நேருக்கு நேர்

எழுத்தாளர் : ஷாருஜன்மின்னஞ்சல் முகவரி: nesharujan@gmail.comBanner

துரோணரின் குடிலில் பார்த்த அர்ஜுனனின் சிறு வயது முகம் ஞாபகத்திற்கு வரும் போதேல்லாம் தன்னிச்சையாகவே புஜங்கள் எழுச்சி கண்டு உதிரத்தில் அனல் பெருகுவதை கர்ணன் உணர்ந்திருக்கிறான். தற்போது அவன் உருவம் எப்படியிருக்கும்? தன்னைவிட வலியவனாய் இருப்பானா தனுர்வித்தையில் உத்தம நிலையை அடைந்திருப்பானா? என்ற எண்ணங்கள் அடிக்கடி அவனை சிலிர்க்கவைக்கும். இவ்வாறு இன்னொருவனால் தன் வாழ்க்கை ஆட்கொள்ளப்பட்டுள்ளதெனில் தன் வாழ்வால் முக்திப் பேற்றை அடைவேனா?  சுத்த வீரன் ஒரு தனிமனிதனை எதிர்ப்பதிலேயே தன் வாழ்காலத்தை வீணாக்க மாட்டானே எனில் இவ்வுலகம் தன்னை ஒரு வீரனாக அங்கீகரிக்குமா என்ற எண்ணங்கள் அடிக்கடி உருவாகி கரை காணாது ஓடி பின் தேக்க நிலையை அடைதுவிடும். அந் நேரங்களில் தன் எதிர்காலத்தை எண்ணி அச்சமுறுவான் கர்ணன். அவனோ தானோ மாண்டாலொழிய தன் வாழ்வில் நிம்மதியை காணவியலாது என்பதை கர்ணன் அறிந்தேயிருந்தான்.

அவனை எவ்வாறு போரில் எதிர்கொள்வது? துவந்த யுத்தத்திற்கு அழைப்பு விடுக்கலாம். அவன் சுத்த வீரன். ஹ்ருதயத்தில் அவனுக்கு பயமிருக்காது. ஆனால் எந்த ஒரு ஷத்திரியனும் தாழ்ச்சி குலத்தவனோடு போர் புரிய மாட்டான். எனில் எவ்வாறு அவனை வெல்வது?  தன் மனவோட்டங்களை யாரிடம் வெளிப்படுத்துவது?
பரசுராமரிடம் சொன்னால் தன்னை ஒரு இழிபிறவியாக நினைத்துவிடுவார். முன்னமேயே பொய்யுரைத்து வித்தை பயின்றது மனதில் முள்ளாய் நெருட்டுகிறது. தன் நிலை அறிந்து வழி சொல்ல ஒரு நல்ல நண்பன் இல்லையே என சூரிய புத்ரன் மனம் நொந்தான். அவ்வவ்போது 'இப் பரந்த பாரதத்தில் மனம் இசைந்து தினம் பேச ஒருவன் இருக்காமலா போய்விடப்போகிறான்' என ஆறுதலடைந்துகொள்வான்.

அதே நேரத்தில் அஸ்தினாபுர அரண்மனையில் அர்ஜுனனி வீர பராக்கிரமங்களை கண்டு துரியோதனன் பொறாமையில் புழுங்கிக்கொண்டிருந்தான். மாமன் சகுனியை காணும்போதெல்லாம் அவனை ஒழித்துக்கட்ட வழி சொல்லுமாறு நச்சரித்துகொண்டிருப்பான். சகுனியும் 'வாழ்வின் உன்மத்த நிலையை அடைந்தவர்களின் மரணங்களை பற்றி அறிவாயா மருமகனே? அவர்களின் முடிவு அவர்களிற்கு ஈடானவர்களாலேயே நிகழ்த்தப்படும். ஈசனின் படைப்பின் சூட்சுமம் அது. நீ விரும்பாவிட்டாலும் எதிர்காலத்தில் அர்ஜுனன் ஒரு அதி உத்தம வீரன் ஆவான். யுத்தம் ஒன்று மூண்டால் அவனை எதிர்க்க, அவன் சரங்களின் சினம் அடக்க ஒருவன் பிறந்திருப்பான். உனக்காக அவனை தேடிக்கண்டுபிடிப்பேன்' என சொல்லிக்கொண்டிருந்தார். முன்னமேயே அதற்கான சாத்தியங்களை சகுனியின் மூளை ஆராயதொடங்கியிருந்தது.   
Views: 502