கொம்புமுறி : அருகிவரும் கலையாடலை ஆவணப்படுத்தல்

எழுத்தாளர் : வி.துலாஞ்சனன்மின்னஞ்சல் முகவரி: vthulans@thambiluvil.infoBanner

கொம்புமுறி : அருகிவரும் கலையாடலை ஆவணப்படுத்தல்

 

கொம்புமுறி., கண்ணகி வழிபாட்டுடன் நேரடித் தொடர்புடைய நிகழ்த்துகலை. இலங்கைத்தீவுக்கே சிறப்பான கலையாடல்களில் ஒன்றான இது, இன்றும் சிங்களவராலும் ஈழத்தமிழராலும், குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழராலும் சிறப்பாக விளையாடப்பட்டு வருகின்றது. பெரிதாக ஆய்வுலகில் கவனிக்கப்படாத இந்தக் கலையாடல் பற்றி பொதுவெளியில் உரையாடலொன்றை ஏற்படுத்தவேண்டிய அவசியம் கருதி, இவ்வாய்வுக்கட்டுரை வெளியாகின்றது.

 

(படம் [கடிகாரத் திசையில்]: கொம்புமுறியை விவரிக்கும் ஓவியம், மட்டு. பேருந்து தரிப்பு | கொம்புகளைத் தயார் செய்தல், முனைக்காடு | கொம்புமுறி, பாணமை | வடசேரி கோவலர் கோயில், தம்பிலுவில் | செவ்வாய்க்குற்றி | பாகங்கள் குறிக்கப்பட்ட வகைமாதிரி கொம்புமுறித் தொகுதி.)

 

இலங்கையில் கொம்புமுறிக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதற்கான சான்று, ரொபர்ட் நொக்சால் 1680இல் எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலிலுள்ள அங்கெலிய பற்றிய குறிப்பாகும். (1) சிங்களத்தில் கொம்பு விளையாட்டுக்கு ‘அங்கெலிய’ என்று பெயர். சிங்களவரின் நம்பிக்கைப்படி, பத்தினியும் பாலங்கனும் (கோவலன்) இரு மரக்கிளைகளைப் பறித்து ஒரு செண்பகமலரைப் பறிக்க முயன்றபோது, இரண்டும் ஒன்றோடொன்று கொழுவிக்கொண்டன. இருவரும் அதை விளையாட்டாக மாற்றியபோது, பாலங்கனின் கையிலிருந்த மரக்கொம்பு முறிந்தது. பத்தினி மகிழ்ச்சியில் குதித்தாள். அதனால் கொம்புமுறி பத்தினியின் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் முக்கியமான கலையாடல்களில் ஒன்றாகியது. கிழக்குத் தமிழரின் நம்பிக்கைப்படி, இடையர் சேரியில் தங்கியிருந்த போது, ஆயர்கள் இரு சேரிகளாக கொம்புமுறித்து விளையாடியதைப் பார்த்து கண்ணகி மகிழ்ந்தாள். எனவே கொம்புமுறிப்பது அவளை மகிழ்விக்கும். (2)

 

தமிழ்க் கொம்புமுறிக்கும், சிங்கள அங்கெலியவுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், அவை தமக்கென்று தனித்துவங்களையும் கொண்டிருக்கின்றன. எனினும் இரு தரப்பினராலுமே பொதுவாக இரண்டு நோக்கங்களுக்காகவே கொம்பு விளையாட்டு ஆடப்படுகின்றது. ஒன்று, மழை பொய்க்கும் போது. அடுத்தது, “அம்மன் கோதாரி” எனப்படுகின்ற அம்மை, கண்ணோய், வைசூரி, போன்ற கொள்ளை நோய்கள் பரவும் போது.

 

கொம்புமுறியானது வெளிப்படையாகவே சாதியம் சார்ந்தது. சாதியம் என்று இங்கு சொல்லப்படுவது சாதிகளுக்கு இடையேயான முனைப்புவாதம் அல்ல; சாதிய அக முனைப்புவாதமே! புரியும்படி சொன்னால், கிழக்கிலங்கைச் சாதிகளுக்குள் “குடி” எனும் உட்பிரிவுகள் உள்ளன. (இந்த உட்பிரிவுகளைத் தமிழகத்தில் “கோத்திரங்கள்” என்று அழைப்பார்கள்.) ஒரு கிராமத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு சாதிகளுக்கும் தத்தமக்கென்று தனித்துவமான குடிகள் உண்டு. இந்தக் குடிகளை “வாரக்கட்டு” என்ற பெயரில், வடசேரி, தென்சேரி என்று இரு குழுக்களாகப் பிரித்திருப்பார்கள். இப்படி ஊரிலுள்ள எல்லாச்சாதிகளையும் வடசேரி, தென்சேரி என்று பிரித்து இருகுழுக்களாக நின்று ஆடப்படும் விளையாட்டு தான் கொம்புமுறி.

