அனுபமா

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBanner

வாழ்க்கையுள்ள வட்டங்களின் சிக்கல்களை புரிந்து கொள்ளல் என்பது மிகப் பெரும் இடியப்பச்சிக்கலாய் உள்ளது. நான் உறவுகளை ஒவ்வொரு சின்னசின்ன வட்டங்களாய் பிரித்து வைத்துள்ளேன். ஒவ்வொரு வட்டத்திற்;கும் ஏற்ப நானே வேசம் தரிக்கிறேன். வட்டதின் ஆரை பெரிதாக பெரிதாக நெருக்கத்தன்மையும் குறைவடைந்து சென்றுவிடுகின்றது. நான் எந்தவட்டத்தில் எப்படியாக இருக்கிறேன் என்பதை அந்த வட்டத்தைச் சார்ந்தவர்களே தீர்மானிக்கிறார்கள் இருப்பினும் எவரை எந்த வட்டத்தினுள் வைப்பது என்பதை நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். ஏனெனில் இது என்னுடை வட்டம். கூர்ந்து அவதானிப்பின் நாங்கள் ஒவ்வொருவரும் இப்படியான பல வட்டங்களை வைத்து கொண்டு அதுபற்றிய போதியளவு விழிப்புணர்வற்று வாழ்கிறோம். வாழ்க்கையில் கால் நூற்றாண்டுகளை இலகுவாய் கடந்து விட்ட எனக்கு, 25 ஆண்டுகள் என்பதை விட கால்நூற்றாண்டு எண்டு சொல்லிக்கொள்ளும் போது ஏதோ அனுபவதின் முதிர்ச்சியில் கதைப்பது போல நானே அடிகடி உணர்ந்துகொள்வேன். இப்போது எனக்கு இருக்கும் சிக்கல் என்னவெண்டால் இந்த அனுபமாவை கொண்டு போய் எந்த வட்டத்துக்குள் வைக்க என்பதே..

அனுபமாவை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. அனுபமா உங்களுக்கு நன்கு பரீட்சியமானவள் என்று நினைத்து கொண்டு இந்த முதல்பந்தியை தோழியொருவருக்கு அனுப்பியிருந்தேன். யாருடா அந்த அனுபமா எண்டு அவள் கேட்டது செவிட்டை பொத்தி அறைந்தது போலிருந்தது. அனுபமா பூனைக்குட்டி விசரியின் நாயகி என்னோடு ஒன்றாக வேலைசெய்த நபர் எண்டு சுருக்கமாக ஒரு வரியுடன் முடித்துவிடப்போகிறேன். இதன் பின்னால் நான் செய்யும் அரசியல் கதைமுடிவில் சுவாரசியம் இருப்பவர்கள் தேடிப்போய் அனுபமா - பூனைக்குட்டி விசரியை மீண்டும் தேடி வாசிப்பீர்கள் எண்டு ஒரு நப்பசையும் தான். 

0000

களுத்துறை உள்ளக்க பயிற்;சியின் அனுபவங்களை எழுதி தீர்க்க இந்த ஆயுள் போதாது. இருப்பினும் அனுபமாவை பற்றி அடிக்கடி நண்பர்களுடன் உரையாடிக்கொள்வேன். அனுபமா என்னுள் எற்படுத்திய பாதிப்புகள் அந்தகணத்தில் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தினாலும் இப்பொழுதும் நினைத்து நினைத்து சிரித்து கொள்வேன். உள்ளகப்பயிற்;சியின் போது கிழமையில் இரண்டு நாட்கள் தான் எங்களுக்கு இருந்தது திங்கள்,செவ்வாய், புதன், வியாழன் என இருக்கவில்லை. Casualty day  அதாவது அன்றைய தினம் நேயாளர்கள் அனுமதிக்கப்படும் தினம் non casualty day  அனுமதிக்கப்படாத தினம். casualty day தினத்தை நாங்கள் செல்லமாக திருவிழா என்போம். அன்றைய தினம் சாப்பிடுதல், டீ குடித்தல், உறங்குதல் ஏன் சுச்சுபோவதை கூட விரும்பிய நேரத்தில் செய்ய இயாலாதிருக்கும். அப்படியான ஒரு திருவிழா மாதத்தில் ஒண்டு அல்லது கிழமையில் ஒண்டு வந்தால் கூட பரவாயில்லை ஒண்டவிட்ட ஒரு நாளுக்கு ஒருக்கா திருவிழா எண்டா எப்புடிதாங்கிறது.

