காதலடி நீ எனக்கு

எழுத்தாளர் : கோ (சாமானியன்)மின்னஞ்சல் முகவரி: gkthangaraj@gmail.comBanner


    'தயவுசெஞ்சு பேசுறத மட்டும்  ஒருமுற கேளு ' என்று சொல்லும் நான், இதற்கு முன் அவளிடம்  அப்படி பேசியதே இல்லை. கிளைகள் முறியும் சமயத்தில் மரங்கள் வேர்பிடித்து அழுவது இலைகளுக்குத் தெரியாது.

ஆனந்திக்கு என் வலி தெரியாதது ஆச்சரியம் தான். பழகிய முதல் நாளை அவள் முற்றிலும் மறந்திருக்கின்றாள்.
ஒரு சூரியனை விழுங்கி விட்ட இருளின் கருமையைப் போல், அவளின் மனம் மாறி இருப்பதை நம்ப முடியாமல் தவிக்கின்றேன். நானென்றால் பிடிக்கும் என்று சொல்வாள் அவள். நான் 'நீ மட்டும் தான் பிடிக்கும்' என்று  அடிக்கடிச் சொல்வேன் அவளிடம். ஆனந்திக்கு அது வெறும் ஒரு சொல்லாக தெரிந்திருக்கலாம் அல்லது ஒரு பிதற்றலாக தெரிந்திருக்கலாம். ஆனால், நான் ஆனந்தி பிடிக்குமென்று சொன்னது வெறும் சொல்லல்ல ஆன்மாவின் கூட்டில் இருந்து செதுக்கி எடுத்த ஒரு வடிவுங்கொண்ட உயிருரு. என்னுயிரின் பாதியான சொல் அது. 

நானொரு வேலையற்றப் பட்டதாரி அல்ல. வேலையற்றவன். பட்டயப் படிப்பு படிக்காதவன். ஊர் விட்டுப் பிழைக்க வந்தவன் தான், பிழைக்காமல் இருக்கிறேன். பிழைப்பை தேடுபவனுக்கு காதலெதற்கு எனத் தோன்றும், தோன்றினால் தவறொன்றுமில்லை. காதல் வருவதையெல்லாம் கண்டுணர முடியாது. ஒருவேளைக் கண்டுணர முடியுமெனில், நான் கவனமாகவே இருந்திருப்பேன். என் கவனமெல்லாம் இன்று ஆனந்தியின் மேல் சூழ்ந்திருக்காது. தனியார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த இரண்டே வாரத்தில், வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டேன். காரணம்; பெரிதாகவொன்றும் இல்லை, சுயத்தை கொச்சைப் படுத்துகிற எந்த வேலையையும் செய்ய மனம் வாய்க்காதது தான். பணம் மட்டுமே வாழ்க்கை என்பதை ஏற்பவன் அல்ல நான். பணம் ஒரு காகிதம். காலம் அதன் மதிப்பை மாற்றும். நிலையானது எதுவோ அதற்காகவே என் தேடுதல். ஆகையால் நிரந்தரமாக ஒரு வேலை, ஒருவேளையில் கிடைத்து விட்டால்; பார்ப்போம் அதை யென நினைத்து விட்டேன். வேலையை விட்டுக் காத்திருந்த நேரத்தில் தான், ஆனந்தியை மழையில் நனைந்த படி பார்க்க நேர்ந்தது.