 

இந்த இடத்தில் வாரக்கட்டு, குடி என்பன பற்றி நாம் சிறு தெளிவைப் பெற்றுக்கொள்வது அவசியம். மட்டக்களப்புச் சமூகம் தாய்வழிச் சமூகம் என்பதால், தாய் என்ன குடியோ, அவள் பிள்ளைகளும் அதே குடி என்பதே மரபு. ஆனால், கொம்புமுறியில் மாத்திரம் தந்தையின் குடி பார்க்கப்படுகின்றது. அதாவது அன்றாட வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தாயின் குடியையே கருத்தில் கொள்ளும் பிள்ளைகள், கொம்புமுறியில் மாத்திரம் தந்தையின் குடியை தங்கள் குடியென வரிந்துகொள்வார்கள். தாய்வழிக் “குடி”யிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க, இதை “வாரக்கட்டு” என்பார்கள். இன்ன இன்ன வாரக்கட்டுகள் வடசேரி, இன்ன இன்ன வாரக்கட்டுகள் தென்சேரி என்ற மரபு காலாகாலமாக வழக்கில் உள்ளது. அவ்வவ் ஊரிலுள்ள சாதிகள், அவற்றின் குடிகள் என்பவற்றைப் பொறுத்து இது ஊருக்கு ஊர் வேறுபடலாம்.

 

பெண்வழிக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கிழக்கிலங்கையில், வாரக்கட்டு பிற்காலத்திலேயே தோன்றியிருக்கவேண்டும் என்ற கருத்து சில ஆய்வாளர்களிடம் உண்டு. ஓரிரு ஊர்களில் கொம்புமுறியிலும் கூட தாய்வழிக் குடியையே பயன்படுத்துகிறார்கள் என்பதை இதற்கான ஆதாரமாகச் சொல்வார்கள். இன்னொரு ஊகத்தையும் முன்வைக்கலாம். கொம்புமுறி, ஆண்கள் பங்குபற்றும் ஒரு விழா. பெண்கள் அதில் பார்வையாளர்கள் மட்டுமே. ஆண்கள் மட்டுமே பங்குபற்றுவது என்பதால், தந்தை பங்குபற்றும் போது மகனும் அவரைச் சார்ந்து நிற்பது அவசியமாக இருந்திருக்கிறது. இத்தகைய இக்கட்டான நிலைமையில், தந்தைவழி வாரக்கட்டு பார்க்கும் முறை தோன்றியிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. (3)

 

கொம்புமுறிக்கு ஊருக்கு ஊர் வேறுபடும் சில தனித்துவமான மரபுகள் உண்டு. திருக்கோணமலை பள்ளிக்குடியிருப்பு, மட்டக்களப்பு ஈரழக்குளம் முதலான இடங்களில் இது வருடாந்தம் நிகழாமல், நான்காண்டுகளுக்கு – ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படுகிறது. சில ஊர்களில் மழை பொய்க்கும் போது மாத்திரம் ஆடப்பட்டிருக்கிறது. வருடாந்தம் நிகழ்ந்த ஊர்களில் கூட, ஆடி, ஆவணி மாதங்களில், விவசாயத்துக்கு மழை தேவைப்படும் காலங்களிலேயே கொம்புமுறிக்கப்படும். முற்காலங்களில் இருபத்தொரு நாட்கள் இடம்பெற்று வந்த கொம்புமுறி, இன்று நடைமுறைச்சாத்தியம் கருதி நாட்கள் குறைக்கப்பட்டு ஆடப்படுகின்றது. கொம்புமுறியில் கண்ணகிக்கே முக்கியத்துவம் என்பதால், அத்தெய்வத்தின் ஆலயத்தை அண்டிய திறந்தவெளிகளிலேயே இது பெரும்பாலும் ஆடப்படும். இந்த இடங்கள் பிற்காலத்தில் “கொம்புச்சந்தி” என்று அறியப்படலாயின. கண்ணகிக்குக் கோயில் இல்லாதபோதும், கொம்புச்சந்தியைக் கொண்டுள்ள -  கொம்புமுறி நிகழ்த்திய ஊர்கள் உண்டு. களுதாவளை, மண்டூர், தேற்றாத்தீவு போன்றவை அத்தகையவை. (4)

 