0000

'கொத்தன ரிதன்னே' எண்டு ஒரே ஒரு வசனத்தை மட்டும் மனப்பாடம் பண்ணிவிட்டு வந்த எனக்கு சிங்களத்தில் சில பல ரீட் சொற்கள் உட்படபொதுவாக கதைக்கும் புலமை ஏற்;பட்ட பின் அனுபமாவின் தயவினால் எழுத்து கூட்டி சொற்களை வாசிக்கவும் பழகி கொண்டேன். வழக்கமான ஒருதிருவிழாவின் ஒரு 3மணி போல் இரண்டு நாள் காய்ச்சல் தலையிடி உடம்பு நோ சாப்பிட மனமின்மை எண்டு சொல்லிகொண்டு ஒரு 24 வயது பொடியன் வந்தான். குடும்பி வளர்த்து முறுக்கிய மீசை வைத்து தாடியுடன் ஒரு கறுப்பு ரீசேர்ட் அணிந்திருந்தான். சத்தியமாக அதில் என்ன எழுதியிருந்தது என நான் கவனிக்க வில்லை வெள்ளை நிறத்தில் ஒரு சிங்கப்படம் வரைந்திருந்தது. அனுபமா அவனை கண் வெட்டாமல் பார்த்து கொண்டொருந்தாள் நான் அவளை பார்த்ததும் சடுதியாக அவள் பார்வையை திருப்பிக்கொண்டாள். நானும் இண்டைக்கு டீ டைமில இவளை வறுத்தெடுக்க ஒரு கதை  கிடைத்துவிட்டது என விட்டு விட்டேன். அந்தபொடியன் உள்ளே போனதும் அனுபமா எழுந்து சென்று அவனுக்கு கட்டில் கொடுக்க சொன்னால், குருதி பரிசேதனைகளை அவசரமாக அனுப்ப உத்தரவிட்டு வந்து இருந்தாள். அனுபமாவின் கவனிப்பு விசித்திரமாய் இருந்தது ஒருவேளை சொந்தகாரனாய் இருப்பானே எப்படி கேப்பது என முழுசிக்கொண்டிருக்கையில் அனுபமாவே கதையை ஆரம்பித்தாள். 

'அவனிண்ட ரீசேட்டில எழுதியிருக்கிறத கவனிச்சியா'
'இல்லை.. என்ன எழுதி இருக்கு..?'
' வாசி பாப்பம்'
' சிங்க - லே'
சிங்க எண்டா சிங்கம் லே எண்ட ரத்தம்.. அப்போ சிங்க ரத்தம் எண்டு எழுதியிருக்கானா
' அப்பி சிங்க - லே' எண்டாள் அனுபமா. அவள் அப்படி கூறுகையில் அவள் முகத்தில் ஒருவித இனம்புரியாத கர்வமும் பெருமிதமும் தெறித்தது. 
எனக்கே கவுண்டமணி சொன்ன ' எது உங்கமா காட்டுக்கு போனாவ...? இல்லை சிங்கம் வீட்டுக்கு வந்திச்சா...?' எண்ட ஜோக்குதான் ஞாபகம் வந்துச்சு. நான் ஒரு மெல்லிய புன்னகையுடன் அந்த நிகழ்வை கடந்துசென்றேன். 

0000

சிங்க லே எண்டு கர்வத்தோடு அவர்கள் உரைப்பதற்க்கு தனியாக ஒருகாரணம் இருக்கிறது. பின்னாட்களில் நண்பனுடன் ஒரு ஞாயிற்றுகிழமை விடுப்பு உரையாடலில் மஹாவம்சத்தினையும் அதன் உட்கூறுகளையும் கலைத்துப்போட்டு அறைமுழுவதும் நிரப்பிவைத்துவிட்டு மேய்ந்துகொண்டிருக்கையில் தான் எனக்கு அந்த சிங்க கதை மறுபடியும் கிளிக்கியது. 

