வாசகர் பதவியை அடைவது எப்படி

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: vibishan.don@gmail.comBanner

வாசகர்கள்... இந்தச்சொல்லை ஒரு பொதுச்சொல்லாக பாவிக்கக்கூடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் இன்னாரின் வாசகன் என்பதிலேயே பலரின் ரசனை வெளிப்பாடுகள் அமைந்துவிடுகின்றன. பொதுவாக ரமணிச்சந்திரன். சுஜாதா வாசகர்கள் தான் நாவல்கள் வாசிப்பவர்கள் என்னும் ஜனத்தொகையில் அரைவாசியை நிரப்பிவிடுகிறார்கள். இதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஒரு கேள்வியும் சில பதில்களும் எனக்குக் கிடைக்கப்பெற்றன. கிடைத்த தரவுகளை வைத்து நானே தொகுத்துக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும்.

எழுத்தாளர் என்பவர் யார்? வாசகர் என்பவர் யார்? இந்தக்கேள்விகளுக்கு நான் முதலில் கொண்டிருந்த பதில். எழுத்தாளர் என்றால் ஜெயமோகன். வாசகர்கள் என்றால் கல்கி , பாலகுமாரன் , வைரமுத்து , சுஜாதா , சாரு , எஸ்.ரா என்றவாறான வரிசையை கடந்து ஜெயமோகனை அடைந்தவர்கள். பலருக்கு அவர்கள் அவர்கள் நேசிக்கும் எழுத்தாளர்கள். வாசித்த ஓடர்கள் தொடர்பில் இந்த வரிசை மாறுபடும். பொதுவாக வாசகர்கள் தரமான அல்லது ஜனரஞ்சகமான அல்லது வசீகரமான எழுத்துக்களை உடைய ஒரு எழுத்தாளரை தேர்ந்தெடுத்து தமது ஆத்ம நாயகனாக முடிந்து கொள்வார்கள். அந்த எழுத்தாளரின் வாசகனாக தன்னை பரிணாமிப்பதன் மூலம் தனது ரசனையை தனது மனநிலையை தனது கரெக்டரை சூழலுக்குப்புரிய வைக்க நினைப்பார்கள். ஒரு விதமான கெத்து மனநிலை என்றும் சொல்லலாம். நான் இங்கே குறிப்பிடும் நபர்கள் வாசகர்கள். அதாவது புத்தகங்களை வாசிப்பவர்கள். வெறுமனே சுஜாதா வசனம் எழுதிய படங்களையும் ஆனந்தவிகடன் குங்குமம் குமுதங்களையும் வாசித்து விட்டு வாகசர்களாக தம்மை அடையாளப்படுத்துபவர்கள் அல்ல. ஒன்றிரண்டு புத்தகங்களுடனேயே பல எழுத்தாளர்களுக்கு மார்க்ஸ் போட்டு ஓரங்கட்டி விட்டு தமக்காக ஒரு எழுத்தாளரை தேர்ந்தெடுத்து காலம் பூராகவும் அவரை மட்டுமே கொண்டாடித்தீர்க்கும் தரப்பு பொதுவாக ஒரு ஆரோக்கியமான நாவலில் இது இங்கே தொடங்கவேண்டும் என்பதை மட்டுமே ஒரு எழுத்தாளன் முடிவு செய்கிறான். மற்றையபடி உள்ளடக்கங்களையும் எங்கே முடியவேண்டும் என்பதையும் நாவல் தான் முடிவு செய்கிறது. சில நேரங்களில் வாசகனும் அதைத்தீர்மானிக்கிறான். ஒரு வாசகனின் பார்வையில் பத்துப்பக்கங்களைகூட தாண்டாத சில நாவல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகுவதும் உண்டு. ஆக சில வேளைகளில் நாவல்களின் சோகக்கதை பத்துப்பக்கங்களுடனேயே முடிந்தும் இருக்கிறது. இப்படியாக ஒரு எழுத்தாளனின் சூழல் , மனநிலை , பிறப்பு , வளர்ப்பு என எல்லாமே அவனால் படைக்கப்படும் நாவலில் செல்வாக்குச்செலுத்தும். இந்த இடத்திற்கு தேவையில்லாத ஒரு இடைச்செருகல் - பொதுவாக ஜெ.மோவின் படைப்புகளில் பல மலையாளிகள் கேரக்டர்களாக வந்து போவதற்க்கும் சுஜாதாவின் படைப்புகளில் பிராமண மொழிநடை தவிர்க்கமுடியாமல் இருப்பதற்கும் பலர் சாதியம் பூசிப்பார்ப்பதை யோசித்துப்பார்க்கிறேன், தான் வளர்ந்த சூழலை பற்றிய வர்ணனைகள் கூட சாதிய எழுத்தாளராக ஒருவரை முத்திரை குத்திவிடும்.

