வீறு நடை

எழுத்தாளர் : லக்ஷி குணரத்தினம்மின்னஞ்சல் முகவரி: luxshekuna@gmail.comBanner

பாரன் போற போக்க. பொட்டென்ன, அலங்காரமென்ன. புருஷன் இல்லாதவள் போலவா நடந்து கொள்ளுறாள். அவளும் அவளின்ர உடுப்பும். வரவரச் சரியான மோசம். எங்களுக்கென்ன எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று பாக்கியத்தைப் பற்றி அன்னலட்சுமி பக்கத்தில் பஸ்ஸூக்காகக் காத்திருந்த சகுந்தலாவுக்கு எடுத்துரைத்தாள். 

சகுந்தலா சொந்த ஊரை விட்டுத் திருமணம் முடித்துப் போய் கால் நூற்றாண்டாகின்றன. அதனால் இப்பொழுது இருக்கும் ஊர்க்காரரின் விஷயம் பெரிதாகத் தெரியாது.....சொந்தக்காரரின் திருமண விழாவுக்காய் வந்தவள் நேற்றுத் திருமணம் முடிந்தவுடன் இன்று ஊருக்குக் கிளம்புகிறாள். இருவருக்கும் வயது அறுபதைத் தொடும். பின் கட்டிளமைப் பருவத்திலுள்ளவர்கள். ஊரிலுள்ள சில பெண்களுக்கு எப்பொழுதும் அடுத்தவர் புராணம் படிப்பதென்றால் அலாதிப்பிரியம் உண்டு. தமது வீட்டு ஜன்னலைப் பார்ப்பதைக் காட்டிலும் அடுத்தவர் ஜன்னல் அவர்களுக்கு இனிக்கும். 

என்னக்கா சொல்லுறீங்கள். ஒண்டுமே விளங்குதில்லை. உவள் பாக்கியத்துக்குப் புருஷன் இருக்கிறான் தானே என்று இழுத்தாள் சகுந்தலா. 
அட, உனக்குத் தெரியாது என....அத மறந்தே போனன் பாரு என்று நாடியில் கை வைத்து வியப்பாய் தலையசைத்தாள் அன்னலட்சுமி. 

ஊரில் வம்பிழுப்பதில் அன்னலட்சுமிக்கு நிகர் அன்னலட்சுமி தான். எங்கே இருந்து புறணி, கோள்மூட்டுதல், வதந்திகளைப் பரப்புவாள் என்று தெரியாது. ஆனால் யாரும் நினைக்காத அளவுக்கு ஒரு விடயம் அவள் மூலம் தீயாய்ப் பரவி விடும். 
ம்...நான் சொன்னனான் என்று ஊருக்க சொல்லிப் போடாத. விளங்குதோ. எங்கட ஊர்க்காரியா இருக்கிறதால சொல்லுறன். நீயும் நாலு விஷயம் தெரிந்து கொள்ளோனும் என்ட அக்கறையில. மற்றும்படி எனக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு என்ற கரிசனையுடன் ஆரம்பித்தாள் அன்னலட்சமி. 
சகுந்தலாவுக்கும் நேரம் போக வேண்டுமே.

விஷயம் வெளியால வந்துதோ..அவ்வளவு தான் நான் துலைஞ்சன் என்ற மிரட்டலுடன் கதை கூற அன்னலட்சுமி ஆரம்பித்தாள்.  நான் யாரிட்ட அக்கா சொல்லப் போறன். சும்மா சொல்லுங்கோவன். பஸ்சும் வர நேரமாகும் போல கிடக்கு என்று சகுந்தலா வீதியை எட்டிப் பார்த்துச் சன நடமாட்டமும் கொஞ்சம் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கதை கேட்க ஆயத்தமானாள். 

எடி... சகுந்தலா. இவள் பாக்கியம் எங்கட கந்தப்புட நாலாவது பிள்ளை. அந்தக் காலத்தில ஊரில நல்லா வாழ்ந்த குடும்பமென்டா அவங்கள் தான். இப்ப தானே வெளிநாடு அது இது என்டு சனத்திட்ட பணம் புழங்குது. ஆனால் உள்ளூரிலேயே உழைச்சு நல்ல வசதியா வாழ்ந்த மனுசன் கந்தப்பு. இந்த யுத்தச் சண்டையால எல்லாத்தையும் இழந்து இவேன்ர குடும்பத்தில இவள் பாக்கியமும் பிள்ளையும் தான் இப்ப மிச்சமா வந்து இருக்கினம். இப்ப பாக்கியம் அவளுக்கென்ட வயலையும் பார்த்துக் கொண்டு காமென்ஸ்சுக்கும் வேலைக்குப் போறவள் என்று ஆரம்பித்தாள் அன்னலட்சுமி. 