கொம்பு விளையாட்டின் இரு சேரிகளில் தென்சேரி கண்ணகிக்கும். வடசேரி சாமிக்கும் (அல்லது கோவலருக்கும்) உரியது என்று மரபாகச் சொல்லப்பட்டு வருகிறது. சில ஊர்களில் கோயில் அமைப்பும் அவ்வாறே அமைந்திருக்கும். கண்ணகி ஆலயங்களின் வடபுறமாக கொம்புச்சந்திகளும், கொம்புச்சந்திகளுக்கும் வடபுறமாக கோவலர் ஆலயங்களும் அமைக்கப்படுவதன் மூலம், இந்த வடக்கு, தெற்கு என்ற பிரிப்பு புவியியல் ரீதியாகவும் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. கொம்புமுறி நலிவடைந்திருந்த கடந்த நாற்பதாண்டுகளில் பெரும்பாலான சாமி ஆலயங்கள், பிள்ளையார் ஆலயங்களாக மாறி குடமுழுக்கும் கண்டுவிட்டன. கிழக்கிலங்கையில் அருகருகே கண்ணகிக்கும் பிள்ளையாருக்கும் ஆலயங்கள் அமைந்திருந்தால், அங்கு முன்பு எப்போதோ கொம்புமுறி இடம்பெற்றிருக்கிறது என்று அர்த்தம்.  

 

கொம்புமுறி பற்றி பார்ப்பதற்கு முன், அவ்விளையாட்டிற்கென்றே பிரத்தியேகமான சில கலைச்சொல்களை அறிந்துகொள்வது அவசியமாகின்றது. கொம்புமுறியில் பிரதானமானவை மூன்று பாகங்கள். அவை, கொம்புகள், செவ்வாய்க்குற்றி மற்றும் தாய்மரம்.

 

கொம்புகள் என்பவை பூமராங் வடிவை ஒத்து, “ட” வடிவில் வளைந்த மரப்பாகங்கள்.  தென்சேரிக்கொம்பு செங்கோணமாகவும், வடசேரிக்கொம்பு விரிகோணமாகவும் அமையுமாறு வெட்டி எடுக்கப்படும். இந்த இருசேரியினதும் கொம்புகளை பல்வேறு துணை அமைப்புகளுடன் கொழுவி இழுத்து ஒருகொம்பை உடைப்பது தான் கொம்புமுறி விளையாட்டு.  புளி (Tamarindus indica), விளினை (Vitis labrusca), விடத்தல் (Mimosa cinerea) போன்ற தாவரங்கள் கொம்பைப் பெற சிறப்பானவை என்று சுட்டிக்காட்டப்பட்டாலும், குறிப்பாக “கரையாக்கன்” மரத்திலிருந்து கொம்புகளைப் பெறுவதே வழமை. (5) இந்தக் கரையாக்கன் வேறெதுவுமில்லை. சங்க இலக்கியங்களில் வெட்சி என்றும் தாவரவியலாளர்களால் Ixora coccinea என்றும் கூறப்படும் நம்மவரின் “எக்சோரா” தாவரம் தான் அது.

 

செவ்வாய்க்குற்றி என்பது வடசேரியின் கொம்புகளுக்கு பக்கபலமாக நாட்டப்படும் அமைப்பாகும். வெட்டப்பட்ட பனைமரமொன்றை செவ்வாய்க்குற்றியாகப் பயன்படுத்துவர். இதன் ஒருபுறம் கொம்பு கட்டப்பட, மறுபுறம் வடத்தைக் கட்டி இழுக்கும்போதே கொம்பு முறிகின்றது. சில ஊர்களில் ஒரே செவ்வாய்க்குற்றியே நிரந்தரமாகப் பயன்படும். செவ்வாய்க்குற்றியையே பயன்படுத்தாமல் கொம்புமுறித்த களுதாவளை, மண்டூர் போன்ற ஊர்களும் உண்டு. வடசேரிக்கு செவ்வாய்க்குற்றி போல, தென்சேரிக்கொம்புக்கு பக்கபலமாக அமைவது தாய்மரம். கொம்புச்சந்தியிலுள்ள பொருத்தமான மரமொன்றை தாய்மரமாகப் பயன்படுத்துவார்கள். தம்பிலுவில் போன்ற சில ஊர்களில் தாய்மரம் பயன்படுத்தப்படுவதில்லை.

 

இது தவிர, பில்லித்தடிகள், அடை, மரவளையம், வடந்தாங்கி, நெஞ்சடிப்பலகை முதலான பல பாகங்கள் கொம்புமுறியில் பயன்படும். இவற்றை உரியமுறையில் இணைத்து “அரிப்பு” எனப்படும் கயிற்றால் இறுக்கி வரிந்து கட்டுவார்கள்.  மேற்சொன்ன பாகங்கள் ஒவ்வொன்றினதும் குறித்த நிலை, குறித்த சேரியினருக்கு சாதகமாக அமைவதுண்டு. அது வேண்டுமென்றே அமைக்கப்படுகின்றது என்று யாரேனும் குறை கூறுவதிலேயே கொம்புமுறிக் களேபரங்கள் ஆரம்பிப்பது வழமை.  

