சம்மாந்துறைச் சோனகர் ஆட்பெயராய்வு

எழுத்தாளர் : ஷாக்கீர்மின்னஞ்சல் முகவரி: saakir.mim@gmail.comBanner

கணித மொழியிலேயே இறைவன் பிரபஞ்சத்தை எழுதியிருக்கிறான் என்பார் கலிலியோ கலிலி
அதுபோல 'உலகம் சொற்களால் ஆனது ஆதலால் அது அர்த்தப்படுகின்றது' எனலாம்

சம்மாந்துறை சோனக மக்களின் பெயரிடல் பண்பாட்டம்சம் தொடர்பில் இக்கட்டுரை மிகச்சுருக்கமாக நோக்குகின்றது. 

அறிமுகம் 

பெயர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் விரவிக்கிடக்கின்றன. ஒரு பொருள் அல்லது செயற்பாடு பெயரிடப்படுவதன் மூலமே தனித்துவப்படுத்தப்படுவதோடு, அர்த்தம் கொள்ளச் செய்யப்படுகின்றது. இப்பெயரிடல் செயற்பாடு மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும் என்று மானுடவியலாளர்கள் கருதுகின்றனர். அது சைகை வடிவிலே, குறியீட்டு முறையிலோ ஆரம்பித்து பிற்காலத்தில் விருத்தியடைந்துள்ளது. இப்பெயரிடல் தொடர்பான ஆய்வுகள் Onomastics எனப்படுகின்றன. இவை இடப்பெயராய்வு, ஆட்பெயராய்வு என இரு வகைப்படுகின்றன. 

மனிதன் தரைத்தோற்ற அம்சங்களுக்கு ஆறு, குளம், ஏரி, மலைகள், காடுகள், பாதைகள், சந்திகள், ஊர், கிராமம், எல்லைகள் என இடங்களுக்கு இடப்பட்ட பெயர்கள் தொடர்பில் அவற்றின் மூலம், காலப்போக்கில் அவை அடைந்த மாறுதல்கள், பிறமொழிகளுக்குள் அவை சென்றடைந்த விதம் என பல்வேறு கோணங்களில் செய்யப்படும் ஆய்வுகள் இடப்பெயராய்வு எனப்படும்.

இதே போல் நபர்களிற்கு இடப்படும் ஆட்பெயர்கள் தொடர்பான ஆய்வுகள் ஆட்பெயராய்வு எனப்படும். எழுதப்பட்ட வரலாற்றுக் காலம் தொடக்கம் மனிதர்கள் பெயருடன் புழங்கியுள்ளதை பழங்கால தொல்லியல் சான்றுகளான நாணயங்கள், கல்வெட்டுகள், நாட்டுப்புறப்பாடல்கள், கதைகள், புராணங்கள் மூலம் அறியமுடிகின்றது.

பிள்ளைகளிற்கு பெயரிடும் பண்பாடு இங்கு ஆதிதொட்டே நிலவிவந்துள்ளது. பெயர்களைப் பற்றி நோக்கும் போது உத்தியோக பூர்வ ஆவணங்களிற்காக வைக்கப்படும் பெயர் 'உள் பெயர்' என்றும் அழைப்பதற்காக வழமையாக வீட்டில் பயன்படுத்தும் பெயர் 'வெளிப்பெயர்' என்றும் இரு பெயர்கள் வைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இது தற்காலத்திலும் நீடித்து வருகின்றது. பாலர்களிற்கு இடும்போது செல்லப் பெயர்கள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன. 

அதே போல் தாய்வழி தலைமுறைப் பாரம்பரியத்தை பேணுகின்ற குடிவழிமுறை பண்பாட்டம்சமான குடிப் பெயர்கள், தத்திப் பெயர்கள் என்பனவும் வழக்கில் உள்ளன. திருமண நடைமுறைகளின் போது குடிவழிமுறை கருத்தில் கொள்ளப்படுகின்றது. இவை தவிர இடுகுறிப்பெயர்களான பட்டப்பெயர்கள் சம்மாந்துறையில் பெரிதும் புழக்கத்தில் இருக்கின்றன. பெரும்பாலான நபர்களை இனங்காண்பதற்காக அவர்களின் குடும்பத்தின் பட்டப்பெயர்கள் இன்றும் கணிசமாகப் பயன்படுகின்றது.
 