மழை, மழையில் நனைவதை முதல் முறை பார்ப்பது புது அனுபவம். ஆனந்தியை அச்சமயம் பார்த்தது அப்படி  தான் இருந்தது. உடனே  இடியாய் ஒரு காதல் தலையில் விழுந்தது. யாருமே இல்லாத 'ட'வடிவ சாலையில், மழைக்கு ஒதுங்கிய என்னருகில், வானவில்லின் அழகோடு, மயில் கண்களை அகல விரித்து, தூங்குமூஞ்சி மரத்தடியில் வந்து நின்றாள் .சரியாக பன்னிரண்டு அடி இருக்கும், எனக்கும் அவளுக்கும்.
மரத்தின் ஒரு கிளையில் இதயத்தில் அம்பு விட்ட தழும்பு இருந்தது. மழை இதயத்தில் பட்டு, வழிந்தோடி, கீழ் இறங்கி வருவதில் ஒரு கண்ணீர் இருந்திருக்குமென அப்போது எனக்கு தெரிய வாய்ப்பில்லை. மழை கொஞ்சம் கொஞ்சமாய் தன் வேகத்தை குறைத்தது. பார்த்ததும் காதல் வர வாய்ப்பே இல்லை என்பவர்களில் நானுமொருவனே.  ஆனால், ஆனந்தியை பார்த்ததும் காதலுற்றேன். இந்த காதல், மோசமான ஒரு மழை தான். பலத்த சேதம் தருகிற வலிமை அதற்கு. மழையை ரசிக்கும் அளவுக்கு; மழையை வெறுக்கவும் செய்ய மழையால் மட்டுமே முடியும். அப்படியே தான் காதலும்.

'ஹலோ ... ஒரு ஹெல்ப் பண்ணுங்க'

'சொல்லுங்க ... என்ன ...?'

'வீட்டுக்கு கால் பண்ணனும். போன் சுவிட்ச் ஆப் ஆகிடுச்சு .உங்க மொபைல் கொடுத்தா அம்மாவுக்கு சொல்லிடுவேன்.
ஒரே ஒரு போன் பண்ணிக்க. மழை. ரொம்ப லேட். அம்மா பயப்படுவாங்க.'

'ம் ... இந்தாங்க பேசுங்க .பேலன்ஸ் குறைவா இருக்கு ...ம்.. ஒரு எட்டு ஷரூபா  இருக்கும் பரவாயில்லையா ?..'

'அச்சோ ..ஒரே கால் தான் ...பிளீஸ். .'

'தாராளமா பேசுங்க ....இந்தாங்க ...'
ஆனந்தி அலைபேசியில்  எண்களை தட்டத் தட்ட கிளிங் யென எனக்கு  இதயம் அதிர்ந்தடங்கியது. முதல் முறை ஒரு பெண்ணின் விரல் படுகிற டச் ஸ்கிரீன்  அநேகமாக எனைப் போல்  உறைந்திருக்க கூடும். உண்மையில் இது நல்ல மழை தான், ஆனந்தியை  அடையாளம் காட்டிய மழை.

'ஹலோ ..அம்மா...நான் ஆனந்தி பேசுறேன் ... ஹலோ ...கேக்குதா ...இங்க மழை .என்னோட போன் ஸ்விட்ச் ஆப். .. வர லேட்டாகும். பயப்படாதே வந்திடுறேன்... வைச்சிடுறேன் 'என பேசி முடிக்கும் முன், ஈரக் கை என்பதால் செல்போன் நழுவி  மழையால்  தேங்கிய நீரில் விழுந்து, மூச்சுத் திணறியது . 
'ஐயோ ... சாரிங்க ...சாரிங்க '

'ஏங்க இப்படி பண்ணீங்க .சாப்ட காசு கூட இல்லாத ஆளுங்க நான். கடன் கேக்க வைச்சிருந்த போனைக் கூட இப்ப இல்லாம பண்ணீட்டீங்க .அட போங்க .உங்க சாரி தான் 
இப்ப அவசியம் '

'நனைஞ்ச கை. அதான் நழுவி .தெரியாம .சாரிங்க .பிளீஸ் உங்க நம்பர் சொல்லுங்க நான் பணம் தரேன் சரி பண்ண .சாரிங்க '

'நீங்க கால் பண்ணா எடுக்க போன் இல்ல.சொன்னதே போதும் போங்க .உங்கள பாத்ததும் பிடிச்சிடுச்சி அதனால தான். திட்டாம போறேன். போங்க போய் வீடு சேருங்க பத்திரமா ...'
நான் இப்படி சொல்லியதும் ஆனந்திக்குள் இன்னொரு மழை பெய்திருக்கும் ,கூடவே புயலும் சுழன்றடித்திருக்கும். நானொரு முப்பதடி தூரம் நடந்திருப்பேன். பிறகே திரும்பி பார்த்தேன் .ஆனந்தி அங்கில்லை. ஆனால்  ,ஆழகான வானவில் இருந்தது. அது அவளின் அடையாளமென என்னால் முழுதும்  உணர முடிந்தது.