 

கொம்புமுறிக்கான கட்டமைப்பை தாய்மரத்துக்கும் செவ்வாய்க்குற்றிக்கும் இடையே கட்டி, கொம்புகளை ஒன்றோடொன்று கொழுவி, வடத்தைப் பிடித்து இரு சேரியாரும் இழுக்கும் போது ஒரு கட்டத்தில் இரண்டில் ஒரு கொம்பு முறிகின்றது. முறியாத கொம்பு வென்ற கொம்பாகக் கொள்ளப்படும். அச்சேரியார் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். கொம்புமுறியில் ஊருக்கு ஊர் மரபுகள் வேறுபடலாம் என்பதையும், கொம்புமுறிக்கும் விதத்திலும் வேறுபாடுகள் இருக்கலாம் என்பதையும், வாசகர் மனதில் கொள்ளவேண்டும் என்பதை கட்டுரையாளன் மீண்டுமொரு முறை நினைவூட்ட விரும்புகிறான்.  

 

கொம்புமுறியானது போர்த்தேங்காய் உடைப்பதுடனேயே பெரும்பாலும் ஆரம்பமாகின்றது. ஒரு சேரியார் உருட்டிவிடும் தேங்காயை எதிரே அமர்ந்திருக்கும் மறுசேரியார் இன்னொரு தேங்காயால் உடைப்பர். உடையாத தேங்காய்களை வைத்து, வெற்றி தோல்வி கணிக்கப்படும். போர்த்தேங்காய் உடைத்த பின்னரே கொம்புமுறி ஆரம்பமாகும். கொம்புத்தட்டுக் கொம்பு, கூடாரக் கொம்பு, ஏடகக் கொம்பு, தாயக்கொம்பு , தண்ணீர்க் கொம்பு என்று பல கொம்புமுறிப்புக்கள் இடம்பெறும். அளவு, பருமன், பெயர் என்பன ஊருக்கு ஊர், கொம்புக்குக் கொம்பு வேறுபடும். இக்கொம்புகளில், பொதுவாக, ஏடகக் கொம்பு முறிக்கப்படுவதே கடினமானதாகவும், விளையாட்டின் உச்சக்கட்ட நாட்களில் நிகழ்வதாகவும் இருக்கும். (6)

 

ஏடகக்கொம்புகள், ஏனைய கொம்புகளை விட அளவில் பருமனானவை. இவை ஏடகங்களிலேயே (தேர்) கொணரப்படுவதால், இவற்றுக்கு ஏடகக்கொம்பு என்று பெயர். இதற்கென இருசேரியாரும் தத்தம் ஏடகங்களை ஏட்டிக்குப் போட்டியாக அலங்காரஞ்செய்வர். அலங்கார நாட்களில், ஒரு சேரியார், அடுத்த சேரி ஏடகத்தைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. கொம்பு முறிக்க அவை எழுந்தருளும் நாளில், எந்த ஏடகம் அதிக அழகாக உள்ளது என்பது பற்றி வாதப் பிரதிவாதங்களும் நிகழ்வதுண்டு. வடசேரி ஏடகம், தென்சேரி ஏடகத்திலும் சற்று உயரமாகச் செய்யப்படுதல் வழக்கம். இவை முதல் நாள் ஊர்வலம் சென்று வந்து அடுத்த நாளே முறிக்கப்படும். முறிக்கப்படாமல் வென்ற கொம்பு, தனது ஏடகத்தில், அன்றிரவும், மீண்டும் ஊர்வலஞ் செல்லும். தோற்ற சேரியினர் தமது எதிர்ப்பைக் காட்டுமாப் போல், வாசலில் நிறைகுடம் வைத்து வரவேற்கமாட்டார்கள். அத்தகையவர்களின் வீடுகளைத் தேடிப்பிடித்து, வென்ற சேரியார் வேண்டுமென்றே வசைப்பாடல்கள் பாடி ஆடி மகிழ்வர். ஏடகக்கொம்பு முறித்தல் முடிந்தவுடன் ஊர் வழமைக்குத் திரும்பும். கண்ணகி அம்மன் குளிர்த்தி எனும் பாடலைப் பாடி, கொம்புகளும் கண்ணகியும் குளிர்விக்கப்படுவதுடன், கொம்பு விளையாட்டு இனிதே நிறைவுறும்.

