பார்வதி விலாஸ்

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBanner

வாழ்க்கை எண்டது ஒரு மிகச்சின்ன வட்டம். வாழ்க்கை எண்டத ஏன் வட்டம் எண்டு சொல்லுறம்?; முக்கோணம் சதுரம் நீள்சதுரம் எண்டு சொல்லாம எண்டா இண்டைக்கு வாழ்க்கையில எந்த புள்ளியில நிக்கிறமோ மறுபடியும் அதேபுள்ளியில திருப்ப அங்க இங்க சுத்திக்கிட்டு வந்து அதே இடத்தில நிப்பம் அல்லது இதுக்கு முதலும் இதே மாதிரி ஒரு இடத்தில கட்டாயம் நிண்டிருப்பம். நிக்குற இடத்தில விட்ட பிழைகளை திருத்துறவன் தொடர்ந்து முன்னேறிக்கொண்டு வட்டத்தை பெரிப்பிச்சுக்கொண்டும் போயிட்டு இருப்பான். விட்ட பிழையை உணராம திருப்ப அதே பிழைய விடுறவன் திருப்ப திருப்ப அதே சின்னவட்டத்துக்குள்ளேயே சுத்த சபிக்கப்படுறான். வட்டதின் பொறிமுறைகள் தொடர்பான நுண்ணிய அவதானிப்புடையவன் வட்டத்திற்கு வெளியால போய் சித்தன் ஆகிறான். ஆக வாழ்க்கை எண்டது ஒரு வட்டம்.

'அம்மா வீட்ட இடிக்க ஆமிக்காரங்கள் புல்டேஸரோட வந்து நிக்குறாங்களாம். நடராசா மாமா கோல் எடுத்தவர்...'

' எண்ட ஐய்யோ.. நீ எங்க குஞ்சு நிக்குற'


'நான் இப்போ லஞ் பிரேக்கில நிக்குறன்.'

'ஒருக்காய் ஓடிபோய் பார்த்துட்டு வாறீயா...?'

'ம்..ம்.. பின்னேரம் ப்ரட்டிகல்ஸ் கட்டாயம் போகனும். பரவாயில்ல நான் போறன்'

'துலைவாங்கள் ஏன் வீட்ட இடிக்க வந்துருக்காங்களாம்...?'

'ஓட்டுமடத்தில ஒரு ஆர்மி காம் ஒண்டு அடிக்கனுமாம். எங்கட வீடு கனநாளா ஆக்களிலாம பூட்டிகிடக்குது எண்டு புல்டேஸரோட வந்துட்டாங்களாம். நடராசா மாமா கடைய பூட்டிடு வந்துட்டாராம். மாமா அங்க தான் நிக்குராம். நானும் போறன். உறுதி, குடும்பக்காட் எல்லாத்தையும் எடுத்து கொண்டு அடுத்த பஸ்க்கு வெளிக்கிடுங்கோ. இல்லாட்ட சரிவராது'


'ஓம் குஞ்சு ஒருக்கா ஓடிப்போய் பார். அம்மா இந்தா வாறன். அப்பாட்ட சொல்லிகில்லி போடாதப்பூ. மனுசனுக்கு ஹாட் நின்னு போயிரும்'

'சரி மெதுவா சொல்லுவம். இப்பே நான் கஜனோட மோட்டச்சைக்கிள்ள போறன்'


'டேய் கவனம். மெதுவா போ.. பறந்தடிச்சு போய் விழுந்து கைய, கால உடைச்சு போடாத'

'சரி சரி.. அவன் தான் ஓடுறான். பக்குவமா போறம்'

'ஓகே'

'நீங்க குயிக்கா வாங்கோ.. உறுதி முக்கியம்'

'இந்தா வெளிக்கிட்டன் அம்மா'

'சரி அம்மா.. 

