என்னைத்தேடி..

எழுத்தாளர் : கிருபாஷினி கிருஷ்ணராஜாமின்னஞ்சல் முகவரி: kiruba.krishna1814@gmail.comBanner

பெண் என்பவளின் சில நியாயமான பற்றுதல்களை நிரப்பி நெடுங்காலத்துக்கும் என்னோடு நீடிக்கும் ஒரு நித்தியக்கனாவினை நிஜத்தில் தேடிக்கொண்டிருந்தேன். எனக்கான கனவுக்குமாரனை என் நேசக்குவியலினுள் நிகழ்த்தும் காதலிலும் அதன் சின்னச்சின்ன சிலிர்ப்புக்களிலும் உணர்ந்து சந்தோஷித்துக்கொண்டிருந்தேன். நிகழ் கணங்கள் ஒவ்வொன்றிலும் அவனுடனான அதியற்புத சந்திப்புக்களையும் சம்பாஷணைகளையும் சிருஷ்டித்து சிலாகித்திருந்தேன். எங்கோவொரு பசுந்தென்றல் காட்டிலோ பாலைவன மேட்டிலோ இருங்கரங் கொண்டெனை ஏந்தி நுதலிதழ் பதித்துயிர் புதுப்பிக்கவென கம்பீரம் பொருந்திய ராச குதிரை மீது அவன் காத்துக்கொண்டிருக்கிறான். அவனே என் வாழ்வின் பரியந்தமாகவும் பூரணத்துவமாகவும் இருக்கிறான். என் அடியாழத்தில் அமிழ்ந்து கிடக்கும் மிகைத்த நேசத்தின் கொண்டாட்டத்துக்குரியவனாகிறான்.அவன் மட்டுமே என் சர்வ பலமாகவும் சமரின் அரணாகவும் இருப்பதால் தனித்த பாதைவழி அவனைத்தேடியே  தொடர்ந்து கொண்டிருந்தேன்

 

என் சாலையெங்கும் சக மனிதரெல்லாம் சாத்தான்களாகக் கண்டேன். நீண்ட கொடும் பற்களுடன் கூர் நகங்களும் வாயில் செங்குருதி கலந்த எச்சிலும் ஒழுகிக்கொண்டிருக்கும் கோரத்தோற்றம் மட்டும் தான் இல்லை. ஆனால் அவர்களது சுயத்தின் நிர்வாணம் சற்றும் எதிர்பார்த்திராத வண்ணம் கையிலும் வாயிலும் குரூரங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததுஎன் கனாவின் வழி நான் தொடர்ந்த போதும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் என் பாதை கடினமாகிக்கொண்டிருந்தது

 

எங்கோவொரு தொலைவில் காத்திருப்பான் என எனக்குள் உருவகித்துக்கொண்ட அரூபத்தேவனை தேடிச்சென்று கொண்டிருக்கும் இச்சாலையெங்கும் என் தேவதைத்தனங்கள் தின்று புசிக்கப்பட்டது. கை பொத்தி வைத்திருந்த என் கனவுக்காதலெல்லாம் பிடுங்கியெடுக்கப்பட்டு காலிடைவெளிகளுள் திணிக்கப்பட்டன. சிறுகச்சிறுக சேர்த்து வைத்த என் பெருநேசத்தின் ப்ரியமொழிகள் மொத்தமும் ஒரு பேரழுகையை சுமந்து கனத்து நிற்கிறது

 

அடுத்த நெய்தல் நிலத்தில் என் ராஜகுமாரன் நிற்கக்காணலாம். இல்லை அதற்கடுத்த களனிக்காட்டில் அவன் காத்திருக்கலாம். சகலமும் சிதைந்து தன்முன் நொறுங்கி நிற்பவளை அவன் ஏற்காது போகலாம். அவனொரு பவித்திரப்பெண்மையை எதிர்பார்த்திருக்கலாம். என் குறித்து அவனே என் மீது பழி சுமத்தலாம். நான் கடந்து வந்த சாலையின் சாபங்களை அறியாதவனாயிருக்கலாம். அவனே எனை அருவருத்து வெறுப்பவனாகவும் இருக்கலாம். அதற்கென அவனடி  தொழுது  இறைஞ்சி நிற்கப்போவதில்லைஇனியுமந்த தேவகுமாரனுக்கென என் பாதைகள் நீளப்போவதில்லை. அதன்கென நான் பாதை திரும்புவதாயும் இல்லை

 

களைத்திருக்கும் என் ஆன்மாவுக்கு உள்ளங்கை இறுகப்பொத்தி சர்வ பலமேற்றிக்கொள்வேன். சபிக்கப்பட்டுத் தொடரும் இச்சாலையெங்கும் புதுப்பித்தல் பற்றிய பிராண உத்திகளை வாசகங்களாக்கி வைப்பேன். அவனுக்கான என் பயணத்தின் கோரக்கற்பித்தல்களை நெடிதுயர்ந்து நிற்கும் விருட்சங்கள் தோறும் குறிப்பெழுதி வைப்பேன். இனியொரு துன்பியல் பொழுதை நான் உணர வாய்த்திடாத சிகரத்திற்கு எனை நானே அழைத்துப்போவேன்வலுவேற்றிய வலிகளுடன் இன்னும் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன்

 

என் கனவு ஒரு தோற்றப்பிழையாக இருக்கலாம். என் கற்பனைகள் கோழைத்தனமாக இருக்கலாம். இது எனக்கான கனவாகவே இல்லாதிருக்கலாம். ஆனாலும் என் சுயத்தை எனக்கே உணர்த்திடும் ஒரு சுந்தரக் கனவொன்று நிஜத்திலெங்கோ இன்னும் நிலைத்திருக்கிறது... 

அதனால் தான்  இன்னும் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன் எனக்கென என்னைத்தேடி... 


Views: 733