பல் இளிக்கும் ஊடக அறம்

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

சனநாயகத்தின் நான்காவது தூணாகச் சொல்லப்படுபவை ஊடகங்கள். அவற்றுக்கென்று ஒரு அறம் உண்டு. குரலில்லாத மக்களுக்கான குரல்கள் அவை. எதேச்சாதிகாரத்துடன் நடந்துகொள்வோரைத் தைரியமாக விரல்  நீட்டிக் கேள்வி கேட்கும் அதிகாரம் படைத்தவை ஊடகங்கள் தான். ஆனால் இன்று சனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகங்கள் எத்தனை கீழே சென்று நாலாம் தரமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன என்பதை அதே ஊடகங்களின் வழியே நாம் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம். 

தமிழகத்தின் புகழ்பெற்ற பத்திரிகைகளுள் ஒன்று ஆனந்த விகடன். கடந்த ஒக்டோபர்  பத்தாம் திகதி, அந்தப் பத்திரிகையின் இணையத்தளத்தில் "தமிழர்களின் மூத்த தெய்வம்... வளத்தின் மூல வடிவம்... மூதேவி!" என்ற தலைப்பில் இரா. செல்வகுமார் என்பவரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதிர்ச்சியூட்டும் விதமாக, அது நமது உவங்கள்  இணைய இதழின் முதலாவது வெளியீட்டில் வி.துலாஞ்சனனால் எழுதப்பட்ட "தமிழரும் தவ்வை வழிபாடும்" எனும் ஆக்கத்தின் வரிக்கு வரி மாற்றியமைக்கப்பட்ட ஒரு ஆக்கமாக இருப்பதைக் கண்டோம்.  ஒரு பிரபலமிக்க ஒரு பத்திரிகை இவ்வாறு இன்னொரு ஆக்கமொன்றின் திருத்தி(டி)ய வடிவத்தை, குறித்த ஆசிரியரின் அனுமதியின்றி எடுத்தாளுவது  கீழ்த்தரமான செயல்.  இதைச் சுட்டிக்காட்டி, இத்தவறுக்காக எங்கள் வன்மையான கண்டனங்களையும் தெரிவித்து, விகடனுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம்.  இன்று வரை அதற்கு எந்தப் பதிலும் கிடைத்ததாக இல்லை. விகடன் வலைத்தளத்தில் வெளியான அந்தக் கட்டுரையும் நீக்கப்படவில்லை.

உவங்கள் எழுத்தாளர்களின் அனுமதியின்றி அவர்களது ஆக்கத்தை திருடி வெளியிட்ட சம்பவம் ஒன்றும் புதிது அல்ல. இதே உவங்களில் வெளியான  துவாரகன் எழுதிய  "மெல்லத் தமிழ் இனி" எனும் கட்டுரை, இணைய செய்தி ஊடகமான தமிழ்வின்னில் அப்படியே பிரதி எடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இப்போது நிலைமை தமிழகம் வரை -  விகடன் வரை சென்றிருக்கிறது. வித்தியாசம் அவ்வளவு தான். 

உவங்கள் பலத்த விமர்சனங்களை சந்தித்து வரும் இலக்கிய இதழ். உவங்களின்  இணைய இடைமுகம் வரவேற்கும்படி இல்லை என்பதும், "பயில்நிலை இதழ்" என்பதும் உவங்களுக்கு கிடைத்துவருகின்ற முக்கியமான விமர்சனங்கள். கலை, பண்பாடு, இலக்கியம் சார்ந்து இயங்கும் சிற்றிதழ்கள், அதிலும் ஈழம் சார்ந்த சிற்றிதழ்கள் – இணைய இதழ்கள் உட்பட -  மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே பொதுப்பார்வைக்கு வைக்கப்படுகின்றன.  மிகக்குறைந்த வளங்களுடன் ஒரு இலக்கிய இதழ் - அதுவும் இணைய இதழ் இந்த மட்டத்தில் இயங்குவதே  ஒரு பெரிய விடயம் என்பது சிற்றிதழ் உலகில் அறிமுகம் உள்ள எவருக்கும் சொல்லிப் புரியவைக்க வேண்டிய ஒன்றல்ல. ஆனால்,  புகழ்பெற்ற ஊடகங்களே திருடும் அளவுக்கு தரமான ஆக்கங்கள் உவங்களில் வெளியாகின்றன என்பது நாங்கள் யார் என்பதை எங்களுக்கே ஒருதடவை நினைவூட்டியிருக்கின்றது. புலமைத்திருட்டால் உண்டான அறச்சீற்றத்தை மீறி ஒரு கணம் பெருமிதத்தை ஏற்படுத்துகின்றது. விமர்சகர்கள் முன்னிலையில், அந்த பெருமிதம் ஏற்படுத்தும் கர்வத்துடனேயே கொஞ்சம் இறுமாப்புப் புன்னகை புரிகின்றோம்.

பலமணி நேரத்தை செலவழித்து  ஒருவன் மிகுந்த சிரமங்களின் மத்தியில் உருவாக்குகின்ற ஒரு படைப்பு அவனுக்கு மட்டுமே உரியது என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே “புலமைச்சொத்து” (Intellectual Property) என்ற எண்ணக்கரு உருவானது. அதை அவன் அனுமதியின்றி எடுத்தாள்வது தவறு, தண்டனைக்குரிய குற்றம். 
துரதிர்ஷ்டவசமாக, புலமைச்சொத்து பற்றியோ புலமைச்சொத்து திருட்டு (Piracy) பற்றியோ நம்மவருக்கு போதுமான அறிமுகம் இல்லை. இணையம் உருவாக்குகின்ற கட்டில்லாத வெளி, இன்னொருவரின் அறிவார்ந்த சொத்தை எந்தத் தயக்கமும் இன்றி களவாடுகின்ற செயலுக்கு என்றென்றும் உடந்தையாக இருக்கிறது. அறிவுஜீவிகளின் உலகம் இச்செயலைக் கடுமையாகக் கண்டிக்கவேண்டும். புலமைத் திருட்டுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 

விகடனின் செயலுக்கு இங்கு மீண்டுமொரு தடவை பலத்த கண்டனங்களைத் பதிவு செய்து கொள்கின்ற நாம், அதன் கள்ள மௌனம் ஊடக அறத்துக்கு விடப்பட்ட சவால் என்பதை மிகுந்த வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

உவங்கள் ஆசிரியர் குழு.
பொய்யர் தம் மெய்யும் அஞ்சோம்.

பின்னிணைப்புகள்:
Views: 708