பெயரிடல்

ஆரம்பகாலங்களில் பிள்ளைகள் பிறந்தால் பிறந்த நாளைக் கொண்டு பெயரிடும் வழக்கம் இருந்துள்ளதாக எம்.எம்.மீராலெவ்வை (2018:64) எழுதிய குறிப்புகளில் இருந்து அறிய முடிகின்றது.

•வெள்ளிக்கிழமை பிறந்தால் ஆணுக்கு ஆதம்லெவ்வை, பெண்ணுக்கு ஹவ்வா உம்மா, 
•சனிக்கிழமை பிறந்தால் ஆணுக்கு அப்துல் றஹீம், பெண்ணுக்கு மரியம், 
•ஞாயிறு பிறந்தால் ஆணுக்கு இபுறாஹீம், பெண்ணுக்கு அலிமா உம்மா, 
•திங்கள் பிறந்தால் ஆணுக்கு அஹமது, முகமது, மகுமூது பெண்ணுக்கு பாத்திமா, ஆமினா
•செவ்வாய்க்கிழமை பிறந்தால் ஆணுக்கு ஹபீப் முஹம்மத் பெண்ணுக்கு செய்னப், கதீஜா
•புதன் கிழமை பிறந்தால் ஆணுக்கு அலி, உதுமான், பெண்ணுக்கு ஆயிசா, சுலைஹா
•வியாழக்கிழமை பிறந்தால் ஆணுக்கு அபூபக்கர் பெண்ணுக்கு செய்னப்  என்றவாறு பெயர்கள் இடப்பட்டுள்ளன.

சிறந்த கருத்துள்ள பெயர்களை இடவேண்டும் என்ற நோக்கில் மக்கள் ஆலிம்களை நாடியுள்ளனர்.  
சிலருக்கு தொடர்ந்து பிறக்கும் குழந்தைகள் இறப்பதனால் அவர்கள் பிள்ளை இற்ப்பதைத் தடுக்கவென அமங்கலமான பெயர்களை இடும்வழக்கமும் இருந்துள்ளது. உதாரணமாக பிச்சை என்றபெயரைக் குறிப்பிடலாம். மேலும் சில குடும்பங்கள் தந்தை வழிகுடும்பப் பெயரினை பின்னொட்டாக சேர்த்துப் பயன்படுத்திவரும் வழக்கமும் உள்ளது. 

ஆட்பெயர் வகைப்பாடு

ஆட்பெயர்களை பல்வேறு வகைகளில் வகைப்படுத்தமுடியும் எனினும் அவற்றுள் சிலவற்றை சுருக்கமாக நோக்கலாம். மொழி வாரியாக பார்க்கின்ற போது ஆரம்பகால பெயர்களில் தமிழ் மொழிப்பெயர்களும் இடம்பெறுகின்றன. உதாரணமாக மூத்தாம்பி (மூத்த தம்பி) இளையதம்பி, நல்லதம்பி, பெரியதம்பி, சின்னத்தம்பி, சீனித்தம்பி, வெள்ளத்தம்பி, போன்ற தம்பிஈற்று பெயர்கள் சின்னராசா, தம்பிராசா, தங்கராசா, ராசாப்பிள்ளை, சின்னவன், சின்னத்துரை, பெரியதுரை, செல்லத்துரை, தம்பிக்கண்டு, செல்லக்கண்டு, சீனிக்கண்டு போன்ற ஆண் பெயர்களையும், சின்னம்மா, தங்கம்மா, சீனிம்மா, இளையம்மா, வெள்ளம்மா, வெள்ளச்சி, நல்லம்மா, கொச்சிம்மா, வரிசைம்மா, செல்லம்மா, நோம்பு,  சின்னக்கிளி, குஞ்சிக்கிளி, போன்ற பெண் பெயர்களையுமட் குறிப்பிடலாம்.

