மைக்ரோ கிறுக்கல்கள் - 01

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner

வணக்கம் நண்பர்களே.......

புது வருடத்தில் ஒரு புது முயற்சி என்று இதைச் சொன்னால் அது ஒருவேளை பொருட்பிழையாகிவிடக்கூடும். ஏனென்றால் ஆனந்த விகடன் தொடக்கம் கணையாழி வரையான அல்லது கணையாழி தொடக்கம் ஆனந்த விகடன் வரையான எல்லா இதழ்களின் பக்கங்களிலும் சுஜாதா, மதன் போன்றவர்களால் அடித்து ஆடப்பட்ட, ஆடப்பட்டுக்கொண்டிருக்கின்ற எதிர்காலத்தில் இன்னமும் அதிரடியாக ஆடப்படப்போகின்ற ஒரு பகுதி இது. 'உவங்களுக்கும்' எனக்கும் வேண்டுமானால் இது ஒரு புது முயற்சி என்று சொல்லிக் கொள்ளலாம்.

வரகு, குரக்கன், சாமையிலிருந்து பீட்சா, சாண்ட்விச் என்று பாஸ்ட் பூட்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்ற அவசரமான காலமிது. ஐந்து நாட்களாய் குளிரேறிப்போய் உறைந்துபோன மாத்தோல் போர்த்திய சிக்கன்களை தக்காளி சோசிலே தொட்டு பொச்சடித்துச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்ற ஒருவரை கூப்பிட்டு, 'இந்தச் சாப்பாடு எல்லாம் உடம்புக்குக் கூடாது. கொஞ்ச நாளில உங்களுக்கு கான்சர் வந்திடும். இதுக்குப் பதிலாய் நல்லாய் வறுத்த குரக்கனில புட்டு செய்து சாப்பிடுங்கோ. அது தான் உடம்புக்கு நல்லது' என்று உபதேசம் செய்வதென்பது 'இந்த புது வருசத்தில எனக்கு நயன்தாரா மாதிரி ஒரு காதலி கிடைக்கும்' என்று நான் நம்புவதைப் போன்றது. ஒருவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, அந்த பீட்சாவையும் சாண்ட்விச்சையும் எவ்வாறு சத்துள்ள நல்ல சாப்பாடாக மாற்றலாம் என்று ஆராய்வது கொஞ்சமாவது பிரயோசனமாய் இருக்கும் என்பது என் அவிப்பிராயம். (ஆனால் எனக்கு இந்த வருடம் நிச்சயமாக நயன்தாரா கிடைப்பார்)

இந்த அவிப்பிராயங்களின் ஒரு சிறு வெளிப்பாடே இந்த 'மைக்ரோ கிறுக்கல்கள்'. ஒரு பேஸ்புக் ஸ்ரேரஸ் போல அல்லது ஒரு டுவீட் போல சில நிமிடங்களில் இதன் ஒவ்வொரு பகுதியையும் கடந்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு பகுதியைக் கடக்கும் போதும் ஒரு சிறு நெல்மணியாவது உங்களுக்குத் தட்டுப்படுகிறதென்றால் அதுவே எனது வெற்றியாகக் கருதிக் கொள்வேன். அப்படி இல்லையென்றால் கூச்சமே படாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு விடுகிறேன். மேலும் இது நல்ல பல உரையாடல்களுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமையும் அல்லது அமைய வேண்டும் என்பது என் பேரவா. இதன் தொடர்ச்சிகளும் நீட்சிகளும் உங்களைப் பொறுத்தவையே. சரி, உள்ளே நுழையலாம்.

.....................................................................................................................

விசிறி

கௌதம் மேனனால் இப்போது ஹீரோயின்கள் மட்டுமல்ல பாடலாசிரியைகளும் கூட அழகாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தைய உதாரணம், 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா' திரைப்படத்துக்காக வெளியாகியிருக்கின்ற 'விசிறி...' வீடியோ பாடல். 'ஏதோவொரு' சிவாவின் இசையில் சித். ஸ்ரீராம் மற்றும் ஷhஷh த்ருப்பதியின் குரலில் பாடலை எழுதியிருப்பது கௌதம் மேனனின் ஆஸ்தான பாடலாசிரியர் த வண் அன்ட் ஓன்லி தாமரை.

