விடிவெள்ளி

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner

காலை நேர அவசரத்தில் துடித்துக்கொண்டிருந்த அந்த பேரூந்து நிலையத்தின் சன நெரிசலுள் மெதுவாக நுழைந்தான் மயூரன். அவனை அங்கு எவரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அது தான் அவனுக்கும் தேவையாக இருந்தது. அவனது கண்கள் அங்குள்ள சனக்கூட்டத்தை மெதுவாக அலச ஆரம்பித்தன. புறா எச்சங்களால் நிரம்பியிருந்த ஒரு ஆசனத்தில் அனாதையாக இருந்த ஒரு அலுவலகப் பை அவனது அலசலை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த பையிற்கு அருகிலே டிப்ரொப்பாக உடையணிந்திருந்த ஒருவர் யாருடனோ தொலைபேசிக் கொண்டிருந்தார். அந்த பையிற்குரிய சொந்தக்காரர் இந்த ஆசாமியாகத் தான் இருக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க மயூரனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களிலேயே மயூரன் அந்த பையுடன் அவ்விடத்திலிருந்து காணாமல் போயிருந்தான். அந்த 'ஆபீசர்' ஆசாமி இன்னமும் தன் அலைபேசி உரையாடலை தொடர்ந்துகொண்டிருந்தார்.

தன் வழமையான பாதுகாப்பு இடத்தை அடைந்த மயூரன், ஒரு எதிர்பார்ப்புடன் அந்தப் பையைச் சோதனை போட ஆரம்பித்தான். ஆறேழு அலுவலக பைல்கள், சில புத்தகங்கள் தவிர அதில் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. ஏறத்தாழ அந்த பையால் தனக்கு எந்த உபயோகமும் இல்லை என்ற முடிவுக்கு மயூரன் வந்துவிட்டிருந்தபோது, அவனின் கைகளுக்கு அந்தப் பையின் அடியிலிருந்த ஏதோவொன்று தட்டுப்பட்டது. அதை வெளியே எடுத்துப் பார்த்த மயூரனுக்கு, வெண்ணெய் கடைய பால் வாங்கப் போனவனுக்கு பாதி வழியிலே அதுவும் இலவசமாக வெண்ணையே கிடைத்துவிட்ட ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆம், அவன் கண்டெடுத்த பொருள் ஒரு போதை மருந்து அடங்கிய ஊசி. 'இப்ப பெரிய உத்தியோகங்களில இருக்கிறவையும் இவ்வளவு சாதாரணமாய் இதைப் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டினம் போல. எங்கட நாடு வேற லெவலுக்கு போய்க்கொண்டிருக்குது' என்ற அவனது அடி மனதின் நக்கலான ஆதங்கம், 'இண்டைக்கு இது காணும்' என்ற தற்காலிக எண்ணத்தால் முற்றாக காணாமல் போயிருந்தது. அங்கிருந்த, அவனுடைய தற்போதைய ஒரே நண்பனான அந்த ஒருகால் முடமான மர வாங்கில் பொருத்தமாக   அமர்ந்து கொண்டு, ரத்த நாளங்கள் வெளியே தெரியுமாறு தனது வலது கையை இறுக்கிக் கொண்ட மயூரன், தன் இடது கையினால் பழுப்பு நிறமான அந்த திராவகத்தை ஊசி மூலமாக தன்னுள் செலுத்த ஆரம்பித்தான். அந்த திரவம் உள்ளே செல்லச் செல்ல அவன் புரியாத மொழிகளில் ஏதேதோ பிதற்றியவாறு மயக்கமடையத் தொடங்கினான். அவனது போதை மயக்கம் தெளிவதற்குள் அவனைப்பற்றி சின்னதாக ஒரு பிளாஸ்பாக். 
.............................................
ஓய்வு பெற்ற நூலகரான அப்பா, கலண்டரில் இருக்கின்ற எல்லா விரதங்களையும் பாரபட்சமில்லாமல் அனுஷ;டிக்கின்ற அம்மா, தனியார் வங்கி ஒன்றில் உதவி முகாமையாளராக வேலை செய்கின்ற இவன், க.பொ.த உயர்தரத்தில் படிக்கின்ற தம்பி என அழகான சிறிய குடும்பம் மயூரனுடையது. வழக்கமான நடுத்தரக் குடும்பங்களுக்கே உரிய சில சில்லறை பிரச்சினைகளைத் தவிர அவனது குடும்பத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்தப் பிரச்சினைகளுமே இருக்கவில்லை. அதனால் 'ஐ'ற்கு வந்துவிட்ட சங்ககாரவின் ரெஸ்ட் மச் துடுப்பாட்டம் போல அவனது வாழ்க்கை மிகச் சீராகப் போய்க் கொண்டிருந்தது. அவனது அந்தச் சீரான துடுப்பாட்டம் ஒரு எதிர்பாராத பெரிய விபத்துடன் முடிவுக்கு வந்தது. ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு முதல் நடந்த ஒரு விபத்தில் அவன் தன் அம்மா, அப்பா, மற்றும் தம்பி மூவரையும் ஒரேயடியாக இழந்து போனான். திடீரென ஏற்பட்ட அளவிடமுடியாத தனிமை, சோகம், கவலை எல்லாம் அவனைத் துழைத்தெடுக்க ஆரம்பித்தன. இதனால் தன் வேலையில் அவனால் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. தனிப்பட்ட பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் வேலை நேர்த்தியை மட்டுமே பார்க்கின்ற அவனது வங்கி, சிறிது காலத்திலேயே ஒரு குறிப்பிட்டளவு தொகையைக் கொடுத்து அவனைக் கைகழுவி விட்டது. இருக்கின்ற கவலைகளுடன் சேர்த்து, அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற புதிய பிரச்சினையும் அவனுடன் இணைந்து கொண்டது. 

