ஈழத்தின் நம்பிக்கை

எழுத்தாளர் : நிழலிமின்னஞ்சல் முகவரி: nizhali09@gmail.comBanner

யுத்தம் நிறைவடைந்த பின் ஈழத்தில் பல்வேறுவகையான அபிவிருத்தி நடவெடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அந்த வகையில் ஈழத்தில் சினிமா சார் செயற்பாடுகளும் வளர்ச்சியடைந்தே காணப்படுகிறது. குறுந்திரைப்படங்கள், ஆவணப்படங்கள், முழுநீளத்திரைப்படங்கள், தொலைக்காட்சிச் தொடர்கள் என பலவேறு தொடர் செயற்பாடுகள் சினிமாசார்ந்து ஆரம்பமாகியுள்ளன. இந்த வரிசையில் ஈழத்தில் முதல் நெடுந்தொடராக ஐடீஊ தமிழ் தயாரிப்பில் மர்மக்குழல் நெடுந்தொடர் வெளிவருகிறது. ஈழத்தின் சினிமா சார் செயற்பாடுகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த நெடுந்தொடர் தற்போது 75 பகுதிகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஈழ சினிமாவை பொருத்தமட்டில் முற்றுமுழுதான ஈழத்துக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ஈழத்து வாழ்வியலை ஈழத்து மொழிநடையில் முதல் முதலாக வெளிக் கொணரும் படைப்பாக இப்படைப்பு காணப்படுகிறது. இத் தொடரின் தனித்துவத்தை மர்மக்குழலின் தொடக்கப் பாடலும் அதற்கான நடன ஒழுங்கமைப்பும்; வெளிப்படுத்தி நிற்கிறது. 

இலக்கியத்தின் வெளியானது அதனை ரசிக்கும் அல்லது ஏற்றுக்கொள்ளும் தரப்பினருக்கானது. ஆனால் சினிமா என்பது அவ்வாறு அல்ல அதுவும் நெடுந்தொடர் என்பது சினிமாவை விடவும் மிகவும் வித்தியாசமானது. பார்வையாளனின் வீட்டுக்குச் சென்று அவனை திருப்பதிப்படுத்தும் சிக்கலான பொறிமுறையைக் கொண்டது. அந்த சிக்கலான பொறிமுறையினை மிகவும் சிறப்பாக எதிர் கொண்டு ஈழத்தின் தனி அடையாளமாக தலைநிமிர்ந்து நிற்கிறது மர்மக்குழல். இது மாறுபட்ட தன்மை கொண்ட பல கதைகளைக் கொண்டு நகர்கிறது. அவை அனைத்தும் ஈழத்தின் கதைகள், ஈழத்து வாழ்வியல். படைப்பாளி என்பவன் காலத்தின்; தேவை அறிந்து அதற்கு ஏற்ப தன் படைப்புகளை சிருஸ்டிப்பவன் என்பர். இக்கருத்தில் இருந்து சற்றும் மாறாது காணப்படுகிறார் மர்மக்குழலின் இயக்குனர் அபயன் கணேஸ். இந்த கதைகள் ஒவ்வொன்றும் கற்பனைக்கு அப்பாற்பட்டதும் அல்ல விதண்டாவாதமாக உட்புகுத்தப்பட்டவையும் அல்ல. கணவன் காணாமல் ஆக்கப்பட்ட மாலதி குடும்பம், மகளை பிரிந்து வாழ்வை தொலைத்த வெற்றி, 90 ஆம் ஆண்டுகால யுத்தத்தால்  பாதிக்கப்பட்ட மகாலிங்கம், நாகரீக மோகத்தால் வாழ்வின் அழகியலை உணர மறுக்கும் டென்சி, ஈழசினிமாவை நேசிக்கும் இளைஞர்கள், தமிழினியை தேடியலையும் மாறன் என சமூகத்தின் அனைத்து பக்கங்களையும் அங்கிருக்கும் பிரச்சனைகளையும் நேர்மையான முறையிலும் நடுநிலமையாகவும் வெளிப்படுத்தி நிற்கும் இயக்குனரின் திறமை பாராட்டுகுரியதே. தனித்துவிடப்பட்டு வேலைக்கு போகும் பெண் எதிர் நோக்கும் பாலியல் சுரண்;டல், தன் மருமகளின் வாழ்வை வளப்படுத்த நினைக்கும் மாமியார், தன்னுடைய பிரச்சனை விட்டு வெற்றி உதவும் மாறன், மாறனுக்கு உதவி செய்ய நினைக்கும் மித்திரன் மற்றும் திலீபன் என சமூகத்தின் அனைத்து நிதர்சன முகங்களையும் இயக்குனர் சுட்டிக் காட்டத்தவறவில்லை. 