ஓ...நல்லா வாழ்ந்த குடும்பம் தானேயக்கா... எங்கட அப்பாவும் சொன்னவர், என்ர கல்யாண நேரம் காசுக்கு ஓடுப்பட்டுத் திரியேக்க, கந்தப்பு தான் உதவி செய்தவர் என்று. நல்ல மனுஷன் தான். அரைவாசில போயிற்றுதே. இப்ப பிள்ளையும் எல்லாத்தையும் இழந்திட்டு நிற்குது என்டுறீங்கள். ஐயோ பாவம்! நினைக்கவே கஷ;டமாக் கிடக்கு என்று கவலைப்பட்டாள் சகுந்தலா. 

நீ..வேற. அங்க அதுக்காகவெல்லாம் அவள் கவலைப்படுற மாதிரியே தெரியேல்ல. எப்பவும் சீவிச் சிங்காரிச்சுக் கொண்டு அவள் சந்தோஷமாத் தான் திரியுறாள். கணவனைப் பக்கத்தில வைச்சுக் கொண்டு நாங்கள் தான் அலங்கோலமாத் திரியுறம் என்ற ஏக்கப் பெருமூச்சு விட்டாள் அன்னலட்சுமி. 

புருஷன் இல்லை என்ட மாதிரி சொன்னீங்கள் அது என்ன கதையக்கா. இது சகுந்தலா. 
பொறு...பொறு... சொல்லுறன். என்னத்துக்கு அவசரப்படுறாய் என்றாள் அன்னலட்சுமி. 

கொஞ்சம் கிட்ட வா சகுந்தலா என்று அவளைப் பக்கத்தில் அழைத்துக் கதை சொன்னாள் அன்னலட்சுமி என்கிற அன்னம். 
இப்ப பாக்கியத்தோட யார் இருக்கினம் என்று தெரியுமோ. பாக்கியத்தின்ட புருஷனின்ட தம்பி அரசரத்தினம் தான் அவளோட இருக்கிறான். இன்னும் அவன் கல்யாணமும் முடிக்கேல்ல. இவள் பாக்கியமும் அவனோட தான் எங்க போனாலும் போறது, வாறது. பாக்கியம் செய்யிற வேலைகள் கண்டியோ... வாயால சொல்லேலாது. என்றாள் அன்னலட்சுமி. 

புருஷன் இல்லையெண்டு துணைக்கு இருக்கிறான் போல அக்கா. அதுக்கென்ன தனிய இருக்கிற பொம்பிளைக்குச் சொந்தக்காரர் பாதுகாப்பா இருக்கிறேல்லையே. இதையா பெரிய விஷயம் என்று பீடிகை போட்டீங்கள். நானும் என்னமோ ஏதோ என்டு, கூடக் கற்பனை பண்ணிப் போட்டன் என்றாள் சகுந்தலா. 

அடி.. என்னடி இவள். சும்மா பாதுகாப்புக்கு என்று இருக்கிறதுக்கும், புருஷனா நடந்து கொள்ளுறதுக்கும் வித்தியாசம் இருக்கடியம்மா. என்ர இவ்வளவு வருஷ அனுபவத்தில சொல்லுறன் பாக்கியம் அரசரத்தினத்த வைச்சிருக்கிறாள். இல்லாட்டி ஒன்டா மோட்ட சைக்கிள்ல போறதென்ன, கெக்கட்டமிட்டு சிரிக்கிறதென்ன, அவளின்ர பிள்ளைகளுக்கு ஏதும் என்னெடா அவன் அரசன் துடிச்சுப் போறதென்ன. என்னத்தைச் சொல்ல, என்று ஏங்கினாள் அன்னலட்சுமி. 

சரி....இப்ப இவனோட இருக்கிறாள் என்டால். அப்ப அவளின்ர புருஷன் எங்க போயிட்டான். எங்கயும் வெளிநாட்டுக்குப் போயிற்றானே என்று கேட்டாள் சகுந்தலா.

