மரவள்ளிக்கிழங்கு

எழுத்தாளர் : தனிஷ்ரன் மின்னஞ்சல் முகவரி: tthanistanr@gmail.comBanner


அவனுக்கு அப்ப பத்து வயசு. அந்த பள்ளி தான் யாழிலேயே பெரிய பாடசாலை என்று அப்பா சொன்னார். அங்கே சேரணுமெண்டா ஸ்கொலர்சிப் பாஸ் ஆகணுமாம். அந்த பள்ளியில சேரணுமெண்டே படிச்சு தட்டித்தவறி ஸ்கொலர்சிப்பும் பாஸ் பண்ணிட்டான். ஸ்கூல் அட்மிஷனும் கிடைச்சிட்டுது. இவன் ஆறாமாண்டுக்காக முதல் நாள் ஸ்கூலுக்கு போறான். (க)பெஸ்ட் இம்பிரசன் வாசல்ல நிண்ட ரிபெக்ட்ஸ்

பாடசாலை ஆரம்பிக்க முதல், பாடசாலை முடிந்த பின்பு என பாடசாலையின் செயற்பாடுகளை கிட்டத்தட்ட இராணுவ ஒழுங்குடனான சீரான ஒழுக்க கட்டுப்பாட்டின் கீழ் பாடசாலையை இயக்கிக்கொண்டிருந்ததே ப்ரிபெக்ட்ஸ் தான். அதிபர், ஆசிரியர் எல்லாரும் இவர்களுக்கு அடுத்த படியில் தான். மாணவத்தலைவன் என்ற சொல்லுக்கு சிறிதும் பிசிறாமல் இவனை போன்ற பல மாணவர்கள் வியந்து ''அண்ணா'' என்று அன்பு செய்யும் அளவுக்கு யூனியர் மாணவர்களை வழிநடத்திய தலைவர்கள் அவர்கள்.

வெள்ளைச்சேட்டு வெள்ளை டவுசர் போட்டு அவர்கள் வாசலில் நிற்கும் தோரணையில் இவன் சொக்கிப்போயிருக்கிறான். அவர்களின் கம்பீரத்தால் மீசை வைத்த குழந்தைகளாக தெரிந்தார்கள் இவனுக்கு. தானும் வளர்ந்து பெரியவனாகி அந்த அண்ணாக்கள் போல ப்ரிபெக்ட்ஸா வரணும்; கெத்தா உலாத்தணும் எண்ட ஆசை இவனுக்கு.

பத்தாமாண்டு படிக்கிறான். இவன் ஆறாமாண்டில பார்த்த ப்ரிபெக்ட்ஸோட முகம் இந்த ஐந்து வருசத்தில மாறியிருந்தது. இருந்தாலும், தான் மாணவ முதல்வனாவேன். தான் ஆறாமாண்டில் பார்த்த அதே மாணவ முதல்வர்கள் போல தானும் இருப்பேன் என்ற ஒரு ஆசை இவனுக்குள் இப்பொழுதும் இருந்தது.

பத்தாமாண்டில இவன் ஸ்கூல் போறது லேட்டா தான். ப்ரேயர் எல்லாம் முடிஞ்சு ப்ரிபெக்ட்சும் வகுப்புக்களுக்கு போன பிறகு தான் இவன் பள்ளிக்கூடத்துக்கே போவான். இதனால அனேகமாக யாரிடமும் மாட்டுப்படாமல் தப்பிடுவான். மாட்டினாலும் பஸ் லேட், பஸ் ப்ரேக் டவுண்னு ஏதும் காரணம் சொல்லி தப்பிச்சிடுவான். அண்டைக்கு ஒரு நாள், பத்து பதினைந்து ப்ரிபெக்ட்ஸ் சேர்ந்து நிக்கேக்க பிடிபட்டுட்டான்.

லேட்டா வந்த எல்லாரையும் விசாரிச்சு எச்சரிச்சிட்டு வகுப்புகளுக்கு அனுப்பினாங்கள். இவனை மட்டும் பிடிச்சு வைச்சு ஆள் ஆளுக்கு விசாரிச்சாங்கள். ஒருத்தன் விசாரிச்சுக்கொண்டிருக்க மற்றவன் தடியால அடிச்சான். இவன் கடைசியா தான் லேட்டா வாற காரணத்தை சொன்னான்.