பொதுவாக தரமான படைப்புகள் என்றாலே நாம் ஞாபகப்படுத்தின் கொள்வது இந்தியப் படைப்புகளே அது இலக்கியமாகட்டும் சரி, சினிமாவாகட்டும் சரி அப்படைப்புகளையே சுட்டிக் காட்டுகிறோம். ஆனால் உண்மையில் அவை எமது உணர்வுகளையும் எமது பிரச்சனையினையும் எந்தளவிற்கு பேசுகின்றது என தெரியாத போதும் நாம் அதனையே கொண்டாடுகிறோம். அதன் விளைவு என்ன? எமது தனித்துவங்கள் என்ன என்பதை மறந்து, எமது கலைகலாச்சாரங்களை விட்டு இந்தியச்சாயலில் எம்மை வெளிப்படுத்துகிறோம். அதனால் தான் என்னவோ ஈழத்தில் இருந்து வெளிவந்த அனேக படைப்புகள் இந்தியச்சாயலில் இருப்பதை காணமுடிகிறது. ஆனால் இவ்விடத்தில் இருந்து முற்று முழுதாக மாறுபட்டு வெளிவந்திருக்கிறது மர்மக்குழல். இது கவனிப்புரியதே. 

வெறும் பத்து பேர் கொண்ட இளைஞர் அணி தான் மர்மக்குழலின் அங்கங்கள் என கூறினால் நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இந்த பத்துப்பேரின் அயராத உழைப்பு மர்மக்குழலின் இயக்கம், கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, ஒலிச்சேர்க்கையாகவிருக்கிறது. கலையினையும் ஈழத்தையும் ஆழமாக நேசிக்கும் இவர்களின் உணர்வு இப்படைப்பின் ஊடாக வெளிவருவதை உங்கள் ஒவ்வொருவராலும் அவதானிக்க முடியும். ஐம்பத்தைந்திற்கு மேற்பட்ட நடிகர் நடிகைகள் இந்தொடரில் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தொழில்முறைக் கலைஞர்கள் அல்லர். இருப்பினும் நடிப்பினை தொழில் முறையாக கொண்ட கலைஞர்களுக்கு இணையாக நடிப்பினை வெளிப்படுதுகின்றனர். அதுமட்டுமன்றி பல கலைஞர்களின் நடிப்பு பயணம் இந்த தொடரில் தான் ஆரம்பமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஈழத்தின் சினிமா படைப்புகளுக்கான விமர்சனங்கள் பொதுவாக தொழில்நுட்பரீதியாகவும், கதைரீதியாகவும், பேச்சு மொழியினை முன்வைத்தும் எழும். ஆனால் அவ்விமர்சனங்கள் அனைத்தினையும் மர்மக்குழல் குழுவினர் நிவர்த்தி செய்து முன்னேறிக் கொண்டிருப்பது அவர்களின் திறமையினை எடுத்துக்காட்டி நிக்கிறது. இவ்வாறான திறமைகளைக் கொண்ட கலைஞர் குழுவினை கண்டிறிந்து ஒன்றிணைப்பது என்பது சாதாரண விடயம் அல்ல.  அந்த பணியினை பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விடயத்தை முன்னிறுத்தி மேற்கொண்டுள்ள IBC தமிழ் ஊடகம் இந்த இடத்தில் பாராட்டுக்குரியதே. ஈழத்தில் சினிமா சார்ந்த ஒரு செயற்பாட்டிற்கு முதலீடு செய்வதற்கு பலர் யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஈழத்தின் தனித்துவங்களை அதன் அடையாளங்களை புலம் பெயர் தேசமெங்கும் கொண்டு செல்லும் நல்லெண்ணத்தில் IBC தழிழ் மேற்கொண்ட இம்முயற்சி ஏனைய சினிமா சார் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாகும். IBC தமிழின் துணிவுகரமான இந்த செயல் அதற்காக அர்பணிப்புடன் செயற்படும் மர்மக்குழல் நெடுந்தொடர் குழு -  இவையே ஈழத்தில் ஈழத்திற்கான சினிமா உருவாகுவதற்கான நம்பிகைகள். இனி ஈழத்தில் ஈழத்திற்காக சினிமா உருவாகும் அதற்காக முதலீட்டாளர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கையை தந்த மர்மக்குழல் குழுவினரையும் IBC தமிழ் ஊடகத்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
 
Views: 906