சோனமுத்தா

எழுத்தாளர் : மதுஷா மாதங்கிமின்னஞ்சல் முகவரி: 1989mathangi@gmail.comBanner

என்னுடைய விருப்பங்கள் விசித்திரமானவை சோனமுத்தா. எப்போதும் ஏதாவது ஒன்றில் தங்கியிராத பறவையாகவே இருக்க விரும்புகிறேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல தங்கியிருக்க நேர்ந்த போதொல்லாம் பிரயத்தனப்பட்டு உயரப்பறப்பதாய் நினைக்க என்னை பழக்கப்படுத்திக் கொள்வேன். பழமையின் தூசியை புதுமை என புகழ்ந்து கொண்டுருக்கும் மரங்களில் நிழலில் கீழ் தான் நான் இளைப்பாறுவது என்பதை பல நேரங்களில் மறந்து விடுவதுண்டு. 
இந்த உலகு இயங்குவதற்கு என்ன வேண்டும் என நினைக்கிறாய்? அன்பு, பாசம், காதல், நட்பு இது இயங்குவதற்கு வக்கிரங்கள் மிக அவசியம் சோனமுத்தா. அதைக் கொண்டே இந்த வாழ்வும் இயங்குகிறது. வக்கிரம் மிகச்சிறந்த போதை இதை போல ஒரு போதையை நீ எங்கும் கண்டிருக்க மாட்டாய்.  இதை நீ அனுபவிக்க வேண்டுமா? இந்த போதையின் உச்சத்தில் நீ நிறைந்திருக்க வேண்டுமா? ஆம் எனில் உன் கற்பனைகளை திரட்டி வக்கிரங்களை உருவாக்கு. உன் உலகை நிரப்புவர்களை இந்த வக்கிரங்கள் கொண்டோ நிரப்பி விடு...  கண்கள் நிரம்ப போதையாவாய்

இன்றைய காதலாய் நீ சோனமுத்தா
இந்த சொல் இந்த இரவுக்கு போதுமானது 
வா வக்கிரங்களாவோம்....

-----------------------------------------------------------------

சோனமுத்தா நீ ஒரு தெய்வ லெவல் எண்டு சொன்னா நம்புவியா?  என்னாலையும்  முதலை இதை நம்பேலாமல் தான் இருந்தது. ஆனா நீ தெய்வ லெவல் எண்டு நம்ப வெளுக்கிடேக்கை வந்திச்சு பார் ஒரு போதை அப்பவே நீ தெய்வ லெவல் தான் எண்டு முடிவெடுத்திட்டன்.

எதேர்ச்சையாகத் தானே எதிர் பட்டுக் கொண்டோம். இந்த வெறித்தனமான நேசத்தை நீ கண்டு கொள்ளாமல் இருக்கிறது இன்னொரு வகை போதை தான். " நிராகரிப்புகளை எதிர் கொள்ளும் நேசங்கள் தீர்ந்து போவதில்லை" இப்பிடி ஏதாவது சொல்லி என்னை சமாளிக்கிறன் விடு.

ஆனா நீ இருக்கிறியே

அவிச்ச சோளத்தை சாப்பிட்டுட்டு கெதியா முடுஞ்சிட்டுதே எண்ட அவாவில சோளத்தண்டை உறிஞ்சேக்கை உப்புறைக்கும் பார் அப்பிடி இருக்கிறாய் நீ. அது நாசியில ஒட்டி அப்பிடியே தொண்டைக்குள்ளை அந்த உப்புத்தண்ணி போகேக்கை கொஞ்சம் முதல் சாப்பிட்ட சோளம் ஞாபகத்துக்கு வாரவே வராது. அப்பிடித்தான் நீ எல்லாத்தையும் மறக்க வைச்சிட்டு உப்புத் தண்ணியா போறாய். உப்புத் தண்ணி குடிச்சா திரும்ப தண்ணி விடாய்க்கும் எண்டது உனக்கேன் விளங்குதில்லை

-------------------------------------------------------------------------------------------------

கானல் நீராய் நீ இருக்கிறதுக்கு பதில் உப்புத் தண்ணியா இருந்திருக்கலாம் சோனமுத்தா. காஞ்சோண்டி போல தொட்ட  உடனேயே எல்லாம் சுணைக்க மாட்டியா. 

என்ன தான் உனக்கு மேலை கோவம் இருந்தாலும்,  உன் காதுக்கு கீழ அந்த இடப்பக்க கன்னத்தில நாலு தாடி முடிக்குள்ளை சிவந்து இருக்கிற அந்த பருவோடை உன்னை பாத்தா போதும், அப்பிடியே சொக்கிப்போறன். நீ அழகன்டா சோனமுத்தா. பரு உனக்கு தான் உனக்கு வடிவு

Views: 1870