பிரச்சினைகளுள் அமிழ்ந்திருக்கும் ஒருவன் எடுக்கின்ற ஒவ்வொரு சிறிய முடிவுகளும் கூட அவனது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாய் இருக்கும். அம் முடிவுகளில் ஏதாவது ஒன்றில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும் கூட அது அவனை, அவனது எதிர் காலத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையே. அப்படி ஒரு பெருந் தவறைத்தான் மயூரனும் செய்தான். தன் பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன முடிவு எடுப்பது என்று குழம்பிக் கொண்டிருந்த மயூரனுக்கு, புதிதாக உருவான நண்பன் ஒருவன் மூலமாக போதைப் பழக்கம் தீர்வாகக் கிடைத்தது. போதைப் பொருட்கள்; அவனது பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து விடுவதால் என்ன தீர்வு எடுப்பது என்ற குழப்பம் அவனிடமிருந்து முற்றாக இல்லாமலே போய்விட்டிருந்தது. ஆரம்பத்தில் சிறிது சிறிதாக ஆரம்பித்த இந்தப் பழக்கம் காலப்போக்கில் அவனை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. இதன் காரணமாக அவனிடமிருந்த பணம், சொத்து எல்லாம் சிறிது சிறிதாக கரைய தொடங்கியது. காசுக்காகவே அவனுடன் ஒட்டியிருந்த நண்பர்கள் எல்லோரும் அவனுடைய காசு குறையத் தொடங்கியதுமே அவனை விட்டு விலகத்தொடங்கினர்;. அவனுடைய கையிருப்புகள் எல்லாம் முடிவடைந்து போவதற்கும் அவன் மீண்டும் தனியாளாக ஆவதற்கும் சரியாக இருந்தது. 