கணபதிப்பிள்ளை நாராயணசிங்கம் வைரமுத்து குமாரின் மூத்தவன் சாந்தன். சாந்தன் யாழ் மருத்துவபீட முதலாம் ஆண்டு மாணவன். யாழ்ப்பாணம் ஓட்டுமடம் மானிப்பாய்வீதி சேர்ச் லேன் அருகில் சாந்தன் வீடு உள்ளது. 1995 ஜெயசிகுரு அடிபாட்டோட குமார் குடும்பம் வவுனியா போயிட்டு. குமார் அரபு நாடு ஒண்டில் வாகன ஓட்டுனர். குமார் மனைவி சாந்தி எப்படியாவது பிள்ளைகளை படிப்பித்துவிடவேண்டும் என வவுனியாவிலே தங்கிவிட்டார். யாழ் இடப்பெயர்வின் போது சாந்தனுக்கு வயது 5. குமார் வருடத்திற்கு ஒருமுறை மூன்று மாத விடுமுறையில் நாடு வருவார். அப்பொழுதெல்லாம் அவர் சாந்தனுடன் அதிகளவு நேரம் தனது வீட்டை பற்றி கதைப்பதிலேயே செலவிடுவார்.

குமாரின் ஓட்டுமட வீடு குமாரின் பூட்டன் கணபதிப்பிள்ளை ஆசைப்பட்டு வாங்கிய காணியில் பாட்டன் நாராயணசிங்கம் கட்டியது. கணபதிப்பிள்ளை வீட்டில் மூத்தபிள்ளை எண்டாதால அதிகம் படிச்சுருக்கவில்லை தம்பிமார் எல்லாரும் நிறைய படிச்சு வாத்தி எக்கவுண்டன் எண்டு பெரிய கையள். கணபதிப்பிள்ளை வீட்டில சகோதரச்சண்டையால கணபதிப்பிள்ளைக்கு ஒண்டும் குடுக்காம தம்பிமார் ஏமாத்திப்போட்டாங்கள். 

'உங்களுக்கு முன்னால நான் ஒரு நாச்சார் வீடு கட்டி காட்டுறண்டா' எண்டு தம்பிமாரோட மல்லிகட்டிட்டு வந்துட்டார் கணபதிப்பிள்ளை. கணபதிப்பிள்ளையால் கடைசிவரை காணி வாங்க மட்டுமே முடிந்தது. கணபதிபிள்ளைக்கு ஓரே ஒரு ஆண்வாரிசு அது நாராயணசிங்கம். சிறுவயதிலேயே சைக்கிளில் புகையிலை கட்டிக்கொண்டு பாணதுறையில் வியாபாரம் செய்து பொருள் தேடியவர். அவர் பின் வைரமுத்துவும் பாணதுறையில் சொந்தமாய் ஒரு  புகையிலை கடையினை நடத்தினார். குமாருக்கு அந்த வீடு எண்டால் கொள்ளைபிரியம். கணபதிப்பிள்ளை முதல் வைரமுத்து வரை வாழ்ந்து கண்ணைமூடியது அவ்வீட்டில் தான். குமார் அடிக்கடி சாந்தனிடம் சொல்லிகொள்ளுவார் உந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு நீங்க எல்லாரும் படிச்சு கலியாணம் கட்டி போனப்பிறகு நான் உந்த வீட்டில தான் கடைசி காலம் கழிக்கிறது. என்பதுகளிண்ட பிற்பகுதியில இந்தியன் ஆமி வந்து பிரச்சனை குடுத்து எல்லாரும் எழும்பி அங்க இங்க எண்டு ஓடேக்க குமார் குடும்பம் வேலணைக்கு தான் போனது. அப்ப கூட என்ன நடந்தாலும் இந்த வீட்ட விட்டுட்டு வரமாட்டன் சீக்கியன் என்ன செய்யுறான் பார்ப்பம்..? எண்டு இறுமாப்போட வீட்ட கட்டிபுடிச்சுட்டு இருந்துட்டார் வைரமுத்தர்.


அது முழுவதும் முருங்கைகற்களால் ஆன நாற்சதுரவீடு. வீட்டின் ஒவ்வொரு சுவர்களும் அதில் உள்ள ஒவ்வொரு கற்களும் ஆயிரமாயிரம் கதை சொல்லும். சும்மா செங்கல் வைச்சு கட்டினா நூறு வருஷம் தாங்காது எண்டு சுண்ணாம்புகல் கொண்டுவந்து பொழிஞ்சு வீடு கட்டினார் நாராயணசிங்கம்.

