அசுவத்தாமன்

எழுத்தாளர் : ஷாருஜன்மின்னஞ்சல் முகவரி: nesharujan@gmail.comBanner

இராஜ்ஜிய பொறுப்பு பரீட்ஷித்திடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து பாண்டவர்களின் பாரம் குறைந்தது போலிருந்தது. இருந்தும் யுதிஷ்டிரன் பரீட்ஷித்திற்கு அரச பரிபாலனத்தை பற்றி விளக்கிய வண்ணம் இருந்தான். பீஷ்மரின் ஆத்மா அரண்மணையில் வாசம் செய்வதாகவேஅர்ஜுனன் எண்ணிக்கொண்டிருந்தான். பீஷ்மரின் அரவணைப்பும் கண்டிப்பும் அரண்மணை சுவர்களில் அப்பிப்போய் கிடந்தன. பீமனின் பசி அடங்கியிருந்தது. நகுல சகாதேவர்கள் மற்ற மூவரிடமும் இருந்து சற்றுவிலகியே இருந்தனர். 


கோட்டான்கள் கத்தல் அதிகரித்திருப்பதாகவும் மாலை அஸ்தமனம் அஸ்தினாபுரத்தை நேரத்துடனே ஆக்கிரமித்துக்கொள்வதாகவும் நகரவாசிகள் பேசிக்கொண்டனர். இரண்டு போகங்களிற்கான மழை பொய்த்துப்போயிருந்தது. வறுமையின் நிழல் அஸ்தினாபுரத்தில் மெதுவாகபரவத் தொடங்கியது. நகரின் அசாதாரணத்தன்மையை பாண்டவர்கள் உணர்ந்து வந்தனர். மற்றவர்களை விடவும் அர்ஜுனன் இதுபற்றி அதிகசிரத்தை கொண்டான். தன் வீரம் சக்கரம் உடைந்த தேர் போல் பயனற்றுப்போய்விட்டதோ என்று எண்ணி கவலைகொள்வான். கண்ணனின் மறைவினாலும் கண்ணனுக்காக யாதவ குலத்தை காக்க சென்று அங்கு தோல்வியடைந்து திரும்பிதாலும் அவன் மனம் மேலும் வேதனையடைதிருந்தது.


யுதிஷ்டிரனுடன் ஆலோசித்து மந்திராலோசனை நடத்த தீர்மானித்தான். தற்சமயம் தான் பரீட்ஷித் பதவியேற்று இருந்ததால் இது பற்றி கதைத்து அவனை அச்சமூட்ட விரும்பாததால் அவனின்றியே யுதிஷ்டிரன் தலைமையில் இரகசியமாக சபை கூட்டப்பட்டது. அஸ்தினாபுர ஞானசபையின் மூத்த அதிகாரிகளும் பிரதம மந்திரியும் மற்றும் ஒற்றர் படைதலைவன் மித்யுபாலனும் அழைக்கப்பட்டிருந்தனர். சபையில் சிலர் பாரதப்போரில் பலர் கொல்லப்பட்டதால் அவர்களின் ஆவிகள் நிம்மதியற்று அலைவதால் தான் இப்படியான விபரீதங்கள் நடப்பதாகவும், மாபெரும் சாந்திபூஜை ஒன்றை செய்தால் நகரம் அமைதியடைந்து விடுமெனவும் கூறினர். வைதிகர்களோ நகரை சுற்றியுள்ள கோயில்களை புனருத்தனம் செய்து பூஜை புனஷ்காரங்களை மேலும் ஒழுங்குபடுத்த வேண்டுமென்றனர். பல யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் எதுவுமே யுதிஷ்டிரனுக்கு திருப்தியளிக்கவில்லை. அப்பொழுதுதான் மித்யுபாலன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தான். 'ஈசனின் துணையுடன் நம் மன்னர் இந் நகரை காப்பார். விரைவில் மன்னரின் முடிவு அறிவிக்கப்படும். இத்தோடுசபை கலையட்டும்' என்று கூறியவாறு மித்யுபாலனை மட்டும் சைகையால் நிற்கச்சொன்னான் தர்மன். அர்ஜுனனுடன் மூவர் மட்டும் சபையில்தனித்திருந்தனர். மித்யுபாலனை அருகில் அழைத்து 'உன் ஒற்றர்கள் என்ன சொல்கிறார்கள், நிஷாத மற்றும் மத்ரா இராஜ்ஜியங்களிற்கு அனுப்பப்பட்ட ஒற்றர்களிடமிருந்து ஏதாவது தகவல் வந்ததா?'  என்று ஆர்வத்துடன் வினவினான் தர்மன்.தலைகுனிந்திருந்த மித்யுபாலன் மெதுவாக தருமரை ஏறிட்டு நோக்கி 'இல்லை பிரபு,முக்கியமான எந்த தகவல்களும் இல்லை. ஆனால் துவாரகையின் வடக்கு எல்லைக்கு அனுப்பப்பட்ட ஒற்றனிடமிருந்து ஒரு தகவல் வந்தது. அதை எவ்வாறு எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை' என்றான். அர்ஜுனன் 'என்னஅது, கூறு.' என்றான். 'கிருஷ்ண பரமாத்மாவின் சமாதியில் ஒவ்வொரு அமாவாசை இரவிலும் ஒருவன் வந்தமர்ந்து ஜெபம் செய்வதாகவும், காலையில்அவ்விடத்தில் மண்டையோடுகள் காணப்படுவதாகவும் வனவாசிகள் கூறக்கேட்டு எனக்கு தகவல் அனுப்பினான் பிரபு' என்றான் மித்யுபாலன். 'அவன் பார்ப்பதற்கு எப்படியிருந்தான் என்று அவர்கள்சொன்னார்களா?'. 'அருகில் செல்ல அச்சப்பட்டார்களாம். ஆனால் அவன் உடல் சிதிலமடைந்து இருந்ததோடு இடையில் தோல் மட்டுமே அணிந்திருந்தானாம். அத்துடன் சிலர் அவன் நெற்றியில் ஒரு வடு இருந்ததாகவும் சில நேரங்களில் அது சிறு மின்னல் கீற்று போல வெட்டுவதை கண்டிருப்பதாகவும் நம் ஒற்றனிடம் கூறினார்கள். யாராவது மந்திரவாதியாகவோ அல்லது காளாமுகனாகவோ இருக்கலாம் பிரபு' என்றான் மித்யுபாலன் சாதாரணமாக. 'இல்லை மூடனே'என்று இரைந்தான் அர்ஜுனன். யுதிஷ்டிரனின் காதருகே வந்து'அசுவத்தாமன்' என மெதுவாக ஆனால் தீர்க்கமாக கூறினான். விளக்கு வெளிச்சத்தில் அர்ஜுனனின் கண்கள் சிவந்திருப்பதை கண்டான் யுதிஷ்டிரன்.  

Views: 662