வெறும் கையுடன் தனியே நின்ற மயூரனுக்கு போதைப் பொருள் வாங்குவதற்காகவாவது பணம் தேவை என்ற புதியதொரு பிரச்சினை உருவெடுக்கத் தொடங்கியது. இதற்காக அவன் சிறிய சிறிய திருட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான். கொஞ்ச நாட்களில் அவன் திருட்டுத் தொழிலில் கைதேர்ந்தவன் ஆனான். சித்திரமும் கைப்பழக்கம் என்று நம்மவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள். காலப் போக்கில் திருடுவதும் அந்தத் திருட்டுப் பணத்தில் போதைப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதுமே அவனது அன்றாட வழக்கமாகிப் போனது. அப்படியான அவனது வழக்கமான திருட்டு ஒன்றின்போது தான் இன்று அவனுக்கு பணத்துக்குப் பதிலாக போதைப் பொருளே கிடைத்திருக்கின்றது. விடுவானா அவன்..........!!!

.......................................

சில நாட்களின் பின்னர்.........

நகரின் பிரதான கடைத் தொகுதிக்கு முன்னால் அதே ஆள், அதே தொலைபேசிப் பேச்சுடன் ஆனால் புதிதாக ஒரு கைப்பையுடன் மயூரனின் கண்களில் சிக்குப்பட்டான். புதிய கைப்பைக்கான காரணமும் அந்த கைப்பையினுள் என்ன இருக்கிறது என்ற விடயமும் மயூரனுக்கு தெரியாததில்லையே. எனவே மயூரன் மெதுவாக அவனை நெருங்கினான். ஆனால் அந்த ஆள் பையை தன் கைகளிலேயே வைத்திருந்ததால் அவனால் அதை இலகுவாகக் கைப்பற்ற முடியவில்லை. அவனைப் பின்தொடர்ந்து சென்றாவது அந்தப்பையை திருடியே ஆகவேண்டும் என்று முடிவு செய்த மயூரன், சிறிது நேரத்தில் அந்த ஆள் நடக்கத் தொடங்கவே இவனும் அந்த ஆளைப் பின்தொடர ஆரம்பித்தான். 

அந்த ஆள் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு கட்டடத்தினுள் நுழைந்தான். அது பார்வைக்கு ஒரு நூலகம் போல காட்சியளித்தது. அந்த ஆள் வெகு இயல்பாக உள்ளே சென்று அங்கிருந்த வாங்கொன்றில் அமர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அவனைத் தொடர்ந்து கட்டடத்துள் நுழைந்த மயூரனுக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை. அவனது தோற்றத்தையும் நடவடிக்கைகளையும் கண்ட அங்கிருந்தவர்கள் எல்லோரும் அவனை ஒரு முகச்சுழிப்போடு பார்த்தனர். நல்ல காலத்துக்கு அந்த ஆள் மட்டும்  அவனைக் கவனிக்கவில்லை. அங்கிருந்தவர்களில் ஒருவர் அவனைக் கூப்பிட்டு 'தம்பி என்ன இடம் மாறி வந்திட்டியோ...? வந்து இங்க இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படி. இனிமேல் இப்பிடி ஒரு கோலத்தோட இங்க வராதே..' என்று கூற, எதுவும் செய்ய இயலாத மயூரன் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வாசிக்க அமர்ந்தான். தந்தை ஒரு நூலகர் என்பதாலோ என்னவோ அவனுக்கு புத்தகங்கள் வாசிப்பதில் இயல்பாகவே ஒரு ஆர்வம் முன்பு இருந்திருக்கிறது. இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையானதோடு அவனை விட்டுப் போன நல்ல பழக்கங்கள் பலவற்றுள் இந்த வாசிப்புப் பழக்கமும் ஒன்று.
 
