மொழியுடன் கொண்ட நட்பு

எழுத்தாளர் : யாழினிமின்னஞ்சல் முகவரி: yalinsha02@gmail.comBanner

சங்க இலக்கியங்களில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாத போதிலும் சமீபத்தில் தற்செயலாக அவற்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்போது ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, போன்றவையும் ஐங்சிறுகாப்பியங்களான யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி போன்றவையும் சமண மதத்தின் தாக்கத்திற்கு  உட்பட்டவையாக காணப்பட்டமை என்னைத் தூண்டிவிட மதங்கள் தமிழ் மொழியுடன் கொண்ட நட்புபற்றி மேலும் அறிய ஆவல் கொண்டு காலத்திற்கு முற்பட்ட நூல்களை நாடினேன். 

'வடா அது பனிபடு நெடுவரை வடக்கும் 
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் 
குணா அது கரைபொரு தொடுகடல் குணக்கும் 
குடா அது தொன்றுமுதிர் பவ்வத்தின் குடக்கும்' – புறநானுறு 

பலநூறு வருடங்களின்  முன் வடக்கே பனிமலையாகிய இமயம், தெற்கே உருவத்தில்  சிறந்த குமரித் தெய்வத்தின் கோவில், கிழக்கே இயற்கையாக அமையாத சாகர்களால் தோண்டப்பட்ட வங்ககடல், மேற்கே தொன்றுதொட்டுள்ள பழங்கடல் (இன்றைய அரபிக்கடல்) வரை வியாபித்திருந்தது தமிழ் மொழி. இதனை  சிலப்பதிகாரமும் 'இமயமுதல் குமரிவரை ஒர் மொழிவைத்துலகாண்ட  சோழன் மணக்கிள்ளி நற் சோனணயின் மகன் சேரன் செங்குட்டுவன்' என்று மேற்கோள் காட்டுகிறது. 

தமிழ் மொழியின் முதல் எழுத்துக்கள் உருவ எழுத்துக்களே. பிற்காலத்தில் இதிலிருந்தே சீனம், கடாரம், சுமேரியம் போன்றவை தோன்றியதாகவும் சான்றுகள் உள்ளன. உருவ எழுத்துக்களைத் தொடர்ந்து கோல் எழுத்துக்கள் உருவானது. இவையே மராடியம், வங்கம், ஆரியம், பாளி, பிராகிருதம் என்பனவற்றின் மூலமாகின. தொடர்ந்து வட்ட எழுத்துக்களும் அதிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவையும் பின்னர் சதுர எழுத்துக்களாகவும் கூர்ப்படந்துள்ளது. 

மொகஞ்சதாரோ - ஹரப்பா எனும் தமிழ் நகரங்கள் மணற்புயலில் அழிந்தபின் ஆரியர்கள் சிந்துசமவெளியில் குடியேறி விந்தியமலை வரை பரம்பி ஆரியாவர்தத்தை உருவாக்கினர். அவர்களின் சமண மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு சில மன்னர்கள், ரிஷிகள் அம் மார்க்கத்தை தழுவியதாகவும் அவர்களை அனுசரிக்கும் பொருட்டு சமணர்களும் மதத்தலைமை பொறுப்பை வழங்கியதாகவும் மகாராஜா ஜனகர், விசுவாமித்திர முனிவர்  மற்றும் திருநாவுகரசு நாயனாரின் வரலாறுகள் கூறுகின்றன. ஆரியத்தை அனுசரிக்காதோர் தெற்கே தக்கணம் நோக்கி நகர்ந்தனர். தக்கணத்தில் தான் தமிழின் கூர்ப்பு ஆரம்பமாகி வட்ட எழுத்துக்களாகியது; மேலும் இது தென்தமிழ் என்றும் வழங்கப்பட்டது. 

பாரத காலத்திற்கு சற்றுமுன்புதான் சதுர எழுத்துக்கள் உருவாகின. இவை பன்னிரண்டு உயிர்களையும் பதினெட்டு மெய்களையும் ஒரு ஆயுத எழுத்தையும் கொண்டு செந்தமிழ் என்று வழங்கலாயிற்று. சமகாலத்தில் வாழ்ந்த வியாச முனிவர் ஆரியம் மற்றும் பிராகிருதம் என்பவற்றைச் சீர்திருத்தி கோல் எழுத்துக்களாலான சமஸ்கிருதத்தை உருவாக்கி அதை வட தமிழ் என்றார். 

இராமாயண காலத்தில் ஐந்து மண்டலங்களிலும் தமிழ் பரவியிருந்ததாக திருமூலர் கூறியுள்ளார் 

'தமிழ் மண் டலமைந்தும் தாவிய ஞாணம்
உமிழ் வதுபோல உலகம் திரிவார்
அவிழு மனமும் எம்மாதி அறிவும்
தமிழ் மண் டலமைந்தும் தத்துவ மாமே'

இராமாயணத்தில் வான்மீகி முனிவர் தமிழை 'மானுஷ பாஷை' என்று கூறி அதை 'மதுரம் வாக்கியம்' என்று சிறப்பித்துள்ளார். மேலும், இராவணனை அழிக்க இராமன் தக்கிணம் வந்ததிலிருந்து தக்கிணதிலும் ஆரியமொழி சொற்கள் கலக்க ஆரம்பித்ததாக கூறப்படுள்ளது. அக்காலத்தில் அந்தணர்களே கும்பல் கும்பலாக தக்கிணத்தில் குடியேறியதாக சொல்லப்படுகிறது. 

தமிழ் மறைகளாக தேவார திருமுறைகள் போற்றப்பட்டன. இவற்றை உலகிற்கு வெளிபடுத்திய பெருமை நம்பியாண்டார் நம்பிக்கும் அபய குலசேகர மன்னனிட்குமே சேரும். இவை தவிர புஸ்பராகம், காமிகம் போன்ற ஆகமங்களின் முகவுரைகளில் தமிழில் எழுதப்பட்டு வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாக கூறபட்டுள்ளது. அக்காலத்து பண்டிதர்கள் பதினெட்டு மொழிகள் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.  இதனால் ஆரிய பண்டிதர்களும் தமிழில் காப்பியங்களை உருவாக்கியும் மொழிபெயர்த்தும் உள்ளார்கள். 

ஆக் தமிழுடன் சைவமும் சமணமும் நெருங்கிய நட்புடனே இருந்தமை புலபடுகின்றது. பிற்காலத்தில் வந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் கத்தோலிக்க மறைநூலை முதன் முதலாக தமிழில் மொழிபெயர்த்தார். அது போல திருவாசகம், திருக்குறள் போன்றவையும் தமிழிலிருந்து மொழிபெயர்க்கபட்டன.  இன்று திரு குரானும் தமிழில் பெற்றுக்கொள்ளலாம். மொழியுடனான நட்பாலே பல மார்க்கங்களையும் நல்ல விடயங்கங்களையும் அறியமுடிகிறது; அடையமுடிகிறது. இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல. இங்கு தமிழ் மொழி ஒரு உதாரணமாகவே எடுத்துகொள்ளப்பட்டது. மொழி என்பது ஊடகமாகும். ஊடகமின்றி பயணிக்க முடியாததால் எனவே மொழிகளுடன் நட்புகொள்வோம்.

நன்றி- சங்க இலக்கியங்கள், 
திருமந்திரம், 
இராமாயணம், 
சைவ சித்தாந்த நூற் கழக பதிப்புக்கள், சென்னை, 1957.
 


Views: 792