சுமார் பிற்பகல் ஒரு மணிக்கு மேலிருக்கும். கோவில் தெருவில் ஜானகி மொபைல் ஷாப்பில், செல்போனை பழுதுப்பார்க்க தந்திருந்தேன். அதை வாங்கிட அப்போது தான் சென்றிருந்தேன். எப்போதுமே கடன் கேட்டால் தருகிற பார்த்திபனிடம், இந்த முறையும் கடன் வாங்கித்தான் வந்தேன். செல்போன் வேலைச் செய்கிறதா வென பார்த்து விட்டு, ஷரூபாய் எண்ணூறை தந்து சில சில்லறைகளோடுக் கிளம்பிய பின் ,
ஒரு அழைப்பு வந்தது .
'ஹலோ ... யாருங்க ...'

'சார் ...மணல் லாரிக்கு சொல்லி இருந்தேனே அதான் கேக்கலாம்னு ..'

'சார் ....உங்களுக்கு யார் வேணும் '

'டிரைவர் மணி தானே ....'

'இல்லீங்க ராங் நம்பர் .....'
சலிப்பாகத் துண்டித்த அழைப்புக்கு பின் .மனம் ஆனந்தியை அனிச்சையாய் நினைத்தது. ஒரு அரக்கன் போல சத்தமிட்டேனோ! அவளிடம் என யோசித்தேன். குறைந்தபட்சம் சிநேகமாய் வந்திருந்தால், மழை வரும்போதெல்லாம் ஒரு முறையேனும் என்னை நினைத்திருப்பாள். முட்டாள் தனமான செயல் செய்தேன் யென நினைக்கையில் .
மற்றொரு அழைப்புக்கு செல்போன் சினுங்கியது.
'ஹலோ .... யாருங்க ...'

'டேய் ரமேஷ் பேசுறேன். உனக்கு ஒரு ஜாப் அரேஞ் பண்ணிட்டேன். நாளைக்கு ஜாய்னிங் ஓக்கே வா .சீக்கிரம் ஷரூம்க்கு வா .'

'சரி டா ...தேங்க்ஸ் டா ....நைட் பேசலாம் வரேன் '
ரமேஷ் இதுவரை நான்கு முறை வேலைக்கனுப்பி  இருப்பான் என்னை. நானும் சில மாதங்களுக்கு பின் வேலையை விட்டு வந்துவிடுவேன்.
அவனும் அடுத்த வேலையை சொல்வான். சமமான புரிதலின் அக்கறை  இப்படியும் நட்பில் தொடரும். 

 கோவிலுக்கு போகிற பழக்கம்  எனக்கில்லை. பார்த்திபனுக்கு தெய்வ பக்தி இருப்பதால், அவனுடன் செல்வது வழக்கம். கோவிலுக்கு வெளியே இருக்கும் டீ கடையில், நான் தஞ்சம் புகுந்தால் எனக்கும் சேர்த்து பார்த்திபன் வேண்டிக்கொள்வான். சில நேர வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்பார்கள். அப்படித்தான் அன்று நடந்தது. அலைபேசியில் அழைப்பு மணி ஒலித்தது.  எடுத்து,
'ஹலோ....யாருங்க '

'ஆனந்தி பேசுறேன் ஞாபகப்படுத்தி பாருங்க .உங்க மொபைல் தண்ணீல போட்டேன். நீங்களும் கோவமா ..'

'ஆமா ...எப்படி  இருக்கீங்க. மொபைல் சரி பண்ணிட்டேன். நீங்க நல்லா இருக்கீங்களா..என்னோட நம்பர்  உங்களுக்கு  எப்படி. ..'

'என்னங்க... அம்மாவுக்கு உங்க நம்பர்ல தான் கால் பண்ணேன். மறுநாளே உங்க நம்பர் டிரை பண்ணேன் சுவிட்ச் ஆப். மனசு கஷ்டமா போச்சு. டெய்லி டிரை பண்ணுவேன். லாஸ்ட் திரீ டேஸ் டிரை பண்ண முடியல. கொஞ்சம் வேலை. அதான் இப்ப டிரை பண்ணேன். சாரிங்க என்னால உங்களுக்கு செலவு. உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க நான் பணம்  அனுப்பி வைக்குறேன் ...'