 

விளையாட்டின் உச்சக்கட்டமான ஏடகக்கொம்பு முறிக்கும் நாட்களில் “தங்குகொம்பு” ஏற்படலாம். இரு சேரியினதும் வலிமை சமமாக இருந்து அன்றைய தினம் கொம்பு முறிக்கப்படாத சந்தர்ப்பத்தில், கொம்புகள், கொம்புச் சந்தியிலேயே தங்கும். இவ்வாறு தங்குவதால், இவற்றுக்கு “தங்குகொம்புகள்” என்றே பெயர். இவ்விரு கொம்புகளுடனும் பட்டாண்டிமாரும் தங்கியிருப்பர். பட்டாண்டி என்றால் கொம்புக்குப் பொறுப்பானவர். இரு சேரிக்கும் இரு பட்டாண்டிகள் இருப்பர். இதற்கென பலசாலிகளே தெரிவு செய்யப்படுவதும், அவர்கள் கடுமையான விரத நியமங்களைக் கடைப்பிடிப்பதும் வழக்கமாகும்.  தங்குகொம்பு என்றால், அன்றைக்கு அவர்கள் பால்பழங்கள் மட்டுமே உண்டு பழிகிடக்கவேண்டும் என்பது மரபாக இருந்து வந்திருக்கிறது.

 

இனி, கொம்புமுறியில் தங்கள் சேரியே வெல்லவேண்டும் என்று இருசேரியாரும் பல்வேறு யுக்திகளைக் கையாளுவர். மட்டக்களப்பு என்றால் மந்திரம் இல்லாமலா?  கொம்பை முறிக்க விடாமல், மாறிமாறி இடம்பெற்ற மாந்திரீகப் போட்டிகள் இன்றும் பேசப்படுகின்றன. தங்கள் கொம்பு முறியக்கூடாது என்பதற்காக நெல்லின் மீது கொம்பை வைத்து உரிய மந்திரங்களால் “உருவேற்றுவார்களாம்.” பலர் கூடி வட்டமாக அமர்ந்து செய்யும் உச்சாடனத்தின் உக்கிரத்தில் கொம்பு தானே எழுந்து குதிக்கத் தொடங்கும் என்றும், அது குதிக்கும் விசையில் நெல் அரிசியாக மாறிய பின்பே கொம்புச்சந்திக்கு எடுத்துச் செல்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியும் எதிர்த்தரப்பு மந்திரவாதி, உரிய மந்திரத்தால் வெட்டி, அதை உடனே முறியச்செய்வாராம். கொம்பை “எழுப்பி” கொம்புச்சந்திக்கு தானாகவே தத்திச் செல்லும்படி அனுப்பிய ஒரு மந்திரவாதி பற்றி கொக்கட்டிச்சோலையில் பேசப்படுகிறது. (2) சில குறித்த மந்திரவாதிகள் கொம்புச்சந்திக்கு வந்தால், நின்று பார்க்கத் தேவையில்லை, அவரது சேரியே வெல்லும் என்று பேசிப் பெருமூச்சு விட்டபடி எதிர்த்தரப்பு சேரி மக்கள் கலைந்து திரும்பிவிடுவார்களாம்.

 

கொம்புமுறி ஆதிமனிதனால் செய்யப்பட்ட வளச்சடங்கொன்றின் நிலைத்து நிற்கும் வடிவம் என்று மானுடவியலாளர்கள் கூறுகின்றனர். கொம்புமுறியில் பயன்படும் அமைப்புகள், மரபுகள், சொல்லாடல்கள் என்பவற்றை வைத்து அவர்கள் தம் வாதத்துக்கு வலுவூட்டுகின்றனர்.  தாய்த்தெய்வ வழிபாடொன்றின் அங்கமாக இருந்த கொம்புமுறி விளையாட்டு, கண்ணகி வழிபாட்டின் அறிமுகத்துடன், அதனுடன் இரண்டறக் கலந்திருக்கவேண்டும். சில சிங்களக் கிராமங்களில் கோவலன் “அளுத் தெவியோ” (புதுத் தெய்வம்) என்று அழைக்கப்படுகின்றான் என்பதை நாம் இங்கு ஒப்புநோக்கலாம்.

 

ஆதிமாந்தனின் மனம், பூமியைத் தாயாகவும், வானை தந்தையாகவும் கருதியது. மழை கலவியில் உதிர்க்கப்படும் தந்தையின் வீரியம் என்றும், பயிர்கள் குழந்தைகள் என்றும் அது உருவகித்துக்கொண்டது. இதே பொருளில் பிருத்வி (பூமி) தாய் என்றும், தியாயுஸ் (வான்) தந்தை என்றும் உருவகித்துப் பாடப்பட்டுள்ள ஆதிக்கவிதைகளை, இருக்கு வேதத்திலேயே காணலாம். மனிதன் பின்னாளில் பிள்ளைப்பேற்றுக்காகவும் பயிர்ச்செழிப்புக்காகவும், இந்த உருவகத்தை வளச்சடங்காக வளர்த்துக் கொண்டிருக்கிறான் என்பது கொம்புமுறியைப் பார்க்கும் போது புரியும். (2)

 

 