நாராயணசிங்கம் ஊரில சரியான கஞ்சப்பயல் எண்டு சொல்லுவாங்களாம். மனுசன் மடியில இருந்து காசு எடுக்கிறதுக்குள்ள விடிஞ்சிடும் எண்டு ஊர் சனம் சொல்லும் என குமார் அடிக்கடி நாராயணசிங்கத்தின் சிக்கனத்தனத்தை பற்றியும் எதிர்கால தேவை குறித்த சிந்தனைகள் பற்றியும் சொல்லிகொண்டே இருப்பார். வீடு கட்டினா மட்டும் போதாதுடா நாளைக்கு ஒரு அவசரம் எண்ட யாருட்டையும் போய் பல்லைக் காட்டிக்கொண்டு நிக்ககூடாது எண்டும் அடிக்கடி கூறிக்கொள்வாராம். நாராயணசிங்கத்துக்கு பிறகு வைரமுத்து வீட்டிக்கு பெயர் வைக்கனும் எண்டு மனிசிடா பெயரை வைச்சாரம் 'பார்வதி விலாஸ்'. ஊரில பார்வதி விலாஸ் எண்டா கடும் விலாசம் தான் எண்டு குமார் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வார். குமாரை பொறுத்தவரை அது வெறும் கல்லும் மண்ணும் மட்டும் சேர்த்து கட்டின வீடல்ல. பார்வதி விலாஸை சுத்தியே அவர் வாழ்க்கை. சின்னவயதிலயே வீட்டை விட்டு வெளிக்கிட்டதாலையோ தெரியல சாந்தனுக்கு அந்தளவான பாதிப்புகளை பார்வதி விலாஸ் எற்படுத்தல மனதில. 

நாராயணசிங்கம் வீட்டில் உள்ள சாமான்களை கூட பார்த்து பார்த்தே சேர்த்து வைத்தார். தோக்கில கட்டில் வேணும் எண்டு வன்னிக்க இருந்து சொல்லி செய்விச்சு கால்நடையா தூக்கிகொண்டே வந்து சேர்த்தார். 

'கட்டிலை யாராவது இவ்வளவு தூரம் தூக்கிகொண்டு வந்திருப்பாங்களா சும்மா கதை விடாதீங்க..'

'இல்லை தம்பி தாத்தா தூக்கிட்டு வரேக்க நானும் உன்னமாரி வாண்டு தான். என் கண்ணாலேயே பார்த்துருக்கன். இந்த முத்தத்தில தான் தூக்கி கொண்டு வந்து வைச்சவர். அப்ப இங்க பெரிய சண்டி மரம் ஒண்டு நிண்டது. மனுசன் ரெண்டு சொம்பு தண்ணியை மொடக்கு மொடக்கு எண்டு குடிச்சது இப்பவும் கண்ணுக்க நிக்குது.'


'எப்படி தூக்கிட்டு வந்தார்? கவுட்டு போட்டா? நிமித்தி போட்டா? இல்லை சரிச்சு தலைக்கு மேல வைச்சா..'

'இல்லை கட்டில்ட ரெண்டு பக்கமும் ரெண்டு கயித்தகட்டி கயித்தில ஒரு பொரிய கம்பை கட்டி தூக்கு மாதிரி தோளில போட்டு வந்தார்'. 

