இலங்கை மன்னர்கள் தேரவாத பவுத்தர்களா ? மனுதர்ம காவலர்களா?

எழுத்தாளர் : துவாரகன்மின்னஞ்சல் முகவரி: thuvaraganphy@gmail.comBanner

ஆராயப்போனதில் அநுராதபுரத்தில் இருந்து கோட்டே சீதாவாக்கை காலம் வரை இலங்கையின் பல மன்னர்கள் பிராமணர்கள் ஆதிக்கத்தில் தான்  இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

முதலாவது அநுராதபுர இராச்சியத்தின் மன்னன் பண்டுகாபயனை வளர்த்து அவனை மன்னனாக்கியதில் இருந்து கோட்டே இராசதானியின் கடைசி மன்னன் இராச்சிங்கனின் வலதுகரமாக செயற்பட்டது வரை பல மன்னர்களின் கிடைக்கின்ற வரலாறுகள் இதை உறுதிசெய்கின்றன. இந்த ஆய்வில் பல மன்னர்கள் அநுராதபுர பொலன்றுவை, கோட்டே கண்டி என வேறுபாடுகளின்றி பிராமணர்கள் ஆதரவோடு வருணாச்சிரமத்தை கடைப்பிடித்து மனு தர்மத்தை நிலைநாட்டியே வந்திருக்கிறார்கள். 

உதாரணத்திற்கு மேலே குறிப்பிட்ட சீத்தாவாக்கை இராசசிங்கனைப்பற்றி மட்டும் சுருக்கமாக தருகிறேன். பின்னர் நேரமுள்ள போது ஒவ்வொருவராக பார்க்கலாம்.  சீத்தாவாக்கையை உருவாக்கிய மாயாதுன்னையின் மகன் தான்  இந்த  முதலாம் இராசசிங்கன். அவன் அரசனான பின்பு அரசவையின் பிரதம ஆலோசகர் பதவியில் புரோகிதனாக பணியாற்றியவன் பிராமணனான 'அரிட்ட கிவண்டு' என்பவன் ஆகும். அரிட்ட கிவண்டுக்கு இராசசிங்கன் மன்னன்பெருமான் என்கிற பட்டத்தை வழங்கியதோடு மனு தர்மத்தை தனது சீத்தாவாக்கை முழுமைக்கும் நீதியாக்கினான். பவுத்த விகாரைகளை இடித்தழித்து பிராமண அக்ரஹாரங்களை நிறுவினான். பிக்குகள் பலரை கொன்றொழித்தான். 'மந்திரம் புற புவத்த' ஏடுகளின் படி ஒரே இடத்திலேயே நூற்று இருபத்தொரு பிக்குகளை தன் கையால் கொன்றான் இராசசிங்கன்.  இராஜவளிய இவனின் மரணத்தை அரிட்ட கிவண்டுவின் சூனியம் ஏவலோடு பிணைக்கிறது. ஆனால் பலன யுத்தத்தின் பிறகு மூங்கில் சிராய்கள் கிழித்த காயங்கள் ஆறாமல் இறந்தான் என்று தான் மகாவமிசம் சொல்கின்றது. 

காலாகாலமாக வருணாச்சிரமத்தை தலைமேற்கொண்ட பல மன்னர்கள் பெயரளவில் தான் பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் முழுமையான பட்டியலொன்றை விரைவில் எதிர்பாருங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக திரட்டிய தகவல்கள் இவ்வளவு தான். போகப்போக பட்டியல் வளரட்டும். 

( பிராமணர்களிற்கு நிவந்தங்கள் அளிப்பதும் ஆதரிப்பதும் மனுதர்மத்தை ஆதரிப்பதாகி விடுமா என்று மொன்னை நியாயங்களோடு முட்டுக்கொடுக்க வர வேண்டாம். )

