வட்டானை விசகிளம் - வயற்களத்தின் ஒரு சுவையான கவிநயம்

எழுத்தாளர் : ஷாக்கீர்மின்னஞ்சல் முகவரி: saakir.mim@gmail.comBanner

தென்கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் வாழ்வியல் கூறுகளில் நாட்டார் கவிகளும் அவர்களின் விவசாயப் பண்பாடும் பிரித்துவிட முடியாதவை. பண்டமாற்று வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய இச்சமூகம் நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் விவசாயச் செய்கையில் தங்களைத் தகவமைத்துக் கொண்டனர். 

'மட்டக்களப்பின் செறிந்த காட்டுப் பிரதேசம் முஸ்லிம்களின் அயராத உழைப்பினால் கழனிகளாக்கப்பட்டன. பண்டைய காலத்தில் இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட நெல் நாட்டின் ஏனை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன' என்று எஸ். எஸ். தேவராஜா குறிப்பிடுகின்றார். 

இவ்வாறு விவசாயச்சிறப்பு மிக்க பிரதேசங்களுள் சம்மாந்துறையும் ஒன்றாகும். 22000 ஏக்கருக்கும் அதிகமான அளவு நெற்காணிகளில் விவசாயம் செய்யப்படுகின்ற இப்பிரதேசத்தில் காலாகாலமாக மக்களின் வாய்வழி இலக்கியமான கவி பேணப்பட்டு வந்திருக்கின்றது. 

இவர்களின் விவசாயப் பண்பாடுகளோடு இணைந்த பல்வேறு கவிகள் பதியப்பட்டு இருக்கின்றன. எனினும் விவசாயிகள் அநாயசமாகப் பாடியதும், ஆய்வாளர்களுக்குச் சுவாரஸ்யத்துடனான ஆர்வத்தை ஊட்டக்கூடிய கவிவடிவம் ஒன்றினைப்பற்றிய சிறு அறிமுகக் குறிப்பே இவ்வாக்கம். இதுவரை கண்டுகொள்ளப்படாத இக் கவி 'வட்டானை விசகிளம்' எனப்படுகின்றது.

வட்டானை – (வட்டை விதானை) என அழைக்கப்படுபவர். குறிப்பிட்ட சிலநூறு ஏக்கர் வயற்காணிகளுக்கு மேற்பார்வையாளராகவும், வாய்க்கால் வெட்டுதல், கட்டுக்கட்டுதல், வயற்பிணக்குகளை தீர்த்தல், நீர்ப்பாய்ச்சல், மற்றும் வயற்பொதுப்பணிகள் தொடர்பில் தலைமை வகிக்கக்கூடிய பல அதிகாரங்களைக் கொண்டிருந்த ஒரு அதிகாரியாக நியமிக்கப்படுபவராவார். 

உழுதலுக்குப் பின்னர் நெல் விதைத்தல் பொதுவாக நிலவு வெளிச்சமுள்ள காலத்திலேயே மேற்கொள்ளப்படும் மரபு ஒன்று இங்கு நிலவியிருக்கின்றது.  இதனால் யானைக்காவல், குருவிக்காவல் போன்றவற்றிற்கு இலகுவாயிருக்கும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

பொதுவாக அமாவாசையை அண்டிய நாட்களில் மழைவருவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாய் இருப்பதாக கருதும் இவர்கள் மாசம் (மாதம்) பொறந்த (பிறந்த) மூன்றாம் நாள் 'மூன்றாம் பொருத்து கழியட்டும்' என்று காத்திருப்பார்கள். மூன்றாம் பொருத்து என்பது அவர்களது வழக்கில் மூன்றாம் பிறையைக் குறிக்க பயன்படுகின்றது.
 
7ம் பிறை கழிந்த பின்னர் 11ம் நாள் கோட்டை போட்டு (ஒரு வகை முளைப்பு முறை) 12ம் நாள் எடுத்து வைத்து 13 நாள் முளை வைத்த பின்னர் 14ம் 15ம் நாட்களில் விதைப்பார்கள் (இது நிலவு காலமாக இருக்கும்). இதனால் இதை நிலவில் விதைத்தல் என்றும் கூறுவார்கள். இந்த முழுநிலவு காலத்தில் வெளிச்சம் இருப்பதனால் யானை, பன்றி, மாடு போன்ற விலங்குகளிலிருந்து வயலைக் காப்பதற்காக இரவுவேளைகளில் வயலில் தங்கியிருக்க உசிதமாயிருப்பதோடு தூரத்தே வருகிற விலங்குகளை இருளில் பிரித்தறிவது இலகுவாயிருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த காலங்களில் வயலில் வேலி கட்டப்பட்டு இருக்க மாட்டாது இதன் பின்னர் 10-12 நாட்களில் வேலி குத்தத் (வேலி அமைத்தல்) தொடங்குவார்கள்.