சாந்தி அடிக்கடி சொல்லி கொள்வார் அந்த வீடு எனக்கு ராசியில்ல ராசியில்ல எண்டு இதனால அடிக்கடி குமாருக்கும் சாந்திக்கும் முறுக்கிக்கொள்ளும் நீ வராட்டி போடி நான் எண்ட கடைச்சிகாலம் அந்த வீட்டில தான் கண்ணமூடுறது. ஓ நீ அந்த வீட்ட கட்டிப்பிடிச்சுட்டு இரு நான் பிள்ளையளோட அதுகள்ட பிள்ளைகளை பார்த்துடு இருக்கன்

ஏன் அம்மா அந்த வீட்டில அவ்வளவு வெறுப்பு எண்டு சாந்தன் கேட்பான். உனக்கு தெரியாதுடா நீங்க சின்னனில இருக்கேக்க இவரும் வெளிநாடு, வெளிநாடு எண்டு விட்டுட்டு ஓடிருவார். அங்க இரவில நிம்மதியா நித்திரை கொள்ளேலாது. வெத்திலை உரல் இடிக்கிற சத்தங்கள் கேக்கும். யாரோ வந்து நெஞ்ச எல்லாம் அமத்துற மாதிரி இருக்கும் அந்த மூண்டு ஆவியும் அந்த வீட்டவிட்டு போகாது அதுகள் மூண்டுக்கும் அந்த வீடு தான் வாழ்க்கை. நான் போமாட்டன் அங்க திருப்ப எண்டு சலித்துகொள்வார்.

திண்ணைவேலியில் இருந்து ஓட்டுமடம் பெரிய தூரமில்லை கோல் வந்து போறதுக்குள்ள நடராசா மாமாவும் வந்துட்டார். வீதில பெரிய கூட்டம் விடுப்பு பார்த்துட்டு நிக்குது. ப்க்;கல்ட்டிக்கு போக வெளிக்கிட்டபடி வந்ததால கடுகடு எண்டு முறைச்சுட்டு நிண்ட ஆமிக்காரன் கொஞ்சம் சிரிச்சான்.

'சேர்' நடராசா மாமா கதையைதொடங்கி வைத்தார்.

'மொக்கத்த'

'உங்கட பெரியாளிட்ட கதைக்கனும்' 

'என்ன விசயமா'

'நீங்க இடிக்க நிக்கிறது இப்போ எங்கட வீடு'

'ஓ...இரு பெரியாளிட்ட சொல்லுறன்'

உள்ளே போன ஆமிக்காரன காணயில்லை கனநேரமாய். அந்த அறுவான் வந்து என்ன கத்தப்போறானே தெரியல. ஆமிக்காரன் அடி எப்படி இருக்கும் சப்பாத்துகாலால மிதிச்சா எப்படி இருக்கும் துவக்குபிடியை திருப்பி இடுப்பில அடிச்சா எப்படி இருக்கும் எண்டு எல்லாம் குமார் சொல்லுறதுகள் ஞாபகத்து வர வெளியில நிண்ட சாந்தனுக்கு வயித்த கலக்க தொடங்கிட்டு பயம். கொஞ்சத்தால அலவாங்கு விழுங்கின சைசில மீசை மழிச்சு கொஞ்சம் பொதுவான நிறமோட பார்த்தாலே கொஞ்சம் பெரியவன் தான் எண்ட பேர்சனாலிட்டியோட ஒருத்தர் வந்தார்.

'மொக்கத்த புத்தே'

'சேர் மை நேம் ஸ் சாந்தன் சேர். சேர் திஸ் ஸ் மை கவுஸ். வி ஆர் ரெம்பர்ரிலி லிவிங் இன் வவுனியா'


'எப்போ போனீங்க வவுனியா' எண்டு கொச்சை தமிழில பெரியவன் கேக்க அப்பாட ஜோசிச்சு ஜோசிச்சு கதைக்கதேவையில்லை இனி எண்டு தமிழிலயே சாந்தன் தொடங்கினான்.

'தொண்ணூற்றைஞ்சு இடப்பெயர்வில போனம் சேர். படிச்சதெல்லாம் அங்க தான். எனக்கு இப்ப மெடிசின் கிடைச்சு ரெண்டு மாசம் தான். அம்மா தம்பியாக்கள் இப்போ இங்கவே வர இருக்கினம்.' 

'தம்பி இங்கிலீசிலையே கதை அப்பதான் அவன் இவன் படிச்சவன் எண்டு கொஞ்சம் பயப்படுவான்' காதுக்குள்ள நடராசா மாமா புறுபுறுத்தார். 