'பரவாயில்லிங்க நான் ரெடி பண்ணிட்டேன். என்ன நினைச்சேன்னு நீங்க சொன்னது சந்தோஷம். சரிங்க. அடிக்கடி பேசுங்க. வைக்கிறேன். 'எனத் துண்டித்து விட்டேன்.
இதயத்தை கண நேரம் ஏதோவொரு இசை வருடி விடுவதைப் போன்றதொரு குரல் அவளுக்கு. மனம் அவளையே நினைக்க தூண்டுகிறது. ஆனந்தியின் மீதான காதல், மழைக்கு தெரியும். எனக்கு தெரியும். பிறகு பாழ்பட்ட செல்போனுக்கு தெரியும். ஆனால் ஆனந்திக்கு தெரியாது. அன்பாய் பேச யாரும் இல்லாதவர்கள் அநாதைகள். நான் பல சமயம் அநாதையானதை உணர்ந்தவன் .
ஆனந்தியிடம் பேசிய பிறகு அநாதை உணர்வற்று திரிகிற இந்நொடி எனக்கு புதிது. புதிதான உணர்வின் வெளிப்பாட்டில், குருவிகளின் கூச்சல் பிடிக்கிறது. கொஞ்சம் யோசித்தேன். 
ஆனந்திக்கு அழைப்பு விடுத்தேன். காதருகில் ரிங் ரிங் யென ஒலிப்பதில் இதயம் கூடுதலாக பதற்றம் அடைந்தது. எடுத்தாள்,
'ஹலோ...சொல்லுங்க. நானே உங்களுக்கு கால் பண்ண நினைச்சேன். நீங்களே பண்ணிட்டீங்க.'

'என்ன விஷயம்...'

'உங்க பேரு கேக்காம விட்டுட்டேன் அதாங்க. ஆமா நீங்க ஏன் கால் பண்ணீங்க ? '

'என் பேரு நாதன். நேத்து தான் பிரைவேட் கம்பெனியில் அட்டெண்டரா வேலைக்கு சேர்ந்தேன். மாசம் எட்டாயிரம். இங்க அம்பிகை கோவில் பக்கம் தான், ஷரூம்ல பசங்க கூட தங்கி இருக்கேன். கஷ்டமான வாழ்க்கை. இப்ப உங்கள காதலிக்கிறேன்.'
அலைபேசி சட்டென்றுத் துண்டிக்கப்பட்டது.
மௌனமாக செல்போனை பார்த்தேன். அது எனை முறைத்து பார்ப்பது போல இருந்தது. கொஞ்சம் அவசரப்பட்டு சொல்லிவிட்டேனோயென நினைத்தேன். இருந்தாலும் ஆனந்தியின் மேல் இருந்த காதலை, அவளிடம் சொல்ல கிடைத்த வாய்ப்பென சொல்லி விட்ட சந்தோஷம். மீண்டும் ஒரு மழை. ஒரு ஆனந்தி என் வாழ்க்கையில் நடக்காத ஒன்று.

வாழ்க்கை போராட்டமான நிலையில் இருக்கையில், நாம் செய்வதறியா செயல்களை நிறையவே செய்வதுண்டு. அப்படியான செயல் தான் ஆனந்தியிடம் நான் காதலைச் சொன்னது. இருந்தாலும் எனக்குள்ளிருந்த காதல் வேறொரு சுமையை தந்தது. ஆனந்தி என் கண்ணுக்குள் அகலாத ஒளி பிம்பமானாள். மறைக்க முடியாத துன்பம் எதுவென்றால் காதல் தான், அது எப்படியும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அன்று மழை பெய்தது. அழைப்பு ஆனந்தியிடம் .
பதறி போனேன். நிதானமாக நானில்லை. அறையில் யாருமில்லை. மின்விசிறி சுழன்றும் வியர்த்தது பயம். திட்டித் தீர்க்கப் போகிறாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு, நான் எதிர்பார்க்காத ஒன்று இது. சுயமாய் முடிவெடுத்து  அழைப்பை ஏற்கப் போகையில், மிஸ்டு கால் ஆனது. வேண்டாம் எடுக்காமல் இருந்ததே சரியான முடிவு என நினைக்கையில். மறுபடியும் செல்போன் கூச்சலிட்டது. எடுத்ததும் அவள் திட்டினாலும் பரவாயில்லை. அவளின்  குரல் கேள் என்றது மனம். அழைப்பை ஏற்றதும்
'ஹலோ...நாதன் .நான் ஆனந்தி பேசுறேன். '

