தொன்மங்கள்

எழுத்தாளர் : துவாரகன்மின்னஞ்சல் முகவரி: Thuvvva@gmail.comBanner

அகநானூறு வழியாக தமிழர்களின் வாழ்க்கைமுறையை அறியப்போகின்ற போது வேம்பாற்றூர் கண்ணன்கூத்தனின் பாடல் ஒன்று கருத்தைக்கவர்கிறது. அப்பாடலில் காதலில் திளைத்து தன்னை மறந்திருக்கிற தன் தோழியின் முருகவழிபாட்டை பற்றி அவள் கூறுவதாக குறிக்கப்படுகிறது. 


'முருகயர்ந்து வந்த முதுவாய் வேல 
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்  
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு  
சிறுமறி கொன்றிவ ணறுநுத னீவி
வணங்கினை கொடுத்தி யாயினணங்கிய  
விண்டோய் மாமலைச் சிலம்பன்  
ஒண்டா ரகலமு முண்ணுமோ பலியே'

பாடல் தருகின்ற பொருள் இது தான். ஒரு ஆட்டுக்குட்டியை பலிகொடுத்து அதன் குருதியை சோற்றுடன் பிசைந்துவிட்டு முருகனுக்குப்படைக்கிறாய். ஒரு துளி குருதியை காதலியின் வனப்பான நெற்றியில் தடவுகிறாய். வேலனே அறிவானவனே. காதல் நோய்க்கு முருகனைக்கொண்டு மருந்து செய்ய நீ கொடுக்கிற பலிகளில் குறையில்லை. ஆனால் அவைகளை குறிஞ்சித்தலைவனின் மாலையணிந்த மார்பு கூட ஏற்காதே.

ஆடுகளை முருகன் என்கிற முன்னவர் நினைவுகளுக்காக பலிகொடுத்து தொழுபவனே வேலன் ஆகிறான். அவனின் வெறியாட்டு சடங்கு தொடர்பான முருகயர்தல் என்ற சொல்லால் இலக்கியங்களில் சுட்டப்படுகிற பகுதியும் சுவாரசியமானது. வெறிபாடிய காமக்கண்ணியரின் பாடல்கள் பின்வரும் செய்திகளை தருகின்றன.  பெண்ணொருத்தி காதலிப்பதை அறியாத அவளின் தாய் குறிக்காரியிடம் அழைத்துச்செல்லுகிறாள். குறிக்காரி பெண்ணின் தலையில் பிரம்பை வைத்துப்பார்த்து விட்டு முருகனை ஆற்றுப்படுத்தினால் நோய் தீரும் என்கிறாள். மகளின் முன்னைய பொலிவை வேண்டி விழா நடத்தப்படும். விழாவில் இசைவாத்தியங்கள் இசைக்கப்பட வேலன் என்கிற பூசாரி  முருகன் பெயரைச்சொல்லி உரக்கப்பாடல்கள் பாடுவான். ஆடொன்றை பலியிட்டு திறையோடு கலந்து வீடெங்கும் தூவுவான். அப்பெண்ணை தன் விருப்பத்துக்கு ஆடவைப்பான். 

அது மட்டுமல்லாது முருகனுக்கும் பிற தெய்வங்களுக்கும் ஆட்டை பலியட்டதாய் சொல்லுகின்ற பாடல்கள் பெருஞ்சாத்தனாரினுடையது. இலக்கியங்களின் வழியே பலிகொடுக்கிற சடங்குகள் பற்றி பல குறிப்புக்கள் கிடக்கின்றன.

01. பேஎ விழவினுள்'' (பரிபாடல் 5)

வெறியாடும் பொழுது ஆட்டுக் குட்டியைப் பலியிடுவர். அதன் குருதியினைத் தினையரிசியோடு சேர்த்துத் தூவுவர். ஆட்டின் கழுத்தை அறுப்பதோடு தினைப் பிரப்பை வைத்து வழிபடுவர்.