'வவுனியவில வீடு இருக்கா'


'இல்லை சேர் வவுனியாவில வீடு எல்லாம் இல்லை. இங்க வந்தா இருக்க வீடு இல்லை. நான் இப்போ சீனியர் ஓட ரெம்பறறியா இருக்கன். அம்மா தம்பி வந்தா இங்க மாறனும்'

'தம்பி இந்த ஏரியாவில எங்கட காம் ஒண்டு அடிக்கனும் எண்டது அரசாங்காத்திண்ட உத்தரவு நான் என்ன செய்யுறது. இந்த ஏரியாவில உங்கட வீடு மட்டும் தான் பூட்டிகிடக்கு பதின்மூண்டு வருசமா'

சட்டையை பிடித்து உலுப்பி கைமுஸ்ட்டியை மடக்கி நேராக மூக்கிலேயே குத்தவேண்டும் போல் இருந்தது. குரல் தளுதளுத்து இயலாமையால் சாந்தனுக்கு அழுகை வந்துவிட்டது.


'பதின்மூண்டு வருஷமா ஆள் இல்லை எண்டதுகாக இடிப்பீங்களா சேர்' 

'தம்பி நீ சொல்லுற சரி. இப்போ இது உண்ட வீடு தான் எண்டு புரூப் பண்ண எதும் சாட்சி இருக்கா...?? '

'சேர் அம்மா உறுதி எல்லாம் கொண்டு வெளிகிட்டுடா. இன்னும் ஒரு 2 மணித்தியாலத்தில இங்க வந்திடுவா.'


'எனக்கும் விளங்குது.  நீ அப்படி எண்டா போய் கிராமசேவையாளரிட்டிடையும் அரசாங்கதிபரிடையும் கடிதம் வாங்கீட்டு வா.'


'சரி வாங்கிட்டு வாறன். அதுவரைக்கும் இடிக்காம இருப்பீங்களா...?'


'சரி போய்ட்டுவா'


கிராமசேவையாளர் அலுவலகம் எங்க இருக்கு எண்டு சரியா தெரியல.  நடராசா நான் இஞ்சயே நிண்டு என்ன நடக்குது எண்டு பார்க்கிரன் நீ போய் அலுவல சுறுக்கா முடிச்சுட்டு வா எண்டு அனுப்பிட்டார். கிராமசேவையாளர் அலுவலகம் எங்க இருக்கு தெரியாம போய் சுத்தி மினக்கெட்டு கடைசியா எப்படியோ அரசாங்க அதிபரிட்ட தானே போகனும். அங்கையே நேரப்போயிட்டா விசயம் முடிஞ்சுது தானே எண்டு அரசாங்கதிபரிட்ட ஒரு வேண்டுகோள் மனு எழுத்திட்டு போனான் சாந்தன். 

'சேர் இருக்காரா'

'என்ன விசயம் தம்பி' அரசாங்கதிபர் அலுவலக வாசலில மேசையில இருந்த நடுத்தரவயசு மனிதர் கைலாசம். மூக்கு கண்ணாடியை உயர்த்தி மெதுவாக கதிரையில சாய்ந்தபடி கேட்டார்.

'இல்லை சேரை அவசரமா பாக்கனும்'

'என்ன விசயம் எண்டு சொல்லு தம்பி முதல்ல. சேரை பிறகு தான் பார்க்கலாம். உள்ள சரியான பிஸி'

'அண்ணே புரிஞ்சுகோங்கோ.. எங்கட வீட்ட இடிக்கப்போறாங்கள். சேர் கடிதம் தந்தா மறிக்கலாம் எண்டு சொன்னாங்க. அவசரமா பாக்கனும்'


'கடிதம் கொண்டுவந்தனியே'

'ஓம் இந்தா இருக்கு' 

'சரி தந்துட்டு போ.. இண்டைக்கு திங்கள் நளைக்கு செவ்வாய்.. நாளண்டைக்கு புதன் வா.. கையெழுத்து வாங்கி வைக்கிறன்.' எந்த வித அலுமலக்கும் இல்லாமல் கைலாசம் கதைக்க சாந்தன் கடுப்பாகிட்டான். சும்மா கதிரையில இருந்து கொண்டு ஒரு பிரச்சனையிட சீரியஸ்னஸ் விளங்காம தட்டிக்களிக்கிற பதில் சொல்லிகொண்டிருந்தா யாருக்கு தான் கடுப்பாகாது. சீட்டுக்கு சூடேத்திக்கிட்டு இப்படி எல்லாம் வேலை செய்யனுமா...??