மண்ணைத் துளைத்து நாட்டப்படும் செவ்வாய்க்குற்றி, ஆண்குறியைக் குறிக்கும்.  செவ்வாயில் குற்றுதல் எனும் அதன் பெயரே வெளிப்படையாகக் கலவியைச் சொல்வது தான். அது கோவலருக்குரிய (ஆண்) வடசேரிப் பக்கமாக நாட்டப்படுகிறது. பாணமை போன்ற கிராமங்களில், மின்னல் தாக்கிய பனைமரத்தையே செவ்வாய்க்குற்றியாகப் பயன்படுத்துகின்றனர். அது வான் – தந்தை; மழை – கலவி என்ற ஆதிமனித உருவகத்தை நினைவூட்டுகின்றது.  (7), (8) தாய்மரம், கண்ணகியின் – தாயின் பக்கமாக நடப்படும். கொம்புகள் இணைத்துக் கட்டப்படும் போது, அவை தாய் - தந்தையரின் இணைவைக் குறிக்கின்றன. வான் – பூமி பெற்றோரிடையேயான பிரிவால் பயிர்வளம் குறைந்தது. கொழுவிய கொம்புகள் முறிவது அவர்கள் இணைந்துவிட்டார்கள் என்பதன் குறியீடு. எனவே மழை பொழியும். மண் செழிக்கும்.

 

கொம்புமுறித்தல் மிகப்பழைமையான வளச்சடங்கு என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உண்டு. சிங்களவர்கள் வடசேரியையும் தென்சேரியையும் உடபில (மேல் பக்கம்)- யடபில (கீழ் பக்கம்) என்று குறிப்பிடுவது ஆண் – பெண்ணின் கலவி நிலைகளைக் குறிப்பதாகலாம். கொம்பு முறித்தலில் சில இடங்களில் “மேலிருந்து கீழ்”, “கீழிருந்து மேல்” முதலான அமைவுகள் முக்கியத்துவப்படுவதும், கொம்புமுறிக்கின்ற அசைவு புணர்தல் அசைவை ஒத்திருப்பதையும், சில இடங்களில் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இன்னொரு குறிப்பிடத்தக்க சான்று, கெட்டவார்த்தைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கொண்ட வசைப்பாடல்கள் பாடுவதும்,  பிறந்தமேனி நடனங்களும் கூட கொம்புமுறியில் குறிப்பிடத்தக்க இடம் வகித்திருக்கின்றமை. கேரளத்தின் பழைமைவாய்ந்த கண்ணகி கோயில்களில் ஒன்றான கொடுங்கல்லூர் பகவதி கோயில் திருவிழாவில் ஒருநாள் பச்சை பச்சையாகக் கலவியைப் பாடியபடி ஆலயத்தை வலம் வருகின்ற “காவு தீண்டல்” எனும் சடங்கு நிகழ்வதை இங்கு நாம் ஒப்புநோக்கலாம். (9)

 

பாணமைக் கொம்புமுறியில் ஆடவர் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துவதும், பிறந்தமேனியராக ஆடுவதும் கொம்புமுறிக் காலத்தில் வழக்கில் இருந்தது. (10) தம்பிலுவில் கோயிலில் மூடிய ஆலயத்துக்குள் இந்த நிர்வாண நடனம் நடந்திருக்கிறது. கந்தளாய் குளக்கட்டுப் பத்தினி கோயிலிலும் பூசகர் மழைவேண்டி ஆடையின்றிப் பூசைபுரியும் வழக்கம் இருந்திருக்கிறது. இவையெல்லாம் கொம்புமுறி ஒரு வளச்சடங்கு என்பதற்கு மாத்திரமன்றி, தாந்திரீக வழிபாட்டின் எஞ்சியிருக்கும் ஆதித்தடங்களாக கிழக்கில் காணக்கிடைக்கும் சான்றுகள். சில ஊர்களின் கொம்புமுறியில் பெண்களின் பிரசன்னம் தடை செய்யப்பட்டதற்கு இவையெல்லாம் காரணமாக இருந்திருக்கக்கூடும்.

 

இதற்கு மாறாக, கொம்புமுறியின் போது பாடப்படும் சில பெண்களை விளிக்கும் வசைப்பாடல்கள் கொம்புமுறியில் முன்பு பெண்களும் பங்குபற்றியிருக்கலாம் என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகின்றது. அது வளச்சடங்கு என்பது உண்மையெனில் அதற்கான வாய்ப்புகளும் நிறையவே உண்டு. ஒரேசேரியில் இருப்பவர்கள், தம்மை “சகோதரக்குடியினர்” என்றும், எதிர்ச்சேரியில் இருப்போரை “மச்சினக்குடியினர்” என்றும் அழைக்கிறார்கள். கொம்புமுறியின் சேரிகள் ஒவ்வொன்றும் தத்தமக்குள் அகமணத்தைத் தடைசெய்திருக்கின்றன. மணம் புரியும் தம்பதிகள் எப்போதும் ஒரே சேரிவாரங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்பது இன்றும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. (11) எனவே கிழக்கிலங்கையில் கணவன் – மனைவியர் எப்போதும் வெவ்வேறு சேரிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