விதைத்தலின் பின்னர் காட்டிலே கம்பு வெட்டி அவற்றை சீர்படுத்தி வேலிக்கால்களை நட 10-12 நாட்கள் எடுக்கும். அதன் பின்னர் வேலியருகில் தாராப்புட்டியில் பரண் கட்டி காவல் காப்பார்கள். பொழுது பட்டவுடன் (அந்தி சாய்ந்தவுடன்) விவசாயிகள் பரணிற்கு வருவார்கள். பரண்கள் ஒவ்வொரு வயலிலும் தாராப்புட்டி எனப்படும் மேடாக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இவை சற்று தொலைவில் ஒவ்வொருவரின் வயலிலும் காணப்படும். 

இந்த நேரத்தில் வயலில் காவல் காப்பவர்களை விழித்திருக்கச் செய்ய வட்டானை ஒரு சுவாரஸ்யமான செய்கையொன்றை ஆரம்பித்து விடுவார் அதுவெ 'வட்டானை விசகிளம்' எனப்படும் 
வட்டானை, அதிகாரி, சுப்புறுந்தன் (ளுரிநசiவெநனெ)  அவர்களில் ஒருவர் அருகிலுள்ள ஒரு பரணிற்கு சென்று அங்கிருக்கிற விவசாயி ஒருவருக்கு பொழுதுபட்ட விசகிளம் (செய்தி) ஒன்றைக் கவிவடிவில் சொல்லி கையில் ஒரு சதம் அல்லது பாக்குவெட்டி ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து அனுப்பிவிடுவார். 

அவர் அடுத்த வயற்காரரிடம் இதை சொல்லிக் கொடுத்து விட்டு பொருளையும் கொடுத்து விட்டு திரும்பி வருவார். இப்படியே அடுத்த வயற்காரரும் அவருக்கு அடுத்த வயற்காரிடம் கவியுடன் பொருளைக் கொண்டு சேர்ப்பார், இறுதியில் அதிகாலையில் பொருள் வட்டானையின் கைக்குக் கிடைத்துவிடும் 

அவ்வாறான ஒரு கவி

பொழுதுபட்டொரு சாமமாம்.
இந்த விசகிளம்
ஈனபிலாசம் (கெதியா);
வட்டையச் சுத்தி
சீக்கிரம் வரனும்

இத்துன நாளும் காவல் காத்தது 
தானில்லியாம் காவல்
இனிக் காக்கிறதுதானாம் காவல்

சங்கக்காரன்
நாணயகாரன்
பூச்சியகாரன்

ரெண்டுதல வேலிக்கி
கொத்திழுத்துக்
கொடியிழுத்துத்
தீனாப் போட்டு

அதை மீறி 
ஆனையைப் பண்டியை
மாட்டை விட்டால் 
நாளைக்கிச் சங்கைக் கீனமாகுமாம்
கேட்டுக் கொண்டு வா......


பாடல் பாடிக்காட்டியவர்  - சீனிமுஹம்மது ஆமிதுலெப்பை (வட்டானை - வயது 80) 

இந்தப்பாடல் சொல்கிற செய்தி ஒரு அறிவுரையாகவும் எச்சரிக்கையாகவும் காணப்படுகிறது.
இவ்வளவு நாளும் காத்தது காவல் இல்லை இனித்தான் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதோடு இந்தக்காவலை மீறி அசட்டையினால் விலங்குகளை வயல்நிலத்திற்குள் அனுமதித்தால் அது தங்களின் சிறப்பை குறைத்துக் கொள்கின்ற செயல் என்று எச்சரிக்கையும் விடுக்கிறார். 
இந்த நடைமுறை பிற்காலத்தில் வெகுவாக அருகிவிட்டது. 

வட்டானை விசகிளம் - வயற்களத்தின் ஒரு சுவையான கவிநயம்துணை நின்றவை:

பளீல்.எஸ்.எல்.எம்., அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்(1997) ப-397  
சந்திப்பு : சீனிமுஹம்மது ஆமிதுலெப்பை (வட்டானை - வயது 80)
  


Views: 687