அவர்கள் இவனை வச்சு (F)பண் எடுக்கிறதென்று முடிவெடுத்துதிருந்தார்கள். இவனது காரணம் அவர்கள் காதுகளை தட்டவில்லை. அங்கே ப்ரேயர் மேடை ஒன்று இருந்தது. அதிலே இவனை ஏற்றி விட்டார்கள். இவனுக்கு  நினைவுகள்  எங்கோ செல்ல ஆரம்பித்தது. 

சாதாரண மக்களின் உணவில் கிழங்குகள் முக்கிய இடம் வகிக்கும். இலகுவில் தோட்டங்களில் செய்யக்கூடியது, வீடுகளில் கொடிகளாக படரக்கூடியது, பெரிதாக செலவு இல்லாமல் பசியை போக்கக்கூடியது, இரண்டு மூன்று கிழங்குகளே அனைத்து குடும்ப அங்கத்தவரதும் பசியை போக்க போதுமானது போன்ற காரணங்களால் சாதாரண மக்களின் வாழ்வில் கிழங்குகளுக்கு தனியிடம் இருக்கிறது. 

கிழங்குகள் பலவகை. மரவள்ளி, இராசவள்ளி, வத்தாளை, கரணை, உருளை என்று பனங்கிழங்கு வரை நீளும் மிகப்பெரிய பட்டியல். இவற்றில் உருளைக்கிழங்கு , கரணை மட்டும் பணப்பயிர். மிச்சமெல்லாமே ஏழைக்களின் உணவு தான். இப்படி பல கிழக்குகள் இருந்தாலும் உருளைக்கிழங்குக்கு அதிகமாக பொதுப்பாவனையில் உள்ளது மரவள்ளி கிழங்கு தான். அவிச்ச கிழங்காக, மசியல் கறியாக, பொரியலாக என்று மரவள்ளி கிழங்கு எமது உணவில் வகிக்கும் பங்கு பிரத்தியேகமானது. யாழில்  விவசாய மக்களின் மூன்று வேளை உணவிலும் மரவள்ளி கிழங்கு இருக்கும். உணவுக்கு தட்டுப்பாடு நிலவிய யுத்தகாலங்களில் சில வீடுகளில் பிரதான உணவே மரவள்ளி கிழங்கு தான். காலையில் அவிச்ச மரவள்ளி கிழங்கும் கைச்சம்பலும். மத்தியானம் மரவள்ளி கிழங்கு மசியல் கறியும் நிவாரண அரிசிச்சோறும். சில வீடுகளில் மத்தியானமும் அவிச்ச மரவள்ளி கிழங்கும் கைச்சம்பலும் தான் .

தோட்டங்களில் மரவள்ளி பயிர் செய்வது எளிமையான கொஞ்சம் உடலுழைப்பு தேவைப்படும்நல்ல இன மரவள்ளி தடிகளை வாங்கி, அவற்றை சிறிய சிறிய புள்ளுகளாக வெட்டுவார்கள். புள்ளு வெட்டுவதற்கென்றே தனிமுறை இருக்கிறது. கண்டபடி வெட்டினால் அந்த புள்ளுகளை நிலத்தில் ஊன்ற முடியாது. அவை வேர் வைப்பதிலும் சிக்கல் இருக்கும். இதனால் புள்ளு வெட்டும் போது மரவள்ளி தடியில் பரிதி வழியே எல்லா பக்கமும் கத்தியால் வெட்டி தடியை சிறிய சிறிய கட்டைகளாக்குவார்கள். புள்ளு உரோஞ்சுப்படாமலும் காயப்படாமலும் கவனமாக வெட்டுவது அவசியம். வெட்டிய மரவள்ளி கட்டைகளை ஒவ்வொன்றும் இரண்டடி இடைவெளியில் மரவள்ளி பாத்திகளில் ஊன்றுவார்கள்.  ஊன்றிய கட்டைகள் வேர் பிடித்து அரும்பு தளிர்க்கும் வரை பூவாளியால்  நீரூற்றுவார்கள். கட்டைகள் தளிர்த்ததும் வாய்க்கால் மூலம் நீர் இறைக்க மரவள்ளி வளர்ந்து மூன்று மாதமளவில் வேர்களில் கிழங்குகளும் விளைந்துவிடும். விளைந்த மரவள்ளி கிழங்குகளை இழுப்பது தனிவேலை. கிழக்கு இழுப்பது, இழுத்த கிழங்குகளை
அணியம் பண்ணுவதென கொஞ்சம் சுணங்கிற அலுவல். இதனால குறைஞ்சது இரண்டு பேராவது கிழங்கிழுப்புக்கு தேவை. விடியற்காலை நாலு நாலரைக்கே விவசாயிகள் வயலுக்கு சென்றுவிடுவார்கள். கத்தி, மண்வெட்டி, உரப்பை, என்பவற்றுடன் கையில் டோர்ச் லைட்டுடன் தோட்டத்திற்கு செல்வார்கள்.