'சொல்லுங்க...என்ன விஷயம் '

'அன்னைக்கு பேசிட்டு இருக்கும் போதே செல் ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு. '

'ஓ ...அப்படியா .....'

'அடுத்த நாள் பாப்பாவுக்கு உடம்பு முடியல .ஹாஸ்பிட்டல் கூட்டி போனேன் .இன்னைக்கு ப்ரீ அதான் கால் பண்ணேன்.'

'நான்  காதலிக்குறேன் ஆனந்தி '

'நான் உங்க மேல கோவிச்சிக்க முடியல .ஏன்னு சத்தியமா தெரியல .உங்க காதல ஏத்துக்குற இடத்துல நானில்ல .டைவர்ஸ் தான் .வாழ்க்கை இல்ல தான் .பட் உங்கள காதலிக்க முடியல .சாரி .'

'ஆனந்தி உங்க கிட்ட இப்படி சொன்னது தப்பு தான். உங்கள பத்தி எந்த விஷயமும் தெரியாம அநாகரிகமா நடந்துக்கிட்டேன். ஆனா காதல் உணர்வு யாருக்கு யார் மேல வரும் எப்ப வரும்னு சொல்ல முடியாது. 'கல்யாணமான ஒருத்தி கிட்ட, இப்படி சொல்ற ' எப்படினு கேக்காதிங்க. அதுக்கு பதில் இந்த உலகத்துல யார்கிட்டயும் இல்ல. ஆசைப்படுற மனசுக்கு நியாயம் தெரியாது, தப்பு தெரியாது, ஆசப்பட மட்டும் தெரியும். இங்க நிறைய பேரு ஆசைய சொல்லாம போறாங்க, சிலர் சொல்லிட்டுப் போறாங்க. நான் ரெண்டாவது லிஸ்ட். தப்புன்னு தெரிஞ்சும், ஆண் பெண் உணர்வு குவியல்ல தப்புன்னு எதையும் ஏதுக்க முடியல. இங்க எல்லா தப்புக்கும் ஒரு சரியான நியாயம் இருக்கு. அது அவங்கவங்க தனிப்பட்ட நியாயம். நான் தப்பா நினைக்காம உங்க கிட்ட காதல சொன்னது, என்னோட தனிப்பட்ட நியாயம். மறுபடியும் சொல்றேன் உங்கள பிடிக்கும். காதலிக்குறேன் .திட்டினா திட்டுங்க '

'நீ சொன்னது எனக்கு தப்புன்னு தோணல. பட் உன்னோட லவ் ஏதுக்க முடியாது. நான் அப்புறம் பேசுறேன். ஹாஸ்பிட்டல் போகனும் '
துண்டிப்பானது கைப்பேசி. காதலும் தற்சமயம் துண்டிக்கப்பட்ட நிலைக்கு அருகில் இருக்கிறது. என்ன செய்ய இனிமேல் தான் அவளை தீவிரமாக காதலிக்க மனம் இறைஞ்சியது. ஆனந்தியிடம் நிறைய பேச வேண்டும். அதை மட்டும் தீர்மானித்தேன். முதல்முறையாக கோவிலுக்குள் சென்று, பிரார்த்தனைகள் செய்தேன். ஆனந்தியின் பாப்பாவுக்கு நோய்மை சரியாகி விட ஆனந்தியை அளவுக்கதிகமாக நேசிப்பது தற்சமயம் கடவுளுக்கு தெரியும்.

