தீவாய்ப் போதல்

எழுத்தாளர் : கிஷாந்மின்னஞ்சல் முகவரி: krushkishanth8@gmail.comBanner

வார்த்தைகளால் வலியினை வெளிப்படுத்திவிட முடியாது என்ற பெருங்கருத்து உண்டு. ஏறத்தாழ அது உண்மையும்கூட. 'பாசத்தினூடாக ஞானம் கொள்ள படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன? 'என 'அபியும் நானும்' திரைப்படத்தில் வைரமுத்து ஒரு வரியினை எழுதியிருப்பார். உலகின் ஞானமடைதல் நிலையின் பொது நிலைப்பாடு அது. போதிமரங்கள் ஞானத்தை வழங்கிடாது; மாறாக புத்தர்கள்தான் பெற்றிடல் வேண்டும். பாசத்திலிருந்து அறுபடலே ஞானநிலை என்பர். அதன் அர்த்தம் பாசம் கொள்ளாதவர்கள் ஞானம் அடைந்தவர்கள் என்பதல்ல. பாசத்தின் உள்ளாக சிக்கி, அதன் அகம் புறம் கண்டு, கொண்டாடி, குதூகலித்து, ஆனந்தக்கூத்தாடி பின்னொரு பொழுதில் அதிலிருந்து விடுபடும்போது அல்லது விடுபட வைக்கப்படும்போது ஞானநிலை தோன்றுகிறது. இங்கு விடுபடுபவர்கள் பெரும்பாலும் ஞானிகளாகிவிடுகிறார்கள். விடுபடவைக்கப்படுபவர்கள் பைத்தியமாகிறார்கள்.  ஆனால், இரண்டும் ஏதோவொரு வகையில் ஞானநிலைதான் என்பதே உண்மை.

உறவுச்சிக்கல்- கூட்டுக்குடும்ப சிதைப்புக்கும், கருக்குடும்ப அமைப்புக்கும் பிரதான காரணமாகச் சொல்லப்படுவது இதுதான். அதுதான் உண்மையும்கூட. ஆனால், இந்த உறவுச்சிக்கல்தான் எத்தனை ஆனந்தமானது என்பதை நான்காம் பரிமாணத்தில் நின்று வெறும் பார்வையாளர்களாகக் காணும்போதுதான் கண்டுகொள்ள முடிகிறது. நாம் வேடம் ஏற்கும் கணத்திலெல்லாம் அது நிஜமாகவே சிக்கலாகிப்போகிறது. சிறுவயதில் ஏறத்தாழ அனைவருமே 'அம்மா,அப்பா,அண்ணா,அக்கா,தம்பி,தங்கைச்சி யாருமே எங்களுக்கு முன்னுக்கு செத்திடக்கூடது. எல்லாரும் ஒண்டாவே எப்பவும் இருக்கோனும்.' என்ற எண்ணம் நிச்சயம் இருந்திருக்கும். சிலருடைய பட்டியலில் 'தாத்தா, பாட்டி'உம் சேர்ந்திருக்கக்கூடும். இது பதின்மவயது வரையான எண்ணப்பாடாகவே இருந்திருக்கும். 

பின்னதாக குடும்பப்பொறுப்பில் பங்கெடுக்க அண்ணா வெளிநாடு சென்றிருப்பார். போகும்போது 6 அல்லது 7 வருடம் கடினமாக உழைத்துப் பணம்திரட்டிவிட்டு சொந்தநாட்டுக்கு வந்து குடும்பத்தோட இருந்திடோனும் என்பதுதான் ஆரம்ப எண்ணப்பாடாக இருக்கும். வெளிநாடு சென்ற புதிதில் தினம் 3 அல்லது 4 தடவைகள் அழைப்பு தவறாமல் வந்துவிடும். நாள் செல்லச்செல்ல அழைப்பின் அளவு குறைந்துகொள்ளும். வெளிநாட்டு வாழ்க்கை அண்ணனை பூரணமாக உள்வாங்கிக்கொண்டிருக்கும். சொந்த நாடு திரும்புதல் என்பது வெறும் விடுமுறைக்கால சுற்றுலாவாகியிருக்கும். 