 

இதனால் கொம்புமுறியின் உச்சநாட்களில் குடும்பங்களுக்குள் முரண்பாடு அதிகரிப்பது வழமை. மட்டக்களப்பு தாய்வழிச்சமூகம் என்பதால் பெண்ணின் கையில் தான் வீட்டின் அதிகாரம். மனைவியின் வாரக்கட்டு தோற்றால் அன்று கணவனுக்கு உணவு கிடைக்காது. கணவன் கோபித்துக்கொண்டு தன் சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிடுவான். இப்படி வளச்சடங்கான கொம்புமுறியில் தம்பதிகள் வலிந்தே பத்தியம் காக்கச்செய்யப்படுகிறார்கள். கொம்புமுறி முடிந்ததும் பிரிந்தவர் சேர்கிறார்கள். முன்பை விட அன்னியோன்னியம் கூடுகிறது. வெளியே மழை பொழிகிறது. இல்லங்களுக்குள் குருதி முளைக்கிறது. மண்ணும் மனிதரும் செழிக்கிறார்கள்.

 

எவ்வாறெனினும் பழைய கலைகளில் இயல்பாகவே உள்ள பிற்போக்கான நடைமுறைகள் கொம்புமுறியிலும் காணப்படாமல் இல்லை. கொம்புமுறியில் சேரிப்பற்று, கைகலப்புகள் எல்லாமே இருந்தாலும் அதில் கண்ணகி வழிபாடு தொடர்புபடுத்தப்பட்டிருந்ததால் எல்லாச் சடங்குகளும் பயபக்தியுடனேயே நடாத்தப்பட்டன. கொம்புமுறிச் சடங்குகளில் வரம்புமீறப்பட்டு ஏதும் நிகழக்கூடாதது நிகழ்ந்தால் அம்மாள் சினப்பாள்.  மழை கிடைக்காது என்பதால், மக்களிடம் மெல்லிய அச்சம் இருந்தது. அந்த அச்சத்தை மனிதனின் ஆணவம் வென்ற தருணங்களில், நடக்கக்கூடாதவை பல நடக்கலாயின. சில கணவன் – மனைவியரின் ஊடல், நிரந்தரப் பிரிவாக மாறியது.  சில கைகலப்புகள் அடிதடி, வெட்டுக்குத்து அளவுக்கும் சென்றன. இத்தகைய எதிர்விளைவுகளுடன் உள்நாட்டு யுத்தமும் சேர்ந்துகொள்ள, கொம்புமுறி மெல்ல மெல்ல கைவிடப்படத்தொடங்கியது. இப்படி பல ஊர்களில் முற்றாக நிறுத்தப்பட்டிருந்த கொம்புமுறி சமீபகாலமாகத் தான் மீண்டெழ ஆரம்பித்திருக்கிறது. கடந்த கால கசப்பான நிகழ்வுகளில் நிறைந்த அனுபவம் உள்ளதால், சில மரபுகளை மாற்றியமைத்து, கட்டுக்கோப்பாக சில நியதிகளை ஏற்படுத்தி மிகுந்த சிரத்தையுடன் தற்போது கொம்புமுறிக்கிறார்கள். வந்தாறுமூலை, கொக்கட்டிச்சோலை, தம்பிலுவில், காரைதீவு, கிரான், பள்ளிக்குடியிருப்பு முதலான தமிழ்க்கிராமங்களிலும், பாணமை முதலான சிங்களக்கிராமங்களிலும் பழைய பொலிவோடு ஆடப்பட்ட கொம்புமுறிகள் கடந்த ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

 

கொம்புமுறி தன்னோடு கூடவே வசந்தன், கிராமிய இலக்கியங்கள், கைத்தொழில் என்று பல துறைகளிலும் கிழக்கிலங்கையின் கலைகளை வளர்த்திருக்கிறது. கோலாட்டத்தை ஒத்த ஆண்களின் நடனமான வசந்தனும் அது தொடர்பான பாடல்களும், கொம்புமுறியின் போதான ஊர்வலங்களில் நடந்துவந்திருக்கிறது. கொம்புமுறியை ஒட்டி, “பள்ளுக்கு வளைதல்” எனும் தனித்துவமான கலையாடல் தம்பிலுவில் போன்ற கிராமங்களில் வளர்ச்சியடைந்திருக்கிறது. தென்னோலையைக் குவித்து எரித்து “அம்மன் பள்ளு” எனும் வசந்தன் பாடலைப் பாடியபடி, அதைச் சுற்றி ஆண்கள் கைகொட்டி ஆடும் நடனம் தான் பள்ளுக்கு வளைதல். மேலும் தோற்ற சேரியாரை வென்ற சேரியார் பழிக்கும் வசைப்பாடல்கள், கிழக்கிலங்கையின் நாட்டார் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருக்கின்றன. ஏடகத்தை அலங்கரிப்பதில் தேர்ச்சி பெற்ற கலையுணர்வு கொண்ட பலர், உள்ளூர் கலைஞர்களாக வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