மயூரன் ஒரு புத்தகத்தைத் திறந்தான். 'போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட இலகுவான வழிகள்' என்ற அப் புத்தகத்தின் தலைப்பே அவனை ஏதோ செய்வதுபோல இருந்தது. ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு பிறகு அவன் வாசிக்கின்ற முதலாவது புத்தகம்;. அதுவும் இங்கிருக்கின்றவற்றுள் எழுமாற்றாக எடுத்த ஒரு புத்தகம். அது இப்படியா இருக்க வேண்டும்? ஆனாலும் 'அந்தாள் இங்க இருந்து வெளியால போறவரைக்குமாவது இங்க இருக்க வேணுமே. கிட்டத்தட்ட ரண்டு நாள் மருந்தையெல்லோ அவன் வைச்சிருக்கிறான். சும்மா விடலாமா?' என்ற எண்ணம் அவனைக் கட்டுப்படுத்தவே அப்புத்தகத்தைப் புரட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பக்கங்களை வாசிக்கத் தொடங்கினான். அவனது உடலோ 'இன்னும் சில மணி நேரத்துக்குள் எனக்குள் நீ போதை மருந்தை செலுத்தியே ஆகவேண்டும்' என அவனை வற்புறுத்தத் தொடங்கிவிட்டிருந்தது.

ஏறத்தாழ ஒரு மணி நேரத்தின் பின்னர் அந்த ஆள் அங்கிருந்து கிளம்பத் தயாரானான். மயூரனும் அவனை மீண்டும் பின்தொடரத் தொடங்கினான். அந்த ஆள் தேனீர் கடை ஒன்றினுள் சென்று ஒரு மேசையில் தன் கைப்பையை வைத்துவிட்டு கை கழுவச் சென்றுவிட தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த மயூரன் மெதுவாக அப் பையைக் கைப்பற்றிக் கொண்டு அவ்விடத்திலிருந்து நழுவினான்.

மயூரனின் முயற்சியும் எதிர்பார்ப்பும் வீண்போகவில்லை. அந்த ஆளின் கைப்பைக்குள் ஒரு நாளுக்க போதுமான மருந்தும் சிறு தொகை பணமும் இருந்தது. முயற்சி செய்தால் பலன் கிடைக்க வேண்டும் என்பது உலக நியதி இல்லையா..? 'இந்த ஆள் இங்க எங்கோதான் வேலை செய்கின்றான். பாக்க ஏமாளி போலவும் இருக்கின்றான். ஒவ்வொரு நாளும் இவன்ர பையை எடுத்தால் காணும். அந்த நாளுக்கு தேவையான மருந்தை ஈசியாய் எடுத்திடலாம். இனி என்ர முதல் வேலை இவனைத் தேடிப்பிடிச்சு பின்தொடர்ந்து செல்லுறது தான்' என்று தன் மனதுக்குள் திட்டமிட்டவாறு தன் இருப்பிடத்தை நேக்கிச் சென்ற அவனுக்கு 'நான் இந்த பரட்டைத் தலைமுடி, தாடியோட ஒவ்வொரு நாளும் அவனுக்கு பின்னால போனால் நானே என்னை திருடன் என்று காட்டிக் கொடுத்த மாதிரி ஆகீடும். அவன் என்னை திருடன் என்று கண்டுபிடிச்சிட்டால் எல்லாம் வீணாய் போடும்.' என்ற எண்ணமும் ஏற்படத் தொடங்கியது. அந்த எண்ணத்தை அவனது மனமும் ஆமோதிக்கவே, மயூரன் அருகிலுள்ள சலூனுக்குள் நுழைந்தான்.

அடுத்த நான்கு ஐந்து நாட்களாக மயூரன் நகர்ப்பகுதி முழுதும் தேடியும் அந்த ஆள் அவனின்; கண்களில் அகப்படவேயில்லை. நூலகத்திலும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் காத்திருந்து பார்த்தான். ஒரு சில போதைப் பொருட்கள் தொடர்பான புத்தகங்களை வாசித்ததும் நூலகத்துக்கு வரும் வயதான ஒருவரின் நட்பு கிடைத்ததும் தான் மிச்சம்;. மற்றப்படி அவனுக்குத் தோல்வியே மிஞ்சியது. அந்த ஆளுக்காக அதிக நேரத்தைச் செலவிட்டதால் மயூரனுக்கு திருடுவதற்கும் போதியளவு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திருடிய சொற்ப பணத்துக்கு மிக குறைந்தளவு மருந்தே கிடைத்தது. அது அவனுக்குப் போதுமானதாயிருக்கவில்லை. இதனால் அவனது உடல் இந்த சில நாட்களில் அவனை வாட்டி வதைக்கத் தொடங்கியியது. அந்த நேரங்களில் அவன் தான் கடந்த சில நாட்களாக புத்தகங்களில் படித்த குறிப்புகளையும் நூலகத்தில் சந்தித்த வயதானவர் எதேற்சையாக சொன்ன சில அறிவுரைகளையும் பின்பற்ற முயற்சி செய்தான். அவை அவனுக்கு ஓரளவுக்கு ஆறுதலைக் கொடுத்தாலும் போதைப் பொருளை முற்றாக பயன்படுத்தாமல் அவனால் இருக்கவே முடியவில்லை. 

