உள்ளத்திலும் கள்ளமில்லை
குருதிச்சிறு தட்டில் கூட
குறைவொன்றும் கொள்ளவில்லை
அனற்றமியில் அப்நோர்மலில்லை
பிசியோவிலும் பிசகில்லை
பிழையொன்றும் அறிந்ததில்லை
பிழையாய் பிறந்ததை விட
வேற்றுமை ஏதும் சொல்லும்
வேற்றுச்சாதி கொண்டதைவிட

விடுதலை போரும்
விடுதி வாசல்களும்
ரோட்டுக்கடைகளின்
ரொட்டித்துண்டுகளும்
சேட்டுக்கடைகளில்
சேர்ந்த நகைகளும்
சாதியம் பார்த்ததென்று
சேதி ஒன்றும் கேட்டதில்லை
எமேயன்சி வார்ட்டுகளும்
எமனவன் கயிறுகளும்
எல்லாருக்கும் தானே

நட்பு கொள்ள கூட
நயந்து தான் வந்தீர்
வேசியில் கூட
வேற்றுமை கொள்ளாமல்
கல்யாண கதையில் மட்டுமெம்மை
கழித்து வைத்ததேனோ
பிச்சைக்காரன் என்னிடம்
பிடுங்கித் தின்பதில்
பிரயாசை தான் என்னவோ
சகமாய் பிறந்தவனை
சகித்தேற்க மனமில்லை
செவ்வாய்க்கு செய்மதியில்
சேதி கொண்டு போகணுமாம்

காகமாய் பிறந்திருந்தால்
கலந்து வாழ்ந்திருப்பேன்
எறும்பு ஆனாலும்
எடுப்பாய் இருந்திருப்பேன்
தேனியாய் இருந்தாலும்
சேர்ந்தே இருந்திருப்பேன்
மானங்கெட்ட மனிதனாய்
மாறிப் பிறந்தேனே
சாதி வெறியில்
மோதி மடியும்
பாதி கூட்டத்தினில்
மிச்சமாய் ஒருத்தனிவன்.....
                
Views: 471