ஆறு தினங்களுக்கு மேலிருக்கும் ஆனந்தியிடமிருந்த எந்த தகவலும் இல்லை. அழைத்துப் பேச எனக்கும் ஏதோவொரு தயக்கம். தனக்கு சொந்தமில்லாத ஒன்றை அபகரிக்கும் மனநிலை எனச் சொன்னாலும் சரியென்பேன். ஆனந்தியை விடமுடியாமல் தவிக்கிற நிலை, தூண்டில் புழுவுக்கும் நேரிடக் கூடாது. காதலின் அவஸ்தை அது. திருமணமான பெண், குழந்தை பெற்ற அம்மா. எப்படி காதல்? குழப்பம் முழுதும் சூழ்கின்ற போது பூமிக்கு வெளியே வாழத் தோன்றும். கிட்டத் தட்ட மரணிக்க தோனுகிற நிலைக்கு முன்நகர்வு இது. ஆனந்தியே பேசினாள் தான் இதற்கான தீர்வு. ஆனால், இத்தனை குழப்பமும் ஆனந்தி சம்மதமென்றால் நிலைபெரும். தவிர்த்தால் நிலைக்கொள்ளாது. ஆனந்தியின் அவஸ்தைதான் ஆகச் சிறந்த காதல் எனக்கு. அலைபேசியில் அழைப்பு மணி ஓசை கேட்கிறது. நிச்சயமாக ஆனந்தியே என நினைத்தேன். அது ஆனந்தியே தான்.
' ஹலோ ...எப்படி இருக்கீங்க '

'நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க.'

'உன் ஞாபகமா ....ஐ லவ் யூ ஆனந்தி  '

'அதையே எத்தன முறை சொல்லுவீங்க .உங்கள பத்தி சொல்லுங்க ...'

'நீ என்ன காதலிக்குறியா சொல்லு. இதென்ன கேள்வி, பிடிக்காம எந்த பொண்ணும் மறுபடியும் ஒருத்தன் கிட்ட பேச மாட்டா. உன்ன பிடிக்கும் பட் நிரந்திரம் இல்ல.'

'ஆனந்தி .... உன்னோட சம்மதம் தான் எனக்கு உயிர் இருக்குன்னு உணர வைக்குது. வாழ்க்கையே நிரந்தரம் இல்ல. எனக்கு நல்லா தெரியும் கல்யாணமாகி, குழந்தை இருக்குற ஒருத்திக்கிட்ட காதலிக்குறேன்னு சொன்னது தப்புன்னு. நான் மறுபடியும் சொல்றேன், இங்க எல்லோருக்கும் ஒரு நியாயம் இருக்கு. நமக்கு இது நியாயமா இருக்கு. அடுத்தவங்களுக்கு இது கேவலாமா இருக்கலாம். பட் லைப்ல இத கேர் பண்ணாம கடந்து போகனும். நீயும் நானும் நேசிக்குறத மத்தவங்களுக்கு சொல்ல அவசியம் இல்ல. பட் நமக்குள்ள நாம எப்படி புரிஞ்சிக்குறோம் அது தான் முக்கியம்..'

'எல்லாம் யோசிச்சேன். ஒரு பெண்ணா நான் சொல்றத மத்தவங்க கேட்டா திட்டுவாங்க. ஆனா, அவங்க என்னோட வாழ்க்கைய ஒருநாள் வாழ்ந்தா தெரியும்.'நான் காதலிக்குறேன்னு' நீங்க சொன்னதுக்கு மறுப்பு சொல்லாத காரணம். என்னோட வாழ்க்கையில் அன்புக்காக ஏங்குற கஷ்டத்த நிறைய அனுபவிச்சிட்டேன். உங்க கிட்ட அத எதிர்ப்பாக்குறேன். இதுல தப்பு எதுவும் எனக்கு தோணல. வியாதி இருக்குறவனுக்கு தான் மருந்து தேவை .நான் உன்ன மருந்தா பாக்குறேன்.'

'ஆனந்தி ....பேச முடியாம இருக்கேன் இப்போ. எப்பவுமே உன்னோடு இருப்பேன்'

'வேணா ...காதலிச்சா போதும். அன்பு தந்தா போதும். வேற எதுவும் வேணா. உனக்கு ஒரு வாழ்க்க இருக்கு அதுக்குள்ள நான் வர மாட்டேன். நான் உன்னோட வாழ்க்க இல்ல.புரிஞ்சா காதலிச்சுக்கோ. புரியாம போன வேணா.'