ஆ....அவன் அங்க ஒன்டும் போகேல்ல. பிரச்சினை வந்தது தானே 2009இல. எல்லாத்தையும் பறி கொடுத்திட்டு உயிரையாவது பாதுகாப்பம் என்டு எல்லாரும் ஓடினவங்கள். ஒரு மாதிரித் தப்பிச்சு வவனியாவில முகாம்ல கொண்டே எல்லாரையும் போட்டவன்கள். அங்க இருந்து ஒரு மாதிரி வெளியால வந்து வீட்டுத்திட்டத்தால பாக்கியம் இப்ப வாழுறாள் என்றாள் அன்னலட்சுமி. 

நல்ல காலத்துக்கு நாங்கள் 90 பிரச்சினையோட வெளிக்கிட்டிட்டம். இல்லாட்டி நாங்களும் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்திருக்குமோ என்டு தெரியாது. இப்ப தான் சொந்த ஊருக்கு வர காலம் வந்திருக்கு என்று திருப்திப்பட்டாள் அன்னலட்சுமி. 

அது எங்கள் எல்லாருக்கும் தெரிந்த கதை தானே அக்கா. நீங்க மேல சொல்லுங்கோ. இவள் பாக்கியத்தைப் பற்றி என்று அவசரப்படுத்தினாள் சகுந்தலா.
அடி..என்னடி இவள்..கொஞ்சம் கொஞ்சமாத் தானே சொல்லேலும். பொறு சொல்லுறன்....

இந்த யுத்தப்பிரச்சினை வாரதுக்கு முன்னம், முதல் வருசம் 2008 எண்டு நினைக்கிறன். ஏதோ விசாரணை இருக்கென்று பாக்கியத்தின்ர புருஷன் கமலநாதன், வெள்ள வானில வந்து கூட்டிக் கொண்டு போனவங்களாம்...இந்தா..பக்கத்தில தானே, ஒன்றுக்கும் யோசிக்காத என்டிட்டுப் போனவன் தான். இன்னும் வீடு வரேல்ல என்று நீண்ட பெருமூச்சு விட்டாள் அன்னம். 

அடக் கடவுளே.. இப்புடி எங்கட சனங்கள், ஒண்டு ரண்டே.. நிறையச் சனம் இப்பவும் கஷ;டப்பட்டுக் கொண்டு தானே இருக்குதுகள். எப்ப எல்லாரும் வாறாங்களோ தெரியாது எனக்கா என்றாள் சகுந்தலா.

இவளின்ட கதை. வாறதென்டா எப்பவோ வந்திருக்கோனும். உயிரோட இருக்கிறாங்களோ என்னமோ. யாருக்கடியம்மா தெரியும் என்றாள் அன்னம். 
என்னக்கா..நீங்கள்...இப்புடி சொல்லுறீங்கள். எங்கட சனங்களின்ட நம்பிக்கைய நாங்களே கெடுக்கிற மாதிரி என்ன கதை உது.. எங்கயோ எல்லோரும் இருக்கிறாங்கள். எண்டைக்கென்றாலும் வருவாங்கள். இஞ்சே...என்னட்டச் சொன்ன மாதிரி வேற யாரிட்டையும் சொல்லிப் போடாதேங்கோ.. அடிச்சுக்கிடிச்சுப் போடப்போறாங்கள் என்று கோபமும் இயலாமையும் கலந்த தொனியில் சகுந்தலா பேசி முடித்தாள். 

சற்றும் பயப்படாதவளாக அன்னலட்சுமி நின்று கொண்டிருந்தாள். தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, பிறகு அவளே பேச ஆரம்பித்தாள். 
எனக்கென்னமோ.. இப்புடித் தோனிச்சுது சொன்னன். ம்...சரியடியம்மா.. அத விடுவம். உனக்கும் எனக்கும் இதால ஏன் வீண் பொல்லாப்பு. நான் பாக்கியத்தின்ர விளக்கத்துக்கு வாறன் என்றாள் அன்னம். 

அன்னலட்சுமியை விடச் சற்றுப் படித்தவள் சகுந்தலா. உலக விடயம் அறிந்தவள் என்பதால் உலக நடப்பும் சமூகப் பிரச்சினைகள் பற்றியும் அவளால் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அன்னலட்சுமி அப்படியல்ல. பிரச்சினையைத் தூண்டி விட்டு சனங்கள் படும் வேதனையை ரசித்து மகிழும் குணங் கொண்டவள்.
 