வைரமுத்து தொடக்கம் விக்னேஷ; சிவன் வரையான பெரும் பாடலாசிரியர்கள் பட்டாளத்தையே உள்ளடக்கியிருக்கின்ற இந்திய தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட தனிப் பெண் பாடலாசிரியராக தனது முத்திரையை தொடர்ந்து பதித்துக்கொண்டிருப்பதில் தாமரை முக்கியமானவர் அன்ட் முதன்மையானவர். 'ஆங்கில வார்த்தைகளை மிகையாக பயன்படுத்த மாட்டேன்', 'விரசமான சொற்பிரயோகங்களை உபயோகிக்கமாட்டேன்' போன்ற சில நல்ல எல்லைக் கோடுகளை அவர் தனக்குத்தானே வகுத்திருப்பதாலோ என்னவோ மற்றவர்களைப்போல அவருக்கு அதிகமான சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. ஆனாலும் கூட தனக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் அவர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தவறுவதேயில்லை. 'தேன் காற்று வந்தது...', 'நீயும் நானும்...', 'ராசாளியே..' போன்றவை அவற்றுக்குச் சில உதாரணங்கள். இப்போது இந்த 'விசிறி...' 

ஒரு பெண் ஆணைப் பாடலாம். அல்லது ஒரு ஆண் பெண்ணைப் பாடலாம். ஆனால் ஒரு பெண்ணே பெண்ணைப்பாடுவதென்பது உண்மையில் ஒரு ஜென் நிலை. அந்த நிலையை தாமரை அடைந்துகொண்டிருக்கிறார். அல்லது அடைந்துவிட்டார்.
'பூங்காற்றே நீ வீசாதே.... நான் தான் இங்கே விசிறி...'

.....................................................................................................................

அது ஒரு அழகிய கனாக்காலம்

யாழ்ப்பாணத்தின் மல்லாகத்தில் பிறந்து வவுனியாவில் ஆசிரியராக, பிரதியதிபராக கடமையாற்றி மிக அண்மையில் ஓய்வுபெற்ற திருமதி. ஜீவமலர் கணேசலிங்கம் அவர்களின் 'அது ஒரு அழகிய கனாக்காலம்' சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. வீரகேசரி போன்ற பத்திரிகைகளுக்கு அவர் எழுதிய, மற்றும் பரிசில்கள் பெற்ற பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கியிருக்கிறது இந்தப் புத்தகம்.
'நானெல்லாம் கருத்துச் சொன்னால் எவன் கேக்கப்போறான்' என்பது என் அடிப்படை எண்ணங்களில் ஒன்று. அந்த எண்ணத்தை முற்றாக தவிடுபொடியாக்கியிருக்கிறது இந்தப் புத்தகம். இதிலுள்ள ஓவ்வொரு கதையும் ஏதாவதொரு சமகாலப் பிரச்சினையை ஆராய்கின்றது. அல்லது தற்காலத்துக்குத் தேவையான கருத்தொன்றை முன்வைக்கின்றது. அந்த ஆராய்வுகளும் கருத்துக்களும் இப் புத்தகத்தை வாசிக்கின்ற லட்சம் பேரில் ஒருவருக்கு உறைத்தாலே அது இவ் நூலாசிரியரின் தெளிவான வெற்றி என்பேன் நான். ஆனால், வாசிப்பு பஞ்சம் வெகுவாக பரவிவருகின்ற அல்லது அப்படியே வாசிப்பு ஆர்வம் இருந்தாலும் பீட்சாக்களை மட்டுமே தேடியோடுகின்ற நம்மிடையே லட்சம் பேரை இப்புத்தகம் சென்றடைவதென்பது குதிரைக் கொம்பே.

எழுத்தில் கொஞ்சம் ஜெனரேசன் இடைவெளி தெரிந்தாலும் கூட வாசிப்பு ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் வாசிக்கக்கூடிய புத்தகம். 
இதை ஒரு அணில் முயற்சியாகவும் கொள்ளலாம்.

.....................................................................................................................

ரஜனி அரசியல்

ரஜனியின் அரசியலை கதைக்கும், நகைக்குமளவுக்கு நம் நாட்டில் குறிப்பாக நம்மவரின் அரசியல் பெரிதாகச் சொல்லும்படி இல்லை தான். எனக்கு படிப்பித்த, என்னோடு படித்த, நான் படிப்பித்த என்று யாழ்ப்பாணத்தில் எல்லா ஜெனரேசன்களில் உள்ளவர்களும் வருகின்ற உள்ளூர் தேர்தலில் போட்டியிடுகிறார்களாம். இந்திய அரசியலை நம்மாட்கள் ஓரங்கட்டுகின்ற காலம் மிகத்தொலைவில் இல்லை.