ஏறத்தாழ ஒரு வாரத்தின் பின்னர் அந்த ஆளை அவன் ஒரு கோயிலுக்கு அருகில் கண்டான். ஏதோ கடவுளைக் கண்டுவிட்ட உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அந்த ஆள் கையிலே ஒரு பையுடன் கோயிலுக்குள் நுழையவே மயூரனும் அவனைப் பின்தொடர்ந்தான். அந்த ஆள் கோயிலுக்குள் நேராக தியான மண்டபத்துக்குச் சென்று அங்கே கண்களை மூடி அமர்ந்து கொண்டான். அவனைத் தொடர்ந்து சென்ற மயூரனோ தியான மண்டபத்தினுள் பலரும் கண்களை மூடி தியான நிலையில் இருப்பதைக் கண்டு ஒரு கணம் திகைத்தாலும், அந்த அமைதி அவனை ஈர்க்கவே அவனும் அங்கு ஓரிடத்தில் கண்களை மூடி அமர்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் கண் விழித்த மயூரன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவாக நகர்ந்து, கண்களை மூடியவாறு சிலையென அமர்ந்திருந்த அந்த ஆளின் பையை தூக்கிக் கொண்டு கோயிலைவிட்டு வெளியேறினான்.

போகும் வழியில் 'இண்டைக்கு நான் மருந்தை பயன்படுத்தாமல் இருந்து பாப்பமா? அப்படி இருந்தால் என்னதான் ஆகப்போகுது' என எண்ணமிட்ட அவன் 'இண்டைக்கு என்ன நடந்தாலும் நான் போதை மருந்தை பயன்படுத்துறேலை' என்று முடிவெடுத்துக் கொண்டான். தியான மண்டபத்தில் அமர்ந்திருந்ததால் மனதில் ஏற்பட்டிருக்கின்ற அமைதியும் கடந்த சில நாட்களில் வாசித்த, கேள்விப்பட்ட போதை மருந்து பாவனை தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்கள் போன்றனவும் அவனின் மனதில் ஏற்பட்ட இந்த எண்ணத்துக்கும், முடிவுக்கும் காரணமாக இருக்கலாம். 

தன் செயலை நினைக்கும் போது அவனுக்கே பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் தனக்கு தொடாந்து கிடைத்துக் கொண்டிருந்த போதைப் பொருள் திடீரென கிடைக்காமல் விட்டதனால், அவனது உடல் மெதுவாக நடுங்க ஆரம்பித்து அது உடல் வலியாக பரிமாணம் அடைந்து கொண்டிருந்தது. அந்த வலியின் மூர்க்கம் அதிகரித்து உச்சஸ்தாயியை அடைய அவன் துடித்தான், நெளிந்தான், பிதற்றினான், இன்னும் ஏதேதோ எல்லாம் செய்தான். ஆனால் தன் முடிவை மட்டும் மாற்றிக் கொள்ளவேயில்லை. அதற்குப் பதிலாக தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றைச் செய்ய முயற்சித்தான். ஆனால் அவற்றைத் தொடர அவனது உடல் ஒத்துழைக்கவில்லை. சிறிது நேரத்தில் ஒரு வாகனம் அவனது இருப்பிடத்துக்கு முன்னே வந்து நின்றது. 'ஆர் என்னை தேடி அதுவும் இந்த நேரத்தில வருகினம்?' என்ற கேள்வி இந்த வலிக்கு இடையிலும் மயூரனுக்குத் தோன்றாமலில்லை. அந்த வாகனத்திலிருந்து நால்வர் இறங்கி வந்து அவனை தூக்கி வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்கள். 'உன்னாலியன்ற எதிர்ப்பைக் காட்டு' என்று அவனின் மூளை அவனுக்கு கட்டளையைக் கொடுத்தாலும் அதற்கு செயல் வடிவம் கொடுக்க இயலாத நிலையில் அவன் வலியால் நெளிந்துகொண்டிருந்தான். 