சரியக்கா.. பாக்கியத்தின்ர மனுஷன் கமலநாதனுக்கு என்னவாகிற்று என்று சொல்லுங்கோ என்றாள் சகுந்தலா. 
அதுதான் சொன்னனே. போனவன் போனவன் தான். பாக்கியமும் இரண்டு குழந்தைகளையும் வச்சுக் கொண்டு எத்தின முறை படியேறிப் பார்த்திட்டாள். எங்க இருக்கிறான். என்னவென்டு தெரியேல்ல. பிள்ளைகள் இப்ப வளர்ந்திட்டுதுகள். இந்தப் பிள்ளைகள் சின்னதாக இருக்கேக்க அதுகள வளர்க்கப் பாக்கியம் பட்டபாடு என்றாள் அன்னம். 
ஓ....பின்ன சரியான கஷ்டம் தான் என்று மனமுருகினாள் சகுந்தலா. 

கமலநாதன் லொறி வைச்சிருந்தவன். ஊர் ஊரா லோட் ஏத்திக் கொண்டு போறவன். பதுளையிலிருந்து தேயிலை மாதிரி மலைநாட்டுச் சாமான்கள்; கொண்டு வந்து போட்டிட்டு எங்கட இடத்திலயிருந்து தேங்காய் கொண்டு போவான். அப்பிடிப் வரேக்க பார்த்து ஆசைப்பட்டது தான் பாக்கியத்தையும்....என்றாள் அன்னம்.

ஆ....அப்ப நல்ல காதல் கதையல்லோ வாச்சுப் போயிருக்கும் உங்கள் எல்லாருக்கும்....என்ன பிறகு அவளின்ர தகப்பன் ஒத்துக் கொண்டிருக்க மாட்டாரே, இந்தக் கல்யாணத்துக்கு. அவர் சாதிமான் ஆயிற்றே...என்றாள் சகுந்தலா.
சரியாய்ச் சொன்னாயடியம்மா. பின்ன என்ன. லேசில ஊர்ப்பிள்ளைகள் அப்பிடிச் செய்தாலே விடாத மனுசன். தகப்பன் ஒத்துக் கொள்ளேல்ல எண்டோன்ன பாக்கியத்தைக் கூட்டிக் கொண்டு கமலநாதன் போயிற்றான்;... மகளைக் காணேல்ல எண்டு ஒரு நாள் முழுக்கத் தேடினார். பிறகு பாக்கியம், கமலநாதனோட லொறில போனதாப் பார்த்து யாரோ சொன்னவங்கள். பிறகு அப்பிடியே அவளத் தலை முழுகீற்றார் என்றாள் அன்னலட்சுமி. 

ம்.....சரிதானே அவர் செய்தது. என்ர பிள்ளைகள் ஏன் இப்பிடிச் செய்யப் போறாங்கள். அப்பிடிச் செய்தாலும் நானும் இந்த முடிவு தான் எடுப்பன். நல்ல சேட்டை. கண்டவங்களையெல்லாம் வீட்டுக்க விடுறதுக்கு..... பின்ன எப்பிடி அங்க தோட்டக்காட்டுப் பக்கம் போனவள் திரும்பி வந்து இங்க இருந்தவள் என்று தனது சந்தேகத்தை வெளியிட்டாள் சகுந்தலா.

பாக்கியத்துக்கெண்டு முதலே தகப்பன் காணி எழுதி வைச்சிருந்தவர். இரண்டு வருஷம் கழிச்சு அவர் சாகவும் இங்க வந்து இருந்திட்டாள். உவளை ஒருத்தரும் இங்க அணைக்கிறேல்ல. குடும்பமே பிறத்தியாளப் போல தான் பார்க்கிறது. இப்ப கமலநாதனின்ட தம்பி வந்து இருக்கிறான். காவலுக்கு என்ட பேரில ரெண்டும் சேர்ந்து கூத்தடிக்குதுகள். இதுகளால எங்கட ஊரிலவுள்ள மற்றாக்களுக்குத் தான் மரியாதையில்லை என்று அங்கலாய்த்தாள் அன்னம். 

நீங்கள் இவ்வளவு சொல்லுறதப் பார்த்தா. பாக்கியம் பேக்காய் போல தான் கிடக்கு. ஓமக்கா... அவள் இப்ப போன போக்குத் தனிய இருக்கிற பொம்பிளை போன மாதிரியே இருக்கு. ஏதோ தன்ன விட்டா இந்த ஊரில ஆளே இல்லை என்ட மாதிரியல்லோ போனவள் என்றாள் சகுந்தலா.