இவைதவிர பெரும்பாலும் முஸ்லிம்களிடத்தில் அரபு மொழிப்பெயர்கள் இடும் வழக்கம் இருந்துள்ளது. இது இவர்களித் தனித்துவ பண்பாட்டுக்கூறாகும். அவற்றில் ஆரம்பகாலப் பெயர்கள் இஸ்லாமிய வரலாற்று மாந்தர்களின் பெயர்களாக காணப்பட்டன. இவை பிரதேசமொழியோடு மருவியவண்ணம் பயன்பட்டுள்ளன. உதாரணமாக அப்துல்றஹீம் (அத்துறஹீம்), அப்துல் றஹ்மான் (அத்துறகுமார்) போன்ற இறைநாமங்ளை ஒட்டிய பெயர்களும், ஆதம், முகம்மது (மம்மது), அஹமது (அகமர்), இப்றாஹீம் (இபுறார்), இஸ்மாயில், இஸ்ஹாக், யூனூஸ், யூஸுப், சக்கரியா, ஈஸா, மூசா போன்ற நபிமார்களின் பெயர்களும், அவக்கர் (அபூபக்கர்), உமர்(ஒமர்) அலியார் (அலி), உதுமார் (உஸ்மான்) போன்ற கலீபாக்களின் பெயர்களும், பாத்திமா(பாத்தும்மா), ஹஸன் (அசனார்), ஹுசைன் (ஒசனார்), ஹலீமா (அலிமா), ஸைனப் (செய்னம்பு), றுகையா (றுக்கியா), சோறா (சுகைஹரா), கதீஜா(கஸ்ஸா), சுலைஹா (செலஹா) போன்ற நபியவர்களின் குடும்பத்தினர் பெயர்களும் பயன்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.

மேலும் பாரசீகம், உர்து போன்ற மொழிகளின் செல்வாக்கும் சிலபெயர்களில் காணப்படுகின்றது. கலந்தர், பாரிசா, லைலா, பானு, யாஸ்மின், கிஸோர், ஜஹான், போன்றவற்றைக் குறிப்பிடலாம். பொதுவாக முகம்மது என்ற முன்னொட்டு ஆண்களுக்கும் பாத்திமா என்ற முன்னொட்டு பெண்களுக்கும் பரவலாக பயன்பட்டது இவைதவிர கண்டு, பிள்ளை, வாப்பா, தம்பி கான், ஷா, பிச்சை போன்றவை ஆண்களுக்கும் உம்மா, பிள்ளை, நாச்சி, பேகம், பீவீ, நிஸா, ராணி போன்றவை பெண்களுக்கும் பெயர்களில் பின்னொட்டாக பரவலாக பயன்பட்டுள்ளது. உதாரணமாக ஆதங்கண்டு, உதுமான்கண்டு, வாப்பாப்புள்ள, செல்லப்பிள்ளை, பக்கீரத்தம்பி, ஆமினாஉம்மா, இளையாம்பி அலிமாநாச்சி, வரிசைநாச்சி, ஹைறுன் நிஸா, ஷேக்கான், அலிஷா, நாகூர்உம்மா, போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இவைதவிர லெப்பை, பாவா என்கிற பெயர்பின்னொட்டினை பெருமளவான 18,19ஆம் நூற்றாண்டைய பெயர்களில் காணலாம், ஆதம்லெவ்வை, உதுமாலெவ்வை, பக்கீர்லெவ்வை, அலிலெவ்வை, ஆதம்பாவா, காஸீம்பாவா, போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும் பதவிப்பெயரகளும் பிற்காலத்தில் பெயர்களோடு மரியாதை நிமித்தம் இணைத்துக்கூறப்பட்டு பின் அது பெயர் போலவே  ஆவணங்களிலும் பயன்பட்டுள்ளது, வன்னியார், உடையார், காரியப்பர், பரிகாரி, வாத்தி, முகாந்திரம், போடியார் போன்றவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். மேலும் ஹாஜி, ஜனாப், ஸெய்யித் போன்ற பாரசீக சொற்களும் பெயர்களின்முன்னொட்டாக காரணங்களுடன் பயன்பமுடுகின்றன.  

பட்டப்பெயர்கள் 

சம்மாந்துறை மக்களின் தனித்துவமான சிறப்பம்சங்களில் பட்டப்பெயர்களையும் குறிப்பிட முடியும். மிகப்பெரும் பட்டியலைக்கொண்ட இப்பெயர்கள் ஒவ்வொன்று பற்றியும் பல சுவாரஸ்யமாக கதைகளும் இருக்கின்றன.  