ஏறத்தாழ இரண்டு மாதங்களின் பின்னர்.........

படுக்கை ஒன்றிலிருந்து கண் விழித்தான் மயூரன். முற்றிலும் வெண்மையான அறை, மெல்லிய இயற்கையான காற்று முக்கியமாக வலி, நடுக்கம் துளியுமில்லாத உடல் என்பன சொர்க்கத்திலிருக்கின்ற பிரமையை அவனுக்கு ஏற்படுத்தின. அப்போது அந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த நபரைக் கண்டதும் மயூரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏனெனில், மூன்று தரம் மயூரனின் கைவரிசைக்கு அகப்பட்ட அந்த அப்பாவி ஆபீசரே அவர். 'ஹலோ மயூரன். எப்படியிருக்கிறியள்? நான் மதன். நாம் முன்னமே பலதடவைகள் சந்திச்சிருக்கிறம் இல்லையா? வாங்கோ என்ர மேலதிகாரியை மீட் பண்ணீட்டு வருவம்' என்று மிகச் சாதாரணமாகக் கூற மயூரனுக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. மேலதிகாரியின் அறையில் அவனுக்கு மேலுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், மயூரன் நூலகத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த வயதானவர் தான் அந்த மேலதிகாரி. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் மயூரன் பூரணமாக குழம்பிப் போயிருந்தான். அவனது குழப்பத்தை தீர்க்க அந்த நரைமுடி மேலதிகாரி ஆயத்தமானார். 

'நான் சண்முகநாதன். நான் ஒரு ரிட்டயேட் மனநல மருத்துவர். நானும் இந்த நகரத்தில இருக்கிற மதனைப் போல சேவை மைண்ட் உள்ள கொஞ்ச ஆக்களும் சேர்ந்து பைவ் இயர்சுக்கு முன்னால தொடங்கினது தான் இந்த 'விடிவெள்ளி' எண்ட அமைப்பு. நாட்டில போதைப் பொருள் பாவனை அதிகரிச்சிட்டதால, போதைக்கு அடிமையானாக்களை அதில இருந்து மீட்டு புனர்வாழ்வை வழங்குறது தான் எங்கட அமைப்பின்ர ஒரே நோக்கம். இது இப்ப எங்கட நாட்டின்ர பல இடங்களிலயும் ஆரம்பிக்கப்பட்டிருக்கு' 

