உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

பேரன்பு கொண்ட வாசகர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்

மீண்டும் ஒரு புதிய இதழில் புத்துணர்ச்சியுடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சனம் ஒன்று ஆள் பன்னிரண்டு இதழ் இந்த முறையும் உங்கள் இலக்கியத்தேடலுக்கு விருந்தளிக்கும் என்பதில் உறுதியாய் உள்ளோம். இந்த உரையாடல்கள் வெற்றிகரமாய் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு உதவிக்கொண்டிருக்கும் வாசக உள்ளங்களுக்கு அன்பு கலந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இம்முறை இந்த இதழுக்கான அட்டைப்படத்தினை தந்துதவிய வினோஜா அவர்களுக்கும் அடைப்பட வடிவமைப்பை செய்த துவாரகன் அவர்களுக்கும் நன்றிகள்.

ஆசியாவில் 92 சதவீத கல்வியறிவினைக் கொண்ட இலங்கையில் நடைபெறும் குற்றச்செயல்கள் சமூக விருத்தியின்மையினையே சுட்டிக் காட்டி நிற்கின்றது. அண்மையில் பாடசாலை மாணவி வித்தியா கொலைவழக்கில் வழங்கப்பட்ட நீதி குற்றச்செயல்களை மேற்கொள்பவர்களுக்கு பேரச்சத்தை ஏற்படுத்திய போதும், குற்றச்செயல்களை தவிர்த்துக் கொள்வதற்கு தண்டணைகள் மட்டும் போதுமானதா என்ற கேள்வியையும் எழுப்பிச் செல்கிறது. குற்றச் செயல்களை கண்டு சீற்றமும் கொண்டு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளும் நாம் இவ்வாறான குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான காரணங்கள் என்ன? இவ்வாறான சமூகவிரோத செயல்களில் இருந்து எம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி சிந்தனைகளை அதன் செயற்பாடுகளை மிகமெதுவாக மேற்கொள்கிறோம். ஏன் அச்செயற்பாடு சார்ந்து உரையாடலை மேற்கொள்ளவே தயங்குகின்றோம் என்றே சொல்லலாம்

எம் வரும் சந்ததியினரை சமூகவிரோதச் செயல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு முடிந்தளவு சமூகம் சார் உரையாடல்களை முன்னெடுப்போம். மீண்டும் அடுத்த உவங்கள் இதழில் உங்களைச் சந்திக்கிறோம்.

Views: 593