'ஆனந்தி நீ தான் வாழ்க்க. எனக்குனு வாழ்க்கை இல்ல. உன்ன எப்பவுமே காதலிப்பேன் .சாகுர வரை. '

'நானும் தான் ..... ஐ லவ் யூ டா '

 மலர்கள் மலர்ந்து சிரிக்கின்ற நொடிகளுக்குள் தொலைந்துப் போனது எனது நாட்கள். தினமும் ஆனந்தி ஒரு முறையாவது என்னோடு பேசிவிடுவாள். நானும் அவள் அழைப்புக்காக காத்திருப்பேன் .
ஆனந்திக்கு என்மீது அவ்வளவு பிரியம். வெளிப்படையாக சொல்லமாட்டாள் கொஞ்சுவாள், அன்பை  கொஞ்சம் ,கொஞ்சமாக அமுது படைப்பாள். அதிக அக்கறை இருக்கும். சாப்பிடச் சொல்லும் போதே ஊட்டி விட்டு கடந்திருப்பாள் எனக்குள் ஆனந்திக்கு நிறைய குழப்பங்களும் அவ்வப்போது  வரும். சின்ன சின்ன கோபமும் வரும். காதல் ஒரு மாயக் கண்ணாடி. எனக்கு மட்டும் எப்போதும் ஆனந்தியின் முகத்தையே பிரதிபலிக்கும். நடமாடுகிற இடங்களில் சில மாதங்கள் கடந்தும், ஆனந்தியை நேரில் சந்திக்கவில்லை. ஏனோ இருவரும் கைபேசியில் பேசுவதோடு சரி. என்றாவது  அவளை சந்திக்க வேண்டும். மடியில் சாய்ந்து உறங்க வேண்டும் என அவளிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். அதை அவள் மறுப்பதாக சம்மதிப்பாள்.
எங்களுக்குள் ஒரு புரிதல் ஆழமாய் வேஷரூன்றி இருந்ததை உணர்ந்த நாளில் .ஆனந்தி அழைத்தாள்.
'என்னடா பண்ற ...'

'உன்ன பத்தி யோசிச்சேன்.'

'என்ன யோசிச்ச லூசு..'

'இல்ல உனக்கு முத்தம் தந்தா திட்டுவியானு யோசிச்சேன்.'

'டாய் ...நீ யோசிக்க வேணா .எனக்கு வேலை இருக்கு .'

'சரி முத்தம் ஒன்னு தா ....'

'சும்மா இரு டா .....'

'ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ.........'

'லூசு ..நீ ஏன்டா முத்தம் தந்த .நான் கேட்டனா .எரும .ஆள பாரு .முத்தம் தர ஆசைய பாரு '

'ஏய் ..என்னடி முத்தம் தந்தா வாங்கிக்கிட்ட. தரமாட்டேன்னு சொன்னவ வாங்க கூடாது.'

'சரி டா ..ஒருநாள் வாங்கினத திருப்பி தரேன் போதுமா.'

'அப்போ இருடி .இன்னும் பத்து பதினைஞ்சி தரேன் .திருப்பி தரும் போது நிறைய கிடைக்கும்'

'ஆள பாரு ....ரொம்ப தான் '

கிட்டதட்ட நாட்கள் உருண்டோடிய வழிகளைப் பற்றி, யோசிக்கவே இல்லை. ஆனந்தியை இறுக்கபற்றி வளர்ந்த காதலுக்கு, ஆயுள் குறைவு.
ஏனென்றே தெரியவில்லை ஆனந்தி அழைத்து பேசுவதை நிறுத்திக் கொண்டாள். நான் அவளுக்காக தினமும் எதிர்ப்பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஏமாற்றம் மிஞ்சியது. எப்போதும் ஒரே மாதிரி வானம் இருப்பதில்லை. ஒரே மாதிரி வாழ்க்கையும் இருப்பதில்லை. நிறைய குழப்பங்களுடன் பேசியவள். அவ்வப்போது இந்த உறவு முற்றுப்புள்ளியை நோக்கி நகர்கிறதென சொன்னதில்லை. அவள் கொஞ்ச கொஞ்சமாக நிராகரிக்க தொடங்கினாள். வேண்டாமென சொல்ல ஆயிரம் காரணங்கள் முளைக்கும். அச்சமயம் வேண்டுமென சொல்ல, ஒற்றைக் காரணத்தையும் கண்டறியாமல் மறுக்கின்றாள். அவள் பேசாத நாளின் மௌனத்தை கூர் ஆயுதமாக்கி என்னை நானே கொலைச் செய்துக் கொள்ளலாம். அவ்வளவு மௌனம். பேரன்பை தந்தவள் பெரும் துயரத்தையும் தர மறக்கவில்லை.