ம்...அது தான் நான் சொன்னனே. மூத்த ஒருத்தி இங்க இருக்கிறன் என்ட பேச்சை யார் இங்க கேட்கினம் என்று தான் பாக்கியத்தைப் பற்றி சொன்னதை சகுந்தலா ஆமோதித்தை எண்ணி பெருமிதப்பட்டாள் அன்னம். 
நேரடியாச் சொல்லிப் பாருங்கோவன் அக்கா. புருஷன் பக்கத்தில இல்லை. அதுக்கு ஏத்த மாதிரி நடந்து கொள். பார்க்கிறாக்கள் என்ன நினைப்பினம் எண்டு கேட்டாள் சகுந்தலா.
ஓ....நானும் எத்தினை தடவை தான் சொல்லுறது. அவளுக்கு ஒரு பொம்பிளைப் பிள்ளையும் கடைசி ஆம்பிளைப் பிள்ளையொன்றும் இருக்குதுகள். பிள்ளைகளுக்காகவென்டாலும் ஒழுக்கமா நடந்து கொள் என்று ஒருக்காச் சொல்லிப் போட்டன். ஓம். பெரியாக்கள் நீங்கள் சொல்ற மாதிரி நடந்து கொள்ளுறன் என்று தலையாட்டிவிட்டுச் சென்றாள் என்று விட்டுத் தொடர்ந்தாள் அன்னம். 

அடுத்த முறையும் காணேக்க இப்புடிச் சிவத்தப் பொட்டு வைக்காத. அவன் இருக்கிறானோ இல்லையோ... என்டு, சொல்லிப் போட்டன். எங்க இருந்து அவளுக்கு அவ்வளவு கோபம் என்டு எனக்குத் தெரியேல்ல. ஓ....என்ர ஒழுக்கம் முதல்ல இருக்கட்டும். நீங்க உங்கட ஒழுக்கத்தைப் பாருங்கோ என்று அத்தின பேர் இருந்த கல்யாண வீட்டில வைச்சு முகத்துக்கு நேரச் சொல்லிப் போட்டுப் போயிற்றாள். எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்தது தெரியுமோ என்று வருத்தப்பட்டாள் அன்னலட்சுமி. 
ஆ...அக்கா.. அப்பிடியே சொன்னவள். உப்பிடிக் கதைப்பாள் என்டால் அவளிட்ட கொஞ்சம் கவனமாகத் தான் இருக்கோனும். என்ன திமிரு எனக்கா, பெரியாக்கள் என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் என்ன கதை கதைச்சிருக்கிறாள் என்றாள் சகுந்தலா.

சகுந்தலாவுக்கு முதலில் பாக்கியம் மீது இரக்கம் ஏற்பட்டாலும் பெற்றோரை எதிர்த்துக் காதல் திருமணம் செய்தவள் என்றவுடன் ஏற்பட்ட இரக்கம் அப்படியே வெறுப்பாக மாறிற்று. ஆனாலும் அன்னலட்சுமிக்குப் பாக்கியம் நல்ல பதிலடி கொடுத்திருக்கிறாள். இவளுக்கு வேணும் என்று அன்னத்தைப் பார்த்து மனதுள் எண்ணி சிரித்துக் கொண்டாள் சகுந்தலா. 
இருவரும் இவ்வாறு கதைத்துக் கொண்டிருக்கும் போதே பேரூந்து வந்து நின்றது. இருவரும் ஏறிக் கொண்டனர். 
அருகிலிருந்து இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னும் இரண்டு மூதாட்டிகள் இதே விடயத்தை மேலும் காது மூக்கு வைத்து மெருகேற்றித் தங்களுக்கு ஏற்றாற் போல் பேசிக் கொண்டனர். ஒரு ஊருக்கு மட்டுமே தெரிந்தது. இப்பொழுது அடுத்த ஊருக்கும் தெரிந்து போயிற்று. பாக்கியம் தான் எங்கு பார்த்தாலும் கதைப் பொருளானாள். 

