பார்த்தீபா

எழுத்தாளர் : அதிசயா மின்னஞ்சல் முகவரி: athisayablog@gmail.comBanner

உன்னில் நழுவிச்செல்லும் காலங்களை பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன். நீ அறியாத என் ஓர்மங்களை எதற்காகவும் இழந்து விடக்கூடாது என்பதில் அக்கறையாய் இருந்தாலும் நுரை பட்டு கரையும் மணல் போல் என் தளங்களிலிருந்து நான் நகர்வதாய் உணர்கிறேன் பார்த்தீபா. எந்த வார்த்தையும் போதாததாய் தோன்றுமிக்கணத்தில் உன்னிரு பஞ்சுக்கைகளை எனக்குள் பத்திரப்படுத்த கேட்கிறேன். இப்போது கண்மூடிப்பார். என்னிடமிருந்து உன் கைகளை பிரித்துவிடும்  காலங்களை உணரும் முன்பே என் கேள்விகளுக்கு தீர்கமான பதிலளி. மனிதர்களின் வார்த்தைகளை காட்டிலும் இப்போது நாம் உணரும் ஸ்பரிசங்களையே அதிகம் நம்புகிறேன். நீண்ட நெடும் வழி பயணத்தில் நீ என் ராஜகுமாரனாய் இருக்கவேண்டிதில்லை. ஸ்நேகிப்பவர்களின் தர்ம சங்கடங்களை பார்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆதலால் கொண்டாட்டம் மிகுந்த உன் சாதாரணங்களையே விரும்புகிறேன் பார்த்தீபா.  இருள் பாதையின் வளைவுகளில் நம் நாசித்துவாரங்களெல்லாம் குளிர் மூடி இறுக்கும் கணத்திலும் நம்பிக்கையும் பாதுகாப்புமானது உன் தீண்டல் என உணரச்செய்.

மூண்டெழும் காமத்தில் குளிர்காய்வதற்கு முன் உன் உள்ளங்கைகள் கதகதப்பினுள் எனை நிதானிக்க வைப்பாய் பார்த்தீபா. தொடுதலும் தழுவலும் அறியுமுன்பே நீ என் வேர்களில் பூக்கத்தொடங்கியவன். அற்புதங்கள் நிகழும் கணங்களை இப்படியாய் அனுபவி. பெரும் காலத்து கனவொன்று பலிக்கும் போது என்ன செய்வாய் சொல். உனை முத்தமிட்டு நம்மை கொண்டாடிக்கொள்வேன். பார்த்தீபன் என்பது எனக்கு வெறும் பெயர் அல்ல. அதையும் தாண்டிய சந்தோஷ பாடல் .

என் தவங்களை தாண்டி வந்த வரமே இத்தனையும் உனக்காய் தான் உருவானது என்பதை அறிகையிலே  சிலிர்த்துப்போகிறேன் பார். போதையுற்ற தும்பியாய் அந்த இரவில் என் காதுகளில் நீ சொல்லி வைத்த சம்பாஷனைகளின் பொருட்டு இன்னுமதிகம் கிறங்கிப்போகிறேன். உள்ளுர ஊறி மெல்ல வரும் இக்கள்ளச்சிரிப்புடன் எனைக்கண்டால் கட்டிணயைத்து நெற்றி படர்வாய் பார்த்தீபா. இத்தனை ஆனந்தம் உண்டாக்கும் இந்த அற்புதம் நிகழத்தான் இத்தனை நாள் காத்திருந்தோமா. வெளியே பெய்யட்டும் என பார்த்து  ரசித்த  மழையின் பாதங்களை நீ  தான் பக்குவமாய் என் வீட்டினுள் கூட்டி வந்தாய். உன் பெயர் சொல்லிச்சொரிவதில் எப்போதும் சலிப்பில்லை.