கொறுக்காயர், நூலச்சியர், நெடியஇஸ்மார், கலட்டியர், பல்லுக்காசீம், நெடிய கரவாகார், காலியார், வெல்லஸார், நத்தார், களனியர், கண்ணாடிஆலிம், புள்ளிஹாபிஸ், பாத்தியாகொட்டர், சட்டிஇலவை, அவால்மோதீன், சுல்தான்மரைக்கார், சீச்சி ஹாஜியார், நலஞ்சபூனை, சுவீட்மஜீட், சிப்பி மஜீட்,குழட்டுப்போடியார், தோலிப்போடியார், வெள்ளைவிதானை, கிடுகிடுப்பர், வத்தாளையார், சந்தணத்தார், புழுகன்பரிசாரி, போயிலக்காம்பர், குளலியர், சுருளிமாஸ்டர், ஊசியன் உடையார், மஞ்சல்உடையார், மிசின்காரர், கண்மூடியர், இரும்பர், ம்மபட்டியார், பாறாங்கத்தியர், லோடர், லோட்மேன், நயின்டியர், சிறீமா, சோக்ரடீஸ், குழந்தை, அப்புக்காத்தர், புலாப்புரிச்சார், பரிசிசிக்கட்டியர், கொக்குகொத்தியார், வண்டர், மாதளையர், பழம்புளியர், திராயர், மஸ்கத்அவக்கர். பச்சநாவியர், சூலாவர், முட்டையர், கரடியர், மோக்கையர், சுங்கார் சண்டியர், இலுவிசி, திங்கள், தினகரன், டிங்கண்ணர், மஞ்சக்கண்ணர், துள்ளுமுட்டியர், மீசைக்கடியர், வெடிக்காரன் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். 

இப்பட்டப்பெயர்கள் காலகாலத்திற்கு நிலைப்பவையாகவும் குடும்பங்களின் இடுகுறிப்பெயர்களாகவும் காணப்படுகின்றன. இவற்றை குடும்பத்தினர் அசௌகரியமாக கருதுவது குறைவாகவே உள்ளது. பலரும் வெளியப்படையாக நபர்களை விசாரிக்கும் போது எங்கு இருப்பது, யாருடைய பிள்ளை, பட்டப்பெயர் என்ன என்றுதான் விசாரிப்பார்கள், வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டுவதற்கும் பட்டப்பெயரைச் சொல்லிக் கேட்டால்தான் இலகுவாக இருப்பதாக குறிப்பிடுகின்றனர். இக்குலப்பெர் வழக்கமானது ஆதிபண்பாட்டம்சமொன்றின் எச்சமாகவே கருதப்படுகின்றது. 

குடிப்பெயர்கள் 

தென்கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவ கலாசார அம்சங்களில் தாய்வழிக்குடிவழிமுறையும் முக்கியமானதொன்றாகும். இங்கு வாழும் தமிழ்மக்களோடான ஆரம்பகால தொடர்புகளை தெளிவாக விளக்கும் பண்பாட்டுக்கூறாக இது காணப்படுகின்றது. கிழக்குமாகாணத்தில் அதிகூடிய குடிகளைக் கொண்ட ஊராக சம்மாந்துறை திகழ்கின்றது. இங்கு 31 குடிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு குடிப்பெயர்களும் பல்வேறு வரலாற்று செய்திகளைக் கொண்டிருக்கின்றன. 

உதாரணமாக – அல்லிப்பூகுலி, ஆதம்பட்டாணி குடி, அழகுவெற்றிலைகுடி, சோழியன்குடி, பணிக்கனா குடி, பட்டிசிங்கிபவளஆராய்ச்சி குடி, பணக்கன்கத்தர குடி, வெள்ளரசன் குடி போன்றவற்றைக்குறிப்பிடலாம். 

இவ்வாறு பெயராய்வானது இப்பிரதேசத்தின் பண்பாட்டுத் தொன்மை, கலாசாரத் தனித்துவம், வராலாற்றுச் செய்திகள் போன்றவற்றை அறிந்துகொள்ள  பலவகைகளிலும் பயனுடையதாய் அமைகின்றது.   

 
Views: 325