பார்தீபனின் காதலி எழுதுவது

எழுத்தாளர் : அதிசயா மின்னஞ்சல் முகவரி: athisayablog@gmail.comBanner

பார்தீபனின் காதலி எழுதுவது
இறுக்கம் மிகுந்த நீண்ட உரையாடல்களின் பின்பு பேசமுடியாத தளுதளுப்புக்களை இப்படியாய் குறிப்பெடுத்து வைக்கிறேன். இப்போதும் நீ பேரன்பானவன் என்பதையே உணர்கிறேன். இருந்தும்  உன்னுடனான  வாதங்களின் ஒவ்வொரு முற்றுப்புள்ளியின் பின்னும் இருப்பதை போல உடைந்து போகும் நிலைப்பாட்டிலேயே இப்போதும் இருக்கிறேன். ஊசல் போன்றதொரு தனிமையின் அசைவு என்னை அங்கும் இங்கும் ரகசியமாய் அலைத்துக்கொண்டிருந்தது. அதன் அவலமான சுவை ஒரு ஊசியின் சடுதியான குத்துதலை போல வலித்தபடி இருந்தது. ஆயினும் என் காலங்கள் எப்போதும் உன்னிலிருந்து பிரிக்கப்படா என்பதை நெஞ்சோரத்தில் இன்னும் தேங்கிப்பெருகும் உன்  ஸ்பரிசத்தின் சூடுகள் நினைவூட்டும். பருவங்கள் கடந்த பின்னும் அதன் கதகதப்பிற்குள் ஒரு  பூனைக்குட்டியாய் சுருண்டு கிடப்பதே என் உச்சபட்ச கொண்டாட்டமாய் இருக்கிறது. உன்  கடப்பாடுகளும் முயற்சிகளும் என்னை தாண்டிய தொலைவுகளில்  உனை நிறுத்தியிருந்தாலும்  என் அன்பிற்குரியவனே  நீ கடந்து போகின்ற நொடிகளிலெல்லாம் உனைபற்றின பெருமிதங்கள் மேலெழுந்து வருகின்றன.

ஒவ்வொரு மடல்களிலும்; உனக்கான கடைசி முத்தங்களை நிரப்பி பெருத்த மனப்பாரத்தோடு அனுப்பினாலும் அது ஒரு போதும் கடைசி மடலாய் இருந்ததேயில்லை. உன் ஸ்நேகம் என்பது எனக்கு தண்டவாளக்காதல். உன் தடங்களை என்னுடன் பிணைக்க முயல்வதில் ஏராளம் அபத்தமும் தயக்கமும் உண்டு எனினும் உன் வாழ்தலோடு கூடவே பயணிக்கும் மறு தடமாய் தீராதுன் உலகம் வரை தொடர்வேன் தொந்தரவு தராத பேரன்பாய். பார்த்தீபா புல்லரிக்கும் நிசிகளிலே விரல் கோர்த்துக்கொண்டு மஞ்சள் நிறமான உன் சருமத்திலிருந்து பழங்களின் வாசனையை நுகர்ச்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு தடவையும் முத்தமிட்டு முடித்தபின் நீ அலாதியாய் உன் பிடிலை ஆர்ப்பரித்து வாசிக்க தொடங்குவாய். நினைவு கூர் எங்கள் சந்திப்புக்கான இரவுகளை மழையும் காற்றும் நிரப்பியிருந்தன. இயற்கையை சாட்சி வைத்து நேசங்களை பொழிவித்துக்கொண்டிருந்த அந்த இரவுகள் போதுமே பார்த்தீபா.


இரவுத் தெருக்களிலே அத்தனை நாற்காலிகளும் நமக்காய் தயார் செய்யப்பட்டிருந்தன. உன் பிடில் இசையும் உனக்கு பிடித்தமான என் கொலுசொலியுமாய் உலவித்திரிதலில் கண்ட பேரானந்தத்தை விட இன்பம் ஏது சொல். பார்த்தீபா என் பெருந்துணையே இதை எழுதும் போதெல்லாம் கனத்த கண்ணீரும்  நேசப்புன்னகையும் ஒருசேர எழுவதை பார். நான் தைரியமானவள் ஆனாலும் உனை இழப்பதாயில்லை. பார்த்தீபா உன்மீதான நேசங்களை கோர்த்து வைத்திருக்கிறேன். அது எப்போதும் தொலையாமலும் திருட்டு போகாமலும் என்னோடிருக்கும்.  பார்த்தீபன் எனும் பெரும்சந்தோஷமே ஜென்மத்திற்கும் போதுமான சந்தோஷங்களை குடுவைகளில் நிரப்பிக்கொடுத்தாய். சாம்பிராணிப்புகை போல எனை எங்கிலும் சூழ்ந்து மீள விடாத இன்பமாய் நீ தான் ஆழ்கிறாய். கார்காலங்களிலெல்லாம் உனை அபரிமிதமாய் உணரவைக்கும் சூட்சுமத்தை நீயே அறிந்திருந்தாய். இன்னமும்  நீ கலைத்துப் போட்ட போர்வை சுருக்கங்களுக்குள்ளே உதட்டை விட்டகலா மோனகப்புன்னகையுடன் உன்னை பார்த்தபடி இருக்கிறேன். நடு சாமங்களில் சர்ப்பம் போல் நின் நினைவுகள் மூலைமுடுக்கெல்லாம் நுழைந்து சத்தமின்றி வியாபிக்கத்தொடங்கும். திருப்பவும் உனை உடுத்தியபடி தூங்கிப்போயிருக்கிறேன்.