அக்கா உயர்கல்விக்காக பிரிதொரு மாவட்டம் சென்றிருப்பார். ஆரம்பத்தில் வார இறுதிநாட்கள் ஊருக்கான பயணத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். நாட்கள்நகர கல்வி அவரை முழுமையாக ஆட்கொண்டிருக்கும். வீட்டுக்கான வருகை செமஸ்டர் லீவு நாட்களாக மாறிவிடும். ஆரம்பத்தில் வீட்டுக்கு வரும்போது காவிவந்த குதூகலக்கதைகளெல்லாம் இப்போது பயணக்களைப்பு சம்பந்தமானதாய் மாறியிருக்கும். 

இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி அழைக்க குடும்பம் சிறிதுசிறிதாக சுருங்கி ஈற்றில் வீடென்பது ஒரு விடுமுறை விடுதியாய் மாறிப்போயிருக்கும். மனதில் எந்தவித பாரமுமின்றி நாட்கள் சீராக ஓடிக்கொண்டிருக்கும். சிறுவயதில் தோன்றிய அந்த எண்ணம் நினைவில்கூட இராது. 

'தீவாய் போதல்' இந்த வார்த்தையினைக் கேட்கும் கணங்களிலெல்லாம் நெஞ்சை ஏதோ ஒன்று மேலிருந்து அமுக்குவது போன்ற ஒரு தோற்றப்பாடு காணப்படும், கண்கள் மூளையின் கட்டுப்பாட்டுக்குள்ளிராமல் தானாகவே கண்ணீர்ச்சுரப்பிக்குத் தந்தியடித்திருக்கும். ஒற்றுமையாயிருத்தல் ஒன்றே ஆரம்ப இலட்சியமாய் இருந்த நாம் ஒவ்வொருவரும் இப்போது ஒவ்வொரு மூலையில்... வெறுமனே வார்த்தைப்பரிமாற்றங்களாக மாறிப்போயிருக்கும் அன்பின் கனதி. நாம் எம்மை அறியாமலே தீவாய் போகின்றோம். தனிமையற்ற பொழுதுகளில் அந்தத்தீவு இரசிக்கும் படியாக இருப்பதாக மாயத்தோற்றம் காட்டும். தனிமைப் பொழுதுகள் அந்தத்தீவிலே மிகக்கொடூரமானவை. இதயத்தைப் பிளந்தெடுத்து ஒவ்வோர் அணுக்களிலும் கிளியோபற்றாவின் ஊசிகளை இறக்கும். அந்த வேதனைக்குப் பயந்தே எம் பொழுதுகளை முடிந்தளவு தனிமையற்றதாக்கிக் கொள்கிறோம். 

இந்தத் தீவாய்ப்போதல் தவிர்க்கமுடியாத ஒன்றாக இந்த உலகமயமாக்கப்பட்ட இயந்திர உலகிலே காணப்படுவது மறக்கமுடியாத ஒன்று. உறவுகள் கூடியிருந்தபோது எமக்குப் பொழுதுபோக்கு சாதனங்கள் தேவைப்படவில்லை; மாறாக அறிவை வளர்க்கும் சாதனங்களே தேவைப்பட்டன. நாகரிகமும் தொழிநுட்பமும் வளர வளர என் பொழுதுகளை என் குடும்பத்திடம் இருந்து அவை பறித்துக்கொண்டன. பதினெட்டு வயதுவரையிலும் அம்மா அப்பாவிற்கு நடுவில் உறங்கியவன் நான். ஆனால் இப்போது எட்டு வயதில் ப்ரைவேசி கேட்கிறார்கள்.  என் பாட்டன் தீவாய்ப்போகமலேயே இறந்தான். என் தந்தை ஐம்பது வயதின் பின்னதாக தீவாய்ப்போனான். நான் பதினெட்டு வயதில் தீவாய்ப்போனேன். என் மகன்? அவனின் மகன்? 

ஒரே ஒரு நன்மை. பின்னொரு காலத்தில் குழந்தைகள் ஞானநிலை பெறாமலே மாள்வார்கள். அவர்கள் தீவாய் போக அவசியமே இராதுபோகும். உலகமே தீவாய் போனவர்களுக்கு தீவுதானே உலகமாகும்!   
Views: 190