ஓர் ஒற்றனின் காதல்

எழுத்தாளர் : தர்ஷன்மின்னஞ்சல் முகவரி: tharz.suntharam@gmail.comBanner

என் சகியே !
உனை பிரிந்து இவ்விரு
நாட்கள் எப்படி இருப்பேனோ,
உனை எண்ணியே இருநாட்கள் 
இருள்களை களிப்பேனோ,
இடை விரல் கோதி 
இழுத்தணைக்கையில் நீ 
விம்மி விம்மி தந்தனுப்பிய 
முத்த தூறல்களை இருநாட்கள் 
முழுதும் கொள்ள...
பிரித்து கொள்ள...
அளவுகோல் வைத்துக்கொள்வேனோ...

உடைகள் நடுவே உன் புகைப்படம் நீ செருக...
அதை வேண்டாம் என்று சொல்லி நான் முடிக்க...
கொட்டருவிப் பொங்கியெழ....!

அடியேய் !?
உன் போல் அதற்கு என்னுடன் 
விளையாட தெரிவதில்லை...
உன் போல் அதற்கு வாசம் 
வீச தெரிவதில்லை...
உன் போல் நொடிக்கொரு 
பாவனை காட்ட தெரிவதில்லை...
பிறகேன் எனக்கது ..?

நீ கட்டியிருக்கும் சேலையை 
கலைந்து மடித்து வை...
உன் மடி சாய்ந்து தூங்கும் 
சுகம் தரும் சேலைமீது நான் படரும் போது..

பஞ்சுக்கையால் நெஞ்சை பதம்பார்த்து,
'சேலையை கேட்டுவிட்டு 
பின் 
புகைப்படம் வேண்டாம் என்றிருக்கலாமே.?!
எங்கே என்மீது அன்பு குறைந்ததோ ! என்று
ஒரு கணம் இறந்துவிட்டேன்.'
என்றாய்..

கண்ணருகே முத்தமிட்டு,
கண்ணீருக்கு முற்றுப்புள்ளி 
வைத்து திரும்பினால்
முதுகணைத்து காற்புள்ளி இட்டாயே..

அங்கு நின்றேனடி நான்
உயிரெனும் சாறது நீங்கிய 
சக்கையாய் ..!

'நேற்றிரவு நினைவுகளை 
அழகாக வாங்கி மடித்து 
வைத்துக் கொண்டது 
அவன் அலைபேசி மெமோ'

வந்தது கொழும்பு..
குறையட்டும் கொஞ்சம் கொழுப்பு
என்றெண்ணியோ என்னவோ நடந்தே
வந்துவிட்டான்
வழமையிலேயே பழக்கப்பட்ட
அந்த விடுதிக்கு...

இங்கு வந்தால் மட்டுபடுத்தப்பட்ட
ஓரிரு மணி தூக்கம் தான் 
அவனுக்கு...
அவனுக்கு மட்டுமல்ல
அங்கே உருகும் இன்னொரு 
ஜீவனுக்கும் தான்...

என்ன செய்ய மறந்தாலும்
மறக்காத ஒன்று...

ரீங் .... ரீங் ....

எதிர் முனையிலிருந்து

'நீங்கள் தொடர்பு கொள்ளும் 
வாடிக்கையாளர் மிகவும்
கோபத்துடன் இருக்கிறார்' என்றாள்.

நேரம் பிந்திய அழைப்புதான்
கோபத்திற்கு காரணம் என்று 
இவனும் அறிவான்.

இங்கிருந்து அவன்
கோபத்துக்கு நான்கு...
தனிமை தூக்கத்திற்கு நான்கு...
எதற்கும் மேலதிகமாய் நான்கு...
என்று முத்தத்தை விழுங்கிவிட்டு
வெறும் சத்தத்தை மட்டும்
அனுப்பும் அலைபேசி வழியே
அலையாய் கொடுத்தனுப்பினான்
முத்தத் துருவல்களை

உபயோகித்த ஆயுதம் சற்றே பெரிதல்லவா...?!
வில்விடு அம்பின் வேகமாய்
மறைந்தது கோபம்..
உதித்தது சூரியன்..

எழுந்தான்...
குளித்தான்...
புறப்பட்டான்...
நடந்தான்...

பத்துக்கு பத்து அறையில்
அங்கே செய்வதற்கு வேறொன்றும் 
இருப்பதில்லை.

தன்னை கொலை செய்வது போல்
அழுது கொள்ளும் வாகன சத்தம்,
ஆங்காங்கே குப்பையில் 
குளிக்கும் தெருக்கள்...

பூக்களை தேடும் 
வண்டுகளை காண்பது வழமை
இங்கு வண்டுகளை தேடும்
பூக்கள் தான் புதுமை
ஒன்றை முந்தி ஒரு மலர்
அவன் முன்னால் வந்து நின்றது 
தனியார் பேரூந்து என்ற பெயரில்...

நரக வாழ்க்கை.....
மன்னிக்கவும்.?!
நகர வாழ்க்கை..
கொஞ்சமும் இவன் விரும்பாத
ஒன்றுதான்.

வருடம் நான்கு முறை
நடக்கும் சாதாரண 
ஒன்றுகூடல் தான்.
கடிகாரம் பார்த்து
கைதி ஆகும் நாட்கள்
அல்லவே இவை !
அதனால் அவனுக்கு கொஞ்சம் 
பிடித்து போனாலும்
மனைவி முகம்
காணாமல் கொஞ்சம்
பித்தும் பிடித்துத்தான் போகிறது..