02.''மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப் பிரீஇ''
(குறுந்தொகை 265)

03.''சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து''

04.''குருதியோடுவரைஇய தூவெள் அரிசி''

05.''குருதிச் செந்தினை பரப்பி' (திருமுருகாற்றுப்படையின் வரிகள்)

மலையில் விளைகின்ற உருவத்தில் சிறிய தினை அரிசியுடன் மலையில் மலரும் காட்டு மலர்களைப் பறித்து விரவிச் சுளகில் பரப்புவார்கள். வரையாட்டை அறுத்து அதன் ஊனைத் தேக்கிலையில் வைப்பார்கள். இரண்டையும் தெய்வத்திற்குப் படைப்பார்கள். மலையில் விளைந்த தூய வெண்ணெல் அரிசியை வரையாட்டுக் குருதியில் விரவி, தேக்கிலையில் இட்டுப் படைப்பார்கள். செந்தினை அரிசியை வரையாட்டுக் குருதியுடன் கலந்து சுளகில் இட்டுப் பரப்பிப் படைப்பார்கள்.

பலவாகிய வேறுபட்ட நிறமுடைய சோற்றையுடைய பலியுடன் ஆட்டுக்குட்டியைக் கொன்று, நோய்கொண்ட பெண்ணின் நறுநுதலை நீவி முருகனை வேண்டிப் பலியாகக் கொடுப்பர் (குறுந்தொகை 362)

06.
''படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேள் பேணத் தணிகுவள் இவள்என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடி பலி கொடுத்து
உருவச் செந்தினை குருதியோடு தூஉய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்''
(அகநானூறு  22;5).

முருகவேளைப் போற்றி வணங்கிட, இவள் வாட்டம் தணியப் பெறுவாள் என்று முடிவு செய்தனர். அனுபவம் மிக்க மகளிர் அவ்விடத்தில் ஒன்று கூடி வெறியாடு களத்தை உண்டு பண்ணினர். மலர்க் கண்ணி சூட்டி அலங்காரம் செய்தனர். மலை முழுவதும் எதிரொலிக்குமாறு முருகனைப் போற்றிப் பாடினர். வரையாட்டைப் பலி கொடுத்தனர். நன்கு முற்றிய செந்தினை அரிசியோடு வரையாட்டுக் குருதியைக் கலந்து பலி தூவி முருகப் பெருமானிடத்து ஆற்றுப்படுத்தினர். சங்க காலத்தில் முருகப் பெருமானுக்கு உயிர்ப்பலி கொடுத்தனர்.

குளி்ர் மிகுந்த மலைப் பகுதிகளில் மக்கள் தங்களின் உடல் வெப்பம் குறையாமல் சமநிலையில் வைத்துக் கொள்ளவும், குளிரிலிருந்து காத்துக் கொள்ளவும், கடுமையான தொழில்களைச் செய்வதற்கு ஏற்ற உடல் வலிமை பெறவும் புலால் உணவு அருந்தினர். தாங்கள் உண்ணும் புலால் உணவையே தாங்கள் வழிபடுகின்ற கடவுளர்க்கும் படைத்து வழிபட்டனர். படைத்தவற்றை உணவாக ஏற்றுக் கொண்டனர்.

07.''கனங்கெழு கடவுட்கு உயிர்ப்பலி தூஉய்ப்
பரவினம் வருகஞ் சென்மோ''
(நற்றிணை, 358)

08.''ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையின் ஒன்றோடு புணர்ந்து
தொல்லியிர் வழங்கிய அவிப்பலி யானும்''

தான் கலந்து கொள்ளும் போரில் தன் பக்கம் வெற்றி பெற விழைந்த வீரன் ஒருவன் தீயை வளர்த்தான். தனது பக்க வெற்றிக்காக அத்தீயில் தன்னையே அவிப்பலியாக்கிக் கொண்டு விழுந்து உயிர் நீத்தான். 