பாக்கியம் பொட்டு வைத்துத் திருமணம் முடித்த பெண்ணாகவே வலம் வருவது அவளது கணவனுக்குப் பிடித்த விடயம். அவர் என்றோ ஒரு நாள் வருவார். அவர் வருகின்ற நாள் கணவர் இல்லை என்று பொட்டின்றி அலங்கோலமாய்க் காட்சியளிக்க விரும்பாது, பாக்கியம் தன் கணவன் கமலநாதனுக்குப் பிடித்தாற் போன்று வாழ்கிறாள். கணவன் கமலநாதன் உயிருடன் இருக்கின்ற போது எப்படி இருந்தாளோ அவ்வாறே இப்பொழுதும் இருக்க விரும்புகிறாள். எதிர்பாராத நாளொன்றில் அவனைக் காண்கையில் அவனது பாக்கியமாகவே காட்சி தர வேண்டும் என்பதே அவளின் பிரார்த்தனை. 

அடுத்த விடயம். கணவன் எங்கோ இருக்கிறார். பாக்கியத்துடன் பேசவில்லை அவ்வளவே என்ற எண்ணமே அவளிடம் இருக்கிறது. தனியே இருக்கும் பெண்ணுக்குத் தாலி அவளுக்கான வேலியும் கூட. அவளின் சொந்தமே அவளை ஒதுக்கி வைத்திருக்கும் போது வெளியிடங்களுக்குச் செல்கையில் பாலியல் சேட்டைகளிலிருந்தேனும் பாக்கியம் தப்பிக்க முடியுமே. திருமணமானவள் என்கிற மரியாதையிலேனும் விலகிச் சென்று விடுவர். இத்தனை விடயங்களை எண்ணியே இன்று வரைக்கும் காத்திருக்கிறாள் இனியும் காத்துக் கொண்டிருக்கத் தயாராக இருக்கிறாள் பாக்கியம் கமலநாதன். 

கடைக்குச் செல்ல முடியவில்லை அவளால். பிள்ளைகளின் பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை. மன அழுத்தம் மேலிட தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட ஒருமுறை அவளுக்குத் தோன்றிற்று. ஆனாலும், பிள்ளைகளின் முகத்துக்காகவும் தன் கணவர் வருவார் என்ற நம்பிக்கையிலும் அந்த முயற்சியைக் கைவிட்டு வாழ வேண்டும் என்ற தன்முனைப்பில் வாழ்ந்து வருகிறாள் பாக்கியம். 

ஒருமுறை பிள்ளைகளுடன் இரவு நித்திரை செய்து கொண்டிருந்த போது ஒருவன் மேல் முகடு பிரித்து உள்ளே இறங்கினான். எப்பொழுதும் விழிப்புடனேயே படுத்திருக்கும் பாக்கியம் எழுந்து கத்திக் கூப்பாடு போடவும், நல்ல வேளைக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பிள்ளைகளுக்காக, அவளின் வீட்டுக்கு வரவும், உள்ளே இறங்கியவன் பயத்தில் ஒரே ஓட்டமாய் ஓடியே விட்டான். இனிமேல் இப்பிடித் தனியே பிள்ளைகளை வைச்சுக் கொண்டு இருக்காதே. எல்லா நேரமும் ஒரே மாதிரி இராது. நாங்களும் இப்பிடி நெடுகலும் வந்து உதவி செய்வம் என்று நினைக்காதே, வேணுமெணடால் பேசாமல் உன்ர புருஷனின்ர ஊருக்கே போயிரு என்று குரலில் சற்றுக் கண்டிப்புடன் பக்கத்து வீட்டுக்காரர் சொல்லி விட்டுச் சென்றார். 

அன்றிலிருந்து பாக்கியத்துக்குப் பயம் தொற்றிக் கொண்டது. தனக்கு ஏதும் எண்டாலும் பரவாயில்லை. ஆனால் மகள் வயதிற்கு வரப் போகிறாள். அவளை எப்பாடு பட்டேனும் ஒழுங்காக வளர்க்க வேண்டும் என்று ஆசை கொண்டவள், தன் புகுந்த வீட்டாருக்குத் தொலைபேசி எடுத்தாள். கமலநாதனின் தந்தையும் தாயும் இப்பொழுதும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர்கள். அவர்களால் அதனை விட்டு இங்கு பாக்கியத்துடன் வந்து இருப்பது சாத்தியமற்றது. அவளுக்குக் கரைச்சலும் செலவும் அதிகமாகும் என்று கவலைப் பட்டனர். 