 ஆனந்தியிடம் பேசிய பிறகு வாழ்வின் அழகை உணர்ந்தவன் நான். அவளுடன் வாழ முடியாது.  அவளுக்கருகில் வாழ முடியாது. அவள் வாழும் வாழ்வில் கனவென வாழ முடிவெடுத்த என்னை, நிராகரிக்க அப்படி என்ன காரணமிருக்கும். உண்மையில ஆனந்தி வருந்துவாளென எனக்கு தெரியும். அதிக அன்பை தந்தவளுக்கு தெரியாதா? பசியெடுத்த எனதன்பின் பிணியை பற்றி. யாருமில்லாத தனிமையில் அவள் குரல் கேட்கின்றதெனக்கு. ஆனந்திக்கு தெரியாது. நான் ஒரு ஆனந்தி பைத்தியமென. காலம் விஷமாக மாறுகிற தருணத்தில், பாலும் அருந்துவதற்கில்லை. ஆனந்தியிடம் குறுஞ்செய்திகளை அனுப்பினேன்.எல்லாம் வேண்டாமெனும் பதிலையே பெற்று திரும்பி வந்தது. துயர்மிகு நாளின் வண்ணம் அடர் கருப்பு.
ஆனந்திக்கு புரிந்தும் பிரிய நினைக்கையில், நான் என்ன சொல்ல. இங்கே யாருக்கும் வாழ்க்கை நிரந்தரமல்ல. மழை வந்த நாளில் வந்தவள், மழை போல் அழ செய்வாளென தெரியாது எனக்கு. கடைசியாய் ஒரு முறை அவளிடம் பேசிவிட நினைத்தது, ஒரு வலி நிவாரணியை தருவதை போல் தான் மனதுக்கு.ஆசை முகம் .அன்பு குரல் .ஒரு முறை பேசி பார்க்க வேண்டும்.  ஆனந்திக்கு ஆயிரம் காரணங்கள்  இருக்கிறது எனை வேண்டாமென நிராகரிக்க. எனக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே கையிருப்பு, அவளை காதலிக்க. அது அவளின் பரிபூரண அன்பு, கலப்பில்லாத, உன்னதமான, முழுமையான அன்பை எனக்கே தந்தது தான். இன்னமும் நம்பச் சொல்கிறது. அவள் என்னை விட்டு விலகாமல் இருக்கின்றாள் எனும் நுண்ணிய நம்பிக்கையை. அச்சிறு நம்பிக்கையை பற்றியபடி, அவளுக்கு 
அழைப்பு விடுத்தேன். எடுத்தாள்.
'தயவுசெஞ்சி பேசுறத மட்டும் ஒருமுற கேளு 'என்று சொல்லி முடிப்பதற்குள் துண்டித்து விட்டாள்.

ஆனந்தியிடம் பேச நினைத்த வார்த்தைகளெல்லாம் மனதினுள் ஒரு மலையென கனக்கிறது. நத்தைக் கூட்டிற்குள் அத்துனைச் சொற்களையும் தினித்து அவளின் வாசல் நோக்கி நகர்த்திவிட்டேன். பொல்லாதக் காலமெனக்கு, அந்த நத்தையும் பாரம் தாளாது என்னோடு நிற்கிறது பயணிக்கும் திறனற்று. இனி ஒரு மழை வேண்டும். ஆனந்தியை  அழைத்து வர.
அவள் மடியில் நான் அழுதுவிட.


Views: 1360