இதில் கவனிக்கவேண்டிய விடயம் ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையை அப்பட்டமாக காட்டக்கூடிய இலக்கியத்தினால்தான் புனைவு இலக்கியத்தை விட அதிகம் பாதிக்கப்படுவான் என்பது நிதர்சனம். அது மகிழ்ச்சியானதொன்றாகவோ அல்லது துக்கமானதாகவோ இருக்கலாம். அவன் சில சமயம் அப்பட்டமான அந்த உண்மையை எழுதியதற்காக அந்த எழுத்தாளரை வெறுத்தாலும் அவர் இவனுக்கு தவிர்கமுடியாத ஒருவராகிவிடுவா். இப்படியாக தனது சூழலை , மனநிலையை , கரெக்டரை , பிறப்பை , வளர்ப்பை , கண்டதை , கேட்டதை , அனுபவித்ததை என அவனை பாதித்த ஒரு விடயம் கருவாகி இலக்கியமாகிவிடும் போது அதை எழுதிய எழுத்தாளர் அவனை வெகுவாக ஈர்த்துவிடுகிறார். அந்த நாவலில் அல்லது அந்த சிறுகதையில் அவனுக்கான அறம். அவனுக்கான தீர்வு இருக்கும் பட்சத்தில் அவர் அவனுக்கு ஆத்மகுருவாக மாறிவிடுகிறார். இதைவிட  இலகுவாக விளங்குவதனால் சிலரை தேர்ந்தெடுக்கும் தரப்பும், புராணக்கதைகளை லயிக்கும் தரப்புகளும் விரசம் , காமம் , யுத்தம் என மனவெழுச்சிகளின் கோர்வையே இலக்கியம் என முத்திரை குத்தும் தரப்புகளும்  ஐhதி, மதம் , பெரியார் என்று சில தரப்புகளும் தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் உலக இலக்கியம் என்றவாறு சில தரப்புகளுமாய் பிரிவினை சூழ் இலக்கிய வட்டங்கள் நிறைந்து குவிந்து போய் இருக்கின்றன. ஒன்று மட்டும் எனக்கு என்றுமே விளங்குவதில்லை. இலக்கியத்துக்குள்ளேயே இப்படியான பல ஜாதிகளை வைத்துக்கொண்டு ஜாதிகளை ஒழிக்கவும், பெருக்கவும் இலக்கியத்தையே பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?  சங்க இலக்கியங்கள் , சங்கம் கடந்த இலக்கியங்கள் என்று வகைப்படுத்துவது கூட ஒரு வகையில் அபத்தம் தான். கடவுள் ஒருவனே பிறப்பு ஒன்றே என நினைக்கும் கனவான்கள் இலக்கியத்தையும் ஒரு கண் கொண்டே நோக்க வேண்டுகிறேன். தமது மன எழுச்சிகளை கொட்டி விட்டு முற்போக்கான இலக்கியம், பின்நவீனத்துவ இலக்கியம் என முத்திரை குத்தி மேம்பட்ட அறிவு விருத்தி கொண்ட மனித விலங்காக தம்மை அடையாளப்படுத்தி பிரபலமாகும் தன்மை தான் இப்போதைய இலக்கிய உலகில் ட்ரெண்டிங். இதற்கு இப்போதைய எந்த எழுத்தாளரும் விதிவிலக்கல்ல.

பொதுவாக தமக்கான வாசகர் வட்டத்தை கொண்டிருப்பதே அபத்தம் அல்லவா? நீ என்னை கட்டாயம் வாசிக்கவேண்டும். என்னை கொண்டாட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம். தமிழ் சினிமா நடிகர்களை கலாய்த்துத்தள்ளும் புகழ் பெற்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கும் அந்த நடிகர்களுக்கும் என்ன வித்தியாசம்? தனக்கான ரசிகர் மன்றத்தை பேணுவதும் தனக்கான வாசகர் வட்டத்தை பேணுவதும் ஒன்று தானே. முற்போக்கான சிந்தனைவாதிகளாக தம்மை பிரகடனப்படுத்திக்கொள்ளும் எழுத்தாளர்கள் தாம் இவ்வாறு வாசகர் வட்டத்தை பேணுவதால் தம் எழுத்து அந்த வட்டத்தை மீறி போகாது என்றும், ஏனையவர்களின் எழுத்துக்கள் அந்த வட்டத்திற்குள் வராததால் அந்த வட்டத்தின் அறிவாரோக்கியம் பாதிப்படையும் என்றும் ஏன் அறிவதில்லை? அடுத்தாக ஒரு எழுத்தாளரின் எழுத்தை அல்லது புனைவை கேலிசெய்யும் விமர்சிக்கும் உரிமையை யார் யாருக்குக் கொடுத்தது? இதில் தான் தரம் என்ற முக்கியமான சொல்லாடலின் தன்மையியலை சோதிக்க நினைக்கிறேன். இலக்கியத்தில் தரம் என்பது என்ன..? தரமான நாவல்களை தரமான சிறுகதைகளை எப்படிக் கண்டுபிடிப்பது..? அந்த தரத்திற்கான அளவுகோல் எது..? அதை வரைந்தவர் யார்..? ஜனரஞ்சகமான எழுத்துக்கள் தரமானவை ஆகுமா..? தரமான எழுத்ததெல்லாம் பொதுவெளியில் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்படுமா..? உலக இலக்கியங்கள் தரமானதா..? அப்படியானால் அவற்றுக்கும் இந்தக்கேள்விகள் பொருந்துமா?