'ஜயோ என்னா விளங்காம விசர் கதை கதைக்கிறீங்கள்.. அவன் இடிக்க வந்து புல்டோஸரோட ரெடியா நிக்குறான். நீங்க மூண்டு நாளில எண்டுறீங்க.. உள்ள விடுங்க நான் சேர்ட்ட கதைக்கிறன்'

'தம்பி அப்புடி எல்லாம் செய்ய ஏலாது உடனடியா. இதை மாதிரி நிறைய கேஸ் இங்க வந்துருக்கு' கைலாசம் உள்ள விடுறல்ல எண்டு உறுதியாய் இருந்தார்.

'அப்போ என்ன எல்லாம் முடிஞ்சு இடிச்சா பிறகுதான் சைன் வச்சு கொடுப்பாங்களா...?'


'அப்பன் புரிஞ்ச்சு கொள்ளு. ஆமிகாரன் விசயம் எடுத்தான் கவுத்தான் எண்டு செய்ய ஏலாது.. பிறகு சுட்டுபோட்டுறுவாங்கள். சுட்டுபோட்டா யாருன்னு கேக்க ஆளும் இல்லை. சேர்இதுகள்ளில வலு கவனம்'

'அதை முதல்லேயே சொல்லுற தானே.. ஆமிக்காரன் எண்டா பயம் இதுகள் செய்யமாட்டம் எண்டு.. உங்ககிட்ட நிண்டு கெஞ்சினதுக்கு அவனிட்ட போய் இருந்தாலும் இரக்கம் பார்த்துருபான்'

'தம்பி இடிச்சுட்டான் எண்டா சொல்லு அந்தா அந்த அக்காட்ட ஒரு போர்ம் இருக்கு. வங்கி நிரப்பி தா அஞ்சு லட்சம் வாங்க அரேஞ் பண்ணிதாரன்'. பொக்கற்றுக்குள்ள கிடக்கிற போன் வேற அடிக்கடி அடிச்சுகொண்டிருக்க எரிச்சல் தாங்கேலாம சாந்தன் கத்த ஆரம்பித்தான்.

'லூசு மாதிரி கதைக்கிறீங்க. எண்ட அஞ்சு தலைமுறை வீடு எண்டுறன். அஞ்சு லச்சம் வாங்கிதாறன் எண்டுறீங்க'. 


'என்ன கைலாசம் இதில ஒரே சத்தமா இருக்கு' கதவை திறந்து கொண்டு அரசாங்க அதிபர் வந்தார். 
'அது ஒண்டும் இல்லை சேர் நீங்க உள்ள போங்கோ' கைலாசம் குசுகுசுத்தான்.

'சேர் உங்கள சந்திக்க வந்தன்.. உள்ளவிடுறார் இல்லை.. நந்தி மாதிரி மறிச்சுக்கிட்டு.'

'என்ன பிரச்சனை தம்பி'

'சேர் வீட்ட இடிக்க ஆமிக்காரன் வந்து நிக்கிறான். இவர் உங்கள பார்க்கவிடுறார் இல்லை..'

'கடிதம் கொண்டுவந்தனீயோ'

'சரி தா பார்ப்பம்..'

'என்னப்பா.. கிராமசேவையாளர் ஊடாக உறுதிப்படுத்தல.. நேரா இங்கயோ வந்துட்ட..'

'சேர் அங்க எல்லாம் போய் மினக்கெட நேரமில்லை.. அவன் புல்டோஸரோட வந்து நிக்குறான் முத்ததில'

'கைலாசம் சொல்லி அனுப்புங்க.. அரசாங்க அலுவல்கள் செய்ய ஒரு முறையிருக்கு.. சும்மா செய்ய ஏலாது.' 