கிழங்கிழுப்பில், முதலில் மரவள்ளியின் அடியில் உள்ள மண்ணை கவனமாக விறாண்டி அகற்ற வேண்டும். மண்ணை அகற்ற மண்வெட்டி போடும் போது கீழே உள்ள கிழங்கு வெட்டுப்படாமல் மண்ணை அகற்ற வேண்டும். இதனால் மண்வெட்டியின் பக்கவிளிம்பினால்  மண்ணை வளித்து ஒதுக்குவார்கள். இதன் பின்னர் மரவள்ளியின் அடியில் பிடித்து மெதுவாக எல்லாத்திசையிலும் அசைப்பார்கள். இப்ப மண் இளகிக்கொடுக்கும். கட்டையை பலமாக அசைத்தால், கிழங்கு
மண்ணினுள்ளேயே முறிந்துவிடும். மண்ணினுள் முறிந்த கிழங்கை வெளியில எடுக்கிறது ஒரு அரியண்டம் பிடிச்ச வேலை. இதனாலே மெதுவாக எல்லாத்திசையிலும் கட்டையை அசைத்த பின்னர் மெதுவாக இழுக்க மண்ணோடு கிழங்கு வரும்.  கிழக்கு ஆழமான ஓடியிருந்தால் ஒருவர் தனியே இழுக்க முடியாது. ஆகலும் வில்லங்கபட்டு இழுத்தால் இழுப்பவரோட நாரிக்க பிடிச்சிடும். கஷ்டமாக இருக்கும் போது இரண்டு பேர் சேர்ந்து மெதுவாக இழுத்தால் கிழங்குகள் கொத்தாக வரும்.

இதன் பின் கட்டையிலிருந்து கிழங்குகளை வெட்ட வேண்டும். அதுவும் கவனமாக செய்யவேண்டிய வேலை. கத்தியை மாறிப்போட்டால் கிழங்குகள் சிதறிவிடும். பின்னர் வெட்டிய கிழங்குகளில் ஒட்டியிருக்கும் மண்ணை அகற்றி அதில் உள்ள வேர் முடிச்சுக்கள், தலைப்பு என்பவற்றை சுத்தமாக்க வேண்டும். பின்னர் சரியான முறையில் உரபாக்கில் கிழங்குகளை அடுக்கி மூட்டை கட்டுவார்கள். சீரில்லாத கிழங்குகளை சீராக உரபாக்கில் அடுக்கி கிழங்கு மூட்டை கட்டுவது தனிக்கலை. இந்த மூட்டைகளில் ஒரு விவசாயி தனது சைக்கிளில் இரண்டு மூன்று மூட்டைகளை கட்டி சந்தைக்கு கொண்டு செல்வார். 

அந்த ப்ரேயர் மேடையில் மார்ச் பாஸ்ட் போல நிண்ட படியே நூறு தரம் லெஃப்ட் ரைட் அடிக்க சொன்னார்கள். இவன் மேடையிலேறி அடித்தான். நாலைந்து பேர் மாறி மாறி இவனது பிட்டத்திலிருந்து கணுக்கால் வரை  தடியால் அடித்தார்கள். இவனது கண்ணால் கண்ணீர் வடியுது. நூறு தரம் லெஃப்ட் ரைட் அறுபதோட முடிய அவர்களது கவனிப்பும் முடிய, அழுத மூஞ்சியை கழுவிவிட்டு மெதுவாக நடந்து வகுப்புக்கு போனான். கதிரையில் இருக்க முடியாதபடி பின்பக்கம் வலித்தது. 

ப்ரிபெக்ட் ஆகணும் எண்ட இவனது ஆசை வலியில் கரைந்து கொண்டிருந்தது. 

மறுநாள் காலை நாலு மணிக்கு அப்பா எழுப்பினார். இவன் எழும்பி முகத்தை அலம்பிவிட்டு கத்தியை எடுத்து உரபாக்கில் சுற்றி சைக்கிள் கரியலில் வைத்தான். மம்பட்டியை தோளில் கொழுவிய படி சைக்கிளை மிதித்தான். முன்னால் அப்பா டோர்ச் அடித்தபடி தனது சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார்.  
Views: 247