இலக்கணப்பிழை
எழுத்தாளர் : சி. சிவச்சந்திரன் | மின்னஞ்சல் முகவரி: keetreal@yahoo.com |
2/2/2018 6:38:09 AM
இலையுதிர் காலம்
உதிர்ப்பதற்கு எதுவுமின்றி
நான்
கீரியும் பாம்புமாய்
மனிதனும்
மனிதனும்
பழுதாய்ப்போன சோறில்
விஷம்
அடங்கிப்போனது பசி
வெற்றுச் சூப்பியை
சூப்பிக் களைத்துப்போனது
குழந்தை
நிறுத்தியது அழுகையை
யாருமில்லாத தனிமையில்
வந்து போகின்றார்கள்
நிறையப்பேர்
அவசரத்தில் நடந்த
குற்றம் மூடி மறைத்தது
அவசரக்கருத்தடை
முற்றத்து ரோஜாவின்
முதல் பூ
ஆசையாய் பறித்தவள்
சூட்டினால்
கணவனின் புகைப்படத்திற்கு
பசிப்பது பக்தனுக்கு
படைப்பது கடவுளுக்கு
பார்வையற்றவனுக்கு
கண் கொடுக்காவிட்டாலும்
கை கொடுங்கள்
பாசம் இருக்கும்
வீட்டில் பணத்திற்குத்
தேவை குறைவு
மனிதன் சொல்வதைக்
கேட்கின்றோமோ
இல்லையோ
பல்லி சொல்வதைக்
கேட்கிறோம்
இரவினை
நீளமாக்கிக்கொண்டே
இருக்கின்றது
ஒரு கண்ணீர்த்துளி
தொலைபேசியை
அணைத்துவிட்டும்
தூங்கிவிடுவதில்லை
மனசு
குழந்தை பிறக்கின்ற
வலியினைவிட
கொடுரமானது
குழந்தை இறப்பது
பாலுக்காக மட்டும்
அழுவதில்லை
குழந்தைகள்
பாசத்திற்காகவும்தான்
விடுமுறைகள்
கொண்டாடுவதற்காகவல்ல
விட்டுப்போனவற்றை
செய்து முடிக்க
நாளாந்த கூலிக்காரனுக்குத்தான்
தெரியும் ஞாயிறின் வலி
சாமிக்கூற்றிய பாலில்
கிருமியே இருக்காதென்பது
ஜதீகம்
சாமிக்கூற்றிய பாலும்
பசிபோக்குமென்பது
தெய்வீகம்
புகைந்துகொண்டிருக்கும்
மனதில்
நிக்கோட்டின் வாசணை
புரண்டு கிடக்கும்
தண்டவாளத்தில்
பயணிக்கும் ரயில்
வாழ்க்கை
கோயில் உண்டியலா
கோயில் வாசல் திருவோடா
புண்ணியம் கூடியது எது?
கடவுளே நீயே சொல்லு
மிட்டாய் வாசத்தை
முகர்ந்துகொண்டே
மிட்டாய் விற்கிறது
ஒரு குழந்தை
அன்பைப் பயன்படுத்துங்கள்
அணைக்கமட்டும்
அடக்கவல்ல
யாவும் அடங்கும்
அன்பினுள்ளே
சிதறிக்கிடக்கின்றது
வாழ்க்கை
சேர்த்தெடுக்கின்றது
காதல்
அழுவதற்கு
கண்கள் தேவையில்லை
மனசு போதும்…!
Views: 661