உயிர்ப்பலி கொடுத்துத் தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது

09. ''கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி. 
முருகு என வேலன் தஷரூஉம்
பவருமாகப் பயந்தன்றால் நமக்கே''(அகம் 232)

10. ''மெய்ம்மலி உவகையன் அந்நிலைகண்டு
முருகு என உணர்ந்து முகமன் கூறி
உருவச் செந்தினை நீரோடு தூவி தூஉய்''(அகம் 272)

11. ''உருகெழு சிறப்பின் முருகுமனைத் தழீஇக்
கடம்பும் கணனும் பாடி நுடங்குடி'' (அகம் 138)
 
வேலன் வெறியாட்டு என்ற முறையில் பண்டைத் தமிழ் மக்கள் முருகனை அதிகமாக  வழிபட்டு இடையிறாத தெய்வ விழாக்களும் நிகழ்த்தி ஆடிப்பாடியும் பலிகொடுத்தும் இரவில் வழிபாடு நிகழ்த்தினர் 

12.''தோப்பிக் கள்ளுடன் துஷரூஉப்பலி கொடுக்கும்''( அகம் 35).

அரிசியிலிருந்து வடித்து எடுக்கப்பட்ட ஒருவகைக் கள்ளைத் தாங்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்குப் படைத்தனர். கூடவே, மலை ஆட்டையும் பலி கொடுத்து வழிபட்டனர்.

13. ''நனைமுதிர் நறவின் வாட்பலி கொடுக்கும்''(அகம்  13)
கடும் புளிப்பு நிறைந்த கள்ளைப் படைத்து வழிபட்டனர்.

14. ''கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி''(அகம் 156)
கடவுளுக்குக் கையுறையாக மலர்க் கண்ணியுடன் கள் படைக்கப்பட்டது.

15.''பலிபெறும் வியன்களம் மலிய ஏற்றி''
(பெரும்பாணாற்றுப்படை)
குளத்திலே உறைகின்ற தெய்வங்களுக்கு மிகுந்த பலி இட்டு வழிபட்டனர்.

16. ''உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்''
(அகம் 166)
சிறந்த பலியைப்பெறுகின்ற வலிமை மிக்க தெய்வம்
போர் முனைக்குச் செல்லுவதற்கு முன்னால் போர் வீரர் அனைவரும் படைஞர் திடலில் அணிவகுத்து நிற்பார்கள். போரில் தங்களுக்கு வெற்றியை நல்க வேண்டும் என்று வேண்டி, கொற்றவைக்குப் பலி இட்டு வழிபடுவதை களப்பலி  என்றனர்.


தமிழர்களின் வாழ்வியலில் மிருகங்களை  பலிகொடுக்கிற சடங்குகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் அவைகள் இன்றும் செய்யப்படுகின்ற வழிபாட்டிடங்கள் தொன்மையின் ஒரு எச்சமாக கருதப்படவேண்டுமென்பதே மேற்படி இலக்கியத்தரவுகளை திரட்டித்தருவதற்கு காரணமாக இருந்தது. ஆயிரமாண்டு அந்நியர்கள் ஆட்சிகளின் கீழ் இழந்துவந்திருக்கிற எங்களின் தொன்மங்கள் மேலும்மேலும் ஒவ்வொன்றாக இழக்கப்படுவதென்பது கவலைக்குரியது.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்று காளத்திநாதருக்குப் புலால் படைத்து பணிந்த திண்ணனாரின் பக்தி  தன்னிடத்தில் இல்லையே என்று அவரைப்புகழ்ந்து அவரின் நெறியை வியந்துநிற்கிற மாணிக்கவாசகனாரின் வழிநின்று பிறரின் பக்திநெறிகளையும் மதிக்கத்தெரிகின்ற சகிப்புத்தன்மை அனைவருக்கும் கிடைப்பதாக.

Views: 766