மஹாவம்சத்தில் ஆறாம் அத்தியாயம் விஜயனின் இலங்கை வருகையைபற்றி விபரிக்கிறது. இந்த சிங்க லே கதையெல்லம் விஜயனின் இலங்கைவருகையுடனே ஆரம்பித்திருக்க வேண்டும். வங்களாதேசத்து மன்னன் கலிங்கதேசத்து மகளை மணந்திருந்தான். அவர்கள் இருவருக்கும் சர்வலட்சணமும் பொருந்திய அழகிய பெண்குழந்தை பிறந்தது. அக்குழ்ந்தைக்கு சுப்பாதேவி என பெயர் வைத்தார்கள். சுப்பாதேவி பிறந்து சில நாட்களில் ஜோதிடர்கள் கணிப்பில் சுப்பாதேவி ஒரு வலிய சிங்கத்துடன ;உறவு கொண்டு பிள்ளைகளை பெற்று கொள்வாள் என குறிப்பிட்டார்கள். சுப்பாதேவி மிகவும் அழகுடையவளாய் வளர்ந்தாள். 

ஒருமுறை சுப்பாதேவி மகததேசம் நோக்கி வணிகர்களுடன் கட்டுவழியாகப் யணிக்கையில் அவர்கள் பயணக்குழுவை ஒரு சிங்கம் தாக்கியது. சிங்கத்தின் தாக்குதலில் வணிகர்குழு சிதைந்தோடியது. சுப்பாதேவி மட்டும் ஓடவில்லை. அந்த ஆரூடம் அவள் நினைவுக்கு வர அவள் மிக அமைதியாக சிங்கத்தின் அருகே சென்றாள். அதன் காலினை தடவி விட்டாள். அவள் அழகில் மெய்சிலிர்ந்து பிடரியினை சிலிர்த்து கொண்டது, வாலினை ஆட்டிக்கொண்டு அவளை முதுகில் சுமந்தவாறு குகை நோக்கி ஓடியது. அங்கு அவளுடன் உறவு கொண்டதால் ஆணும் பொண்ணுமாக இரட்டைகுழந்தைகளை பெற்றெடுத்தாள். அவற்றிக்கு சிங்கபாகு, சிங்கசீவிலி எனபெயர் வைத்தனர். சிங்க பாகுவின் கால்கள் சிங்கத்தை ஒத்ததாய் இருந்ததாம் அதனால் தான் சிங்கபாகு என பெயர் சூட்டினாள் சுப்பாதேவி. 

பின்பு சிங்கபாகு, சிங்கசீவிலி, சுப்பாதேவி மூவரும் அக்குகையிலேயே நெடுநாள் இருந்தனர். சிங்கம் குகை வாயிலை ஒரு பெரும் பாறை கொண்டு அடைத்துவிட்டது அதலால் குழந்தைகள் வெளியுலகு தெரியாமல் வளர்ந்தனர். சிங்கபாகு பெரியவன் ஆனதும் சிங்கம் அற்ற நேரமாய் வாயிலை திறந்துகொண்டு அம்மாவையும் தங்கையும் தோழில் சுமந்துதப்பி காட்டுபுறமாய் ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தான். அப்பிரதேசத்தினை ஆட்சி செய்த வங்காள தேசத்து மன்னனின் மருமகன் அனுர இவர்களை இனங்கண்டு கொண்டு மீண்டும் தலைநகர் அழைத்துசென்றான். மனைவி பிள்ளைகளை காணாது சிங்கம் கரையோரபிரதேசங்களில் அவர்களை தேடியலைந்தது. அரசு சிங்கத்தின் தலைகொணர்பவர்களுக்கு பரிசு பொற்காசுகள் என அறிவித்தது. மகன் எனும் பாசத்துடன் நெருங்கிய சிங்கத்தை தலையறுத்தான் சிங்கபாகு. அரசனுக்கு பின் சிங்கசீவிலியை மணந்து கொண்டு முடியாட்சி ஏற்றான். பின்பு அவர்கள் இருவருக்கும் 8 சோடி இரட்டைகுழந்தைகாள் பிறந்தன. அவர்களில் மூத்தவனே விஜயன்