 

நான் கனவுகளை அழகழகாய் வரையவும் பின்னொரு நாளில் அவற்றின்  சிதிலங்களால் துயரப்படவும் தெரிந்தவள். ஆனால் எல்லாமும் சிதிலமாய் போன பின்னும் ஒரு நிலவின் ஒளி பற்றியே என் இரவுகளை கடப்பேன் என்ற தீர்கதரிசனங்ளை எப்போதைக்கும் கொண்டவள். எல்லாக்கேள்விகளுக்கும் இடைவெளியிலும் நின் மூச்சு ஒலித்து போகட்டும். பார்த்தீபா எனக்கு எப்போதைக்கும் உன்னிடமிருக்கும் கதகதப்பை இழக்கமுடிவதில்லை ஆனாலும்  உன் உலகத்தின் அவசரங்களிலும் அதீத தெளிவுகளிலும் என் மீதான ப்ரியத்தை நீ துறக்கக்கூடும். அத்தனையும் தாண்டி  பார்த்தீபா உன்னிரு கைகள் கோர்த்து உன் நெஞ்சணைத்து  காலையில் உன் கண்பார்த்தெழும்பும் நாள் ஒன்றில் உன் கண்ணிலும் அதை ஸ்நேகத்தை காண்பேன். உன் மட்டிலான எந்தக்குழப்பங்களுக்கும் அந்தப்பார்வைகளே தெளிவு தரும். உன்னவளாய் நான் ஆகிவிட்ட  பின்னொரு நாளில் என் கூந்தல் கோதும் உன் விரல்களை மறித்து திரும்பவும் என்னிடமாய் எடுத்துக்கொள்வேன். அப்போது கண்மூட வேண்டாம் என் கண்பார்த்துக்கொள்.  என் பார்த்தீபா எத்தனை தூரம் என் கால்களோடு நடக்கும் உன் காலம்?

நின் கைகளை பற்றும் அக்கனவு நாளாக நாளாக பெரும் தீயாய் என்னில் வளர்கிறது. நம்மிடையான தூரங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்நாட்களில் உன்னையறியாமல் உன் வாசங்கள் பரவத்தொடங்குகிறது. பார்த்தீபா நின் மீதான நேசங்கள் இத்தனை பெரிதாய் வியாபிக்கையில் நீ என் அருகில் இருந்தால் நலமாயிருக்கம். ஆனாலும்  உனை தொந்தரவு செய்வதை விரும்பாத போது நீ அருகிருக்கிறாய் என்பதை கற்பனை செய்வதை விட வேறேது செய்ய முடியும். அனன்யாவின் எண்ணங்களின் தீவிரத்தையும் இருதயத்தின் ஈரங்களையும் என்றேனும் ஒருநாள் நீ அறிகையில் என்மீது பேரன்புற்று உன் வாசங்களால் எனை போர்த்தி விடுவாய். ஆனாலும் என் பந்தத்தின் தீவிரங்கள் உயிர்க்கடலின் கடைசிச்சொட்டு வரை உனை தொடரக்கேட்குமே.

பார்த்தீபா உன் வாழ்க்கையில் நானிருப்பேனா என்ற தயக்கம் எனக்குண்டு. ஆனாலும் என் வாழ்வனைத்தும் நீ  இருந்து கொள் என கேட்கிறேன். நினைத்துப்பார் நம் முதல் பேச்சின் சுவாரஸ்யங்களை நிபந்தனை அற்ற அன்பின் ஏக்கங்களை நீ அறிந்ததுண்டா? நிர்ப்பந்திக்கவும் முடியாமல் நீக்கிப்போகவும் தெரியாமல் தள்ளியிருந்து  நேசிக்கையில் உனை நெருங்கிச்செல்லும் மனதிற்கு கடிவாளமிட்டு மேவிப்படரும் ஏக்கத்துயரத்தை மறைத்து நானாகவே உன் தொடர்பை துண்டித்ததன் பின்னரான தனிமை பெருங்காட்டில் நீயற்று நான் மட்டும் தன்னந்தனியே  உலவிக் கொண்டிருப்பேன். நொடிநொடியாய் உனை பற்றிய கனவுகளை பின்னிக்கொண்டிருக்கிறேன். இத்தனை காத்திருப்பிற்கும் பின்னர் உனை கண்டடைகையில் நீ எனதானவன் என அறியக்கேட்டால் என் கனவு ஆனவனே .............

 

Views: 599