கடந்த வாரம் வாசித்த ஒரு ருவீட், 'தமிழ்நாட்டு அரசியலில் இனி விஜயகாந்த் இல்லாத குறையை எல்லா வகையிலும் ரஜனிகாந்த் நிவர்த்தி செய்வார் என தீர்மானமாக நம்பலாம்' (தலைப்பைப் பற்றி பேசவேண்டுமல்லவா? அதற்காகத் தான் இது)
ஆன்மீக அரசியல்கே......!!! வாழ்ககே.....!!!

.....................................................................................................................

இலங்கை கிரிக்கெட் அணி

பாடசாலைக் காலத்தில் எனது வகுப்பில் ஒருவன் படித்தான். அவுட்டும் சிக்சும் மட்டுமே கிரிக்கெட் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே அவன் ஜெயசூரியவின் துடுப்பாட்டம் பற்றியெல்லாம் கதைப்பான். நாங்கள் வாயைப் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்போம். அவனது மூளையில் படிப்பு இருக்கவேண்டிய இடங்களிலெல்லாம் கூட கிரிக்கெட்டே நிரம்பியிருந்தது. மிக நேர்த்தியான விளையாட்டு வீரனவன். அவனது ஸ்ரெயிட் ரைவ், கட் nஷhட் எல்லாம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். பாடசாலைக் காலத்தில் எல்ல வயது பிரிவினருக்குமான கிரிக்கெட் அணிகளிலும் அவன் தான் அணித் தலைவன். தவிர ஊரிலுள்ள சில அணிகளிலும் விளையாடி நிறையவே சாதனைகளும் பதக்கங்களும் பெற்றிருக்கிறான். இப்போது திருமணம் செய்துகொண்டு ஊரிலே ஒரு பலசரக்கு கடை நடத்திக்கொண்டிருக்கின்றான்.

இது எனக்குத் தெரிந்த ஒருவனின் கதை. இப்படி நம்மிடையே நிறைய கதைகள் இருக்கின்றன. அதே நேரம் நம் இலங்கை அணியில் திறமையான கிரிக்கெட் வீரர்களின் பற்றாக்குறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அணித்தலைவர்களாக கடமையாற்றிய வீரர்களை மட்டுமே உள்ளடக்கிய திறமையான ஒரு இலங்கை அணியை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

.....................................................................................................................

திருட்டுப்பயலே 2

கொஞ்சம் சுமாரன படங்களை எடுத்து ஒருமாதிரி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த ஒரு இயக்குனருக்கு தீடீரென சூப்பா ஹீரோ ஆசை தோன்ற 'கந்தசாமி' எடுத்தார். காணாமல் போனார். அண்மையில் நல்லதொரு கதையுடன் மீண்டும் வந்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. அந்த இயக்குனர் சுசிகணேசன். திரைப்படம் திருட்டுப்பயலே 2. 

பாபி சிம்ஹா, பிரசன்னா மற்றும் அமலாபாலின் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம். இதன் தலைப்பு, ட்ரைலர், புறமோசன், போஸ்ட்டர்கள்  எல்லாவற்றையும் பார்த்துவிட்டு இது 'ஒருமாதிரி'யான படம் என்று தான் நானும் எல்லோரையும் போல நினைத்தேன்.

ஆனால் இது, பேஸ்புக், டுவீட்டர் போன்ற பாஸ்ட் பூட் பாவனையாளர்களால் நிரம்பியிருக்கின்ற இந்த பாழ்பட்ட உலகுக்கு சேதி சொல்கின்ற முக்கியமான படம். சரியான காரணங்களைக் சொல்லியே விளம்பரப்படுத்தியிருந்தால் இது இன்னமும் வெற்றிப்படமாக அமைந்திருக்கும். நிச்சயமாக ஒருமுறை பார்க்கலாம். பார்க்க வேண்டும். 

என் நண்பன் ஒருவன் தீவிர அமலாபால் ரசிகன். அவன் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு 'படம் அவ்வளவு வாய்ப்பில்லை என்றான்.' ஏனென்றால்......... படத்தைப்பார்க்கவும்.
.....................................................................................................................      
   

Views: 1083