2ம் சேனன் ஆயிரம் பிராமணர்களுக்கு தங்க ஆபரணங்களை தானம் அளித்திருக்கிறான். இரண்டாம் மகிந்தன் முதலாம் சேனன் ஆகியோர் பிராமணருக்கு நிலங்களை வழங்கினார்கள். P.A.P.கருணாதிலக்க கருத்தின் படி பிராமணர்கள் அநுராதபுரக்காலத்தில் புரோகிதர் என்கிற ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்ததாகவும், அரச உயர்மட்டங்களோடு நெருங்கிப்பழகும் அளவு செல்வாக்கோடு இருந்ததாக பூஜாவளி செய்திகளை வைத்து சொல்கிறார். மானாபரணனின் அரசவையில் அமைச்சனாக பிராமணர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலாம் இராஜசிங்கனின் காலத்தில் படைத்தலைமை அதிகாரியாகவும், பிரதான அமைச்சனாகவும் பிராமணர்கள் அரசவையில் செல்வாக்கு செலுத்தினார்கள். இரண்டாம் பராக்கிரமபாகு பிராமணர்களை மட்டும் கொண்ட அரசவையை நடத்தியிருந்தான். கோட்டே ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் இரண்டு பிராமணர்களை கேட்டே அரசவை நிர்வாகத்தை நடத்தியிருந்தான். ஒருவல சாசனத்தில் பிராமணர்களின் செல்வாக்கு கோட்டே அரசவையில் எப்படியானதாக இருந்தது எனவும் அறிய முடியும். சம்மோகவினோதனியின் படி அநுராதபுர அரசவையை ஒரு பிராமணர் கைப்பற்றியதை அறிய முடிகிறது. 103 இல் வட்டகாமினி அபயனிற்கு எதிரான கிளர்ச்சியை றோகண தேசத்தில் தூண்டியவன் திஸ்ஸ என்ற பெயருடைய பிராமணன் ஆவான். பண்டைய பிராமிச்சாசனங்களின் படி பௌத்த சங்கங்களுக்குள் பிராமணர்கள் ஊடுருவினர். நிவந்தங்களை வழங்கினர். பௌத்தர்களாக மாறிக்கொண்டனர். மகாசேனன் காலத்து பிராமண கிராமம் ஒன்றை மகாவம்சம் குறிப்பிடுகிறது. கிராமத்தோடு அவர்கள் பௌத்தர்களாக மாறிக்கொண்டனர். பிராமண கட்டுமானங்களை உடைப்பதும் , வேதங்களை எரிப்பதுமாக மகாசேனன் காலம் இருந்தது. மகாசேன்னை எதிர்க்க தேரவாதிகளாக தங்களை பிராமணர்கள் மாற்றி தங்களை பாதுகாத்து கொண்டார்கள். பதவியாவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரை ஒன்று பிராமணர் கிராமத்தை பற்றி குறிப்பிடுகின்றது. முதலாம் விஜயபாகு , நிச்சங்க மல்லன் சோழர்கள் நிர்மாணித்த பிராமணர்கள் குடியிருப்புக்களை இன்னும் வலுப்படுத்தினார்கள். வேதங்களை கற்பிப்பதற்கும் பயிலுவதற்குமான நிலையம் ஒன்று நிச்சங்க மல்லன் காலத்தில் பொலன்னறுவையில் உருவாக்கப்பட்டது. பராக்கிரமபாகு மனு சாத்திரங்களை கற்றோருக்கு முன்னுரிமையில் அரசவைப்பதவிகளை வழங்கினான். இரண்டாம் பராக்கிரம்பாகு தெவிநுவரையில் அக்ரஹாரத்தை உருவாக்கி நிலங்களை வழங்கியிருந்தான். வீரபாகு அடிபட்ட என்பவன் பசுக்கள் நிலங்கள் உள்ளிட்ட செல்லவங்களையும் கிராமங்களையும்  அடிமைகளையும் பிராமணருக்கு வழங்கினான் என்று சங்க்ரஹாய நிக்காய சுவடியில் குறிப்பிடப்படுள்ளது. ஐந்தாம் புவனேகபாகுவின் சகோதரன் முறையிலானவன் இந்த வீரபாகு அடிபட்ட . ஆறாம் பராக்கிரம்பாகுவின் சாசனங்கள் இருபத்து நான்கு அரசவை பிராமணர்களுக்கு கிராமங்களை வழங்கியதாக கூறுகின்றன. இப்பிராமணர்கள் தெலுங்கு மற்றும் தமிழை பேசிக்கொள்பவர்கள் என்றும் அவை கூறுகின்றன. 
  
Views: 91