எனவே தான் பாக்கியத்துக்கு இருக்கும் நிலபுலத்தைப் பார்த்துக் கொண்டு பிள்ளைகளுக்கு உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று அரசரத்தினம் கிளம்பி வந்து விட்டான். தங்கள் சித்தப்பா மீது அளவு கடந்த அன்பு கொண்ட பிள்ளைகளும் ஒரு பாதுகாப்பு உணர்வுடன் தற்போது சந்தோசமாக இருப்பதை பாக்கியம் உணர்கிறாள். அரசரத்தினம் கமலநாதனை விடப் பத்து வயது இளையவன். அவனுக்குப் பாக்கியம் எப்பொழுதும் அம்மாவுக்கு அடுத்த நிலை உறவிலும் மூத்த சகோதரியைப் போன்றும் நடந்து கொண்டாள். அரசரத்தினம் அண்ணி என்று அழைப்பதில்லை. எப்பொழுதும் அக்கா என்றே அழைப்பதுடன், அக்காவுக்கான அத்தனை மரியாதை, பாசம், அன்பு மழை பொழிந்தான். அதனால் பாக்கியத்துக்கும் அரசரத்தினத்துடன் இருப்பது அவ்வளவு ஒன்றும் முறைகேடான செயலாகத் தோன்றவில்லை. 

ஆனால் நாட்போக்கில் ஊரார் பொடி வைத்துப் பேசவும் கடை வீதி, சந்து பொந்து என்று அவளின் கதை வரவும் துடித்துப் போயிற்றாள். தன் வாழ்க்கை தான் இப்படியென்றால் அரசன் இன்னும் திருமணம் செய்யவில்லை. அரசரத்தினத்தின் வாழ்க்கை தன்னால் பாதிக்கப்படக் கூடாதென்று அவனை மறுபடியும் பதுளைக்கே சென்று விடுமாறு பணித்தாள். ஆனால் அரசன் கேட்கவில்லை. 

என் அண்ணன் பிள்ளைகள் இங்கே கஷ்டப்படவும் என்னால் அங்கே எப்படியக்கா நிம்மதியாக இருக்க முடியும். சின்னத்தம்பி ஒரு நிலைக்கு வரும் வரைக்கும் நான் இங்கேயே இருக்கே. உங்க சொந்தத் தம்பியென்டாக்க ஊரவங்க கதைக்கிறாங்க என்று போகச் சொல்லியிருப்பீங்களா, அவுங்க எல்லாத்துக்கும் தான் கதைப்பாங்க. பிரச்சினையென்று வந்தாக்க அவங்க ஒன்றும் கவலைப்பட மாட்டாங்க என்று அரசரத்தினம் கூறவும் பாக்கியம் செய்வதறியாது தவித்தாள்.
எங்களுக்காகப் பார்த்து உங்கட வாழ்க்கையெல்லோ தம்பி வீணாப் போகப்போகுது என்றாள் பாக்கியம். எனக்கென்று இருக்கிற பொண்ணு எனக்கு எப்பவும் வருவாங்க. நீங்க கவலைப் படாதேங்க அக்கா. எல்லாமே நல்லதா நடக்கும். அண்ணா வர்ற வரை, சீதாக்கு இலக்குமணன் போல் இந்த பாக்கியத்துக்கு நான் அரசன் இருக்கிறன் அக்கா என்று அரசரத்தினம் சொன்ன விதத்தில் பாக்கியம் தன் கவலை மறந்து சிரித்தே விட்டாள். 

சின்னப் பையன் எண்டாலும் என்னமாக் கதைக்கிறான். கெட்டிக்காரன் தான் என்று தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றாள் அவன் அண்ணி பாக்கியம். இல்லையில்லை அக்கா பாக்கியம். 

அன்றிலிருந்து யாருடனும் வீண் சண்டைக்குப் போவதில்லை. யார் என்ன கதைத்தாலும் கதைக்கட்டும். தனக்குத் தன் குடும்பம், பிள்ளைகள் தான் முக்கியம் என்று கமலநாதனின் வரவைத் தினமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் பாக்கியம். 

அதனால் தான் அன்றும் வம்பிழுக்கும் அன்னலட்சுமி பஸ் நிறுத்தத்தில் யாருடனோ தன்னைக் காட்டிக் கதைத்துக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாதது போல் வீறுநடை போட்டுச் சென்றாள் பாக்கியம் கமலநாதன். 

 
Views: 386