பார்த்தீபா தீராத்தாபத்துடன் காத்திருந்த காலங்களில் நின் மூச்சின் ஆழச்சத்தங்களை கூட பெரும் பாக்யமாய் நினைத்திருந்தேன். எல்லாம் ஆறி விட்டது என்பதாய் பாசாங்கு செய்த உரையாடல்களின் ஒவ்வொரு அந்தங்களிலும் நேசம் உணர்த்தும் ஒற்றை முத்தக்குறிப்பேதும் கிடைக்காதோ என நூறுமுறை பார்த்திருந்தேன். ஓரேஒரு முறை நீ என்னை மறந்தே தொலைத்தாயா பார்த்தீபா எனகேட்க தவமிருந்தேன். இத்தனை காலங்களில் ஏதேனும் ஒரு மழை இரவு கூட நம் நாட்களுக்குள் உனை நடத்தி போகவில்லையா என் பார்த்தீபா?  மீண்டொருமுறை நம் பொழுதுகளுக்கள் உனை திணிக்கமாட்டேன். ஆனாலும் இத்தனையும் நீயும் உணர்திருந்தாய் என சொல்வாயாகின் அதுவே போதுமாயிருக்கும். என் வலிச்சிமிழே உன்னில் அடைகட்டிய இந்த பந்தம் பெருவானம் போனாலும் இடம் கேட்பதுன் அடிவயிற்றுச்சிறகுகளில் தான் பார்த்தீபா. ஏராளம் பயணங்கள் போய் வந்தபின்னும் தசை தோல் போர்த்திய இவ்வுடலில் ஆன்மாவையும் நேசிக்கும் வெள்ளை நேசத்தை நீயே அறிந்திருந்தாய். பார்த்திப்பாதங்கள் நடந்த என் சாலைகளில் தொழுது அச்சுவடுகளை காத்துக்கொண்டே போவேன். என்றேனும் ஒரு ஏக்கம் உன் கட்டுடைத்து என்னிடமாய் தள்ளுகையில் என் பிரியமே உன்னில் தீயென பற்றிப்படரும் அணைப்பை தவிர வேறேது நிகராயிருக்கும்.

இத்தனை ப்ரியங்களையும் நெஞ்சம் தழுவியே பின் தீர்கமாய் மரிப்பேன். எனினும் என் ஏக்கத்தையும் நீ உணராதிருக்கமாட்டாய். எனை துண்டித்து விட்டு எத்தனை தூரம் சென்றாலும் என் நேசத்திற்குரியவனே ஒவ்வொரு வளைவுகளிலும் மனம் பொறுக்காது நீ திரும்பிப்பார்ப்பாய். அப்போதும் உனக்கான பூக்கொத்துக்களை சுமந்தபடி என் இன்மையை நீ உணரவிடாது உனை வசந்தங்களால் நிரப்புவேன். பின்னொரு நாளில் நின் நேசத்தையெல்லாம் முற்றுமாய் சுகித்து கட்டியணைத்து நின் வாசங்களெல்லாம் குடிக்கும்  ஏக்கங்கள் தீர்ந்த பின் நிபந்தனை அற்ற என்பேரன்பை உன்னிடம் கையளித்து இறுக்கமான தழுவலுடன் விடை கொடுப்பேன். உன்னை தொந்தரவு செய்யாத நேசத்தை கடைசியாய் உச்சி முத்தமிட்டு சூடான கண்ணீருடன் எனக்கு விடை தா பார்த்தீபா... நேசமென்பதே எனை கொன்றுதீர்க்கும் மரணமாயிருக்கும்.

  
Views: 532