கனநேரமா பொக்கெற்றுக்குள்ள கிடக்கிற போன் வைபிறேற் பண்ணுது. இவங்கள் வேற இம்சை பண்ணுறாங்க. இந்த போன் அரியண்டத்தை ஓப் பண்ணித்தொலைப்போம் எண்டு போனைத்தூக்கினான் சாந்தன்.

' அம்மா...'

' குஞ்சு எங்கடா நிக்குற...'

'இங்க அரசாங்காதிபரிட்ட கடிதம் வாங்க வந்தன். அவங்க சீரியஸா எடுக்கிறாங்கள் இல்லை இதை. நீங்கள் ஏன் இப்போ ஒப்பாரி வைக்கிறீங்கள்'

'கடிதம் எல்லாம் ஒண்டும் வேணாமப்பு.. நீ கெதியா இங்க வா'

' நீங்க வந்துடீங்களா'

' ஓம்.. இப்பதான்.. அறுவாங்கள் எண்ட கண்ணுக்கு முன்னாலயே இடிச்சு போட்டாங்கள்.. எல்லாம் முடிஞ்சுது'
'நான் வரும் வரை உடைக்கமாட்டன் எண்டாங்கள்'

'அது உன்னை அந்த இடத்தில இருந்து கிளப்ப... இங்க எல்லாம் முடிஞ்சுது வா'
'சரி உடன வாறன்'

'அண்ணே கைலாசம்.. வீட்டை உடைச்சுடாங்களாம்.. நீங்க அரசாங்க அதிபராய் இருந்து சும்மா சீட்ட சூடாக்கிறதுக்கு ஆமிகாரனுக்கு பயம் எண்டு எழுதிவைச்சுட்டு வீட்ட போய் வேறேதாவது வேலை பார்க்கலாம்.. பதவியில இருந்து ஒரு மயிரும் கிழிக்கிறயில்லை'
இயலாமையும் கோபமும் சோகமும் தொண்டையை அடைக்க எழுதி கொண்டுவந்த கடிதத்தை கிழித்து மூச்சிநோக்கி எறிந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்தான் சாந்தன்.

நினைவுச்சுழியில் சிக்குண்டு உழன்றெழுந்து பின்பு அதே சுழியில் சிக்குண்டு தொலைந்துபோதல் என்பது மிககொடூரமான விடயம். சாந்தன் ஓட்டுமடம் வந்தபோது சாந்தி இடிந்துபோய் தலையில் கைவைத்தவாறு இருந்தார். சாந்தனை கண்டதும் கட்டிபிடித்துகொண்டு தேம்பி தேம்பி அழுதார். 
'இந்த மனுசனிட்ட எப்படி நான் சொல்லப்போறன் எப்படி தாங்கப்போறான் அவன் பாவி இதை. கடைசிக்காலம் இங்க தான் எண்டானே இப்போ இப்படி ஆகிட்டே' 

வீடு இடித்து முமுவதும் இடித்துதரைமட்டமாகிவிட்டது. நாராயண சிங்கத்தின் சுண்ணாம்புசுவர்கள் எல்லாம் சுக்குநூறாய் உடைந்து கிடந்தது. வீட்டின் நிலம் மட்டுமே வீடு இருந்த இடத்துக்கான சான்றாய் மீதமிருந்தது.

வாழ்க்கை மிகச்சிறியதோர் வட்டம். சாந்தனின் வட்டம் ப்க்கல்ட்டி எக்சாம் பிறக்டிக்கல் சார்ந்தது சாந்தியின் வட்டம் குமாரும் பிள்ளைகளும், குமாரின் வட்டம் குடும்பமும் வீடும்.

முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் சுவரில் அறைந்து விடப்பட்ட 'இது இராணுவத்தினரின் பூமி' வாசகம் மந்திரம் சாந்தனின் மனதில் பச்சையாக பதிந்து போனது. 

'இது இராணுவத்தினரின் பூமி'
புகைப்பட உதவி தீபச்செல்வன்
Views: 1315