இந்தக்கேள்விகள் தான் பதில்களாகவும் அமைகின்றன.  தரம் என்பதே மனித அளவுகோல் தான் என்றாகின்ற போது நாவல்களில் தரமானதை அறியவேண்டுமாயின் உலகின் சனத்தொகையில் அனைத்து பேரிடமும் அவரவர் மொழிகளில் பொருள் மாறாமல் மொழிபெயர்த்து வாசித்துக்காட்டி அதற்கான புள்ளிகள் போடப்பட்டு மொத்தம் கூட்டி சராசரி கண்டு தரநிர்ணயம் செய்யப்படவேண்டும். அது நடைமுறைக்குச் சாத்தியம் ஆகாது. பொதுவாக இக்கால இலக்கியத்தின் தரம் அதில் இருக்கும் சொற்களின் எண்ணிக்கை. தமிழின் அனைத்து சொற்களையும் பாவித்து எழுதல். அதிகம் விற்பனையாதல். புத்திஜீவிகளின் கூட்டம் என்று முத்திரை குத்தப்பட்ட அறிஞர் பெருமக்களின் பரிந்துரை. மன எழுச்சியை தூண்டும் பதங்கள் காணப்படுதல். யாரும் சொல்லாத யாரும் புனையாத கருக்களை கதையாக்கல். காமத்தை விஞ்சி எழுதல். சமூக வரையறைகளை உடைத்து எழுதல். என்றவாறாக பல வகைகளில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் தரம் என்பது ஒரு கண்மறைப்புத்துண்டு. அவரவரின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு அவரவரின் மனநிலைக்கு சூழலுக்கு ஏற்றவாறு அவரவர் தீர்மானிக்கவேண்டிய விடயமே தரம். தரம் என்பது உரிமை மற்றயவர்களின் சிபாரிசுகளை தாண்டி தானே தனக்கான தரமான இலக்கியத்தை தீர்மானிக்கும் உரிமை. இப்படியாக இலக்கியத்தின் அனைத்துப்படைப்புகளும் எவராவது ஒருவரின் மனதில் சலனத்தை ஏற்படுத்தும். இவரைத்தான் கொண்டாட வேண்டும். இவரை வாசிக்கக்கூடாது. என்று எதுவுமே இல்லை. யாரும் எழுதலாம். யாரும் வாசிக்கலாம். கருத்துக்களை வெளியிடலாம். தன்னை பாதித்த எழுத்தை படைப்பை கொண்டாடலாம். எழுத்தாளரை கொண்டாடாதீர்கள். படைப்புக்களை கொண்டாடுங்கள்.  உண்மையில் ஒரு எழுத்தாளரை காட்டிலும் தலைசிறந்த ஒரு வாசகன் தன்னை இந்த உலகில் சரியாக நிலைநிறுத்திக்கொள்ள முடியும். ஆயிரம் புத்தகங்களை கடந்த ஒருவர் புத்தகத்திற்கு தலா பத்தாக கொண்டால் நிச்சயம் பத்தாயிரம் கரெக்டர்களை தாண்டி இருப்பார். அதிகபட்சம் அந்த பத்தாயிரம் பேர்களும் தான் எம்மை சுற்றி சமூகமாக அணுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அணுகுவதற்கான அனுபவத்தை புத்தகங்கள் முன்னாயுத்தமாக கொடுத்துவிடுவதால் சமூகத்தில் வாசகன் தனக்கான இடத்தை சரியாக நிலைநிறுத்திக்கொள்கிறான். சரியான வாசகனால் மட்டுமே ஆரோக்கியமான எழுத்தாளனாக இருக்கமுடியும். எழுதும் அனைத்தும் இலக்கியம் வாசிக்கும் அனைத்தும் இலக்கியம். உலகை புரிந்து கொள்ள ஆரோக்கியமான வழிகாட்டி இலக்கியம். அனைத்தையும் வாசித்து தனக்கான தரமானதை மட்டும் ஒரு வாசகன் கொண்டாடினால் தமிழ் இலக்கிய உலகம் தரமானதாக மாறும். பெண்ணியவாதிகள், இலக்கியவாதிகள், முற்போக்குசிந்தனைவாதிகள், பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் போன்றவாறான பதங்கள் மனத்திடையே நீங்குமிடத்து ஒரு வாசகன் இலக்கியமோட்சம் அடைவது உறுதி

Views: 652