எந்நேரமும் மனைவி நினைப்புதானா?
இவன் கைபிள்ளை போல 
என்றெண்ணும் சிலரும் 
அவனைச் சுற்றி உண்டு.
சின்னஞ்சிரு வயதிலே
சீராட்ட எவருமின்றி
தொட்டில் பொம்மையாய்
தூங்கியே பழகியவன்
செக்கிழுக்கும் அடிமாடாக 
போகாமல் அவனது
எப்பிறவி புண்ணியமோ..!
என் வர்க்க இல்லத்தின் அரவணைப்பில்
உலகை உணர்ந்தான்..
முதலில் 
கணனியை கரம்பிடித்தான்..
காலம் தந்த காதலியையும்
கரம்பிடித்தான்..

தனக்கென இருக்கும் ஓர் 
சிறு உலகம் அதை சுற்றி
அவனோடுவது தவறில்லையே...?!

இதோ !!
வந்த வேலை முடிந்ததும்
மாலை நேரத்தில் அவளுக்கு
பிடித்ததை வாங்கிச் சென்று
அவளை அசத்திவிட எண்ணிவிட்டான்.
அவளுக்கு பிடித்தது 
அவனை மட்டும் தான்
என்று நன்றாய் தெரிந்துருந்தும் கூட..

அவனது வீட்டுக்காரி
பத்து ரூபாய் மிட்டாய்
வாங்கிப்போனாலே ஏன் 
வீண் செலவு ? என்று திட்டுபவள்.
சற்றே குறைவாய் கொஞ்சினால்
இதில் ஏன் கஞ்சத்தனமென இதழ்
பிதுக்குபவள்.

தேடிக்களைத்தவன்
ஏதோவெல்லாம் வாங்கி
வரும் வழியில்
கடவுளின் எழுத்துப்பிழையோடு
வந்த சிறு கவிதைகள் இரண்டிடம்
பத்து ரூபா பைகளும்
வாக்கிக் கொண்டு
சொர்க்கம்
நோக்கி புறப்பட்டான்..
அதுதான்
அவனது சொந்த ஊர் நோக்கி ..!

அதிகாலை இரண்டு,

டிங் .. டொங்ங் .....

ஒரே அழைப்பில் கதவு 
திறந்தாள்.
கொடியென படர்ந்தாள்..
அமிர்தவர்ஷிணி ராகத்தில்
ஏன் இவ்வளவு தாமதம் ?
என்றாள்..

அவளது கன்னங்களை அணைத்துக் 
கொண்டது கைகள் ..
அவளும் நானும் 
கொண்ட நெருக்கத்தை விட
அவள் கண்களும் தூக்கமும் நெருங்கி
கட்டிக்கொண்டிருந்தன..
சரி..நாங்கள் பார்த்தாகிவிட்டது.
இனி இவர்களும் கட்டித்தழுவட்டுமே என்று
இமைகளுக்கும் நேரம் கொடுத்துவிட்டார்கள்..
அந்த நல்லவர்கள்
ஒருவரது தொலைபேசியை ஒருவர்
சோதனை செய்வது 
இல்லறவாழ்வில் சகஜம் தானே..!
இங்கே 
இவர்களது சோதனை
மெமோ பக்கம் மட்டும் தான் !

அவனது தொலைபேசி 
இரவே சலவை செய்யப்பட்டு
இஷ்திரிக்காக போடப்பட்டிருந்தது.

அவள் கலந்த டீ வாசம்..
அவன்
காலையின் முதல் சுவாசமானது..

அருகே அவளது தொலைபேசியும்

'என்னை எடு,வாசி !!'
என்று நச்சரித்தது.

அவளும் மெமோ பார்க்கச் சொல்லி
காதை கொறித்தாள்.

புல்லொன்று நுழைய வழியில்லை
என் இதயத்தில்..
புயலென வந்த புதிர் நீ !

நேற்றிரவு  விரல்களுக்கு
மருதாணி வைத்துவிட நீ இல்லை..
எனக்கும் அது சிவப்பதை 
பார்க்க வேண்டுமென்றில்லை..

உறக்கத்தில் என் விரல்களால்
உன்மீது நான் வரைந்த
கிறுக்கல்களை காணவே !

தினம் காலை 
கண் இமைகளில் மை
இடுகையில் உன் கண்ணில்
என்னழகை பார்த்திடுவேனே...

இன்றுகாலை கண்ணிமை
நான் இடவேயில்லை.
கண்ணீர் நிரம்பி அங்கு
மையிட இடமேயில்லை.

நான் என்ன செய்ய ...
இதை
முதலில் உன்னிடம் சொல்லி
கட்டியணைக்க அருகில்
நீ இல்லையே

காதல் கனவே!
நீ காதலாக
புதைத்தை
உயிர்ப்பிக்க காத்திருக்கிறேன்.
உயிருள்ள கவிதையாக !!

நான்கு கால்களால் எழுந்தோடி
அவளின் கழுத்தருகே 
கட்டிக்கொண்டான்.
இதை வாசிக்க இவ்வளவு
நேரமா ?என்று அவள் கொஞ்சம்
திட்டிக்கொண்டாள்..!


Views: 914