 

 

குடி எனும் சாதிய உட்பிரிவுகள் கொம்புமுறி இடம்பெற்ற ஊரவர்களாலேயே மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டன என்பதும், குடிவழி வரன்முறை இல்லாத கிராமங்களை விட, தங்கள் ஊர்கள் பழையவை என்று அவர்கள் உரிமைகோருவதும், மானுடவியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள். இவை குறித்த ஊர்கள் சார்ந்த வரலாற்றைக் கட்டியமைப்பதற்கு உதவக்கூடும். மேலும் குடிகளின் பெயர்கள் அவற்றின் பூர்வீகத்தை அறிந்துகொள்ளவும், சமூகவியல் ரீதியில் சாதிகளின் பரம்பல், அவற்றின் ஊடாட்டம், கட்டுடைப்பு என்பன பற்றியும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வழிசமைக்கவும் கூடும்.

 

ஊர் ஒற்றுமை, மழைவேண்டல், கண்ணகி, தமிழ்ப்பண்பாடு, சாதியம், தொன்மை, வளச்சடங்கு என்று பல முகங்களைக் கொண்ட கொம்புமுறி, மானுடவியல் மற்றும் சமூகவியலாளர்களுக்கான திறந்த ஆய்வுச்சுரங்கமாக இன்றும் விளங்கி வருகின்றது. அதில் கொள்ளக்கூடியவற்றைக் கொண்டு, தள்ளக்கூடியவற்றைத் தள்ளி, எதிர்காலச் சந்ததியருக்காக கொம்புமுறியைப் பேணிவைத்திருப்பது, நீடித்து நிலைபெறும் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்ற நவீன சமூகத்தாராகிய நாம் ஆற்றவேண்டிய முக்கிய கடமையாக இருக்கின்றது.

 

ஆர்வமுள்ளோருக்கு:

(அ) செங்கலடி ஈரழக்குளம் கொம்புமுறி 2016: https://youtu.be/wzmQxZD9LHs

(ஆ) தம்பிலுவில் கொம்புமுறி 2015 : https://youtu.be/yTM-AeKU_28?t=2m48s

(இ) வந்தாறுமூலை கொம்புமுறி 2016: https://youtu.be/MJPIWESGrWQ?t=1h19m57s

(ஈ) காரைதீவு கொம்புமுறி 2015: https://youtu.be/pIra5dh7I-c?t=12m35s

(உ) பாணமை கொம்புமுறி (படக்கட்டுரை): http://invokingthegoddess.lk/ta/horn-play-ta

(ஊ) திருமலை பள்ளிக்குடியிருப்பு கொம்புமுறி (செய்தி): http://www.battinews.com/2015/07/trincomalee.html

 

 உசாத்துணைகள்:

 

1. Hemapriya, B. H., (n.d), Ankeli Puja and the Pattini Cult, retrieved from http://www.lankalibrary.com/rit/ankeli.htm on 28th Nov 2017.

2. மகேஸ்வரலிங்கம். (2000), மட்டக்களப்பில் மறைந்துவரும் கொம்பு விளையாட்டு, நாட்டாரியல் ஆய்வு வட-கீழை மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு, பப. 94-118.

3. மகேஸ்வரலிங்கம், ., (2008), மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும், கொழும்புத் தமிழ்ச் சங்கம், பப:152 - 169.

4. கு., (1985) "செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறும் வழிபாடும்", ஆலய பரிபாலன சபை, பப:79-96.

5. நவநாயகமூர்த்தி, நா., (1998), தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, வானதி வெளியீடு.

6. கந்தையா, வீ.சி, (1964), மட்டக்களப்புத் தமிழகம், ஈழகேசரி வெளியீட்டு மன்றம், பப:181-195.

7. Hiatt, L.R, (1973), The Pattini cult in Ceylon: a Tamil perspective', Social Compass, vol. 20, no. 2, pp:231-249.

8. Yalman, Nur, (1966), Dual organization in Central Ceylon? or, the Goddess in the tree top?,B Journal of Asian studies 24, no.3:141-57.

9. சந்திரன், வி.ஆர், ஜெயமோகன், (2005), கொடுங்கோளூர் கண்ணகி, தமிழினி வெளியீடு

10. சண்முகலிங்கம், ., (2011), "பத்தினித் தெய்வமும் சுனாமியும்", ஞானம் இதழ், பப:13-17.

11. McGilvray, D.B, (2008), Crucible of conflict, Duke press, pp: 189-210. 

 

Views: 1237