0000

சிங்கம் காட்டுராசா எண்டு அம்மாம்மா சொன்ன கதைகளின் மூலம் தான்சிங்கம் என் வாழ்வியலுள் புகுந்துகொண்டது. அதன் பொன்னிறமான தோல், செம்மஞ்சள் நிறமான பிடரிமயிர், மிடுக்கான தோற்றம் கம்பீரமான தோற்றம் என அம்மாம்மா சொல்வதை நான் அப்படியோ உருவகப்படுத்தி கொள்வேன். குறிப்பாக சிங்க கர்ச்சனையை தன் தலைமயிரினை அவிழ்த்துவிட்டு சிலிர்ப்பி கர்ஜனை செய்து காட்டுவார். விபரம்தெரிந்து எனக்கு சோறு தீத்திய கதைக்கள் எல்லாம் சிங்கம் சார்ந்தவையே. பின்பு சமூகக்கல்வியில் ரீச்சர் சிங்கராயவனத்தில் சிங்கம் இல்லை ஏன் இலங்கை காடுகளின் எந்த பிரதேசத்திலும் சிங்கம் இல்லை எண்டு சென்னது எனக்கு பேரதிச்சியை கொடுத்தது. என்னால அதனை நம்பவே முடியவில்லை. எப்படியாவது ரீச்சர் சொன்னது பொய் என நிரூபித்துவிடவேண்டும் என பள்ளிக்கூட நூலகம், பிறகு அம்மாட்ட கொஞ்சி கூத்தாடி வவுனியா பொதுநூலகம் என எல்லா இடங்களிலும் சிங்கத்தை தேடி அலைந்தேன். ஏமாற்றமே மிச்சம்.

நான் மட்டுமல்ல இலங்கையில் சிங்கத்தின் இருப்பினை அல்லது இருந்தது என்பதை உறுதிசெய்ய பலரும் தேடியலைந்துள்ளனர். 1930களின் இறுதிபகுதியில்  Dr. Paulus Edward Pieris Deraniyagala குருவீட்டவில் ஒரு பல்லினை கண்டுபிடித்தர். மனித இனம்கள் இலங்கையில் குடியேற முன் கிமு 3700 ஆண்டுகாளுக்கு முன் வாழ்ந்த சிங்க இனத்தின் ( Panthera Leo)ஒத்த உபவகுப்பு( Panthera Leo sinhaleyus) ஒன்று அதென்ன பல்லினை மட்டும் வைத்துகொண்டு சிங்கத்தின் இருப்பினை நிருபிக்கமுயன்றார். பின் பிரிட்டிஸ் அருங்காட்சியசாலை அது சிங்கபல் இல்லை என நிராகரித்துவிட்டது. என்னை போல் Paulus உம் உடைந்தே போயிருப்பார். இன்னும் இலங்கையில் சிங்கத்தின் இருப்பை தேடியலைபவர்களுக்கு நீண்ட பெருமூச்செறிந்து சொல்கிறேன்.. 'நீங்க எல்லாம் அதுக்கு சரிப்பட்டுவரமாட்டிங்கடா'


0000


பின்பு ஒருநாள் இதே போல் ஒரு சம்பாசனையில் அனுபமா அப்பி சிங்க லோ எண்டு இடித்து சொல்கையில் நான் மிகவும் அவதிக்குள்ளாகிவிட்டேன். அனுபமா ஒரு முற்றுமுழுதாய் ஒரு இனவெறி கொண்டவளாய் நான் பூரணமாய் உணர்ந்தேன். அவ்வளவு நாளாய் ஏதேதோ காரணத்துக்காய் உள்பூட்டி வைத்த அத்தனை என் கோபங்களையும் கொட்டி தீர்த்துவிட்டேன்.


“Yes, you are lions. Technically not belongs this country”!!!

Views: 1804