'முதல்ல நாங்கள் எங்கட அமைப்பு அங்கத்தவர்கள் மூலமாய் அல்லது வெளியாட்கள் மூலமாய் போதை மருந்துக்கு அடிமையானாக்கள் பற்றி தகவல்களைச் சேகரிப்பம். போதைக்கு அடிமையானாக்களை நேரடியாய் தொடர்பு கொண்டால் அவர்கள் நிச்சயமாய் போதை பழக்கத்தை விடுறத்துக்கோ, அல்லது புனர்வாழ்வு ஆலோசனைளை பெறவோ சம்மதிக்க மாட்டினம். சோ அவைக்கு தெரியாமல் அவை ஒவ்வொருவரையும் எங்கட அங்கத்தவர்கள் மூலமாகய் பின்தொடர்ந்து போதை ஆசையைக் காட்டி முதலில அவர்களை எங்கட பக்கம் திருப்பி, எங்களை பின்தொடர வைப்பம். பிறகு அவையை போதை பழக்கங்கள் தொடர்பான புத்தகங்கள் மட்டும் இருக்கிற எங்களால நிர்வகிக்கப்படுற நூலகத்துக்கு அல்லது போதை மருந்து விழிப்புணர்வு தொடர்பான ஆவணப்படங்களை திரையிடுற எங்கட அமைப்புக்குரிய திரையரங்குக்கு அல்லது ஆன்மீக வணக்கத் தலங்களுக்கு அல்லது வாராவாரம் நடைபெறுகிற எங்கட அமைப்பினரின்ர விழிப்புணர்வு கூட்டங்களுக்கு வரச் செய்து போதை மருந்துக்கும் அவைக்குமான இடைவெளியை கூட்டி  போதை பழக்கத்திலிருந்து விடுபட வேணும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்த முயற்சிப்பம். போதைப் பழக்கம் உள்ளவையை போதை மருந்து என்ற ஆசையை காட்டி ஈர்க்கிறது ஈசியான விடயம் என்பதால எங்களுக்கு இது கடினமானதாக இல்லை. எங்கட இந்த அணுகு முறை மூலமாய் போன ஐந்து வருடங்களில நுற்றுக்கணக்கானவர்களுக்கு மறுவாழ்வு அளிச்சிருக்கிறம்.'

சுண்முகநாதன் சற்று இடைவெளிவிட மதன் விளக்கத்தைத் தொடர்ந்தார். 'இப்பிடித்தான் உங்கட அப்பான்ர நண்பர் ஒருவர் மூலமாய் உங்களைப் பற்றி எங்களுக்கு தெரிய வந்திச்சுது. உங்களை பின்தொடர என்னை நியமிச்சாங்கள். உங்களுக்கு வாசிக்கிற பழக்கம், இறை நம்பிக்கை எல்லாம் இருக்கு என்றதை அறிஞ்சு கொண்ட நான் அவற்றின் மூலமாய் உங்களின்ட போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த முயற்சித்தன். அதில வெற்றியும் பெற்றன்'. 'அப்போ நான் திருடினது, உங்களை பின்தொடர்ந்தது எல்லாம் உங்களுக்குத் முதலிலேயே தெரியுமே?' என்று மயூரன் அப்பாவியாகக் கேட்டான். 'உங்களை திருடவைச்சதே நான் தானே' என்று சிரித்தவாறே பதிலளித்தார் மதன். தனக்குத் தெரியாமலேயே தன்னைத் திருத்திய அவர்களின் வித்தியாசமான அணுகுமுறையக் கேட்டு வியந்த மயூரன் அவர்களுக்கு நன்றி கூறியதோடு 'விடிவெள்ளி' அமைப்பில் சேரவிரும்புகின்றேன் என்ற தனது ஆசையையும் அவர்களிடம் தெரிவித்தான். அவர்களும் அவனை மகிழ்ச்சியோடு தமது அமைப்பில் இணைத்துக் கொண்டனர்.

சில மாத பயிற்சிகளின் பின்னர் ஒரு நாள்......... 

ஒரு நெரிசலான பேரூந்தில் வாகீசன் அமர்ந்திருந்த சீற்றுக்கு அருகில் அவனுக்குத் தெரியும் படியாக தனது பையை வைத்துவிட்டு அவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான் மயூரன். சிறிது நேரத்தில் அவனது பையையும் காணவில்லை. வாகீசனையும் காணவில்லை. 'இவன் என்னை மிஞ்சிவிடுவான் போலிருக்கே' என எண்ணமிட்டவாறு அடுத்த தரிப்பிலே மயூரன் இறங்க, தொலைவிலே தான் திருடிய பையை ஆராய்ந்தவாறு வாகீசன் போய்க்கொண்டிருந்தான். தன்னால் திருந்தப் போகின்ற முதலாவது நபரை பின்தொடரத் தொடங்கினான் மயூரன். வாகீசனின் விடிவெள்ளி வெகு தொலைவில் இல்லை..........
Views: 800