குந்தி சபதம்

எழுத்தாளர் : ஷாருஜன்மின்னஞ்சல் முகவரி: nesharujan@gmail.comBanner

முற்றாக எரிந்து விட்டிருந்தது குடில். தணல் துகள்கள் காற்றில் வீசியடிக்கப்படுக்கொண்டிருந்தன. குடிலை சூழவும் வெப்பம் மிகுந்திருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாது குடிலின் அருகிலேயே முகம் சிவக்க அமர்ந்திருந்து வெந்து கொண்டிருக்கும் தணல் கட்டைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் குந்தி. பீமனும் யுதிர்ஷ்டனும் தூரவுள்ள மரமொன்றின் நிழலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். தீயை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாண்டு அதனை கைவிட்டு குந்தியின் அருகில் வந்தமர்ந்தான்.

'வெப்பம் தணிவதுபோல் தெரியவில்லை. வேறு இடம் தேடும்வரையில் குழந்தைகளோடு போயிருப்பாயாக குந்தி'

'இருந்தும் என்ன பயன் அய்யனே. என் அரவணைப்பு அவர்களின் பயத்தை தணிக்கும் என்று எண்ணுகிறீர்களா? அவர்களின் முகங்களை பாருங்கள். உறக்கத்திலும் பயத்தின் ரேகைகள் ஆழமாக படர்ந்துள்ளன. காட்டிலாவது அமைதியாய் வாழலாம் என்றல்லவா இங்கு வந்தோம். சர்வேஷ்வரனுக்கு அதுவும் பொறுக்கவில்லை போலும், நம்மை வேதனையில் தீயில் உழல வைக்கின்றார்.'

'கவலைப்படாதே குந்தி, நமக்கு என்ன குறை தேவர்களின் அம்சமாகவே இரு குழந்தைகளை ஈன்றுள்ளாயே. இயற்கையின் செயலுக்கு கடவுளை நிந்திப்பது தவறாகும்.'

'இயற்கையும் இறைவனின் சக்திக்குட்பட்டதுதானே. என்னை சமாதானப்படுத்த முயலாதீர்கள். என் மனதில் பழிவாங்கும் எண்ணமே மேலிட்டுள்ளது. இயற்கையை பழிவாங்க வேண்டும் நம் இருப்பிடத்தை தின்ற அக்னிபகவானை பழி வாங்க வேண்டும்.' சொல்லும் போதே குந்தியின் அழுது சிவந்திருந்த கண்கள் மேலும் தணலெடுத்தன.

பாண்டு தான் என்ன சொன்னாலும் அதை கேட்கும் நிலையில் குந்தியில்லை என்பதையுணர்ந்து அமைதிகாத்தான்.

அந் நேரத்தில் குடிலுக்கு அருகிலுள்ள மரமொன்றில் இருந்த கழுகுக் குஞ்சுகளின் இரைச்சலை கேட்டு சீறி வந்த கழுகு குஞ்சுகளை பாதுகாப்பாக வேறு இடத்தில் சேர்த்துக்கொண்டிருந்தது. இதை கவனித்த குந்தி சிந்தனையில் ஆழ்ந்தால் பின் தெளிந்த முடிவு எடுத்தவள் போல் கண்களை துடைத்து பாண்டுவை பார்த்தால் இதுவரை இருந்த கேள்விக்கான விடை கிடைத்த மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது.

'வேகம்...... மனதளவிலும் உடலளவிலும் ஒருவன் வேகமுடையவனாய் இருந்தால் அவன் நிகரற்றவனாகிறான். எனக்கும் அப்படிப்பட்டவனே புதல்வனாக வேண்டும். அவன் மனம் சொல்லும் திசையில் செலுத்தும் கணையின் விசை அமையும். அவன் சொல்லில் கவி உறையும். அவன் தேஜஸின் முன் கதிரவன் நாணிக் குனிவான். தேவர்களின் அம்சமாகவே முன்னவர்கள் பிறந்தார்கள். ஆனால் இவன் தேவனாகவே மண்ணில் அவதரிப்பான்.' தடையேதுமின்றி சொற்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
பாண்டு அவள் சொல்வதையே அச்சம் கலந்த வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தான்.

'சற்று நிறுத்து குந்தி. அமைதியடைவாயாக. இந்திரன் ஒருவரே நீ சொல்லும் அம்சங்கள் வாய்க்கப்பெற்றவர். எனில் நீ அவரையே நோக்கி உன் மந்திரத்தை ஜெபிக்கபோகிறாயா? மனதில் கொள் குந்தி அவர் தேவதேவன். தேவர்களுக்கெல்லாம் அதிபதி. உன் மந்திரத்தால் அவரை உன் முன் கொண்டு வரமுடியுமென நினைக்கின்றாயா?'

'நிச்சயமாக... துர்வாச முனிவரின் சொல் வேள்வியில் உதித்த தீ போல் புனிதமானது. அவரின் வரமும் அவ்வாறே. இந்திரனும் அதற்கு செவிசாய்க்கத்தான் வேண்டும். உலகிலேயே வெல்லப்பட முடியாத ஆயுதமான வஜ்ராயுதம் போல் யாராலும் வெல்ல முடியாத ஒருவனை இந்திரன் கரங்களாலேயே தருவிக்கச்செய்வேன். தாயின் சபதங்களை முடித்துவைப்பவனாக இருப்பான். அவனுக்கு அர்ஜுனன் என்னும் நாமகரணம் இடுவேன்' கூறி முடித்து அமைதியாய் வானத்தை பார்த்தாள்.

இருண்ட வானத்திலிருந்து மழை தூறல்கள் விடுபட்டு வந்தன. சூடு மண்ணுக்குள் அடங்கி மண் புது வாசம் பரப்ப தொடங்கியது. குந்தி எழுந்து கேசம் கலைந்ததையும் பொருட்படுத்தாமல் வேகமாய் நடந்தாள். இப்போதைக்கு முடிவெடுத்திருப்பாள் எங்கு செல்ல வேண்டுமென்றுபின்னால் பாண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவளின் வழி நடந்தான்.

Views: 748